Wednesday, February 25, 2015

Brahma Jaayaayai nama: - Periyavaa

courtesy: Sri.GS.Dattatreyan
"ஓம் சரஸ்வதீஜயாய நம"
(பெரியவா இயந்திர கதியில் பூஜைகளைச் செய்வதில்லை)

சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்
......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், நவராத்திரி
நிறைவில் ஸ்ரீ சரஸ்வதி பூஜை தினம்.

மகாப் பெரியவாள், வழக்கமான ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர்
பூஜையை முடித்தபின்,தனியாக சரஸ்வதி பூஜை
செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு வைதிகர், பூஜா கல்ப புஸ்தகத்தைக் கையில்
வைத்துக்கொண்டு படித்துக்கொண்டு வந்தார்.

வரிசையாக சங்கல்பம் - ஆவாஹனம் - பிராணப்
பிரதிஷ்டை - அங்கபூஜை முடிந்து, சரஸ்வதி
அஷ்டோத்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

ஒவ்வொரு 'நம;'வுக்கும், ஒவ்வொரு புஷ்பத்தை
எடுத்து அருச்சித்துக் கொண்டிருந்தார்கள் பெரியவா.

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்று வைதிகர் படித்தார்.

மகாஸ்வாமிகள் கையில் எடுத்த புஷ்பம் சரஸ்வதியின்
சரணங்களை அடையாமல் அப்படியே சுவாமிகளின்
கையில் அந்தரத்தில் நின்றது.

அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தவர்
மறுபடியும், 'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்றார்.

புஷ்பம் கையிலிருந்து புறப்படவில்லை.

திரும்பத் திரும்ப, அந்த நாமவளியை அவ்வாறே அவர்
சொல்ல, பெரியவா, புஷ்பத்துடன் உயரத் தூக்கிய கையுடன்,
சித்திரம் போல், அசையாமல் நிற்க...எல்லோருக்கும் கவலை
உண்டாகிவிட்டது. "என்ன தவறு நடந்துவிட்டது, இங்கே?"
என்று புரியாமல் தத்தளித்தார்கள்.

விஷயம் பெரிய மானேஜர் விசுவநாத அய்யர் செவிவரை
போய்விட்டது. அவர் பூஜை மண்டபத்துக்கு வந்தார்.

"மறுபடியும் படியுங்கோ..."

வைதிகர், மறுபடியும், 'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்று
சொல்ல, புஷ்பம் பெரியவா விரல் நுனியிலேயே நிற்க.....

நல்ல காலமாக பக்கத்திலிருந்த வேறொரு வித்வான்,
'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம:'ன்று திருத்திச் சொன்னவுடன்
பெரியவா கையிலிருந்த புஷ்பம் கலைமகளின்
திருவடியை அடைந்தது!

இந்த இரண்டு நாமங்களில் அப்படி என்ன பெரிய
வித்தியாசம் என்று தோன்றலாம்.

ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு
நமஸ்காரம் என்று அர்த்தம்.

ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு 'கால்' போட்டுச் சொன்னால்,
பிரம்மாவின் பத்னிக்கு நமஸ்காரம் என்று பொருள்.

பெரியவா இயந்திர கதியில் பூஜைகளைச் செய்வதில்லை
என்பதற்கு இது ஒரு நிதர்சனமான உதாரணம்.
முழுமனத்தையும் பூஜையில் செலுத்தி, பொருள் உணர்ந்து
பூஜை செய்கிறார்கள் என்பதற்குச் சான்று.

ப்ரஹ்ம ஜயாவோ,ஜாயாவோ - எப்படியோ
இருந்து விட்டுப் போகட்டும்.

ஆனால் பெரியவாளை, "ஓம் சரஸ்வதீஜயாய நம"
என்று நாம் சரணாகதி பண்ணிவிட்டால் வித்தைகள்
எல்லாம் வரும்தானே?


No comments:

Post a Comment