அனுமனின் அவதாரக் கதை!
புகழ்பெற்ற இதிகாசங்களுள் ஒன்று, ராமாயணம். அந்த மகாகாவியத்தை அறிந்த பலருக்கும் ராம பக்தியில் மூழ்கித் திளைத்த அனுமன் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார். காற்றின் மைந்தன் என்றும் அஞ்சனையின் புத்திரன் என்றும் போற்றப்படும் இவரின் பிறப்பு, பால லீலைகள் என எல்லாமே நாம் அறிந்ததுதான். அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் என்பர். அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
அவதாரக் கதை : ஒரு நாள் கயிலையில் பரமேஸ்வரர் ராம நாமத்தை ஜபித்தபடி இருந்தார். அதைக் கேட்ட பார்வதி, தங்களுடைய நாமத்தை விட சிறப்பு வாய்ந்ததா இந்த நாமம்? என்று கேட்டார். அதற்கு சிவன், உமா! இனி வரப்போகும் காலத்தில் உலகம் தர்ம வழிப்படி நடக்கவும், ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் காட்டவும் உன் அண்ணனாகிய மகாவிஷ்ணு ராமன் என்ற பெயரில் பூமியில் தசரதச் சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்து, செயற்கரிய செயல்கள் செய்யப் போகிறார். அந்த அவதாரத்தில் ராம என்ற பெயர் மிகவும் புகழ் பெறும். அது மட்டுமல்லாமல் நானே என்னுடைய பதினோராவது ருத்ர ரூபத்தை ராமரின் உதவிக்காக பூமியில் பிறக்கச் செய்யப்போகிறேன் என்றார்.
அதைக் கேட்ட சக்திக்கு அந்த அவதாரத்தின் போது தானும் உடனிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஈசனிடம் அதைச் சொல்ல, அவரும் சம்மதித்தார். அந்த அவதாரம் எப்படி இருக்க வேண்டும் என விவாதித்தனர் அம்மையும் அப்பனும். மனித வடிவு எடுப்பது இயலாது. ஏனெனில் ராமனுக்கு தாசனாக, பணியாளனாக இருக்க வேண்டும். எப்போதுமே எஜமானனை விட பணியாளன் ஒரு படி குறைந்தவனாகவே இருப்பது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு. அது மட்டுமல்ல, முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான். அதனால் நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபம் பலிக்கவும், ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவானது. உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என வேண்ட, எம்பெருமான் அதற்கு ஒப்புக் கொண்டார். அதனால்தான் அனுமனின் வால் சக்தி மிகுந்ததாகவும், அழகானதாகவும் விளங்குகிறது.
தசரதச் சக்கரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்ததும், அதன் பிரசாதமான பாயசத்தை ஈசன் அருளால் ஒரு கருடன் கொத்திக் கொண்டு போய் காற்று அதை மிகச் சரியாக அஞ்சனையில் கையில் சேர்க்க கேசரி, அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்தாள் தாய். ஒரு நாள் பசிக்கிறது என்று வானத்தில் அப்போது தான் உதிக்கும் சூரியனை பழம் என நினைத்து அதைச் சாப்பிட வானில் தாவினார் மாருதி. அவரைத் தடுத்த இந்திரன் தன் ஆயுதத்தால் மிக மெதுவாக அவரது தாடையில் அடிக்க, அது நீண்டு உருமாறியது. அன்று முதல் சுந்தரனுக்கு அனுமன் என்ற பெயர் ஏற்பட்டது. (அனுமன் என்றால் வளைந்த தாடையை உடையவன் என்று பொருள்)
மிக மிக குறும்புக்காரராக இருந்தார் பால அனுமன். முனிவர்களின் யாகத்தைக் கலைப்பதும், மரத்தின் மீது ஏறிக் கொண்டு அவர்கள் மீது கல்லை வீசுவதும் என அவரது தொல்லை சகிக்க முடியாமல் போனது. அந்த வனத்தில் இருந்த முனிவர்களுக்கு மாருதியின் அவதார நோக்கம் தெரியும் என்பதால் சிறு சாபம் ஒன்று கொடுத்தனர். அதன்படி பவன குமாரருக்கு தனது பலம் என்ன என்பது தெரியாமல் மறந்து போனது.
