Tuesday, March 3, 2015

Maasi magam

courtesy:Sri.GS.Dattatreyan

வல்லமை நிறைந்த மாசி மகம்...!!!

04. 03. 2015

பாஸ்கர க்ஷேத்திரம் எனப்படும் கும்பகோணத்திற்கு குடந்தை, குடமூக்கு என்ற பெயர்களும் வழங்கப்படு கின்றன.

கும்பகோணம் என்ற பெயரைச் சொன்னாலே பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் என அப்பர் பெருமான் பாடியுள்ளார்.

"குடமூக்கே குடமூக்கே என்பீராகில்

கொடுவினைகள் தீரும்'

என்பது அவர் வாக்கு.

பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தலத்தில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.

மாசி மகம், மகா மகம் என்றாலே நினைவுக்கு வருவது கும்பகோணம் தான்.

கும்பகோணம் இத்தகைய சிறப்பு பெற்றுள்ளதற்கு 
ஒரு புராண வரலாறும் கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பிரம்மா, உயிர்கள் அனைத் தும் அழிந்துவிடுமே என அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்.

பல புண்ணிய தலங்களிலிருந்து மண், அமுதம், அனைத்து ஜீவராசிகளின் ஜீவ வித்துக்கள் அனைத்தை யும் சேர்த்து ஒரு கும்பத்தில் வைத்து, அதை மங்கலப் பொருட்களால் அலங்கரித்து, அதன் நான்கு புறங்களிலும் வேத ஆகமங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து மேருமலையில் வைத்துவிடும்படியும்; அது பிரளய வெள்ளம் வரும்போது மிதந்து சென்று ஒரு நிலப்பகுதியில் தங்கும்போது தேவையானவற்றைச் செய்வோம் என்றும் சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரம்மனும் அவ்வாறே செய்தார்.

பிரளயம் வந்தபோது அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி அழிந்தன. அமுதம் நிறைந்த குடத்தை வெள்ளம் உருட்டிச் சென்றது.

அக்குடம் ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்றது.

அந்த இடம்தான் கும்பகோணம்.

சிவபெருமான் வேடன் உருக்கொண்டு, அக்கும்பத்தின்மீது அம்பெய்து அதை உடையச் செய்தார்.

குடம் உடைந்து அமுதம் வழிந்து எட்டுத் திசைகளிலும் பரவியது.

குடத்தை அலங்கரித்திருந்த பொருட்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்து லிங்கங்களாகக் காட்சி அளித்தன.

சிவபெருமான் எந்த இடத்தில் நின்று அம்பு தொடுத்தாரோ அந்த இடம் பாணபுரேசம் என்ற பாணாதுரை ஆகும்.

கும்பத்தைத் தாங்கியிருந்த உரி விழுந்த இடம் சோமேசுவரர் கோவில்,

கும்பத்தின் மேலிருந்த தேங்காய் விழுந்த இடம் அபிமுகேஸ்வரர் கோவில்,

கும்பத்தில் சுற்றியிருந்த நூல் விழுந்த இடம் கௌதமேஸ்வரர் கோவில்,

வில்வம் விழுந்த இடம் நாகேஸ்வரன் கோவில்,

குடத்தின் வாய்ப்பகுதி விழுந்த இடம் குடவாயில் எனப்பட்டன.

குடத்திலிருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாய்ந்து அப்பகுதி களைச் செழுமையாக்கி யது. அதன் பிறகு பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெருமானி டம் அனுமதி கேட்டார். சிவன் சம்மதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவதி நட்சத்திர நாளில் கொடி யேற்றம் செய்து, பெரு மானையும் தேவியையும் எட்டு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்தார். ஒன்பதாவது நாள் மேரு மலையைப்போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்தார். பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதி உலா வரச் செய்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த் தம் கொடுக்கும் மாசி மக விழாவை ஆரம்பித்து வைத்தார்.

அந்த அடிப்படையில்தான் மாசி மக விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது.

உமாதேவியார் மாசி மாதத்தில், மக நட்சத்திரத்தில் தக்கனின் மகளாக அவதரித்தாள் என்பதால், இந்த நாள் தேவியின் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, அவர் கடலில் கட்டிப் போடப்பட்டிருந்தார். வருண பகவானது செயல்பாடுகள் இன்றி அனைவரும் துன்புற்ற னர்.

வருண பகவானை விடுவிக்கும்படி தேவர் கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர்.

அவரும் வருண பகவானை விடுவித்தார்.

அன்றைய தினம் மாசி மக நாள். தோஷம் நீங்கப் பெற்ற வருணன் சிவபெருமானை நோக்கி, "மாசி மக நன்னாளில் தீர்த்தம் ஆடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலனைப் பெற அருள வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

சிவபெருமான் அவ்வாறே வரமருளினார்.

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்க ளைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும்.

இத்தினத் தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

மாசி மகம் சிறப்பு 20

1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.


2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.


3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.


4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.


5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.


6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.


7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.


8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.


9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.


10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.


11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.


12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.


13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.


14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.


15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.


16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.


17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.


18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.


19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.


20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

தம்பதியினர் ஒற்றுமைக்கு மாசி மகம் விரதம்...

எல்லா மாதங்களிலும் 'மகம்' நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே 'மாசி மகம்' என்று அழைக்கப்படுகிறது.

அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் சொல்கின்றன.

உலகத்தைப் படைப்பதற்காக உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர்.

அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி அதாவது, முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது.

அந்த இடமே 'கும்பகோணம்' என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது.

இங்கு மகாமகம் விழா சிறப்பாக நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மற்ற வருடங்களில் வரும் மாசி மாதங்களில் 'மகம்' நட்சத்திரம் வரும் பொழுது நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும்.

இது முருகப் பெருமானுக்கும் உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது.

அன்றைய தினம் தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

அன்றைய தினம் சிவனை வழிபடுவதன் மூலம் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

உங்கள் பொறுமைக்கு நன்றி 

No comments:

Post a Comment