Tuesday, March 17, 2015

Mahalakshmi

Courtesy: Sri.GS.Dattatreyan
நினைத்தாலே இனிக்கும் (26)

திவ்யதேசங்கள் எத்தனையோ இருக்கின்றன. திருமாலிருஞ்சோலையில் சுந்தரராஜப் பெருமாளாக, திருமால் சேவை சாதிக்கிறார். திருமோகூரில் காளமேகப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். தல வரலாறை படித்துப் பார்த்தால் இன்னின்ன மகரிஷிகளுக்கு இந்த திவ்யதேசத்தில் பிரத்யட்சம் என்று சொல்லியிருக்கும். அதற்காக பெருமாள் ஏதோ அங்கு புதிதாக வந்ததாகக் கருதக்கூடாது. பெருமாளும், தாயாரும் என்றென்றும் நித்யமானவர்கள். ஆனால், அவர்கள் மகரிஷிகளின் பக்திக்கு இணங்கி அந்தந்த 
திவ்யதேசங்களில் சேவை சாதிக்கிறார்கள் என்பது தான் பொருள். அதுபோலத் தான், ஜகந்மாதாவான மகாலட்சுமி என்றென்றும் நித்யமானவள். 
நம்மை ரட்சிப்பதற்காக பாற்கடலில் இருந்து பிறப்பெடுத்தாள். 
விஷ்ணுபுராணத்தில் சீடரான மைத்ரேயர் பராசரரிடம், "எம்பெருமான் பாற்கடலை ஏன் கடைய வேண்டிவந்தது?'' என்று ஒரு கேள்வி கேட்கிறார். இதைக் கேட்டதும் பராசரர் ஆர்வத்துடன் பாற்கடல் கடைந்த வைபவத்தை விரிவாக விளக்குகிறார்.
திருவாய்ப்பாடி என்னும் திவ்யதேசத்தில் தான் கண்ணன் குழந்தையாக அவதரித்தார். அதன் செல்வ வளத்தை ஆண்டாள் திருப்பாவையில், ""ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்'' என்று குறிப்பிடுகிறாள். 
பசுக்களின் மடியைத் தொட்டு விட்டு, பாத்திரத்தை அடியில் வைத்தால் போதும். பசுக்கள் வள்ளலைப் போல பாலைத் தந்து கொண்டேயிருக்கும். கோகுலத்தில் பாத்திரத்திற்கு வேண்டுமானால் பற்றாக்குறை ஏற்படலாமே தவிர, பாலுக்கு ஒருநாளும் குறைவு கிடையாது. அதுபோலத் தான், சீடன் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டால் போதும், ஆச்சார்யரான பராசர மகரிஷி வள்ளல் போல தனக்கு தெரிந்த விபரங்களை எல்லாம் எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கிறார். ஸ்ரீமகாலட்சுமியின் மகிமையையும், எம்பெருமானும், தாயாரும் 
ஒருவரை விட்டு ஒருவர் அகலாத விசேஷத் தன்மையையும் சொல்கிறார். "பிரிந்தாள்' என்ற குற்றம் தாயாருக்கு எப்போதும் இருப்பதில்லை. அதனால், தான் வைணவ சம்பிரதாயத்தில் தாயாருக்கு முதலிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. 
சக்கரவர்த்தி திருமகனான ராமன் இரண்டு விதமாக நடந்து கொள்வதைப் பார்க்கலாம். உடன்பிறந்த தம்பி பரதன், அண்ணன் மீது பேரன்பு கொண்டவன். "அண்ணா! என்னுடன் அயோத்திக்கு திரும்பி விடு' என்று எவ்வளவோ கெஞ்சியும் மறுத்து விட்டு, ராமன் காட்டுக்குப் புறப்படுகிறான். ஆனால், குகன் என்னும் ஓடக்காரன் ஆச்சாரம் இல்லாதவன், ஏழை என்றாலும் கூட, அவன் கொடுத்த உணவை ஏற்று மகிழ்கிறான். அவனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு "உன்னோடு ஐவரானோம்' என்று தன் தம்பியாகவே நடத்துகிறான். "குகனிடம் இப்படி அன்பு காட்டுகிறாயே! பரதனின் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கிறாயே ஏன்?' என யாரும் ராமனிடம் கேள்வி கேட்கவில்லை.
அந்த காலத்தில் ராஜாவுக்கு வாரிசு இல்லாவிட்டால், பட்டத்து யானையிடம் பூமாலை கொடுத்து நகர்வலம் வரச் செய்வார்கள். அதுயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புண்டு. "இவன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவன், இவன் சந்நியாசி' என்றெல்லாம் யானை பார்க்காது. தனக்கு தோன்றிய இடத்தில் நின்று கொண்டிருப்பவருக்கு பூமாலையைப் போட்டு விடும். அந்த நபரே நாட்டின் ராஜாவாகி விடுவார். இதைப் போலத்தான், பெருமாள் சூரியக்கண்ணால் சுட்டெரிக்கப் பார்த்தாலும், சந்திரக்கண்ணால் குளிரப் பார்த்தாலும் ஏன் என்று கேட்கும் உரிமை நமக்கில்லை. 