மாருதியின் கல்விக்கான நேரம் வந்த போது, சூரியனே கல்வியில் மிகச் சிறந்தவர் என்று எல்லாரும் சொல்லக் கேட்டு, அவரையே தனது குருவாக வரித்தார் அனுமன். சூரியனின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தபடியே நால்வகை வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள் என எல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் வியாகர்ணம் எனப்படும் சமஸ்கிருத இலக்கணத்தை மிக நன்றாகக் கற்று பண்டிதர் எனப் பெயர் பெற்றார்.
கல்விக்காலம் முடிந்ததும் தனது அவதார நோக்கத்தை அறிந்து கொண்டார் அவர். ராமபிரான் வரும் வரையில் காத்திருப்பதுதான் தன் கடமை என உணர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் சுக்ரீவன் மனைவியையும், நாட்டையும் இழந்து காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது அமைச்சனாக, வழிகாட்டியாக பணியில் அமர்ந்தார் அனுமன். ராமபிரானை முதல் முதலில் கண்டு, தான் இன்னார் என்று வெளிப்படுத்திக் கொண்டு ராமனுக்கு அளப்பரிய பணிகள் அனுமன் செய்தது நாம் அறிந்தது. ஜாம்பவான் மாருதியின் பலத்தை நினைவுபடுத்த அதன் பிறகு அவர் கடலைத் தாண்டியதும், சீதையை கண்டதும், இலங்கையை தீக்கிரையாக்கியதும் நாடறிந்த ஒன்று.
Hanuman Jayanthi - அனுமன் ஜெயந்தி:
எவ்வாறு வழிபட வேண்டும்
அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?
சில கடினமான விஷயங்கள் நடைபெற வேண்டுமே என பக்தர்கள் அனுமனுக்கு வேண்டிக் கொண்டு வெற்றிலை மாலை சாத்துவது என்னும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அசோகவனத்தில் அனுமன் சீதையைக் கண்டு வணங்கி, தான் ராமனின் தூதன் என்று எடுத்துரைத்தார். சீதையை நம்ப வைக்க அண்ணலின் கணையாழியைக் காட்டினார். பெரிதும் மனம் மகிழ்ந்த சீதை, மாருதிக்கு ஆசிர்வாதம் செய்ய நினைத்தார். பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை அல்லது மலர்களைத் தூவி வாழ்த்துவது வழக்கம். ஆனால் அசோக வனத்தில் அவை ஒன்றுமே இல்லை. அதனால் சீதாபிராட்டியார் பக்கத்தில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளைக் கிள்ளி, இந்த இலையினால் நான் உன்னை ஆசீர்வாதம் செய்கிறேன்! நீ என்றென்றும் சிரஞ்சீவியாக இருப்பாயாக! இந்த இலை உனக்கு வெற்றியைத் தரும். அதனால் இன்று முதல் இதன் பெயர் வெற்றி இலை - அதாவது வெற்றிலை என்று மக்களால் அழைக்கப்படும் என்று கூறி வாழ்த்தினார். அதனால் வெற்றிலை மாலை அணிவித்தால் அனுமன் மகிழ்ந்து நாம் கேட்டவற்றை நிறைவேற்றி வைப்பார்; காரியத்தில் நமக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்ற ஐதிகம் நிலவுகிறது.
வெண்ணெய், வடை மாலை சாற்றுவது ஏன்?
இதற்கும் அன்னை சீதாப்பிராட்டியார்தான் காரணம். இலங்கைக்குத் தீ வைத்த போது நெருப்பு அவரைச் சுடவில்லை என்றாலும், அதன் வெம்மை அவரைத் தாக்கியது. மேலும் போர்க்களத்தில் ஒரு கட்டத்தில் ராமனை ஒரு தோளிலும், இலக்குவனை மறு தோளிலும் சுமந்து அவர்கள் போரிட உறுதுணையாக இருந்தார் அனுமன். அப்போது எதிரிகள் எய்த அம்புகளாலும், கொடிய ஆயுதங்களாலும் மாருதியின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது. அதை அவர் ஒரு பேறாகவே கருதினார். போர் முடிந்தது. சீதை அக்னிப் பரீட்சையில் வென்று சீதாராமனாக காட்சி அளித்தார் ராமபிரான். அப்போது சீதை அனுமனின் உடலெங்கும் உள்ள காயத்தையும், வெப்பத்தினால் அவர் படும் வேதனையையும் புரிந்து கொண்டாள். என்ன இருந்தாலும் தாய் உள்ளம் அல்லவா? உடனே நிறைய வெண்ணெய் கொண்டு வரச் செய்து, அதை மாருதியின் உடலெங்கும் பூசச் செய்தாள். புண்களினால் ஏற்பட்ட வலியும், சூட்டினால் ஏற்பட்ட வேதனையும் வெகுவாகக் குறைந்தது. அதனால் அனுமன் மனம் மகிழ்ந்து, எனக்கு வெண்ணெய் சாற்றுபவர்களின் நோய் ராமபிரான் அருளால் முழுவதும் நீங்கிவிடும்! என்று கூறினார். அதனாலேயே அவருக்கு வெண்ணெய் சாற்றும் வழக்கம் ஏற்பட்டது.
