Thursday, October 10, 2013

Dharma

Courtesy: Sri.Mannargudi Sitaraman Srinivasan
கங்காதரன் என்பவர் பெரியவாளை தர்சனம் பண்ண வரும்போதெல்லாம் கூடவே ஒரு ஆள் ஒரு பெரிய கூடை நிறைய பழங்களை சுமந்து கொண்டு வருவான். ஆனால் ஒருநாள் அவர் மட்டும் வந்தார். கையில் ஒரே ஒரு சீப்பு வாழைப்பழம். வாடிய முகத்துடன் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்.

பக்கத்திலிருந்த பாரிஷதர், "கங்காதரன் வந்திருக்கார்........"

"யாரு?.........மர்கடராஜா கம்பெனி டைரக்டரா?"

கங்காதரனுக்கு பொட்டில் அடித்தா மாதிரி இருந்தது! பெரியவா சொன்னது உண்மைதான்! ஆனால், இப்போது பெரும்பகுதி செல்வத்தை இழந்து, மிகவும் பரிதாபமான நிலையில் ஆபத்பாந்தவனைத் தேடி ஓடி வந்திருக்கிறார். கண்களில் நீர் கோர்த்து நிற்க,

"நா.........ரொம்ப கஷ்டத்ல இருக்கேன் பெரியவா......மத்த ரெண்டு பார்ட்னர்களும் என்னை ஏமாத்திட்டா! எப்போ பாத்தாலும் நஷ்டக் கணக்கு காமிச்சே ஏமாத்திட்டா! மொதல் போட்டேனே தவிர, இதுவரைக்கும் ஒரு ரூவா கூட லாபம் பாக்கலை பெரியவா.......பிஸினெஸ் ஆரம்பிச்சா, மொதல் அஞ்சு வருஷம் நஷ்டந்தான் வரும், அப்புறந்தான் ஆகாசத்தை பிச்சிண்டு கொட்டுமாம்......... சொல்றான்கள்".......
கண்களை துடைத்துக் கொண்டார். அரை மணி நேரம் கழிந்தது.

"ஒரு வாரத்ல எல்லாம் சரியாப் போய்டும். போப்பா" பிரசாதம் கிடைத்தது. ஆனாலும் தயக்கம் மனஸில் இருந்தது. "ஸ்ரீமடத்துக்கு நெறைய செஞ்சிருக்கியோன்னோ? கவலைப்படாதே! நான் பாத்துக்கறேன்"...ன்னு பெரியவா சொல்லியிருக்க வேண்டாமா?
ரொக்கமெல்லாம் மர்கடராஜா கம்பெனியில் முடங்கிவிட்டது. மிஞ்சினது? ஒரு கார், வீடு. மாஸ செலவுக்கே எத்தனையோ தில்லுமுல்லு பண்ண வேண்டியிருக்கு. "ஒரு வாரத்ல எப்பிடி ஸ்வாமி சரியாகும்?"
போய்விட்டார்.
மறுநாள் கம்பெனிக்கு போனதும் அவருடைய ரெண்டு பார்ட்னர்களும் "கங்காதரன் ஸார்........இன்னிக்கு நீங்க தனிக்காட்டு ராஜா! கம்பெனியே ஒங்க கைல! நாங்க ரெண்டு பேரும் ஒரு செமினார்க்கு போய்ண்டு இருக்கோம்........"

அன்றைக்கு கங்காதரன் "டைரக்டர்" என்று போட்டிருந்த லெட்டர்கள், செக்குகள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கார்யம் அரங்கேறியது! மதிய சாப்பாடுக்கு வெளியே போய்விட்டார்.

மறுநாள் காலை மர்கடராஜா கம்பெனியே திமிலோகப்பட்டது! மூன்று வங்கிகளில் இருந்தும் பெரும் தொகை எடுக்கப்பட்டு, கங்காதரனின் சொந்த கணக்கில் வரவு வைக்கப் பட்டிருந்தது! பார்ட்னர் பராங்குசம் கள் குடித்த குரங்காக தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்.....
"கூப்டு போலீசை! கங்காதரனை கம்பி எண்ண வெக்கறேன் பாரு....அரைநாள் அதிகாரத்ல இப்பிடி நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டாரே!..........."

"ஸார்........போலீஸ் கீலீஸ்......ன்னு போனா, நாமதான் கம்பி எண்ணனும்........."மானேஜர் மெதுவாக அவர்கள் கூட்டாக சேர்ந்து பண்ணின தகிடுதத்தங்களை ஞாபகப் படுத்தினார். அவ்வளவுதான்! திருடனுக்கு தேள் கொட்டினதை போல் இருந்தது. வாஸ்தவம். பிறரை ஏமாற்றினாலும் நம் மனஸை நாம் ஏமாற்ற முடியாதே!

அடுத்தவாரம், மலர்ந்த முகத்துடன் ஒரு கூடை பழங்களுடன் பெரியவாளை தர்சிக்க வந்தார் கங்காதரன். நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவர் வாயைத் திறக்கும் முன்,

".......அதெப்டி அந்த தந்திரம் ஒனக்கு தோணித்து? மூணு செக்குப் புஸ்தகத்லேர்ந்து ஒவ்வொரு செக் கிழிச்சிண்டியாக்கும்! ஒடனே ஒன் கணக்ல போட்டுட்டே!"

கங்காதரனை யாரோ தண்ணீருக்குள் முக்கி எடுத்தா மாதிரி தோன்றியது. அவர் மனைவியிடம் கூட இந்த விஷயத்தை சொன்னதில்லை. பெரியவா இப்படி போட்டு உடைக்கிறாரே!
உண்மைதான். தன் கையெழுத்துக்காக வைத்திருந்த செக்குகளில் இருந்து மூன்று செக்குகளை எடுத்து, தனக்கு ஞாயமாக சேர வேண்டிய பணத்தொகையை தன் பெயருக்கு எழுதி, அன்றே தன் கணக்கில் சேர்த்துவிட்டார்! இனிமேல், மர்கடராஜா எக்கேடு கெட்டுப் போனால் என்ன? .......

........ஆனால், அந்த எண்ணம், அந்த தந்திரம் தன் மூளையில் அந்த க்ஷணம் எப்படி உதித்தது? அதுவும்......பெரியவா சொன்ன ஒரு வார கால கெடுவுக்குள்!

"போறும் போறும்" என்று பெரியவா சொல்லும் வரை வந்தனம் பண்ணிக் கொண்டே இருந்தார்.

தர்ம ரக்ஷகனான கிருஷ்ணன் அந்த தர்மத்தை ரக்ஷிக்க, பாண்டவர்களுக்காக பண்ணின தகிடுதத்தங்கள் எத்தனையோ நாம் படித்து ரசித்திருக்கிறோம். எத்தனை தடவை அவதாரம் பண்ணினால் என்ன? கிருஷ்ணா! உன் பிறவி குணத்தை மாத்திக்க மாட்டியா?

No comments:

Post a Comment