மகாபாரதத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் என்று இரு பிரிவினர். பகவான் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு உதவினார். கவுரவர்கள் அழிவிற்கு காரணமாக இருந்தார். ஆனால் பாண்டவர்களில் ஒருவரான கடோத்கஜன் என்பவன் பாரதப்போரில் இறந்தான். இவன் இறந்ததற்கு பகவான் கிருஷ்ணர் வருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மிகவும் சந்தோஷப்பட்டார். பகவானே சந்தோஷப்படும் அளவிற்கு இறந்து போன அந்த கடோத்கஜன் யார் என்பதை தெரிந்து கொள்வோமா?
ஒரு சமயம் அரக்கு மாளிகையில் தீப்பற்றி, பஞ்ச பாண்டவர்களும் குந்தியும் இறந்துவிட்டதாக துரியோதனன் முதலானோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த நேரம் அது. ஆனால், பஞ்சபாண்டவர்களும் குந்தியும் அங்கே தீயில் இறக்கவில்லை. அவர்கள் விதுரனின் உதவியால் தப்பிப் பிழைத்துக் காட்டுக்குள் போய்விட்டார்கள். அங்கே குந்தி, தர்மர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து பேரும் ஒரு மரத்தின் அடியில் மிகுந்த களைப்போடு படுத்துத் தூங்கிவிட்டார்கள், பீமன் மட்டும் அவர்களது நிலையை எண்ணி, கவலையோடு விழித்துக் கொண்டிருந்தான். அப்போது, விபரீதம் விளையப்போவது அவனுக்குத் தெரியவில்லை. அந்தக் காட்டில் ஓர் ஆச்சா மரத்தின் மேலே இருந்த ஒரு ராட்சஸன் ஏதோ மோப்பம் பிடித்துவிட்டு, சுற்றும்முற்றும் பார்க்கத் தொடங்கினான். மிகுந்த பலம், மழை மேகம் போலக் கறுத்த உடம்பு, சிவந்த கண்கள், கோரைப் பற்கள் வெளிப்படத் திறந்த வாய், தொங்கிய வயிறு, சிவந்த மீசையும் தலைமுடியும், பெருத்த மரம் போன்ற கழுத்து முதலானவற்றோடு பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்த அந்த ராட்ஸனின் பெயர் இடிம்பன். அவன் மறுபடியும் காற்றில் மோப்பம் பிடித்துவிட்டு, தலையைச் சொறிந்துகொண்டு, கட்டையான தலைமுடியைத் தட்டிவிட்டுக் கொண்டு தன் தங்கையை அழைத்தான்.
இடிம்பை! நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் என் மனதுக்குப் பிடித்த உணவு கிடைத்திருக்கிறது. ஆஹா! ஆஹா! நினைக்கும்போதே என் நாக்கில் எச்சில் ஊறி, அது வெளியில் வருகிறது. நாம் இருக்கக்கூடிய காட்டில் வந்து, அங்கே யாரோ சிலர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தைரியம்! யார் இவர்கள்? நீ போய் அவர்களைக் கொண்டு வா! நன்றாக நர மாமிசம் தின்று மகிழலாம் என்றான். அவன் தங்கையான இடிம்பையும் உடனே வேகவேகமாகப் போய் தூங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களை நெருங்கினாள். அவள் பார்வை பீமன்மேல் லயித்தது. ஆஹா! என்ன அழகு! இவருடைய வடிவமும் தோற்றமும் சிங்கம்போல் இருக்கிறது. இவர் எனக்கு கணவராகும் தகுதி கொண்டவர். கணவரிடமுள்ள அன்பு எத்தனை பெரியது! என் அண்ணனான இடிம்பன் சொல்வதை நான் கேட்கக் கூடாது. இவர்களை எல்லாம் கொன்று தின்றால், என்ன கிடைக்கப்போகிறது? கொஞ்ச நேரம் பசி அடங்கிப் போகும். அவ்வளவுதான்! அதற்குப் பதிலாக இவரை நான் திருமணம் செய்துகொண்டால், வாழ்நாள் முழுவதும் ஆனந்தமாக இருக்கலாமே! என்று நினைத்தாள். அரக்கி வடிவத்தை விட்டுவிட்டு, அவள் அழகான பெண் வடிவம் கொண்டாள். மெள்ள நடந்துபோய் பீமனை நெருங்கினாள். நிலவைப் போன்ற முகம், நடக்கும்போது வளைந்து நெளியும் இடை, தாமரை போன்ற கண்கள், கறுத்து சுருண்டு நீண்டு இருக்கிற கூந்தல், உடம்பெங்கும் ஆபரணங்கள் ஆகியவற்றோடு, அழகுச் சிலையாக எதிரே வந்த இடிம்பையைப் பார்த்தான்.
அவன் விழிகள் ஏதோ விசாரணையை வெளிப்படுத்தின. அதற்குள் இடிம்பை விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். ஆண் சிங்கமே! நீங்களெல்லாம் யார்? இந்தக் காடு, கொடுமையான அரக்கர்கள் வாழும் காடு என்பது உங்களுக்குத் தெரியாதா? இங்கு, பாவ எண்ணம் கொண்ட இடிம்பன் எனும் அரக்கன் வசிக்கிறான். அவன் உங்களையெல்லாம் கொன்று தின்னவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் என்னை அனுப்பியிருக்கிறான். ஆனால் எனக்கோ, உங்களை(பீமனை) பார்த்தபின் மனம் மாறிவிட்டது. உங்களையே கணவராக அடைய விரும்புகிறேன். வேறு யாரையும் நான் விரும்பவில்லை. தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்! மனிதர்களைத் தின்பவனாகிய அந்த அரக்கனிடமிருந்து நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்! என்று தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் அப்படியே ஆசை வார்த்தைகளாகக் கொட்டினாள். அதுவரை அமைதியாக இருந்த பீமன் பேசத் தொடங்கினான்.
