Tuesday, December 16, 2014

Thandiyadigal nayanar

Courtesy:Smt.Uma Balasubramanian

 தண்டியடிகள் நாயனார்.
                    
        
  தண்டி அடிகள் திரு ஆரூர்ப் பிறக்கும் பெருமைத் தவம் உடையார்
         அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக்
         கொண்ட கருத்தின் அக நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும்
         கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்.
 
திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் யாவரும் வழிபடுவதற்கு உரியவர்களாகத் திகழ்கிறார்கள். அதனால்தான் சுந்தர மூர்த்தி நாயனார் அவர்கள் ," திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்" என்று பாடினார். அத்தகைய பேறு பெற்றவர்களுள் ஒருவர்தான் தண்டியடிகள்  நாயனார். . அவர் புறக்கண் இல்லாத குருடர் ஆவார் . இருந்திடினும் தன் அகக் கண்ணில் எப்பொழுதும் இறைவனைக் கண்டு இன்புறும் தன்மையோடு விளங்கினார். நாள்தோறும் திருவாரூர்  எம்பெருமானைத் தரிசித்து வணங்கி ,  பஞ்சாட்சரத்தை செபித்துக்கொண்டே வருவார்.
     கோயில் என்றிருந்தால் குளமும் இருக்க வேண்டுமல்லவா! . திருவாரூர் கோயிலின் மேற்கே உள்ள குளத்தைச் சுற்றிலும் அக்காலத்தில் சமணர்கள் மடங்களைக் கட்டிக் கொண்டார்கள் . நாளாவட்டத்தில் குளத்தில் இருந்த நீர் அளவு  குறையத் தொடங்கியது.  அதனை அறிந்த தண்டியடிகள் நாயனார்," இந்தத் திருக்குளத்தை அகழ்ந்து பெரிது செய்ய வேண்டும் " என்று முடிவு செய்தார். அவருக்குத் தான் பார்வை  கிடையாதே ! அங்கங்கே அடையாள முளை நட்டுக் கயிறு கட்டி , நடு இடத்தைக் கையாலே தடவிப் பார்த்து , மண் வெட்டியால் வெட்டி,  மண்ணை வெளியே கொட்டி விட்டு மறுபடியும் தோண்டுவதில் முனைவார்.. இந்தத் தொண்டைச் செய்து கொண்டிருக்கும் பொழுது , திருவைந்தெழுத்தைக் கூறுவதை மறவாமல் செபித்து வந்தார்.
 இவ்வாறு குளத்தின் அளவைப் பெருக்குகிறேன் என்று  தண்டியடிகள் நாயனார் தோண்டுவதைக் கண்ட சமணர்களுக்குஅவர் செயல் பொறுக்கவில்லை. அவரை அணுகி ,                     " பெரியவரே ! இப்படி  மண்ணைத் தோண்டினால் இங்கு  வசிக்கும்  பிராணிகள் அழிந்துவிடும் . அவற்றைத் தயவு செய்து துன்புறுத்த வேண்டாம் " என்றனர்.
   " உண்மையை அறியாதவர்களே ! திருநீற்றைச் சாந்து போல் பூணும் எம்பெருமானுக்கு உரிய திருப்பணி அல்லவா இது ? இது மிகச் சிறந்த அறம் என்பதை தாங்கள் அறியவில்லை போலும் ! ' என்றார்.
      அதனைக் கேட்ட சமணர்கள் ," நாங்கள் எடுத்துச் சொல்லும் தருமத்தை நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளாது பேசுகிறீர்கள். கண்தான் இல்லை என்று நினைத்தோம் காதையும் இழந்தீரோ!" என்று நையாண்டி செய்தனர். தண்டியடிகளும் ,' மந்தமான அறிவும் காணாத கண்ணும் , கேளாத செவியும் உங்களுக்கே உரியவைகள் . நான் இறைவன் திருவடியையே மனத்தில் காண்கிறேன் அன்றி  மற்றவற்றைக் காண்பதில்லை . மற்றவர்களைப் போல நான் எல்லாப் பொருட்களையும் காணும் திறன் படைத்தவனேயானால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? " என்று கேட்டார்.
      'வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரைஆர் கமலச் சேவடிகள்
        அல்லால் வேறுகாணேன் யான்அதுநீர் அறிதற்கு ஆர் ?' என்பார்;
'நில்லா நிலையீர்உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் ? என்று எடுத்து உரைத்தார்.
 
