Tuesday, November 4, 2014

THIRUPPUGAZH - aiyngaranai


Courtesy: Sri.GS.Dattatreyan

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஐங்கரனை ஒத்த மனம் ... ஐந்து கரங்களை உடைய விநாயகரைப்
போன்ற மனமும் (மனோவேகத்துக்கு விநாயகர் அகிலத்தையும் எளிதாக
வலம் வந்த வேகத்தைத் தான் ஒப்பிட முடியும்)

ஐம்புலம் அகற்றி ... ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி

வளர் அந்தி பகல் அற்ற நினைவு ... இடைவிடாமல் வளரும் இரவு,
பகல், இவை இல்லாமல் போகும் நினைவினை

அருள்வாயே ... அருள் புரிவாயாக.

அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் ... இந்தப் பூமியில் பெருகி
வளரும் செந்தமிழால்

வழுத்தியுனை அன்பொடு துதிக்க ... போற்றி, உன்னை
அன்புடனே துதிக்க

மனம் அருள்வாயே ... மன நிலையை அருள் புரிவாயாக.

தங்கிய தவத் துணர்வு தந்து ... நிலைபெற்ற தவநிலை உணர்ச்சியைக்
கொடுத்து

அடிமை முத்தி பெற ... உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை
பெறவேண்டி

சந்திர வெளிக்கு வழி அருள்வாயே ... சந்திர வெளியைக்
காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக.

தண்டிகை ககனப்பவுசு ... பல்லக்கு, பெருமை, கெளரவம் இவைகளை

எண்டிசை மதிக்க ... எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம்
மதிக்கும்படியாக

வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே ... ஓங்கும் சிறப்பு
வகையில் அருள்வாயாக

மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்றமனம் ... மாதர்கள்
தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம்

உன்றனை நினைத் தமைய அருள்வாயே ... உன்னையே
நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி ... நாட்டுக் காவலர்கள்
இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி

வந்தணைய புத்தியினை அருள்வாயே ... என்னை வந்தடைந்து
கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக.

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் ... கொங்கு நாட்டில்
உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*)

அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே ...
(அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட
பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை
எனக்கு அருள் புரிவாயாக.

குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு ... யானைமுகப்
பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற

கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. ... கொங்கணகிரி
என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.


https://www.youtube.com/watch?v=YwU9fbR1yCQ&list=PLCFDF155232E9B34B
Hi I love this Tiruppugazh so much very nice sung by excellent singer Sankari Krishnan and great...


No comments:

Post a Comment