பெண்ணே! இதோ படுத்திருப்பவர், என் மூத்த சகோதரர்(தர்மர்). என்னால் பூஜிக்கத் தகுந்தவரும் எனக்கு முக்கியமான ஆசார்யாருமான அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படியிருக்க, அவருக்கு முன்னால் நான் ஒருக்காலும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். தாயார், அண்ணன், தம்பிகள் என்னும் இவர்களை எல்லாம் இங்கே அரக்கனிடம் தின்னக் கொடுத்துவிட்டு, காமுகனைப் போல உன் பின்னால் ஒருக்காலும் வரமாட்டேன் என்றான். இடிம்பை தன் முயற்சியை விடவில்லை. விரரே! உங்களையும் உங்கள் தாயாரையும் நான் காப்பாற்றுவேன். அண்ணனாவது. தம்பியாவது! இவர்களை எல்லாம் விட்டுவிடுங்கள். என்னுடன் வாருங்கள்! என்றாள். அவள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல பீமன் பேசினான். அரக்கியே! என் சகோதரர்களை விட்டுவிட்டு நான் வாழ விரும்பவில்லை. நீ பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. போய்விடு இங்கிருந்து என்றான். போவதற்காகவா வந்தாள் இடும்பை? அவள் மேலும் பேசத் தொடங்கினாள். உங்கள் விருப்பம் எதுவோ, அதைச் செய்வேன். வேண்டுமானால், மனிதர்களைத் தின்னும் அந்த அரக்கனிடம் இருந்து இவர்களை எல்லாம் நான் காப்பாற்றுவேன். எல்லோரையும் எழுப்புங்கள்! என்றாள். பீமன் அதற்கும் உடன்படவில்லை. இந்தக் காட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கின்ற என் தாயையும் சகோதரர்களையும் நான் எழுப்ப மாட்டேன். தீயவனும் அரக்கனுமான உன் சகோதரனிடம் எனக்குப் பயமில்லை. அவனை நினைத்து நீதான் பயப்படுகிறாய் போலிருக்கிறது. அரக்கர்கள் என்ன? யாராக இருந்தாலும், என் முன்னால் அவர்கள் நிற்க முடியாது. இங்கிருந்து நீ போய்விடு! உன் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் செய்! அல்லது உன் சகோதரனையே வேண்டுமானாலும் இங்கே அனுப்பு! என்றான்.
அங்கே-இடிம்பனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. மனித வாடையை மோப்பம் பிடித்து, நாக்கில் ஜலம் வேறு ஊறுகிறது அவனுக்கு. பரபர வென்று மரத்திலிருந்து இறங்கினான். வேகவேகமாகப் போய்ப் பாண்டவர்களை நெருங்கினான். கோபத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு, கைகளைப் பலமாகத் தட்டியபடி நரமாமிசம் தின்ன விரும்பிய எனக்கு, எந்த அறிவுகெட்டவன் இப்போது இடைஞ்சல் செய்தான்? இடிம்பைகூட எனக்கு பயப்படாமல், இங்கேயே இருந்துவிட்டாளே! எனக் கத்தினான். விகாரமான அவன் பார்வையையும் கூச்சலையும் கண்டு இடிம்பை பயந்தாள். அவசர அவசரமாக பீமனிடம், ஐயா! கொடுமைக்காரனான என் அண்ணன் வந்துவிட்டான். நான் சொல்வதைக் கேளுங்கள்! தூங்குகின்ற உங்கள் தாயார், சகோதரர்கள், நீங்கள் என எல்லோரையும் அப்படியே ஆகாய வழியாகத் தூக்கிக்கொண்டுபோய் நான் காப்பாற்றுவேன். நினைத்தபடி வடிவம் மாறும் எனக்கு மிகுந்த பலம் உண்டு, வாருங்கள்! என்றாள். அவளுக்கு ஆறுதல் சொன்னான் பீமன். பெண்ணே! நீ பயப்படாதே! இந்த அரக்கன் மட்டுமல்ல; எல்லா அரக்கர்களும் சேர்ந்து வந்தாலும், அவ்வளவு பேரையும் நான் கொல்லுவேன். என்னைச் சாதாரண மனிதனாக நினைக்காதே! என்றான். அதற்குள் இடிம்பன், அங்கு நடந்ததைப் புரிந்துகொண்டான்.
ஆஹா! நம் தங்கை அழகான பெண் வடிவம் கொண்டு, இந்த மானிடனை(பீமனை) விரும்புகிறாள் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்ட இடிம்பன், தன் தங்கை பக்கம் திரும்பினான். இடிம்பையே! இவ்வளவும் செய்துவிட்டு, நீ இன்னும் என்னைப் பார்த்துப் பயப்படாமல் இருக்கிறாய். அறிவுள்ளவர்கள் இப்படிச் செய்வார்களா? இவர்கள் மட்டுமல்ல; இவர்களோடு சேர்த்து இப்போது உன்னையும் நான் கொல்லப்போகிறேன் பார்! என்று கத்தியபடியே பாண்டவர்களை நோக்கி ஓடி வந்தான் இடிம்பன். அவன் பாண்டவர்களை நெருங்குவதற்கு முன்னாலேயே, அவனை நோக்கிப் போனான் பீமன். நில்! நில்! சுகமாகத் தூங்கும் இவர்களை ஏன் எழுப்புகிறாய்? உன் பலத்தையெல்லாம், பெண் பிள்ளையான உன் தங்கையிடம் காட்டாதே! அவள் என்ன செய்வாள் பாவம்! முடிந்தால் என்னுடன் மோதிப் பார்! உன்னை நான் யமலோகத்துக்கு அனுப்புவேன். இந்தக் காடும் அரக்கர்களின் தொல்லையில்லாமல் அமைதியாக இருக்கும். வா! வந்து என்னுடன் போரிடு! என்றான்.
