Monday, March 30, 2015

Bhakti & Ishta devatha - Periyavaa

Read more: http://periva.proboards.com/thread/3698/kural-vol-1-ishta-devathai#ixzz3R7Q6Dl4m

பக்தி
இஷ்ட தேவதை.



மநுஷ்யர்கள் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை) படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.

இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள். என்று அந்நிய மதஸ்தர்கள் நம்மை கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகாபுருஷனாகளுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்தந்த ரூபங்களுக்குறிய மந்திரம், உபாஸனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அநுஷ்டித்தால் நாமும் அந்தந்த தேவதையின் அநுக்கிரகத்தைப் பெற முடியும். எந்த தேவதையாக இருந்தாலும் சரி. அது முடிவில் பரமாத்மாவே. ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்குச் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் லௌகிக வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றி அநுக்கிரகிக்கும்.

அவரவர் மனத்தைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கே இத்தனை தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தைப்போல் பரமாத்மாவை அநுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.

இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செலுகத்துவது என்று ஏதோ ஒரு தத்வத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அநுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்வத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவகமாக பாவித்து, வெறும் பக்தி செய்வதற்கு நம் மதத்தில் உள்ள இஷ்ட தேவதை வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபாஸிக்க வேண்டுமானால், உபாஸனைக்குறிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால்தானே முடியும். இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாஸிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. நம் மனப்போக்குப் பிடித்தது என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ ஒரு மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு? என்று அதையும் விட்டுவிட அந்த தேவதையே அநுக்கிரகம் செய்யும். அப்புறம் எல்லாமே ஒர் பரமாத்ம வஸ்துவாகத் தெரியச் செய்யும்.

அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையே உபாஸிக்கும்போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைப் தாழ்வாக எண்ணக்கூடாது. 

நமக்கு எப்படி இந்த ரூபத்தில் பரமாத்மா அநுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்கலுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அநுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். அந்தந்த தேவதைக்குறிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே முழுமுதற் கடவுள். மற்ற தேவதை எல்லாம் அதற்குக் கீழானவை. இந்த அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறதே என்று கேட்கலாம். இதற்கு நஹி நிந்தா நியாயம் என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பௌராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனம் சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம். இதற்காகவே இந்த தேவதைக்கு மட்டும் மற்றத் தேவதைகளுக்கு இல்லாத உத்கர்ஷம் (உயர்வு) சொல்லப்படுகிறது.

மகாநுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்கலும் ஒரே வஸ்துவைத்தான் பல மூர்த்திகளாகவும் வருகிறது என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.

பக்தர்களின் மனோபாவத்தைப் பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும்போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது. தமோ குணத்தால் சம்ஹரிக்கும்போது அதற்குறிய முறையில் ருத்ரரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும் காளிதாசரும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.

எனவே, என் தெய்வம் உசந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூட, பிரதானமாக இருந்து வரும் சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் இடையே ரொம்பவும் சண்டைதான் நடந்து வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் தெய்வங்களான பரமேச்வரனும் மகா விஷ்ணுவும் ஒரே வஸ்துதான் என்ற ஞானம் பெறுவோம். 


Jaya Jaya Shankara, Hara Hara Shankara!



No comments:

Post a Comment