Monday, June 3, 2013

Jeevanopaayam

Courtesy: Sri.Mayavaram Guru
 

உடம்பை வளர்த்துக் கொள்வது போல், உள்ளத்தையும் உயர்த்திக்கொள்'



ஜீவனோபாயத்தொழிலை தர்ம உபாயமாக்குக என்று மகாபெரியவா கூறுகிறார்.
!
ஸங்கமாகச் செய்வதோடு தனித்தனியாக அவரவரால் முடிந்த உபகாரங்களைச் செய்ய வேண்டும். ஸர்க்கார் உத்யோகம், கம்பெனி உத்யோகம் என்றிராமல் ஸ்வதந்திரமாக அநேகம் பேர் எதை வருத்தியாக (ஜீவனோபாயத் தொழிலாக) வைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதையே ஸம்பாத்யமில்லாமல், கொஞ்சம் இலவசமாகவும் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முடிகிற தொழில்களில் உத்யோகஸ்தர்களும்கூட ப்ஃரீ ஸர்வீஸ் பண்ண வேண்டும்.

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேந விநோதய சித்தம்

என்று ஆசார்யாள் ('பஜகோவிந்த'த்தில்) சொல்லியிருக்கிறார். அதாவது, 'தனக்கென்று ஏற்பட்ட தொழிலால் என்ன ஸம்பாதிக்கிறாயோ, அதனால் (உடம்பைவளர்த்துக் கொள்வது மட்டுமின்றி, தானதர்மங்கள் பண்ணி) உள்ளத்தையும் உயர்த்திக்கொள்' என்கிறார்.

இது ஒரு ஐடியல் இது அநுஷ்டிக்கப்பட வேண்டியதே. அவரவர் தொழிலே இதில் ஆத்மாபிவ்ருத்திக்குப் பிரயோஜனமாகிறது. ஆனால் இப்போது காலத்தின் கோளாற்றில், அநேகத் தொழில்களிலேயே தவிர்க்க முடியாமல் பாபமும் தோஷமும் வந்து சேருகிறதே! 'ஸோஷல் லைஃபி'ன் எல்லா அம்சங்களிலும் கலிதோஷம் 'கரப்ஷ'னாக (லஞ்ச ஊழலாக) வந்து புகுந்து கொண்டு இப்படி ஆகியிருக்கிறதே!இப்படியாக, ஸம்பாதித்த திரவியத்திலேயே தோஷமும் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டிருக்கிறபோது, இந்த திரவியத்தால் தான தர்மம் செய்துவிட்டால் மட்டும் போதுமா? அதுவே tainted money -யாகவும் (களங்கமுற்ற பணமாகவும்) கொஞ்சமாவது இருக்கிறதே!

ஆசார்யாள் அருள் மனஸோடு, 'உனக்கான தொழிலைப் பண்ணுவதில் ஸம்பாதி; அதிலே தப்பு இல்லை; ஆனால் ஸம்பாதியத்தை ஆத்ம ச்ரேயஸுக்குப் பிரயோஜனமாக்கிக் கொள்' என்றபோது, இப்படி அதிலேயே ஒரு கரப்ஷன் அம்சம் வந்து சேரும் என்று நினைத்திருக்கமாட்டார். இந்த தோஷத்துக்கு எனக்கு ஒரு பரிஹாரந்தான் தோன்றுகிறது. அதாவது அவரவர் தொழிலுக்குரிய ஸம்பாத்யத்தைப் பெறுவதில் தப்பில்லை என்று ஆசார்யாள் சொன்னாலும், இப்போதைய கரப்ஷன் ஸெட்-அப்பில் அவரவரும் கொஞ்சமாவது ஸம்பாத்யமே இல்லாமல், தகுந்த பாத்திரத்துக்காக ஃப்ரீ ஸர்வீஸ் பண்ணுவதுதான் பரிஹாரம் என்று நினைக்கிறேன்.

தொழிலால் ஸம்பாதித்து அப்புறம் அந்த ஸம்பாத்யத்தால் தானதர்மம் பண்ணுவதோடுகூட, தொழிலையே ஸம்பாத்யமில்லாமலும் கொஞ்சம் இலவசமாகச் செய்ய வேண்டும் என்கிறேன். ஒரு தொழிலில் ஏற்படுகிற கரப்ஷன் களங்கத்துக்குப் பிராயச்சித்தமாக அந்தத் தொழிலையே தான் கொஞ்சம் தியாகமாக, பரோபகாரமகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கரப்ஷன் ஸம்பந்தமேயில்லாமல் சுத்தமாகத் தொழில் செய்கிறவர்களும் அதை ஓரளவாவது திரவிய லாப அம்சமே கலக்காமல் உபகாரமாகப் பண்ணினால் அத்தனைக்கத்தனை புண்ணியந்தான்.