வடை மாலை: நவகிரகங்களில் உளுந்து ராகுவுக்குரிய தானியம். ராகுவாலும் சில கெடுதல்களைச் செய்ய முடியும். அதைப்போக்க உளுந்தை நன்றாக அரைத்து, வடை செய்து அதை மாலையாக்கி அனுமனுக்கு அணிவித்து வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும். தோலுடன் கூடிய கறுப்பு உளுந்து என்றால் மிகவும் விசேஷம் என்பது ஐதிகம்.
அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?
வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.
ஆஞ்சநேயரின் பிற தோற்றமும் அருள்பாலிக்கும் ஆலயங்களும்!
ஸ்ரீ ஜெயவரத ஆஞ்சநேயர் (நவமாருதி) கோயில்: பொதுவாக ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் நின்ற கோலம், அமர்ந்த கோலம், பஞ்ச முகம், சஞ்சீவி மலை தூக்கிய கோலம் என்று தான் அருள்பாலிப்பார். ஆனால் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் ஆசியாவிலேயே எங்கும் இல்லாத படி நவ மாருதியாக அருள்பாலிக்கிறார். இதில் மூலவராக 12 அடி ஜெய வரத ஆஞ்சநேயரும், மூலவரைச்சுற்றி வீர ஆஞ்சநேயர், தீர ஆஞ்சநேயர், தைரிய ஆஞ்சநேயர், பால ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், தியான ஆஞ்சநேயர், பஜனை ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் என ஒன்பது வடிவங்களில் நவ மாருதியாக அருள்பாலிப்பது வேறு எங்கும் காண இயலாத சிறப்பம்சமாகும். இங்கு வந்து நவமாருதியை வழிபாடு செய்வதன் மூலம் சகல சவுபாக்கியங்கள் கிட்டும், சனி தோஷம் விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சகல லாபம் கிடைக்கும், சகல யோகம் அருளும், மனம் நிம்மதி பெறும், வீரம், சகல வித்தைகள் மற்றும் மனோபலம் அமையப்பெறும். தொடர்புக்கு 99440 95626
வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார். பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.
பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது. அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக இருந்து தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.
யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது. அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.
ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.
பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.
திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத் திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.
குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம். இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்õலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.
பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.
அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.
வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.
பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.
யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.
பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன். அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி அநுமநதி என்றும் வழங்கலாயிற்று.
சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
அனுமன் செய்த தியாகம்!
இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரட்சிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை. கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்; உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம் என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார். அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான் என்று கருதி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை.
அனுமனின் பக்தி, இந்த மூன்றாவது வகையைச் சேரும். ராமாயண காவியத்தில் ராமனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுபவன் அனுமன். நம் தேசத்தில் பல வகையான ராமாயணங்கள், பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. சம்ஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம், இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ், தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணம், தெலுங்கில் பக்த போத்தன்னா எழுதிய போத்தன்னா ராமாயணம் ஆகியவை மட்டுமின்றி, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயண காவியங்கள் உலகெங்கும் பன்னெடுங்காலமாகப் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் ஹனுமத் ராமாயணம் என்பதை ஹனுமானே அருளியதாகச் சொல்லப்படுகிறது. ஸ்ரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி. இந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீராமனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது.
அங்கே, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது யோக நிஷ்டையைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நாம ஜெபத்தைக் கேட்ட அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், ராம காவியம் கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.
அதற்கு அனுமன் மிகுந்த விநயத்துடன், ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ஸ்ரீராமனின் கதை பேசப்படவேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது! என்றார்.
அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். அதற்கான காரணத்தை மஹரிஷியிடம் பணிவோடு கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்து விட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார் என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.
ஹனுமான்! நீ ஸ்ரீராமனின் சிரேஷ்டமான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. இது, என் ஆனந்தக் கண்ணீர்தான். நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப்போக்கில் மறைந்துவிடும் என்றார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது என்று அமைதியுடன் கூறினார்.
அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனதார வாழ்த்தினார். ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும் என்றுகூறி, வாழ்த்திச் சென்றார்.
அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம். அனுமன் கண்ட ராமனை இந்தக் காவியவரிகளில் இன்றும் நாம் தரிசிக்கிறோம். அனுமன் வாயுபுத்திரன். சிவபெருமானின் அம்ஸாவதாரம். சூரியனைக் குருவாகக் கொண்டு நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றவர். எளிமையே உருவானவர். அடக்கமானவர். அவரது திறமையும் வலிமையும் அவருக்கே தெரியாது. ராமாயண காவியத்தில் எங்கேயும் எப்போதும் கோபப்படாதவர், அனுமன்தான். இலங்கையை எரித்ததுகூட கோபத்தினால் அல்ல; ராவணனுக்கு புத்தி கற்பிக்கவேதான்.
சீதாபிராட்டியால் சிரஞ்சீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ்சீவியாக நம்மிடையேதான் உலவிக் கொண்டிருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட கோயிலிலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
என்று அனுமனைப் பற்றிய சுலோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் என்பது இதன் பொருள்.
கடைசி வரியில் உள்ள ராக்ஷஸாந்தகம் என்பது, அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், திவேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர் என்பதைக் குறிக்கும். அனுமனை உபாசித்து அருள் பெற, ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவனாகி அருள்புரிவார். அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
துன்பங்கள் தீர்க்கும்... அனுமன் சாலீஸா (தமிழ்)
அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள்.
1. ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!
மூவுலகை யெழுப்பும் வானரர் கோனே!
2. ராமதூதனே! ஆற்றலின் நிறையே!
அஞ்சனை மைந்தனே! வாயுவின் புதல்வனே!
3. மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!
தீமதி நீக்கிடும் நன்மதி நண்பனே!
4. பொன் மேனியனே! பட்டாடை புனைவோனே!
ஒளிர்குண்டலமுடன் அலைமுடி கொண்டோனே!
5. இடி, கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!
மூஞ்சைப் பூணூல் தோளணிவோனே!
6. சிவனின் அம்சமே ! கேசரி மகனே!
உனதொளி வீரத்தை வணங்குது உலகே!
7. பேரறி வாளியே! நற்குண வாரியே!
ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே!
8. தலைவன் பெருமையைக் கேட்பதுன் பரவசம்!
ராமயிலக்குவ சீதையுன் மனவசம்!
9. நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!
கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்!
10. அசுரரை அழித்திடப் பேருருக் கொண்டே
ராம காரியத்தை நலமுடன் முடித்தாய்
11. சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட
விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்!
12. ரகுபதி யுன்னைப் பெரிதும் புகழ்ந்தே
பரதனைப் போல்நீ உடனுறை என்றார்!
13. ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்
பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்!
14. சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்
ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்
15. காலன் குபேரன் திசைக் காவலரும்
கவிஞர் புலவரால் சொல்லிட இயலுமோ?
16. சுக்ரீவனுக்கு அரசை அளித்திட
ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!
17. உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்
அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்!
18. தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே
சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்!
19. வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே
ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ!
20. உலகினில் முடியாக் காரியம் யாவையும்
நினதருளாலே முடிந்திடும் எளிதாய்!
21. ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!
நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி!
22. உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!
காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்!
23. நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!
மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்!
24. பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!
மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை!
25. நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!
பலமிகு நின்திரு நாமம் சொல்லிட!
26. தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!
மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே!
27. தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்
ராமனின் பணிகளை நீயே செய்தாய்!
28. வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!
அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்!
29. நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!
நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்!
30. ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!
தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே!
31. எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்
கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்!
32. ராம பக்தியின் சாரமே நின்னிடம்!
என்றும் அவனது சேவகன் நீயே!
33. நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!
தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்!
34. வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!
ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்!
35. மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்
அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்!
36. துன்பங்கள் தொலையும் துயரங்கள�
No comments:
Post a Comment