Thursday, March 12, 2015

Keys-Periyavaa

courtesy:Sri.GS.Dattatreyan

அனுஷ மஹான் காஞ்சி மஹாப்பெரியவரின் குரு

அச்யுதம் சேகரம் சந்திரசேகரம்
மகாலக்ஷ்மி தனயம் கருணா சாகரம்
ஸச்சிதானந்த சங்கர ரூபம்
ஸுகுண வல்லபம் சுந்தர நயன சரணம்
சேகரம் சந்திரசேகரம் நித்யானந்த நிருபம சரிதம்
சாந்த வதனம் ஞானாந்த சேகரம் சந்திர சேகரம்
வேத நாத நாயகம் காருண்ய ரூபம்
மங்கள ரூபம் சத்குண சேகரம் சந்திர சேகரம்!
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
..அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
..திருவாசகத்தின் உட்பொருளைக்
..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!"
ஒளியான முகமும் அருளான கரமும் 
கலியெல்லாம் தீர்த்து கவலைகள் மாற்றும்
அருளான நீரும் அணிந்தோர்க்கு என்றும்
பிணி எல்லாம் தீர்க்கும் விதி இங்கு மாற்றும்
பொருளான பேச்சும் பொருள் பொதிந்த நோக்கும்
பொருள் கோடி சேர்த்து மருள் எல்லாம் நீக்கும் 
பதம் என்றும் நாட இதம் வந்து சேரும்
பதம் தந்து அருளும் குரு பார்வை கூடும் 
குரு பார்வை கூட குறையெல்லாம் தீரும்
குறை எல்லாம் தீர்ந்து மனம் நிறைவாக ஆகும்
நிறைவான மனதில் இறை வந்து கூடும்
இறை வந்து கூட இன்னல்கள் ஓடும்
இறை கூடிய மனது இறையில் பின் சேரும்
இரு கைகள் உயர்ந்து அருள் வழங்கி நிற்கும் 
திருநீற்று நெற்றி வினையெல்லாம் தீர்க்கும் 
முகத்து புன்சிரிப்பில் பொருள் நூறு பதிந்திருக்கும் 
அது அகத்தில் இருப்பதெல்லாம் அறிந்தே அருள் சுரக்கும்
சித்தத்தில் தெளிவு வரும் பக்தியில் மனமாழும் 
மொத்தத்தில் குரு தரிசனம் புண்ணியமே சேர்த்திருக்கும் -
"இவர் தான் எனக்கு குரு (மஹா பெரியவா!)"
காஞ்சி மஹாப்பெரியவரை தங்கள் குருவாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. வாழும் தெய்வமான அவரை, இன்றும் கூட பலரும் மானசீக குருவாக ஏற்று வருகின்றனர்.
ஆனால், அந்த குரு, தனக்கு குரு என்று யாரைச் சொன்னார் தெரியுமா? தெரிந்தால், மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.
மஹாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பணக்கார பக்தர், அடிக்கடி காஞ்சி மடம் வந்து பெரியவரைத் தரிசித்து செல்வார். ஒருமுறை, அவர் தனது குடும்பத்தாருடன், தான் வாங்கிய புதிய காரில் மடத்திற்கு வந்தார்.
அதுசமயம் ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் அருகிலுள்ள கலவை கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து, இவரும் அங்கு சென்றார்.
கலவையில் பெரியவரைத் தரிசித்த அவர், தன் கார் சாவியை பெரியவரிடம் கொடுத்து, "பெரியவரே! தாங்கள் தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும்," என்றார்.
மஹா பெரியவர் அவரிடம், கலவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, "நீ அங்கு செல். அங்குள்ள மரத்தின் அடியில், ஒரு பெரியவர் தாடி மீசையுடன் படுத்திருப்பார். அவரை உன் புதுக்காரில் அழைத்து வா," என்று உத்தரவிட்டார்.
மஹா பெரியவர் சொன்னபடியே, அவரும் அங்கு சென்று அந்த முதியவரை அழைத்து வந்தார். இருவரும் பெரியவர் முன்னால் அடக்கமாக நின்றனர்.
மஹா பெரியவர் பணக்காரரிடம்,
"இவரை யாரென்று உனக்குத் தெரியாது. ஏன் அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாதல்லவா !
இவர் தான் எனக்கு குரு.
நான் துறவுப்பட்டம் ஏற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு வந்தேன்.
அங்கிருந்து என்னை "ஜட்கா'வில் (குதிரை வண்டி) அழைத்து வந்தவர் இவர் தான்.
வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும், அங்குள்ள நடைமுறைகள் குறித்தும், தனக்குத் தெரிந்த மொழியில் (இயல்பான பேச்சு) எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தவர்.
அவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன், அது மட்டுமல்ல, மிகவும் ராசியானவரும் கூட.
அவர் கையில் சாவியைக் கொடுத்து வாங்கிக்கொள், நலமாய் இருப்பாய்," என்றார்.
ஆச்சரியப்பட்ட பணக்காரர், அந்த முதியவரிடம் சாவியைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது !
அந்த தெய்வத்தை நம் மானசீக குருவாக ஏற்று, அவரது நல்லாசியுடன் உயர்ந்த நிலையை அடைவோம்.
ஸ்ரீ மஹா சுவாமிகளின் திருமலர்ப்பாதம் தொழுவோம் திருவருள் பெறுவோம்.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹெச்வரஹ
குரு சாக்ஷாத் பரப்ரமம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ.
அனுஷ மஹான் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அவதரித்த மஹா நக்ஷத்திரம் இன்று
அனுஷ நக்ஷத்திரம். தேவாதி தேவன், வேதமாமுனி, தாயுமானவ மஹான் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அவதரித்த மஹா நக்ஷத்திரம் கூடிய நன்னாள். எத்தனை முறை தரிசித்தாலும் "போதும்" என்று அறிவுக்கு தோன்றியதேயில்லை ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமியை தரிசிக்கும்போது மட்டும். 
தாயாய், தந்தையாய், தரணியாளும் கோமகனாய், தயவாய், உருவாய், திருவாய், அனைத்துமாய் இருக்கும் எம்பெருமானின் தரிசனம் ஒவ்வொரு நாளும் வேண்டும். ஒவ்வொரு பொழுதும் வேண்டும். ஒவ்வொரு நொடியும் வேண்டும் என்று கலியுக தெய்வம் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளை பணிவுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment