Sunday, November 9, 2014

Guru Bhakti - HH. Sri.Bharathi theertha of Sringeri

courtesy: Sri.GS.Dattatreyan

நமது குருநாதர்களின் குருபக்தி:
:

சாஸ்திரத்தில் 'ஆசார்யவான் புருஷோ வேத' என்று ஒரு வாக்யம் உள்ளது. அதாவது 'குருவின் உபதேசத்தால் பெறப்படும் பிரம்மஞானம் தான் அஞ்ஞானத்தைப் போக்கி முக்தியை அளிக்க வல்லது' என்று கூறப்பட்டிருக்கிறது. நல்ல ஸம்ப்ரதாயத்தில் வந்த குருவை அடைந்தவன் முக்திக்கு எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்தவன் ஆகிறான். ஆகையால் எவ்வளவுதான் ஸ்வயமாகவே புஸ்தகங்களைப் படித்தாலும் ஆத்ம ஞானத்தைப் பெறுவதற்கு ஒரு ஸத்குருவை அண்டி அவரை ஆச்ரயிக்க வேண்டும்.
இதையே தான் ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தம்முடைய அனுக்ரஹ பாஷணங்களில் மீண்டும் மீண்டும் வற்பறுத்திச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இதற்கு மஹாஸ்வாமிகளின் திவ்யமான ஜீவனசரித்திரமே, எல்லாருக்கும் மார்கதர்சனத்தை நல்கும் ப்ரத்யக்ஷமான உதாரணம்.

மாறி, மாறி பல பலவிதமாக ஜன்மங்களைப் பெற்று சுகதுக்கங்களை அனுபவித்து வரும்போது நடுவே ஏதோ ஒரு புண்யபல பரிபாகத்தால் மானிட ஜன்மம் கிடைக்கிறது என்று சொல்லுகிறார்கள். போகங்களை மட்டும் அனுபவித்து அந்தப் புண்யபலனைக் கரைத்து வீணடித்து விடக்கூடாது. சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள, நமக்கென்று விதிக்கப்பட்டுள்ள பல நித்ய கர்மாக்களை நிஷ்காம்யமாகச் செய்ய வேண்டும். அதனால் சித்த சுத்தி பெற வேண்டும். பிறகு ஞான மார்க்கத்தில் பிரவேசித்து பல சாதனைகளைச் செய்து படிப்படியாக முக்தியை நோக்கி முன்னேற ஒரு வாய்ப்பாகத்தான் இந்த மானிட ஜன்மத்தை பகவான் நமக்கு அளித்துள்ளார் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். அந்த மார்க்கத்தில் நமக்கு மார்க்கதர்சியாக இருந்து கொண்டு அழைத்துச் செல்லுபவர்தான் ஓர் உயர்ந்த ஸத்குரு.

தெய்வத்திடம் எப்படிப்பட்ட த்ருடமான பக்தியை வைக்கிறோமோ, அந்தப் பக்தியைப் போலவே மாற்றுக்குறையாத பக்தியை நம் குருநாதரிடமும் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட விசுவாசமான பக்தியை வைத்தால் அவர் நமக்கு நேராக உபதேசித்தவை, நேராக உபதேசிக்காமல் மானசீகமாக அனுக்ரஹம் செய்தவை, எல்லாம் நம் புத்தியில் பிரகாசிக்கும் என்பது குருகீதையில் கூறப்பட்ட ஒரு ச்லோகத்தின் தாத்பர்யம்.

பலவிதமான புண்யங்களில் ஏதோ ஒரு விசேஷமான புண்ணியம் செய்திருந்ததால் தான் நம் முன்னோருக்கும், நமக்கும், நம் பிற்கால சந்ததியினருக்கும் சிருங்கேரி ஜகத்குருக்கள் ஆசார்யர்களாக அமையும் பாக்யம் ஏற்பட்டிருக்கிறது.