ஒரு டாக்டரா? நீ ஃபீஸ் வாங்கிக்கொண்டு வைத்யம் பண்ணுவதும் பரோபகாரம்தான். ஆனால் இதில் உனக்கே ஸ்வயோபகாரமான ஆத்மசுத்தி கிடைக்காது. அதுமட்டுமில்லை தவிர்க்க முடியாமல் சில பேர் 'ஸிக் லீவ்' கேட்கிறபோது, பொய் ஸர்டிஃபிகேட் தரும்படி ஆகியிருக்கலாம். இப்படியே பொய்யாக 'மெடிகல் ஃபிட்னெஸ் ஸர்டிஃபிகேட்'டும் சில பேருக்குக் கொடுத்திருப்பாய். இதனாலெல்லாம் ஆத்மா சுத்தி பெறாதது மட்டுமில்லாமல் அதில் புது அழுக்கும் படிந்திருக்கும். த்யாக ஸேவைதான் இந்த அழுக்கை அலம்பிட முடியும். ஆகையால் தினமும் ஒரு ஏழைக்காவது இனாமாக வைத்யம் பண்ணு. உன் ஜன்மாவில் ஒருவனுக்காவது, வீட்டில் கற்றுக்கொடுக்கக் கூடிய அளவில் பழகிய வைத்ய முறையைக் கற்றுக் கொடு. அவன் அதை முடிந்த வரையில் ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளட்டும்.

யாரப்பா? வக்கீலா? ஸரி. மாஸத்துக்கு ஒரு கேஸாவது தர்ம நியாயமுள்ளதாகப் பார்த்து, தகுந்த பாத்திரத்துக்காக ஃப்ரீயாக நடத்து. அதே மாதிரி ஒரு வியாஜ்யமேனும் கோர்ட்டுக்கு வெளியிலேயே ராஜியாகும்படிப் பண்ணு. வக்கீல் தொழிலில் ஏற்படுகிற தப்புக்களால் உனக்குப் பாபமுண்டாகாமல் தப்பிக்க இப்படிப் பரோபகாரம் பண்ணு. பாபம் போவது மட்டுமின்றி, இந்தமாதிரிச் சில வருஷம் நியமத்துடன் செய்து வந்தாயானால், உனக்கு பப்ளிக்கில் நல்ல பெயர் ஏற்படும். அந்த நல்ல பெயரினாலும் அநேக பொதுநலக் காரியங்களுக்கு உதவி பண்ணிப் புண்யம் ஸம்பாதிக்கலாம்.

ஒரு ஸங்கீத வித்வான் என்றால் தர்மக் கச்சேரி பண்ணி ஒரு பணிக்குப் பணம் வசூலாக உதவலாம். எழுத்தாளனானால் ஸமய ஸ்தாபனங்களுக்கு ஸத் விஷயங்கள் கொஞ்சம் இலவசமாக எழுதிக் கொடுக்கலாம். புஸ்தக பப்ளிஷர் என்றால் ஏழை மாணவர்களுக்குப் புஸ்தகங்கள் இலவசமாகத் தரலாம்; அல்லது உத்தமமான க்ரதங்கள் ஒன்றிரண்டையாவது (ஃப்ரீயாக இல்லாவிட்டாலும்) அடக்க விலைக்கு விற்கலாம். ஸத் விஷயமாக தூண்டு பிரசுரங்கள் இனாமாகவே அச்சிட்டு விநியோகிக்கலாம். இப்படி எந்தத் தொழிலானாலும் அதை (vritti) வ்ருத்தி க்காக இல்லாமல் ஆத்ம அபிவ்ருத்தி (vriddhi) க்காகவும் ஓரளவு ப்ரயோஜனப்படுத்த வேண்டும்.

''நான் ரொம்பவும் ஸாதாரணப்பட்ட டைப்பிஸ்ட் ஆச்சே!'' என்கிறாயா?பரவாயில்லை, அதிகமாகவே பரோபகாரம் பண்ண முடியும். உத்யோகமில்லாமல் எத்தனை ஏழைப் பசங்கள் திண்டாடுகிறார்கள்? அவர்களில் ஆறு மாஸத்துக்கு ஒரு பையன் வீதம் ஓரளவு 'ஒர்கிங் நாலெட்ஜ்' பெறுகிற மாதிரி டைப் அடிக்க ட்ரெயின் பண்ணு. இந்த உதவியை இனாமகப் பண்ணு. இதனால் அவர்களுக்கு ஆயுஸ்காலம் பூராவுக்கும் ஜீவனோபாயம் கிடைக்க வழி ஏற்படும். அவர்களுடைய நன்றியும் வாழ்த்தும் உன்னை இம்மையிலும் மறுமையிலும் ரக்ஷிக்கும்.

இப்படி அவரவரும் ஏதாவது ஒரு தினுஸில் தனித்த முறையில் தங்கள் தொழிலைக்கொண்டு உபகாரம் பண்ண முடியும். கார்யத்தால், திரவியத்தால் ஒன்றுமே பண்ண முடியாவிட்டாலும், குறைந்த பக்ஷம் திருமூலர் சொன்னாற்போல், ''யாவர்க்கும் இன்னுரை'' என்றபடி ப்ரியமாகப் பேசிக் கஷ்டத்தில் ஆறுதல் தருகிற உதவியையாவது பண்ணுங்கள்.

No comments:

Post a Comment