Friday, December 19, 2014

Maya, The poison - Ramana maharshi

Courtesy;Amirtavahini e-magazine

மாயை எனும் விஷம்

 

பற்றிமால் விடந்தலை யுற்றிறு முனமருள்

     பற்றிட வருள்புரி யருணாசலா


மாயை எனும் விஷம் தலைக்கேறி என்னை அழிப்பதற்கு முன், உன் அருள் என் மீது விழ அருள்புரிவாய் அருணாசலா""  என்று பகவான் வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.

மாயை, அவித்யை,அஞ்ஞானம் நம் கண்களை மறைத்து நாம் யார் என்பதை தெரிய விடாமல் நம் புத்தியை மழுங்கடித்துவிடுகிறது. அம்மாதிரியான நிலை ஏற்பட்டுவிட்டால் நமக்கு முக்தி கிடைப்பது மிகவும் துர்லபமாகிவிடும். அவித்யை விலக வேண்டுமென்றால் பரமன் அருள் வேண்டும். அதைத்தான் யாசிக்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.

இதையே பட்டினத்தார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

          முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு

          பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்

          பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ

          ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே

"தினம் தினம் மன்னரும் மாந்தரும் ஒரு போல் மடிந்து ஒரு பிடி சாம்பலாவதை நாம் காண்கிறோம். பிறகும் நாம் இந்த இகலோக சுகங்களுக்குப் பின்னால் ஓடுகிறோம். அதை விடுத்து தில்லையம்பலத்தில் வாழும் ஈசனை நினைப்பதில்லையே" என்றூ பட்டினத்தார் அங்கலாய்க்கிறார்.

அப்படி ஈசனை நினைப்பதற்கு ஈசன் அருள் வேண்டும். அதற்காக பட்டினத்தார் கூறும் உபதேசம் என்ன ?

          ஓடாமல் பாழுக்கு உழயாமல் ஒரமுரைப்பவர்பால்

          கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்

          நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று

          தேடாமல் செல்வந்தருவாய்,சிதம்பர தேசிகனே.

நாம் இந்த இகளோக சுகங்களுக்கு—இந்திரியங்களால் தூண்டபடுகின்ற சுகங்களுக்கு பின் உழைக்காமல் ஓடாமலிருக்கவேண்டும்  நாம் உழைத்து சாப்பிட வேண்டும். சோம்பேரியாக உட்கார்ந்து சாப்பிடக் கூடாது.  புறம் பேசி மற்றவர்கள் குறைகளை பேசித் திரியாமல்,நல்லவர்களுடன் –சத் சங்கங்களில்-சேர வேண்டும். குரோதத்திற்கும் கோபத்திற்கும் இடம் கொடலாகாது. நன்மையிலிருந்து வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று செல்வம் சேர்த்து வைக்காமல் தில்லையம்பலத்தானின் அருள் வேண்டும் என்கிறார் பட்டினத்தார்.

இன்று நாளை என்று செல்வம் சேர்க்கக் கூடாது; சோம்பேரியாக தூங்கக் கூடாது என்று பட்டினத்தர் படினார். அப்படியே வாழ்ந்து காட்டியவர் பகவான் ரமாணர்.

பகவான் ரமணர் ஆஹாரம்,தூக்கம் முதலியவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து காட்டியவர்.

பகவான் ஒருமுறை கூறினார்:

"ஆவரணம்,விக்ஷேபம் என்று தியானத்திற்கு இரண்டு விக்னங்கள் என்று சொல்வார்கள் ஆவரணத்தில் தூக்கம் தான் முதலானது .கூடுமானவரை தூக்கம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் .தூக்கம் வருவதற்கு என்ன காரணம் என்று விசாரம் செய்து உணவு, நடவடிக்கை,முதலியவைகளை சுத்தமாகவும் மிதமாகவும் வைத்துக் கொண்டு தூக்கம் வராதபடி பார்த்துக்கொள்ளவேண்டுமே தவிர தூக்கம் வந்த பிறகு தடுக்க முயன்றால் என்ன பிரயோனம்? நிறைய உண்டால் நிறைய தூக்கம் வராதா என்ன? தியானத்திற்கு உட்கார்ந்தால் தலை ஆடி ஆடி விழும் .சிலர் தலை முடியை சுவரில் இருக்கும் ஆணியில் கட்டிக் கொள்வார்களாம். இப்படிச் செய்வதால் தலையசையும்போது விழிப்பு வருமே தவிர தியானத்திற்கு உதவுமா? என் பால்யகாலத் தூக்கம் பிரசித்தமானது தானே? ஸ்கூலில் பாடம் நடக்கும் போது தூக்கம் வருகிறதேயென்று, பின்னால் சுவரில் ஒரு ஆணியை அடித்து,அதில் ஒருகயிற்றைக் கட்டி ,அதை என் தலை முடியோடு சேர்த்து கட்டிக் கொள்வேன். தலையசைந்தால் கயிறு மயிரை பிடித்து இழுப்பதில் விழிப்பு வரும்."