ஆதிசங்கரர் முதல் இன்று மஹோன்னதமாக ஆட்சி புரிந்து வரும் ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த ஸ்வாமிகள் வரை ஒவ்வொருவரும் தம் கோடிக்கணக்கான சிஷ்யர்களிடம் பொழிந்திருக்கும் கருணையும் அருளும் அளவிடமுடியாதவை. ஒவ்வொருவரின் சரித்திரத்தையும் நாம் படிக்கும்போது ஒவ்வொரு ஜகத்குருவும் பாரபக்ஷம் இல்லாமல் தேச, விதேசங்களிலிருக்கும் சிஷ்யர்களுக்கு அவரவர் யோக்யதைக்கும் மனப்பக்குவத்திற்கும் தகுந்தபடி உபதேசம் செய்து கைதூக்கிவிட்டிருக்கிறார்கள் என்பதை அறியலாம். வாக்கால் மட்டுமல்லாமல் தங்கள் ஆசரணையினாலும் பல உபதேசங்களைச் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

எத்தனையோ நல்ல விஷயங்களைப் போதித்த விதத்திலேயே, ஒவ்வொருவரும் தம் குருநாதரிடம் எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதையும் சிருங்கேரி ஜகத்குருக்கள் தாமே தம் தம் குருநாதரிடம், உபமானம் கூறமுடியாத வகையில் விசேஷமான பக்தியைச் செலுத்தி அதையே நமக்கு ஒரு முன்னுதாரணமாகக் காட்டி போதித்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை நாம் நினைவுபடுத்திக் கொண்டோமானால் நம்முடைய குருபக்தியும் செழித்து ஓங்கி வளரும்.

சிருங்கேரி குருபரம்பரையை ஸ்தாபித்தவரான ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட லக்ஷிய குருவான ஸ்ரீகோவிந்த பகவத்பாதரிடம் எப்படி சரணாகதி செய்தார் என்பதை நாம் படித்திருக்கிறோம். எவ்வளவு தடவை படித்தாலும் மெய் சிலிர்க்கச் செய்யக் கூடிய சந்திப்பு அது. தாம் மேற்கொண்ட ஆதுர ஸந்யாஸத்தைக் கிரமமாக்கிக் கொள்ளவும், மஹா வாக்யங்களின் உபதேசத்தை குருமுகமாகப் பெற்றுக் கொள்ளவும் தகுந்த ஒரு குரு அவருக்குத் தேவையாக இருந்தது. எல்லாம் தெய்வக் கூற்றுத்தான். ஆனால் அவர் மனுஷ்ய அவதாரம் அல்லவா எடுத்திருந்தார்! தர்ம சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி தானே நடக்க வேண்டும்!

அவர் தேடிச் சென்ற குருநாதர் ஸ்ரீகோவிந்த பகவத்பாதர் இருக்கும் இடத்தை அடைந்து அவர் செய்த முதல் காரியம் அந்த மலையை மூன்று முறை வலம் வந்ததுதான். பிறகு பக்தியுடன் அந்தச் சிறிய குஹத்வாரத்தின் அருகே நின்றுகொண்டு குருவை ஸ்தோத்திரம் செய்தார். அந்தப் பாலகனின் வாக்கிலிருந்து வந்த ஸ்துதி ஞானோபதேசத்தைப் பெற விரும்பும் ஒரு முமுக்ஷுதான் குருவாக வரித்தவரை எவ்விதமான பக்தியுடன் அணுகி எப்படி சரணமடைய வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக இருந்தது. ஸ்ரீகோவிந்த பகவத்பாதர் குகைக்குள்ளிலிருந்தே அந்த ஸ்ரீபால சங்கரரின் யோக்யதையை அறிய விரும்பியவர் போல "நீ யார்?" என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு ஸ்ரீபால சங்கரர் அளித்த பதில் மிகவும் பிரசித்தமானது. பத்து சுலோகங்களில் அமைந்த அந்த பதில் 'தச ச்லோகி' என்ற பெயரில் ஒரு பிரகரண கிரந்தமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீகோவிந்த பகவத்பாதர் அவரைத் தம் சீடராக அங்கீகரித்து விட்டு அதைத் தெரிவிக்கும் விதமாக தம் இரு பாதங்களை மட்டும் குகையிலிருந்து வெளியே நீட்டினார். ஒரு சீடன் தம் குருநாதருக்குச் செய்ய வேண்டிய முதல் சேவை அவருடைய பாதங்களைப் பூஜிப்பதுதான் என்பதை அறிந்திருந்த ஸ்ரீசங்கரர் முறைப்படி அந்த 'பாத பூஜையை'ச் செய்தார் என்று ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயம் கூறுகிறது.