அதைக் கேட்டதும் அரக்கனுக்குக் கோபம் தாங்கவில்லை. ஏ மனிதா! நீ அதிகமாகத் தற்புகழ்ச்சி செய்துகொள்கிறாய். என்னுடன் சண்டை போடு! அதன்பிறகு நீ இருக்கவே மாட்டாய். தூங்கிக்கொண்டிருக்கிற அவர்களுக்கு நான் இடைஞ்சல் செய்யமாட்டேன். முதலில் உன்னைக் கொன்றுவிட்டு, பிறகு உன்கூட வந்திருக்கும் இவர்களையும் கொல்வேன். அதன்பின், என் வார்த்தையை மீறிய இந்த இடிம்பையையும் கொல்வேன் என்று கத்தியபடியே இடிம்பன், கைகளை ஓங்கியபடியே பீமனை நோக்கி ஓடினான். அவனைத் தடுத்து அவன் கைகளைப் பிடித்த பீமன், தரதர வென அவனை இழுத்தபடியே காட்டுக்குள் வெகுதூரம் போய்விட்டான். தூங்கிக்கொண்டிருந்த தன் தாயார், சகோதரர்கள் ஆகியோரின் தூக்கம் கெட்டுப்போகக் கூடாது என்றே பீமன் அவ்வாறு செய்தான். காட்டுக்குள் போனதும், பீமனுக்கும் இடிம்பனுக்கும் கடும்போர் மூண்டது. மத யானைகள் இரண்டு மோதிக்கொள்வதைப் போல இருந்தது. அவர்கள் போட்ட கூச்சல், இடி இடித்ததைப் போல இருந்தது. பீமன், எது நடக்கக் கூடாது என்று நினைத்தானோ அது நடந்தது. ஆமாம்! தூங்கிக்கொண்டிருந்த குந்தியும் மற்றவர்களும் விழித்துக்கொண்டார்கள். கூச்சல் கேட்டு விழித்தவர்கள், அங்கே நின்றுகொண்டிருந்த இடிம்பையைப் பார்த்தார்கள். அவளுடைய வடிவழகைக் கண்டு வியந்தார்கள். ஒன்றும் புரியாத அந்த நிலையில் குந்திதேவி, பெண்ணே! யார் நீ! தேவலோகத்தைச் சேர்ந்தவளா? அபரிமிதமான அழகு கொண்ட அப்சரஸ் இனத்தைச் சேர்ந்தவளா? சொல்! என்று கேட்டாள். இடிம்பை தன்னைப் பற்றிய தகவல்களை எல்லாம் சொல்லி முடித்து, இடிம்பனும் பீமனும் சண்டை போடுவதற்கான காரணத்தையும் சொல்லி முடித்தாள். அதைக் கேட்டதும் சகோதரர்கள் எல்லோரும் பீமனை நோக்கி ஓடினார்கள். அர்ஜுனன், பீமா! பயப்படாதே, உனக்கு உதவிசெய்ய, இதோ நான் இருக்கிறேன் என்றான். அவனை அடக்கினான் பீமன், அர்ஜுனா! நீ சும்மா இரு! அது போதும். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். பயப்படாதே! என்றான். அர்ஜுனனும், சரி, அவனுடன் விளையாடதே! சீக்கிரமாக அவன் கதையை முடி! என்றான். இந்த சண்டையின் இறுதியில் இடிம்பனைக் கொன்று உடல் வேறு, தலை வேறாகச் செய்துவிட்டுத் திரும்பினான் பீமன். பிறகு, அனைவரும் மகிழ்ந்து பீமனைப் பாராட்டினார்கள். சரி! இனிமேல் நாம் இங்கு இருக்கக் கூடாது. அருகில் இருக்கும் நகரத்துக்குப் போய் விடலாம் என்று தீர்மானித்துக் குந்தியும் பஞ்சபாண்டவர்களும் அங்கிருந்து புறப்பட்டார்கள். அவர்களுடன் கூட, இடிம்பையும் புறப்பட்டாள். அப்போது பீமனிடம் அவள் ஐயா! உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, நான் என் சகோதரனின் வார்த்தைகளையும் மீறி, உங்களைக் காப்பாற்ற முற்பட்டிருக்கிறேன். என்னை விலக்காதீர்கள்! என வேண்டினாள்.
பீமன். நீயா? உன் சகோதரன் போன வழியிலேயே நீயும் போ! என்றான். தர்மர், அவனை அடக்கி அமைதிப்படுத்தினார். இடிம்பையோ குந்தியையும் தர்மரையும் வணங்கி, அம்மா! நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னதைப் போல, உங்கள் பிள்ளையான இவரையே (பீமனை) கணவராக வையுங்கள். அரக்கனின் சகோதரியான என்னையும், உண்மையிலேயே அரக்கி என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே நான் சாலக்கடங்கடி என்னும் ஓர் ஈஸ்வரி. அரக்கி என்பது பெயர் மாத்திரமே! நான் உங்களை எல்லாம் மிகவும் பொறுப்போடு பார்த்துக்கொள்வேன். நடக்கமுடியாத இடங்களில் எல்லாம் உங்களை நான் சுமந்து செல்வேன். அது மட்டுமல்ல! எனக்கு ஞான திருஷ்டியும் உண்டு. அதன்மூலம் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என அனைத்தும் எனக்குத் தெரியும். நடந்தது ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்! துரியோதனனால் ஊரைவிட்டு அனுப்பப்பட்ட நீங்கள், வாரணாவதத்தில் அரக்கு மாளிகை கொளுத்தப்பட்டபோது, தப்பிப் பிழைத்தீர்கள். விதுரர்தான் உங்களுக்கு வழிகாட்டிக் காப்பாற்றினார் என்றாள். குந்திக்கும் பாண்டவர்களுக்கும் வியப்பு தாங்கவில்லை. இடிம்பை தொடர்ந்தாள். நடந்ததைச் சொன்னேன். இனி நடக்கப் போவதைச் சொல்கிறேன், கேளுங்கள்! நாளை காலை வியாஸர் இங்கே உங்கள் எதிரில் தோன்றுவார். அவரால் உங்கள் துயரம் தீரும். வியாஸரின் வாக்குப்படி நீங்கள் சாலிஹோத்ர ரிஷியின் ஆசிரமத்தில் தங்குவீர்கள் என்று சொல்லி முடித்தாள். அவளுடைய வார்த்தைகளில் இருந்த உண்மையைக் குந்திதேவியும் தர்மரும் உணர்ந்துகொண்டார்கள். அதன்பிறகு அவர்கள் இருவரும், அம்மா! இடிம்பையே! நீ சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நாங்கள் சொல்வதையும் நீ கேட்டு, தர்மம் தவறாமல் நடந்துகொள்ள வேண்டும். பீமனை நீ மணம் செய்துகொள்ளலாம். ஆனால், ஒரு நிபந்தனை! பகல் பொழுது முழுவதும் நீயும் பீமனும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். உங்கள் விருப்பப்படி இருக்கலாம். ஆனால் அந்தி நெருங்கியதும், நீ பீமனை எங்களிடம் கொண்டுவந்து விட்டுவிட வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும்வரை நீ இப்படியே எங்களுடன் இருக்கலாம். எங்களுக்கு அனுகூலமாக இருக்க வேண்டும். என்று சொன்னார்கள். இதை இடிம்பை ஒப்புக்கொண்டாள். அதன்பிறகு இடிம்பை குந்திதேவியைத் தூக்கிக்கொண்டாள். அவளுக்கு இருபுறமும் பீமனும் அர்ஜுனனும் வர, நகுல சகாதேவர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களுக்கு வழிகாண்பிப்பதைப் போல, தர்மர் முன்னால் போனார் (அவர்கள் அனைவரும் சாலி ஹோத்திரரின் ஆசிரமத்துக்குப் போனது, வியாஸரைச் சந்தித்து அற உபதேசம் பெற்றது எல்லாம் தனிக்கதை).
வழியில் ஓரிடத்தில் அவர்கள் எல்லோரும் தங்கியபோது குந்திதேவி பீமனிடம், மகனே! நடந்ததையெல்லாம் நீ பார்த்துக்கொண்டுதான் இருந்தாய். தர்மத்தை முன்னிட்டு, நீ இந்த இடிம்பையை மணம் செய்துகொள்! உங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்கும். அவனால் நமக்குப் பல நன்மைகள் விளையும். நான் சொன்னதை அப்படியே செய். உன்னிடம் இருந்து வேறு எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்றாள். பீமன் மறுப்பேதும் சொல்லவில்லை. அம்மா! உன் வார்த்தையை அப்படியே வேதவாக்காகக் கொண்டு அதன்படியே நடப்பேன் என்றான். அப்புறம் என்ன! அன்னையின் வாக்குப்படியே பீமன் இடிம்பையை ஏற்றான். இடிம்பையும் தான் வாக்களித்திருந்ததைப் போலவே நடந்தாள். பகல் பொழுது முழுவதும் பீமனுடன் அழகான காடுகளிலும் மலைகளிலும் பொழுதைக் கழித்து, அந்தி சாயத் தொடங்கியதும் திரும்பி தன் வாக்கைக் காப்பாற்றினாள்; குந்திக்குப் பணிவிடை செய்தாள். மறுநாள் மகாவிஷ்ணுவின் அவதாரமாகவே மதிக்கப்படும் வியாஸர் அங்கு வந்தார். அவர் குந்திக்கும் பாண்டவர்களுக்கும் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இடிம்பியைப் பற்றியும் சொல்லி, இவளுக்கும் பீமனுக்கும் ஒரு பிள்ளை பிறப்பான். அவன், கஷ்ட காலங்களில் எல்லாம் உங்களைக் கரையேற்றுவான் என்று சொல்லிவிட்டுப் போனார். வியாஸர் வாக்குப்படியே பிறந்த பிள்ளைதான் கடோத்கச(ஜ)ன். பாண்டவர் குலத்துக்கே மூத்த பிள்ளை இவன். கடோத்கஜன் பிறந்ததும், தாய்-தந்தையரை வணங்கினானாம்! எங்கேயாவது பிறந்த குழுந்தை தாய் தந்தையரை வணங்குமா என்ற எண்ணம் தோன்றுகிறதா? அரக்க குலத்தில் குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைகள் உடனே தாயின் வயதை(தாய்க்கு என்ன வயதோ, அதே வயதை) அடைந்துவிடும் என நம் இதிகாச புராணங்கள் சொல்கின்றன. தீய குணங்களே அரக்கர் குலம், தாய் என்பது நாம். நம்மிடம் தோன்றும் தீய குணங்கள் உடனே முழுமை பெற்று, அசுர வேகத்தில் செயல்படத் தொடங்கிவிடும். ஆத்திரம், அவசரம், கோபம், வெறுப்பு, ஆசை என்று பலவற்றிலும் செயல்பட்டு முழு வீச்சாக ஈடுபடுவோம். அதாவது நம்முடைய அறிவு, ஆற்றல், படிப்பு, பதவி அனுபவம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம். தீய குணங்களின் ஆற்றல் அவ்வளவு பெரியது! இதைத்தான் இதிகாச புராணங்களில் அரக்க குலத்தில் பிறக்கும் குழந்தைகள், பிறந்தவுடனேயே தாயின் வயதை அடையும் என்று, பொதுவான குறியீடாகக் குறித்தார்கள்.
தாய்-தந்தையரான இடிம்பி, பீமன் முதலானவர்களை வணங்கி கடோத்கஜன் ஏதோ சொல்லப் போகிறான். என்னவென்று பார்க்கலாம். பெற்றோர்களை வணங்கிய கடோத்கஜன், பீமனிடமும் மற்றவர்களிடமும்,நீங்கள் எப்போது நினைத்தாலும் நான் வருவேன் என்றான். இதன்பிறகு இடிம்பியும் இதையே சொல்லி விடைபெற்று, மகனுடன் அங்கிருந்து மறைந்தாள். இதன்பின்னர் கடோத்கஜன் வனபர்வதத்தில் வெளிப்படுகின்றான். பாண்டவர்கள் ஐவரும் திரவுபதி திருமணம் முடிந்து திரும்பினார்கள். சூதாட்டம் முடிந்து அவர்களும் திரவுபதியும் காட்டில் இருந்தார்கள். அந்த நேரத்தில் அர்ஜுனன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யப் போய்விட்டான். அப்போது மற்ற பாண்டவர்களும் திரவுபதியும் காட்டில் நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டபோது, பீமன் கடோத்கஜனை நினைத்தான். அப்போதே கடோத்கஜன் அங்கு வந்தான். பீமன் முதலானவர்களை வணங்கி, தந்தையே! ஏற்கெனவே சொன்னபடி, தாங்கள் நினைத்ததும் இதோ நான் வந்துவிட்டேன். என்ன செய்யவேண்டும்? உத்தரவிடுங்கள் என்றான். அதன்பிறகு பீமனின் உத்தரவின் பேரில், கடோத்கஜன் அனைவரையும் சுமந்துகொண்டு போய், பதரிகாசிமரத்தில் சேர்த்தான். கடோத்கஜன் இதற்காக மட்டுமா பிறந்தான்? பெற்றவர்களோ, அவர்களைச் சார்ந்தவர்களோ துயரப்படும்போது, பிள்ளை என்பவன் அத்துயரத்தைத் தீர்த்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இது பிள்ளைகளுக்கு விதிக்கப்பட்ட கடமை, இதிலேயே இன்னும் முனைந்து, அவர்களுக்காகத் தன் உயிரையே கொடுத்தவன் கடோத்கஜன். மிகவும் புகழ்பெற்ற கடுமையான யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட குரு÷க்ஷத்ர யுத்தத்தில், பதினான்காவது நாள் இரவு நேரம், அபிமன்யு வதத்துக்குக் காரணமான ஜயத்ரதன் வதம் முடிந்தபிறகு நடந்த நிகழ்ச்சி இது! யுத்த முறைகளை எல்லாம் மீறி, இரவு நேரத்திலும் யுத்தமென்று முடிவெடுக்கப்பட்டு, பதினான்காவது நாள் மாலைப் பொழுதில் சூரியன் மறைந்தும்கூட, தொடர்ந்து யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, அஸ்வத்தாமா சாத்யகியைக் கொல்வதற்காக கடும் வேகத்தோடு ஓடிவந்தார். அதைப் பார்த்த கடோத்கஜனின் தேர் அஸ்வத்தாமாவின் பக்கம் திரும்பியது.
உருக்கினால் செய்யப்பட்ட தேர் அது! கரடித் தோல்களால் உறை போடப்பட்டிருந்தது. அதன் உட்புற அளவு மட்டும் நானூறு முழ நீளம் இருந்தது. உள்ளே பலவிதமான ஆயுதங்களைத் தாங்கிய யந்திரங்கள் இருந்தன. வழக்கப்படி போர்களத்தில், குதிரைகளோ அல்லது யானைகளோதான் தேர்களை இழுத்துச் செல்லும். ஆனால் கடோத்கஜனின் பிரம்மாண்டமான தேரை ஒருவிதமான விசித்திர மிருகங்கள் இழுத்துச் சென்றன. யானையைப் போல் பொருத்த வடிவம் கொண்ட அவை, கால்களையும் சிறகுகளையும் விரித்துக்கொண்டு, கண்களை சூட்டி உருட்டி, உருட்டி விழித்துக்கொண்டு தேரை இழுத்துச் சென்றன. தேரிலுள்ள கொடிமரத்தின் உச்சியில் கழுகுகள் உட்கார்ந்து, சிறகுகளை அடித்துக் கத்திக்கொண்டிருந்தன. இவ்வாறு பயங்கரமாகக் காட்சிதரும் கொடிமரத்தில் இருந்த கொடியோ, அந்தப் பயங்கரத்தை அதிகரிக்கும் விதமாக ரத்தத்தால் நனைக்கப்பட்டு, நரம்புகளை மாலைகளாகச் சூடியிருந்தது, அந்தத் தேருக்கு எட்டுச் சக்கரங்கள் இருந்தன. இப்படிப்பட்ட பிரமாண்டமான தேர் கடகட வென உருண்டோட அதிலிருந்த கடோத்கஜன், அஸ்வத்தாமாவைத் தடுத்தான். போர்களத்தில் அந்த நேரத்தில் ஆக்ரோஷமாக வெறியுடன் ஓடிவரும் அஸ்வத்தாமாவைப் பார்ப்பதற்கே, எல்லோரும் பயந்த அந்த நிலையில், கடோத்கஜன் மிகுந்த துணிச்சலோடு அஸ்வத்தாமாவைத் தடுத்தான். அவனுடைய தைரியம், வீரம், ஆற்றல், ஆகியவற்றை நம் மனதில் பதிய வைப்பதற்காகவே, கடோத்கஜனின் தேரைப் பற்றி விரிவாக வர்ணித்தார் வியாஸர். அப்படிப்பட்ட தேரில் வரக்கூடியவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும்? மலை போன்ற உருவம். பயங்கரமான தோற்றம். கோரைப் பற்கள் வெளிப்பட்டு உதடுகளை நக்கிக் கொண்டிருந்தன. நமக்கெல்லாம் உடம்பில் உள்ள முடி கீழ்நோக்கி இருக்கும். ஆனால் கடோத்கஜனுக்கோ முடி மேல் நோக்கி இருக்கும். விகாரமான கண்கள். பெரிய குகை போன்ற தொண்டை. ஆழ்ந்த வயிறு. வாயைத் திறந்துகொண்டு யமனே நேராக வருவதைப்போல ஒரு தோற்றம். இப்படிப்பட்ட தோற்றத்தோடு கடோத்கஜன் வந்தால் என்னவாகும்? இதைக் கற்பனை செய்து பார்க்கும்போதே கதிகலங்கும், நேருக்கு நேராகப் பார்ப்பவர்களின் நிலை என்ன? கடோத்கசனைப் பார்த்ததும் கவுரவ சேனை முழுவதும் கலங்கியது. கடோத்கஜன் கடுமையான யுத்தத்தைத் துவக்கினான். அவனுடைய யுத்த வேகத்தை எதிர்கொள்ள முடியாமல், கர்ணன் உட்பட எல்லோரும் போர்களத்தில் இருந்து ஓடினார்கள். அஸ்வத்தாமா மட்டுமே கடோத்கஜனை எதிர்கொண்டு, அவனுடன் பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டான் (இருவருக்கும் நடந்த போரை, பல பாடல்களில் வியாஸர் விவரித்திருக்கிறார்). அந்தக் கடுமையான யுத்தத்தில் அஸ்வத்தாமா, கடோத்கசனின் பிள்ளையான அஞ்சனபர்வா என்பவனைக் கொன்றார். கண் எதிரிலேயே நடந்த அந்நிகழ்ச்சியைக் கண்டும், கடுகளவுகூட சஞ்சலப்படவில்லை கடோத்கஜன்.
இந்த கடோத்கஜன் கண்ணனிடம் பகவத் கீதை கேட்டதில்லை. ஆனால், கண்ணனிடம் நேருக்கு நேராக பகவத் கீதை கேட்ட அர்ஜுனன், தன் பிள்ளையான அபிமன்யுவின் முடிவைக் கேட்டவுடன் துடித்த துடிப்பு அனைவருக்குமே தெரியும். ஆனால், பார்த்தசாரதியிடம் இருந்து பகவத் கீதை உபதேசம் கேட்காத கடோத்கஜனோ, கண் எதிரிலேயே தன் பிள்ளையின் முடிவைப் பார்த்தும்கூட பதறவில்லை, கலங்கவில்லை. என்ன மனோதிடம்! மகனின் முடிவு கண்டும் மனம் கலங்காத கடோத்கஜன், அஸ்வத்தாமாவின் நெஞ்சில் ஏராளமான அம்புகளைப் பாய்ச்சி, அஸ்வத்தாமாவை அவர் ரத்தத்தாலேயே நீராடினான். கடோத்கஜனால் அங்கே கவுரவர்களின் சேனைக்குப் பலத்த தேசம் உண்டானது. அதே நேரத்தில்... போர்களத்தின் மற்றொரு பக்கத்தில் கர்ணன், பாண்டவ சேனைகளைப் பஞ்சு போலப் பறக்கும்படி அடித்து ஓட்டிக்கொண்டிருந்தான். அதைத் தாங்கமுடியாத தர்மர் அர்ஜுனனிடம் சொல்ல, அர்ஜுனன், கண்ணா! தேரைக் கர்ணன் இருக்கும் இடம் நாடிச் செலுத்துங்கள்! கர்ணனை நான் கொல்வேன் அல்லது அவன் என்னைக் கொல்லட்டும்! என்றான். கண்ணன், அர்ஜுனனின் இந்தப் பேச்சை மறுத்தார். அர்ஜுனா! கர்ணனை எதிர்க்கக்கூடிய ஆற்றல், இரண்டு பேருக்குத்தான் உண்டு. ஒன்று நீ, இன்னொன்று கடோத்கஜன்! இப்போதைய நிலையில், கர்ணனுடன் நீ போர் செய்யக் கூடாது என்பது என் கருத்து. காரணம், கர்ணனிடம் தேவேந்திரனால் கொடுக்கப்பட்ட ஒரு சக்தி ஆயுதம் இருக்கிறது. எரி நட்சத்திரம் போல் இருக்கும் அதை, உன்னைக் கொல்வதற்காகவே கர்ணன் வைத்திருக்கிறான். பயங்கரமான வடிவம் கொண்டது அது.
இப்போதைய நிலையில் கடோத்கஜன் கர்ணனுடன் போர் செய்யப் போகட்டும். தெய்வ சக்திக்கு இணையான சக்தி கொண்டவன் அவன். தேவ அஸ்திரம், ராக்ஷஸ அஸ்திரம், அசுர அஸ்திரம் என எல்லா வகையான அஸ்திரங்களும் கடோத்கஜனிடம் இருக்கின்றன. அவனுக்கு எப்போதுமே உங்கள்மேல் அன்பு அதிகம்! உங்கள் நன்மையில் நாட்டம் உள்ள அவன் கர்ணனை வெல்வான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை என்றார் கண்ணன். கண்ணன் சொன்னதை, காண்டீபன் ஒப்புக்கொண்டான். கடோத்கஜனை அழைத்தான். நினைத்தாலே வருவேன் எனச் சொல்லியிருந்த கடோத்கஜன், அழைத்த பிறகும் சும்மா இருப்பானா? அப்போதே, அர்ஜுனன் எதிரில் நின்றான். கண்ணனையும் அர்ஜுனனையும் வணங்கி, கட்டளை இடுங்கள்! என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டான். கண்ணன், கடோத்கஜா! கர்ணனால் அடிக்கப்பட்டுக் கதிகலங்கி ஓடுகின்றது பாண்டவர் சேனை. உனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. நீ போய் கர்ணனைக் கொல்! வேறு யாருக்கும் அந்த ஆற்றல் இல்லை. பாண்டவர்களைக் காப்பாற்று! போ! போய், கர்ணனைக் கொல், போரிடு! என்றார். அப்படியே செய்கிறேன் என்ற கடோத்கஜன், அங்கிருந்து விலகி கர்ணனை எதிர்த்துத் தடுத்தான். கடோத்கஜனைப் பார்த்து துரியோதனன் கலங்கினான். எப்படியாவது கர்ணனைக் காப்பாற்று, போ! என்று துச்சாதனனை ஏவினான். அப்போது அலம்பலன் என்ற அசுரன் துரியோதனனிடம் வந்து, மன்னா! பாண்டவர்கள் என் தந்தையைக் கொன்றுவிட்டார்கள். அதற்குப் பழி தீர்ப்பதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் போர்க்களத்தில் என்னை ஏவுங்கள்! கடோத்கஜனுடன் போரிட எனக்கு அனுமதி கொடுங்கள்! என வேண்டினான். துரியோதனனும் அனுமதி கொடுத்தான். அலம்பலன் முழு பலத்தோடு போரில் ஈடுபட்டான். கடோத்கஜனுடன் அவன் போட்ட சண்டையும் கடுமையாகத்தான் இருந்தது. ஆனால் பலன்? கடோத்கஜன், அலம்பலனை அப்படியே தன் தலைக்கு மேலாகத் தூக்கிச் சுழற்றி, தரையில் அடித்தான். அலம்பலன் எழுவதற்குள், கடோத்கஜன் தன் ஒளி மின்னும் கத்தியை எடுத்து, விகாரமானதும் பயங்கரமானதுமான அலம்பலனின் தலையை அறுத்தான். அப்படியே அதைத் தூக்கிக்கொண்டு துரியோதனனின் ரதத்தை நோக்கி ஓடினான். துரோணர், கர்ணன், கிருபர் முதலான