courtesy:Sri.SR
சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும நந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக அன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி கின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும தென்கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு யங்ககால
நீலக் ரீபக லாபத் தேர்விடு
நீபச் சேவக செந்தில்வாழ்வே
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு மங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் தம்பிரானே.
கடலும், சூரனும், மேருவும் தூள் ஆகும்படி, பாம்பைக் காலில் கொண்ட மயிலைச் செலுத்தும் கடம்பு அணிந்த வீரனே, வேள்வித் தீயை வளப்போர்க்கு சிவலோகத்தில் இடம் தரும் பார்வதியின் குமரனே, யோக வழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே, உன் முன்னே ஊமைகளாக நிற்கும் தேவர்கள் தலைவனே,
உனது அழகிய தாமரை போன்ற திருவடியைச் சேர்வதற்கு உரிய வழிகளைச் சொல்லும் வேதங்களைக் கடந்த நிலையின் மீதும், பகை என்பதே இல்லாத உயரிய நிலையின் மீதும், நற்குண சீல நன்னெறியின் மீதும், அன்பு கொள்ளாமல்,
காம, குரோத துர்க்குணங்களாலும், ஈகை இல்லாமையாலும், ஐம்புலன்களின் சேட்டைகளாலும், அழிகின்ற மாயமான உடல் மீது உலகில் வாழும் சிலர் ஆசை கொண்டு இருக்கின்றனர். இது ஏனோ? தெரியவில்லை.
பதம் பிரித்து பதவுரை
சேம கோமள பாத தாமரை
சேர்தற்கு ஓதும் அனந்த வேத
சேம = இன்பம் தருவதும் கோமள = அழகுள்ளதுமான பாதத் தாமரை = (உனது) தாமரை போன்ற திருவடிகளை சேர்தற்கு = அடைவதற்கு உண்டான வழியை ஓதும் = சொல்லுகின்ற அநந்த = எண்ணில்லாத வேத = வேதங்களை.
அதீதத்தே அவிரோதத்தே குண
சீலத்தே மிக அன்பு உறாதே
அதீதத்தே = கடந்த (நிலையிலும்) அவிரோதத்தே = பகை என்பதே அறியாத குண சீலத்தே = நற்குண நல்லொழுக் கத்திலும் மிக அன்பு உறாதே = மிக்க அன்பு கொள்ளாமல்.
காம க்ரோத உலோப பூத
விகாரத்தே அழிகின்ற மாயா
காம க்ரோத உலோப = காமத்தாலும், கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாமையாலும் பூத விகாரத்தே = ஐம்புலன்களின் சேட்டையாலும் அழிகின்ற மாயா = அழிகின்ற மாயமான.
காயத்தே பசு பாசத்தே சிலர்
காமுற்று ஏயும் அது என் கொலோ தான்
காயத்தே = இந்த உடலின் மீதும் பசு பாசத்தே = சீவாத்மா இச்சைப்படும் உலகப் பற்றுக்கள் மீதும் சிலர் காமுற்றே = சிலர் ஆசை கொண்டு ஏயும் அது என் கொலோ தான் = இருக்கின்ற நிலை ஏனோ, தெரியவில்லை
நேமி சூரொடு மேரு தூள் எழ
நீள காள புயங்க கால
நேமி = கடலும் சூரொடு = சூரனும் மேரு = மேரு மலையும் தூள் எழ = தூளாகும்படி நீள = நெடியகாளம் = நஞ்சுள்ள புயங்க = பாம்பை கால = காலில் கொண்டதும்.
நீல க்ரீப கலாப தேர் விடு
நீப சேவக செந்தில் வாழ்வே
நீல க்ரீப = நீலக் கழுத்தையும் கலாப = தோகையும்
கண்டதும்
தேர் விடு = தேராகிய மயிலைச் செலுத்திய நீபச் சேவக = கடம்பு அணிந்த வீரனே செந்தில் வாழ்வே= திருச்செந்தூரில் வாழ் பவனே.
ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவ
லோகத்தே தரு மங்கை பாலா
ஓம் தீ = வேள்வித் தீயை வழுவார்கட்கு = தவறாது வளர்ப்பவர்களுக்கு ஊர் = இருப்பிடத்தைசிவலோகத்தே தரு = சிவலோகத்தில் தருகின்ற மங்கை பாலா = பார்வதியின் குமாரனே.
யோகத்து ஆறு உபதேச தேசிக
ஊமை தேவர்கள் தம்பிரானே.
யோகத்து ஆறு = யோக வழிகளை உபதேசித்தே = உபதேசிக் கின்ற தேசிக = குருநாதரே ஊமைத் தேவர்கள் தம்பிரானே = (சகல வல்லவனாகிய உன் முன்னே) ஊமைகள் போல நிற்கும் தேவர்களின் தலைவனே.
No comments:
Post a Comment