தஸ்ய உபதர்ஸிதௌ அத குஹாயா: த்வாரே ந்யபூஜயத் உபேத்ய ஸ:சங்கர: |
ஆசார இதி உபதிதோச ஸ: தத்ர தஸ்மை கோவிந்தபாதகுரவே ஸ: குருர் முனீனாம் ||

ஸ்ரீசங்கரரின் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குருபக்தியில் நிலைத்திருந்தனர் என்பதை பத்மபாதர், தோடகாசார்யர் என்பன போன்ற காரணப் பெயர்களைப் பெற்றதிலிருந்தே அறிந்து கொள்கிறோம். ஸ்ரீசங்கரரின் சீடர்களில் வயதிலும் அறிவிலும் பெரியவரான மற்றும் அவரை அடுத்து சிருங்கேரியில் ஜகத்குருவாக இருந்த ஸுரேசுவராசார்யரின் குரு பக்தி ஸாத்வீகமாகவும் ஆழமாகவும் அதேசமயம் கம்பீரமாகவும் இருந்தது என்று கூறலாம். பூர்வாசிரமத்தில் சிரோத ஸ்மார்த்த கர்மாக்களைச் செய்து கொண்டு புகழ்பெற்ற கிருஹஸ்தராக இருந்து கொண்டிருந்த விசுவரூபர், வாதத்தில் தோல்வியடைந்து பிரதிக்ஞையை நிறைவேற்ற நேர்ந்தபோது அவரிடமே 'குரு' என்ற பாவனையை வைத்து சரணமடைந்தார். சாஸ்திர விதிகளை மதித்து அதனால் ஏற்பட்ட கம்பீரமான மாறுதல் அது. அந்தப் பக்தி நிலைத்து நின்றது.

அந்தச் சமயத்தில் அவர் வாக்கிலிருந்து வெளிவந்த வாக்யங்கள் பொன்னானவை:

தத் அஹம்ஸுததார க்ருஹம் த்ரவிணானி கர்ம ச க்ருஹே விஹிதம் |
சரணம் வ்ருணோமி பவத் சரணௌ அனுபாரதி கிங்கரம் அமும் க்ருபயா ||

தம்மை ஸ்ரீஆசார்யரின் 'கிங்கரன்' என்று கூறிக்கொண்டு அடைக்கலம் புகுந்தார் என்று மாதவீய வித்யாரண்யர் கூறியிருக்கிறார். அந்தப் பக்தியிலிருந்த அவர் மனம் பின்னர் சிறிதும் சலிக்கவில்லை. பொறாமை மனம் கொண்டவர்களால் தூஷிக்கப்பட்டபோதும் அவர் 'குருவே சரணம்' என்ற மனப்பான்மையுடன் பொறுமை காத்தார். அவருடைய ஆழமான குருபக்தியால் உள்ளம் உறுதியாகியிருந்தது.

முப்பத்து மூன்றாவது ஜகத்குருவாக விளங்கிய ஸ்ரீஸச்சிதாநந்த சிவ அபிநவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் வரலாற்றைப் பார்க்கும்போது, அவருடைய எட்டு வயதில், குருவுடன் நிகழ்ந்த முதல் சந்திப்பிலேயே அவருடைய உன்னதமான குருபக்தி வெளிப்பட்டது தெரியவரும். அது இன்றும் மெய்சிலிர்ப்பை உண்டாக்கும் ஒரு நிகழ்ச்சி. மேலும் சிஷ்யர்கள் எவ்வாறு குருவை அணுக வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கும் பாடம். "குழந்தாய்! உனக்கு என்ன வேண்டும்?" என்று குருநாதர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் ஒரு ஸம்ஸ்க்ருத ச்லோகம்.