மாபெரும் வீரர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கடோத்கஜன் துரியோதனனின் ரதத்தை நெருங்கினான். அலம்பலன் தலையைத் துரியோதனனின் ரதத்தில் வைத்துவிட்டு, துரியோதனா! அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் விரும்பும் மனிதன் அந்தணர், அரசர், பெண்கள் ஆகியோரைப் பார்க்கப் போகும்போது, வெறும் கையோடு போகக்கூடாது. அதனால்தான் அரசனான உன்னைப் பார்க்க வரும்போது, உன்னால் அனுப்பப்பட்டவனின் தலையையே கொண்டு வந்தேன். போய், கர்ணனைக் கொன்றுவிட்டு மறுபடியும் வருவேன். அதுவரையில் நீ சந்தோஷமாக இரு! என்று சொல்லிவிட்டு, கர்ணனுடன் போர்புரியச் சென்றான். நட்டநடு ராத்திரியில் கடோத்கஜனுக்கும் கர்ணனுக்கும் யுத்தம் தொடங்கியது. நீண்ட நேரம் யுத்தம் சமமாகவே நடந்தது. அதன்பிறகு கர்ணன், தெய்வ அஸ்திரங்களை ஏவினான். கடோத்கஜனா கலங்குவான்? போர்க்களத்தில் மாயைகளின் மூலம் கர்ணனின் அஸ்திரங்களை எல்லாம் நாசம் செய்தான். அத்துடன், கர்ணா! இதோ உன்னை அழிக்கிறேன் பார்! என்று சொல்லி, அங்கிருந்து மாயமாய் மறைந்தான். ஏன், அப்போதே கர்ணனைக் கொன்றிருக்கக் கூடாதா? கடோத்கஜனுக்காக, அங்கே மற்றொரு வேலை காத்திருக்கும்போது அவன் கர்ணனோடு போரிட்டுக் கொண்டிருக்க முடியுமோ? அலாயுதன் என்ற ராட்சஸன், அங்கே துரியோதனனுக்காகப் போர்க்களத்தில் புகுந்து, பாண்டவர் சேனைக்குப் பெரும் அழிவை உண்டாக்கிக் கொண்டிருந்தான். அவனை எதிர்த்து நிற்க, யாராலும் முடியவில்லை. அவனுடன் பீமன் மோதினான். இரவு நேரத்தில் ராட்சஸர்களின் பலம் அதிகரிக்கும் என்ற நியதியை அனுசரித்து, அலாயுதனின் பலம் அதிகமானது. அவனும் பீமனும் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவர் உடம்புகளும் ரத்தத்தில் நனைந்த யானைகளைப் போல் இருந்தன. அப்போது, எப்படியாவது பீமனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்ணன், கடோத்கஜனை அழைத்து அலாயுதனுடன் போரிடச் செய்தார்.
அலாயுதனுக்கும் கடோத்கஜனுக்கும் பெரும் போர் நடந்தது. முடிவில், கடோத்கஜன் அலாயுதனின் தலையை அறுத்து, துரியோதனனின் முன்னால் வீசினான். அழகான கவச குண்டலங்களுடன் கூடிய அலாயுதனின் தலை ரத்தத்தோடு வந்து, துரியோதனன் முன்னால் விழுந்தது. அவன் நடுங்கினான். அந்த நடுக்கத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, கடோத்கஜன் பெருத்த குரலில் கர்ஜித்தான். உடனே பாண்டவ சைனியம் வெற்றி முழக்கம் இட்டது. அந்தக் கூச்சலால், ஓரளவுக்கு நடந்ததை உணர்ந்துகொண்ட கர்ணன், அந்த இடத்துக்குத் திரும்பினான். கர்ணனை அங்கு பார்த்ததும், அனைவரும் அவன் மீது அம்புகளைப் பொழிந்தார்கள். மலைபோல் அசையாமல் இருந்துகொண்டு, அந்த அம்பு மழையை கர்ணன் தடுத்தான். கர்ணனுக்கும் கடோத்கஜனுக்கும் கடுமையான யுத்தம் ஆரம்பமானது. யார் கர்ணன், யார் கடோத்கஜன் என்ற அடையாளமே தெரியாதபடி சண்டை நடந்து கொண்டிருந்தது. ஆச்சரியகரமான, மனக் குழப்பத்தை உண்டுபண்ணக்கூடிய ஆயுதங்களை ஏவி, கடோத்கஜன் கர்ணனைக் கலங்க அடித்தான். அதைத் தாங்கமுடியாத கர்ணன் ஓர் அஸ்திரத்தை ஏவி, கடோத்கஜனுடைய ரதத்தை முற்றிலுமாக அழித்தான். கடோத்கஜன் அங்கிருந்து ஆகாயத்தில் மறைந்தான். ஆஹா! மாயா யுத்தம் செய்வதற்காக, கடோத்கஜன் மறைந்து விட்டான். அவன் கர்ணனைக் கொல்லாமல் விடமாட்டான் என்று கவுரவ வீரர்கள் கத்தினார்கள். கர்ணன் அளவில்லாத அம்புகளைப் போட்டு ஆகாயத்தை மூடினான். ஏற்கெனவே இருந்த இருள் இன்னும் அதிகமானது. அப்போது கடோத்கஜன் மாயையினால்... பயங்கரமான செம்மேகத்தைப் போல ஒளி வீசக்கூடிய அக்னிப் பிழம்பு அங்கே தோன்றியது; மின்னல்கள் மின்னின; ஒளியை வீசிக்கொண்டு நட்சத்திரங்கள் சீறி விழுந்தன; கத்தி, ஈட்டி, கோடரி, நூறு குறுவாள்களைக் கொண்ட ஓர் ஆயுதம், அம்புகள், உலக்கைகள் எனப் பலவிதமான