காதலுக்குத் தூது போன கடவுள்!!!
------
மற்ற எந்த மதங்களுக்கும் இல்லாமல் நம் மதத்திற்கு மட்டுமுள்ள பெருமை! கடவுளே காதலித்த - கல்யாணம் செய்த கதைகள் நம் மதம் போல் வேறெந்த மதத்திலும் இல்லை!
அதை, காமம் சார்ந்ததாகச் சித்தரித்துக் கேலி செய்வார்கள் பகுத்தறிவே இல்லாமல், அப்படி ஒரு அறிவு தமக்கு இருப்பதாகக் கூறிக் கொள்பவர்கள்!
மனித இயல்புக்கு மாறில்லாமல், உயிர்களுக்கு இயல்பான காதலையும் காமத்தையும் தாமே முன்னுதாரணமாக்கி வாழ்ந்து காட்டுகின்றன நம் தெய்வங்கள் என்பதை, அவர்கள் தலைகீழாகவே நின்றாலும், அவர்களுக்குப் புரிய வைக்க முடியாது!
அந்த வரிசையில், இறைவன் காதலுக்காக தூது சென்றான் என்பது, அதிலும் தன் அடியவனின் காதலுக்காக தூது சென்றான் என்பது, நம் தமிழ் மண்ணிலன்றி, வேறெங்குமே கூறப்படாத நெகிழவைக்கும் சம்பவம்.
திருவாரூரில் பரவையாரை மணந்து வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனார், பின் திருவொற்றியூருக்குச் சென்ற போது, சங்கிலி எனும் பேரழகியைக் கண்டு காதல் கொண்டு அவளை மணம் புரிகிறார். சங்கிலியும் "தன்னைப் பிரிந்து ஊர் எல்லையைத் தாண்டக் கூடாது" என்று சத்தியம் வாங்கி அவருடன் இல்லற இன்பம் துய்க்கின்றாள்.
திருவொற்றியூரில் நீண்ட காலம் தங்கியிருந்த சுந்தரர், திருவாரூர் ஞாபகம் வரவே, சங்கிலியிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப, ஒற்றியூர் எல்லை தாண்டுகையில் இறைவன் ஆடலால் அவர் கண்ணிரண்டும் குருடானது.
பின் பல தலங்களிலும் ஈசனைக் கண்டு வேண்டி, மீண்டும் கண்பார்வையைப் பெற்றுக் கொள்ளும் சுந்தரர், திருவாரூர் வந்துவிட்டதையும் அவரது சங்கிலி மீதான காதலையும் அறிந்துகொள்ளும் பரவையம்மை, தன் மாளிகைக் கதவை அடைத்து விடுகிறாள். யார் கூறியும் அவள் சுந்தரரைக் காண்பதற்கோ அவருடன் வாழ்வதற்கோ மறுத்து விடுகிறாள். அவளின் ஊடலைத் தீர்க்க, சுந்தரர் இறுதியாக நாடுவது.... வேறு யாரை? ஈசனையே தான்!
தன் திருப்பாதங்கள் மண்ணில் பதிய திருவாரூர்த் தெருவில் நடந்து வந்த எம்பெருமான், தன் அடியவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு பரவையாரிடம் சென்று வேண்டுகின்றான்!
உலகுக்கெல்லாம் படியளக்கும் ஈசனே தன்னிடம் வந்து இரந்து நிற்பதைக் கண்டு பதறிய பரவை நாச்சி, திருக்கதவம் திறந்து சுந்தரரையும் ஏற்றுக் கொள்கிறாள். அவர்களிருவரும் இணைந்து, தொடர்ந்தும், சிவத்தொண்டு புரிகின்றார்கள் என்று தொடர்ந்து செல்கிறது பெரிய புராணம்!
இந்தக் கதையை உலகியல் விடயம் என்று மிக எளிமைப் படுத்தி, சின்ன வீடு வைத்துக் கொண்டு, பெரிய வீட்டை சமாளிக்க உதவி கேட்டால் இறைவன் உதவுவான் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்!
ஊழ்வினையை உறுதியாக நம்பும் மதங்களுள் ஒன்றான நம் சமயத்தில் இந்தச் சந்தர்ப்பமும் ஊழ்வினையை வலியுறுத்தத் தான் சொல்லப்படுகிறது.
திருக்கயிலையில் கமலினி, அநிந்திதை எனும் உமையவள் தோழியர் இருவரைக் கண்டு சுந்தரர் மோகித்ததாலேயே அவர்கள் மூவரும், சுந்தரர், பரவை, சங்கிலியாக பூவுலகில் பிறக்க நேர்ந்தது என்பது பெரிய புராணமே சொல்லும் சேதி! சங்கிலியுடனான சுந்தரரின் வினைப்பயன் தீர்ந்ததும் அவர் பரவையிடமே திரும்புகிறார்.
இடையில் அவர் கண்கள் குருடானதும், பரவையை சுந்தரருடன் சேர்த்து வைக்க தாமே தூது சென்றதும் எல்லாமே ஈசனது ஆடல்கள்! சுந்தரர் கண்ணைக் குருடாக்கி, ஒரு பெண்ணுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது கண்ணில்லாதார் செய்யும் இழிந்த செயலுக்குச் சமனென்று வலியுறுத்தி, அவரைத் தண்டித்த ஈசன், பின் சுந்தரரே தவறுணர்ந்து இரந்து வேண்டக் கண்களைக் கொடுத்ததுடன், அவரது மூத்த மனைவியுடனும் சேர்த்து வைத்தார்.
இந்த உலகில் தவறு செய்யாதவர்கள் என்று யாருமே இல்லை! ஆனால், அவர்கள் செய்த தவறை உணரும் போதும், இறைவனைச் சரணடையும் போதும், அவன் நேரே வந்து அவர்களுக்கு உதவவும் தயங்க மாட்டான் என்பது சுந்தரரின் வாழ்க்கை நமக்குத் தரும் பாடம்!
"வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!"
No comments:
Post a Comment