"விஹாரம் இருந்தால்  ( நடவடிக்கைகள்) இருந்தால் ஆஹாரம் வேண்டும்; ஆஹாரம் உண்டால் தூக்கம் வரும். விஹாரமில்லாது போனால் தூக்கம் வராது. உயிர் வாழ்வதற்கு ஏதோ சிறிது உணவு வயிற்றில் விழுந்தால் போதும்"

"அதனால் மிதமான  சாத்வீக ஆஹார விஹார நியமங்கள். ஆன்மீக மலர்ச்சிக்கு அத்தியாவசியமென்றுதான் சொல்லவேண்டியுள்ளது."

நமது வீழ்ச்சிக்கு முதல் காரணம் கர்த்ருத்துவ' மனனிலை.  நாம் தான் எல்லாவற்றையும் செய்கிறொம்;நம்மால் எதையும் செய்ய முடியும் ;வெல்ல முடியும் எங்கின்ற மனோபாவம் விஷத்திற்கு சமானமானது.இதைத்தான் 'அஹங்காரம்' எங்கிறோம்.

கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்வார்:

ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி. ஸர்வச: !

அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மன்யதே !!

                ப்.கீ அத்3 சுலொ. 27

பிரக்ருதியின் குணவிசேஷங்களால் மனிதன் பலதரப்பட்ட கர்மங்கள் செய்யும்படியாகிறது. அஹங்கார விஷம் தலையில் ஏறியுள்ளவன் எல்லாவற்றிற்கும் நான் தான் கர்த்தா என்று நினைக்கிறான்.

நமது இயல்பு பிரகிருதியின் முக்குணங்களால் உருவகப்படுகிறது. முக்குணங்கள் என்பவை தமஸ் ,ரஜஸ் ,சத்துவம் எனப்பட்டவை. ஒவ்வொருவரிலும் இந்த முக்குணங்களின் விதை ஊன்றப்பட்டுள்ளது. நமது கர்மபலனால் இதில் ஒன்றோ இரண்டோ குணங்கள் சில சந்தர்ப்பங்களில் மேலோங்கி நிற்க ஏது உண்டு. அதன் விளைபவாக நாம் வெற்றியோ தோல்வியோ பெறுகிறோம். இதை ஆன்மாவுடன் இணைத்து நாம் வெற்றி பெற்று விட்டோம் என்றோ தோல்வியுற்று விட்டோம் என்றோ எண்ணுவது தவறு.

மாயை அல்லது அவித்யை என்பது இந்திரியங்களுக்கு வசப்படுதல்.இந்திரியங்களின் திருப்திக்காக கர்மம் இயற்றுவது என்பதாகும்.

பிரகிருதியின் இயல்பு கர்மம்.ஆத்மாவிற்கு கர்மம் இல்லை.இது நமக்கு தெரிவதில்லை.ஆகவே நாம் கர்ம பந்தத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை.ஆத்ம-அனாத்ம விசாரம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தத் தான் செய்யும்.

செடிகள் தத்தம் இயல்புக்கேற்றவாறு ஒங்கி வளருகின்றன அல்லது மற்றொன்றின் மீது படர்ந்து வளருகின்றன. சில செடிகள் கசப்புள்ள கனிகளை தருகின்றன்,சில இனிக்கின்ற கனிகளையும் ,மற்ற சில் புளிப்பான காய்களையும் தருகின்றன்.அது அவைகளின் இயல்பு. அவைகளின் வினைப் பயன்.

இத்தனை வித இயற்கை பேதம் உயிர்களுக்கிடையில் இருப்பதற்கு காரணம் முதலில் கூறிய முக்குணனங்களின் வேறுப்பட்ட தாக்கத்தினள் உண்டாகின்றன என்பது முதல் காரணம். மற்றொரு காரணம் ஐந்து இந்திரியங்களின் இடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வு தான். ஒருவருக்கு மல்லிகை வாசனை மயக்கத்தை உண்டாக்கும்;இன்னொருவருக்கு 'அலர்ஜி' உளவாக்கும்.

இதைத்தான் கீஆசாரியன் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

     இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ

                           வ்யவஸ்திதௌ !

     தயோர்ன வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ !!

                     ப்.கீ அத் 3 சுலோ 33

இந்திரியங்கள் நமக்கு ஆசை காட்டி மயக்கும்.அந்த ஆசை வலையில் வீழாமல் பரமனை சரணடைவது தான் முக்திக்கு வழி.

 

இந்த ஆசை வலையத்தில் நாம் ஏன் விழுகிறோம்?

     காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ: !

     மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேனமிஹ வைரிணம் !!

                           ப்.கீ. அத்  3 சுலோ 37

இந்த ஆசை அல்லது காமம் ரஜோகுணத்திலிருந்து உதிக்கின்றது. இந்த காமம் நிறைவேறாத நிலையில் குரோதம் உண்டாகிறது. குரோதம் எல்லாவற்றையும் உண்ணவல்லது.ஆகவே தான் அதை நம் முக்திக்கு எதிரியென்று கூறப்படுகிறது. இந்த ஆசை நெருப்பை எப்படி புகை மறைக்கிறதோ, எப்படி தூசி படிந்த கண்ணாடி ண்பிக்காதோ அது போல் உங்களை ஞானம் அடைய விடாமல் தடுத்து விடுகிறது.

இந்த விஷ பாதையிலிருந்து தப்பிக்க ஒன்று கடினமான முயற்சி வேண்டும்; அது மட்டும் போதாது; பரமன் அருளும் வேண்டும். அதைத்தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார். 

No comments:

Post a Comment