அயம்தான காலஸ்த்வஹம் தான பாத்ரம் பவானேவ தாதா த்வதன்யம் ந யாசே |
பவத்பக்திமேவ ஸ்திராம் த்தேஹி மஹ்யம் க்ருபாசீலசம்போ க்ருதார்தோஸ்மி தஸ்மாத் ||

இதன் அர்த்தம், "இது தான் தானம் செய்ய ஏற்ற தருணம், நான் தான் அந்த தானத்தை வாங்கிக்கொள்ளும் பாத்ரம். நீங்கள் ஒருவர்தான் கொடுப்பவராக இருக்கும் போது வேறு எங்கே சென்று யாசிக்க முடியும்? ஓ கருணையே குணமாக உள்ள சம்புவே! உங்கள் மேல் ஸ்திரமான பக்தியைக் கொடுத்து அதனால் என் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்குங்கள்." இந்தச் சம்பவத்திலிருந்து அவரின் மனத்திலிருந்த, "குருவும் பகவானும் வேறில்லை, குருபக்தியே இந்த ஜன்மமெடுத்ததன் பயனைக் கொடுக்கும்" என்ற கருத்துகள் வெளியாயின. அதன் பிற்பாடு, சாதனைகளைச் செய்த இவரை சங்கரரின் அவதாரம் என்று சொல்லவும் வேண்டுமோ! சங்கரரின் அவதார ஸ்தலமான காலடியைக் கண்டறிந்து ஓர் அதி ஸுந்தரமான ஆலயத்தை நிர்மாணித்து, ஆதிகுருவான சங்கரருக்கு அனைவரும் தங்கள் நன்றிக்கடனை ப்ரதிதினமும் செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்ட மஹான். இவர் அபிநவசங்கரர் என்றே அழைக்கப்பட்டார்.
அவருடைய சிஷ்யரான ஸ்ரீசந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள், தன் குரு எவ்வாறு சங்கரபகவத்பாதருக்கு அவருடைய அவதார ஸ்தலத்தில் ஆலயநிர்மாணம் செய்தாரோ, அதே போல் தன்னுடைய குருநாதருடைய அவதார ஸ்தலத்தில் (மைசூரில்) அபிநவசங்கராலயத்தை நிர்மாணம் செய்து லோகத்திற்கு அரிய உபகாரத்தைச் செய்தார். மேலும் அவருடைய உள்ளத்தில் குருநாதரைப் பிரதிஷ்டை செய்து கொண்டு எப்போதும் அவருடைய பெயரைச் சொல்லியே எல்லாருக்கும் ஆசி கூறிக்கொண்டிருந்தார். அவரிடம் தங்கள் கஷ்டங்களைப் பற்றிக் கூறி துயரத்தை ஆற்றிக் கொள்ள விரும்பிய பக்தர்களுக்கும் கஷ்ட நிவாரணம் ஏற்படவேண்டும் என்று பிரசாதம் கொடுக்கும்போது "எங்கள் குருநாதர் உங்களை ரக்ஷிப்பார். அவருடைய அருளால் உங்களுக்கு நன்மை ஏற்படும்" என்றே கூறுவார்.