அதைக் கேட்ட சமணர்கள், " உன்னுடைய கடவுள் அருளால் நீ கண் பெற்றேயானால்  நாங்கள் இந்த ஒரை விட்டே ஓடிப் போகின்றோம் , இது சத்தியம் " என்று கூறி  தண்டியடிகளாரின் கையில் இருந்த மண் வெட்டியை பறித்துக் கொண்டு முளைகளையும் , கயிற்றையும் பற்றி வீசி எறிந்தனர். 
      அதனை உணர்ந்த தண்டியடிகளுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. அவர் நேரே எம்பெருமான் சன்னிதி சென்றார். இறைவனை வணங்கி ," எம்பெருமானே ! இன்று இங்கு வாழும் சமணர்கள் என்னை மிகவும் அவமதித்துவிட்டார்கள். இந்தப் பழி தீரத் தாங்கள் தான் அருள வேண்டும்" என்று மனம் நொந்து வீழ்ந்தார். பின்னர் தம் திருமடத்திற்குச் சென்று இரவு தூங்குகையில்  இறைவன் தோன்றி ," நீ மனக் கவலையை ஒழித்து  விடு ! உன் கண் திறக்கவும் , சமணர்களின் கண் ஒளி மங்கவும்  நீ காணப் போகிறாய் ! , அஞ்சவேண்டாம் " என்று அருளி மறைந்தார். 
      பிறகு அரசனுடைய கனவிலும் தோன்றி ," தண்டியடிகள் நமக்குக் குளம் தோண்டுவதைச் சகியாது சமணர்கள் இடையூறு செய்கிறார்கள்  நீ அங்கே போய் அடியாரின்  கருத்தை நிறைவேற்று ! " என்று கூறி மறைந்தார்.
 
                'தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியார் ஆய்
        மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான்அவன்பால் நீ மேவிக்
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய்என்று கொள அருளித்
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார்.
 
      உடனே அரசன் எழுந்து விரைவாகத் தண்டியடிகள் இருப்பிடம் சென்றான் .அவன் தண்டியடிகளிடம் என்ன நடந்தது என்ற விவரத்தைக் கேட்க , சமணர்கள் கூறியதையும் தான் கண் பெறுவதாகச் சொன்னதையும் அப்படிக் கண் பெற்றால் தாங்கள் ஊரை விட்டே ஓடுவதாகச் சமணர்கள் தெரிவித்ததையும் விளக்கமாக உரைத்தார்.
அரசன் சமணர்களை அழைத்து விசாரித்தான். அவர்களும் முன்னால் சொன்னதையே சொன்னார்கள். அரசன் யாவரையும் அழைத்துக் கொண்டு குளம் நோக்கிச்சென்றான். .குளத்தை அடைந்தவுடன் நாயனாரை நோக்கி ," தாங்கள் தங்கள் கண்களை இறைவன் திருவருளால் பெற முடியும் என்பதைக் காண்பியும் " என்றான் .
தண்டியடிகள் உடனே எழுந்து  ," நான் சிவபெருமானுக்கு அடிமையானது உண்மையென்றால் நான் இன்று கண் பெற வேண்டும் , சமணர்கள் கண் இழக்க வேண்டும் " என்று முறையிட்டு சக்திவாய்ந்த ஐந்தெழுத்து மந்திரத்தை  ஓதிக் குளத்தில் மூழ்கினார். .
      இறைவனைத் தொழுதபடியே நீரினின்றும் தண்டியடிகள் வெளி வந்தபோது அவருக்கு கண் ஒளி கிடைத்துவிட்டது.  அதே சமயத்தில் சமணர்கள் கண் ஒளி இழந்தனர்.
 
 தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்;
 பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி;
 இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு,
 'பழுது செய்த அமண் கெட்டதுஎன்று மன்னன் பகர்கின்றார்.
 
 
மன்னனும் , சமணர்கள் முன்னே கூறிய  உறுதி மொழிப்படி , அவர்களை ஊரைவிட்டு ஓடச் செய்தான்.. அளித்த வாக்குப்படி அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் போய்விட்டனர்.. சமணர்கள் இருந்த மடங்களை அடியோடு தகர்த்தெறிந்துவிட்டு , குளத்தை விரிவுபடுத்தி , தண்டியடிகளையும் அடி பணிந்தான் அரசன்.
 தண்டியடிகள் கண் பெற்ற பயனால் எப்பொழுதும் ஐந்தெழுத்தை ஓதிக்  கொண்டும் , இறைவனை தரிசித்துக் கொண்டும் காலத்தைக் கழித்து இன்புற்று , இறுதியில் சிவபெருமான் திருவடி நிழலில் ஒன்றினார்.   
 
 
 
கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவிக் குளம்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி,
விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர்
உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம்.

No comments:

Post a Comment