கோயில் யானையைப் பாகன் நன்றாக ஆற்று நீரில் தேய்த்துக் குளிக்க வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த யானை பளபளவென 
கன்னங்கரேல் என அனைவரையும் கவர்ந்திழுக்கும். இது ஆற்று நீரில் இருக்கும் வரைக்கும் தான். கரையேறிய பின், வழியில் 
கிடக்கும் மட்டை, குப்பை என துதிக்கையால் இழுத்தபடியே நடக்கும். அதைப் பாகனால் தடுத்து நிறுத்த முடியாது. சாதாரண கோயில் யானையே இப்படி என்றால், உலகையே பரிபாலிக்கும் யானையான எம்பெருமானை யாரால் என்ன செய்ய முடியும்? 
திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில், வடக்கு திசையின் யானையாக திருவேங்கடமுடையானும், தெற்கு திக்கில் யானையாக திருமாலிருஞ்சோலை அழகனும், மேற்கில் ஸ்ரீரங்கம் ரங்கநாதனும், கிழக்கில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாளும் சேவை சாதிப்பதாக குறிப்பிடுகிறார்.
கோயில் தரிசனத்திற்குச் செல்லும் போது முதலில் தாயார் சந்நிதிக்குத் தான் செல்ல வேண்டும். அவளிடம்,""நான் தப்பு செய்து விட்டேன். எனக்கு அருள்புரிய வேண்டும்,'' என்று சொல்லி பிரதட்சிணம் (சுற்றி வருதல்) செய்தால் போதும். அதற்குள் தன் கணவரிடம் அருள்புரியும் படி நமக்காக வேண்டுவாள். ஆனால், பரம்பொருளான திருமால் சாதாரண மனிதரைப் போன்றவர் அல்லவே! அவரே உலகை பரிபாலனம் செய்பவர். சட்டத்தை வகுத்தவரே அதை மீறி விட்டால் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே. ""வேதத்தையும், உடம்பையும், நல்லது கெட்டது பகுத்தறியும் அறிவையும் கொடுத்தும் கூட சரியான வழியில் நடக்கத் தெரியாத இவர்களைத் தண்டிப்பதை தவிர வழியில்லை,'' என்று தாயாரிடம் விளக்கம் கொடுப்பார்.
""என்ன தான் இருந்தாலும் நீங்கள் தந்தை தானே! நானல்லவா அவர்களைப் பெற்றவள். உங்களை விட எனக்கே பொறுப்பு அதிகம்,'' என்று அன்பை நிலைநாட்டுவாள். அதே சமயத்தில்,""தப்பு மேல் தப்பு என்று செய்து கொண்டே இருந்தால் என்று அவர்களைத் 
திருத்துவது?'' என்ற பொறுப்புணர்வும் அவளுக்கு எழவே செய்யும். அதற்காகத்தான் ஒரு உபாயத்தை ஏற்படுத்தி வைத்தாள்.
பெருமாளிடம்,""சுவாமி! சாஸ்திரத்தை ஒரு கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் கருணையையும் மறந்து விடாதீர்கள். யார் ஒருவர் செய்த தவறை உணர்ந்து வருந்தினாலும், மன்னித்தருளும்படி அழுதாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தப்பு செய்து விட்டு 
வருந்தாதவர்களுக்கு மட்டும் சாஸ்திரம் நிர்ணயித்துள்ள தண்டனையை வழங்குங்கள்,'' என்றாள். 
வைஷ்ணவ சம்பிரதாயம் தாயாரின் அருட்செயலை "புருஷகாரம்' எனச் சொல்கிறது. 
"புருஷனை புருஷனாக ஆக்குபவள்' என்பது பொருள். அதாவது, ஆண்மகனை ஆணாக இருக்கச் செய்பவள் என்பதாகும். கையைச் சுருக்கிக் கொண்டு இருப்பது ஆண்மகனுக்கு அழகல்ல. கொடுப்பது தான் ஆணுக்குப் பெருமை. பெருமாளுக்கே அதை எடுத்துச் சொல்லி, 
நமக்காக பரிந்து பேசுபவள் மகாலட்சுமி தாயார் தான். அவளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு பெருமாளே சரணாகதி என்று வழிபட்டால், வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். இந்த உண்மையை மனதில் நினைத்தாலே போதும். வாழ்வு இனிமையாகி விடும். 
- முற்றும்

வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

No comments:

Post a Comment