கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும், மாண்டது-அமைச்சு.
அரசனுக்கு எத்தனை ஆற்றல் இருந்தாலும் நல்ல அமைச்சர் அமையவில்லை யெனில் அரசாட்சி சிறப்பாக அமையாது. நல்ல அமைச்சர்கள் அவனுக்குத் துணையாக இருந்தால்தான் அரசாட்சி நன்கு நடைபெறும் . சில சமயங்களில் அரசன் தக்கபடி நடவாவிட்டால் அவனைத் திருத்தி நல்வழியில் செலுத்தும் திறன் வாய்ந்தவர்களாக அமைச்சர்கள் இருக்க வேண்டும் .
" அரசனே இப்படி இருக்கும்பொழுது நமக்கு என்ன?" என்று பாராமுகமாய் இருந்தாலும் , "அரசனை எப்படித் தடுப்பது ?" என்று அஞ்சி நின்றாலும் . அரசனுக்கு ஏற்றபடி இச்சகம் பேசினாலும் நாடு சீர் குலைந்துவிடும் . அத்தகைய அமைச்சர்களை எண்ணியே
" ஊரைக் கொளுத்துகிற அரசனுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி" என்ற பழமொழி உண்டாயிற்று
வழி வழி வந்த பாண்டிய மரபில் உதித்த பாண்டியன் நெடுமாறன் , அம்மரபுக்குரிய சைவ நெறியைத் தழுவாது , ஜைனனானான். சமய உணர்வு மிகுதியினால் இம்மதம் சிறந்தது என்று அவன் மாறவில்லை. ஜைனர்களுடைய ஆரவாரத்திலும் , பழக்க வழக்கங்களிலும் அவன் மனம் விரும்பி அறிவு மழுங்கியது. அவன் ஜைன சமயத்தினனானவுடன் , ஜைன குருமார்கள் அவனைத் தம் வசப்படுத்தி அரசியலிலும் குறுக்கிடத் தொடங்கினர்.
அப்போது அமைச்சர் தலைவராக இருந்தவர் குலச்சிறையார் . அவர் பாண்டிய நாட்டில் உள்ள மணமேற்குடி என்ற ஊரில் பிறந்தவர். சியபெருமானை எப்போதும் நினைந்து தியானிப்பவர் அதுமட்டுமின்றி, சிவனடியார்களைத் தெய்வமென்று மதிப்பவர்.. எந்தச் சாதியினரானாலும் , எந்த நிலையினரானாலும் , திருநீறும் , கண்டிகையும் புனைந்தவர்களானால் அவர்களை எதிர் கொண்டு வரவேற்று அவர்கள் காலில் விழுந்து வணங்குவார். பணிந்து உபசாரம் செய்து விருந்து படைத்து அனுப்புவார். தம் இல்லக் கிழத்தியாரும் இந்த அறத்துக்குத் துணை நிற்க , இந்தத் தொண்டை விடாது கடைபிடித்து வந்தார். அடியார் தனியே வந்தாலும் , கூட்டமாக வந்தாலும் சிறிதும் தங்கு தடையின்றி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து விருந்து படைத்து இன்புற்று , அவர்களை உவகையுடன் அனுப்புவார்
பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார்.
அவருக்கு' பெருநம்பி' என்ற ஒரு பட்டம் உண்டு .சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இவரை'பெருநம்பி குலச்சிறையார் ' என்று குறிப்பிடுகிறார். பழங்காலத்தில் சிறந்த அமைச்சர்களுக்கு 'பெரு நம்பி ' என்ற பட்டம் சோழர்களாலும் , பாண்டியர்களாலும் அளிக்கப் பெறுவது வழக்கம். ஒட்டக் கூத்தரும் தாம் இயற்றிய தக்கயாகப்பரணியில் குலச்சிறையார், பெருநம்பி என்னும் பட்டம் உடையவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசரின் போக்கைக் கண்டு குலச்சிறையார் மிகவும் வருந்தினார். அரசன் ஜைன நெறியில் புகுந்ததோடன்றி , ஜைனர் சார்பில் ஒழுகி, சைவர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்தார். இதனை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்று குலச்சிறையார் எண்ணினார் பாண்டியன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியார் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். அம்மங்கையும் தன் கணவரின் மனமாற்றம் கண்டு மிகவும் வருத்தமுற்று இறைவனிடம் எப்படியேனும் அவர் திருந்தி சைவனாக வேண்டும் என்று மனமுருகி வேண்டி நின்றாள்.
இதிலிருந்து அக்காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு மதத்தைச் சார்ந்திருந்தார்கள் என்பது தெரிய வருகின்றது. அமைச்சர் குலச்சிறையார் , மங்கையர்க்கரசியின் பக்தி நிலையைத் தெரிந்து கொண்டு , அவரைத் தெய்வமாகப் போற்றி வந்தார். சைவத்தில் ஊறிய திருஞான சம்பந்தர் தம் ஊருக்கு வந்தால் , ஜைனர்களுடைய ஆரவாரம் அடங்கும் என நினைத்தார் அரசியார். அரசியின் விருப்பம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக நின்றார் குலச்சிறையார். சம்பந்தப் பெருமானை வருவித்து , வேண்டிய வழிபாடுகள் ஆற்றி , ஜைனர்களை சம்பந்தருடன் அனல் வாதம் , புனல் வாதம் போன்ற வாதங்களைச் செய்வித்து , அவர்களை தோல்வியுறச் செய்து , அவர்களுக்குரிய தண்டனையைப் பெறும்படிச் செய்தார். இது போன்ற நிகழ்ச்சிகளை அருணகிரிநாதரும் திருப்புகழில் வெகுவாக விவரித்துள்ளார்
( அனல்வாதம் -- வாதம் செய்யும் இரு தரப்பினரும் , பாடல்களை ஓலையில் எழுதி தீயில் இடவேண்டும் யார் ஓலை தீயில் வேகாது பசுமையாக இருக்கின்றதோ அவர்கள் வென்றவர்களாகக் கருதப் படுகின்றனர் மற்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் .
புனல் வாதம் – முன் சொன்னது போல் பாடல்களை ஓலையில் எழுதி , ஆற்றில் விடவேண்டும் .அந்த ஓலைகள் ஆற்றை எதிர்த்து வெகு தூரம் சென்றால் அவர்கள் வெற்றிக்கு உரியவராகக் கருதப் படுகின்றனர். . ஆற்றின் திசை நோக்கி அது நம்மிடமே வந்து சேர்ந்தால் அது தோல்வியைக் குறிக்கும். தோல்வி யுற்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் )
அரசனும் பழையபடி சைவனாகி , பின் சைவ மரபைத் தழுவி, மேன்மேலும் உரிய தொண்டாற்றினான் என்றால் அந்தப் பெருமை குலச்சிறையாரையே சாருமன்றோ! . நல்ல அமைச்சருக்கு அழகு அதுதானே !
வாதில் தோற்ற அமணரை வன் கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர் தாள்.
No comments:
Post a Comment