அவருடைய சிஷ்யராக இருந்து முப்பத்தி ஐந்தாவது பீடாதிபதியான ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்தர் இளைய பட்டத்தைப் பெற்றவுடனேயே மடத்தின் கார்ய கிரமங்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. தம் குருநாதர் திடீர் திடீரென்று நீண்ட காலத்திற்கு அந்தர்முக அவஸ்தைக்குச் சென்று விடுவாராதலால் ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்தர் யாத்திரைகள் எதுவும் மேற்கொள்ளாமல் சிருங்கேரியிலேயே தங்கிவிட்டார். குருவின் அருகிலேயே இருந்து கொண்டு, குருவின் சேவை, பூஜை, மட நிர்வாகம் ஆகிய அனைத்தையும் கிரமமாக நடத்திக் கொண்டிருப்பதில் திருப்தி உடையவராக இருந்தார். குருநாதர் விதேஹ கைவல்யம் பெற்றவுடன் இரு ஆண்டுகள் கழித்துத் தான் அவர் யாத்திரைகளை மேற்கொண்டு சிஷ்யர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி ஊர் ஊராகச் செல்லத் தொடங்கினார். அவருடைய உள்ளத்தில் சதா குருபக்தி நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தது. அந்த குருபக்தி பரம ஆப்தர்களான சிஷ்யர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது வெளிப்படும். அந்தச் சமயத்தில் அவருடைய கண்கள் பனித்துப் பளிச்சிடும்.

இப்போது நம்முடைய குருநாதராகவும் பீடாதிபதிகளாகவும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீபாரதீ தீர்த்த ஸ்வாமிகளின் குருபக்தியின் சிறப்பு அவருடைய குருநாதரே அதனை ச்லாகித்துக் கூறியதிலிருந்து வெளிப்படும். 1987ஆம் ஆண்டு பெங்களூரில் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் அருளிய பாஷணத்தில் "நான் டெல்லிக்கு விஜயம் செய்யும் போது (1982இல்) என்னுடைய சிஷ்யரும் (ஸ்ரீபாரதீ தீர்த்த ஸ்வாமிகள்) என்னுடன் இருந்து கொண்டு, ஓர் உத்தமமான சிஷ்யன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறே நடந்து கொண்டார். அது அங்கு வந்திருந்த பண்டிதர்களுக்கு சங்கரர் தன்னுடைய சிஷ்யர்களுடன் விஜய யாத்திரை செய்தது இதே போல்தான் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது" என்று கூறினார்.

மேலும், அவரால் இயற்றப்பட்ட 'ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திர'த்தின் அமைப்பையும் அவற்றில் உள்ள ஒவ்வொரு நாமாவின் அழகையும், அவற்றின் கருத்தாழத்தையும் பார்த்தாலே போதும். அவருடைய மேதாவிலாஸமும், ஸம்ஸ்கிருத பாஷையில் உள்ள நிபுணத்வமும், ஸமாஸங்களை அமைப்பதில் அளவற்ற சாமர்த்தியமும் எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல கவிதா சக்தியும் உடைய அவர் அத்தனையையும் உபயோகித்து தம் குருநாதரை நம்முன் பிரத்யட்சமாகத் தோன்றும்படி செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

தம் மனத்தில் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் குருபக்தியை அந்த ஸ்தோத்திரம் என்ற பாத்திரத்தில் வார்த்து "என் சிஷ்யர்களே! நீங்கள் இந்த அம்ருதத்தை அருந்தி அமரத்வம் பெறுங்கள்" என்று சொல்லாமல் சொல்லி அந்த அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரத்தை நமக்கு அளித்திருக்கிறார். சிருங்கேரிக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் அந்த அஷ்டோத்தர சத நாமாவளியில் உள்ள நாமாக்களைச் சொல்லி அவருடைய குருநாதரின் பாதுகைகளுக்கு அர்ச்சனை செய்யும்போது அவருடைய கவனம் முழுவதும் அந்தப் பாதபூஜை சரியாகச் செய்யப்படுகிறதா என்பதில் தான் இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படி ஓர் ஆதர்ச குருபக்தராகவும் நம் குரு விளங்குகிறார்.

இத்தகைய குருநாதரைப் பெற்றுள்ள நாம், அவர் அறிவுறுத்தும் பாதையில் சென்று, அசைவற்ற குருபக்தியை வளர்த்துக் கொண்டு வாழ்வில் ஈடேற, அவர் அருளை யாசித்து, ஸாஷ்டாங்க நமஸ்காரங்களை ஸமர்ப்பித்துக் கொள்ளுவோம்.

No comments:

Post a Comment