ஆயுதங்கள் பளபளத்து மழைபோல் விழுந்தன. அந்த ஆயுதங்களை எல்லாம் அழிப்பதற்கு, கர்ணனால் முடியவில்லை. துரியோதனனுடைய சேனை திசை தெரியாமல் சிக்கிச் சுழன்று, பெரும் அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. கவுரவ வீரர்களே! ஓடுங்கள்! இனிமேல் நாம் தப்ப முடியாது. பாண்டவர்களுக்காக, தேவேந்திரனே தன் படைகளோடு வந்து நம்மை அடிக்கிறான் என்று உளறியபடியே ஓடினார்கள். கடோத்கஜன் நூறு கூர்மையான குறுவாள்கள் சொருகப்பட்ட ஒரு சக்கராயுதத்தை ஏவி, கர்ணனின் ரதத்தை இழுத்துச் சென்ற குதிரைகளைக் கொன்றான். கர்ணன் ரதத்தில் இருந்து இறங்கி, தரையில் நின்றான். அப்போது துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் கர்ணனைச் சூழ்ந்துகொண்டு, கர்ணா! இந்த ஓர் இரவிலேயே நமது சேனை, பெரும்பாலும் கடோத்கசனால் அழிந்து போய்விட்டது. மீதி இருப்பவர்களும், இதோ போர்க்களத்தை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால், பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் வேலை இருக்காது. கடோத்கஜன் ஒருவனே நம்மை முழுவதுமாக அழித்துவிடுவான். ஆகையால் கர்ணா! தேவேந்திரன் உனக்குக் கொடுத்த சக்தி ஆயுதத்தை எடுத்து, ராக்ஷஸனான கடோத்கஜன் மேல் ஏவி, அவனைக் கொல்! என்று வேண்டினார்கள்.
வேறு வழியற்ற நிலையில், கர்ணன் சக்தி ஆயுதத்தைப் பிரயோகிக்கத் தீர்மானித்தான். அந்த சக்தி ஆயுதம் அர்ஜுனனைக் கொல்வதற்காகவே பல வருடங்களாகப் பூஜை செய்யப்பட்டு வந்தது. கர்ணன், தன் கவச குண்டலங்களை இந்திரனுக்குத் தானமாகத் தந்தான். அப்போது தேவேந்திரனால், கர்ணனுக்குக் கொடுக்கப்பட்ட சக்தி ஆயுதம் அது! அதை ஒருமுறைதான் உபயோகப்படுத்த முடியும். குறி தவறாத அதை, அர்ஜுனனுக்காகவே கர்ணன் வைத்திருந்தான். ஆனால், கடோத்கஜனைக் கொன்றால் ஒழிய கவுரவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான அந்த நிலையில், சக்தி ஆயுதத்தை உபயோகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் கர்ணனுக்கு ஏற்பட்டது. உடனே, அவன் வைஜயந்தி என்னும் அந்த சக்தி ஆயுதத்தை எடுத்து கடோத்கஜன் மேல் பிரயோகித்தான். நாலா பக்கங்களிலும் ஒளியை வீசிக்கொண்டு, யமனுடைய நாக்கைப் போல ஏராளமான பாசங்களோடு, ஆகாயத்தில் இருந்து விழும் வால் நட்சத்திரத்தைப் போலத் தோன்றிய அந்த சக்தி ஆயுதம் கடோத்கஜனை நோக்கிப் பாய்ந்தது. கடோத்கஜன் பயந்துபோய் ஓடினான். சக்தி ஆயுதத்தின் வேகம் கண்டு ஆகாயத்தில் இருந்த அனைத்தும் அலறின. பெருங்காற்று வீசியது. பேரொளியுடன் இடி விழுந்தது. சக்தி ஆயுதம் சீறிப் பாய்ந்து கடோத்கஜனின் மாயைகளை எல்லாம் அழித்து, அவன் மார்பைப் பிளந்து பிரகாசத்தோடு மேலே போய் நட்சத்திரங்களின் நடுவில் மறைந்தது. மார்பு பிளக்கப்பட்ட கடோத்கஜன், பயங்கரமான சத்தங்களை வெளியிட்டான். தான் இறக்கப்போவது கடோத்கஜனுக்குத் தெரிந்து விட்டது. இருந்தாலும், அந்த நிலையிலும் பாண்டவர்களுக்குத் தன்னால் ஆன உதவியைச் செய்ய நினைத்தான் கடோத்கஜன். அது ஆச்சரியமும் விசித்திரமும் நிறைந்ததாக இருந்தது. உயிர்பிரியும் அந்த நிலையில், கடோத்கஜன் ஆகாயத்தையே மறைக்கும்படியான பெருத்த மலை போன்ற வடிவம் கொண்டு ஆகாயத்தில் இருந்து, அப்படியே உயிர் இழந்து தலைகீழாக விழுந்தான். பெருத்த அவன் உடம்பின் கீழே அகப்பட்டு, கவுரவ வீரர்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தார்கள். இறந்துபோகும் அந்தக் கடைசி விநாடியிலும், தன்னை நம்பிய தன்னைச் சேர்ந்தவர்களின் நலனுக்காகச் செயலாற்றிய கடோத்கஜனின் வீரமும் மனோபலமும் பாராட்டப்பட வேண்டியவை.
ஓஹோ! ஒருவேளை இதற்காகத்தான் கண்ணன் கடோத்கஜனின் மரணத்துக்கு மகிழ்ந்திருப்பாரோ? அர்ஜுனனே அதற்கான காரணத்தை அறியத் துடிக்கிறான். கடோத்கஜன் இறந்ததும், பாண்டவர் சேனை துயரத்தோடு மனம் கலங்கி கண்ணீர் விட்டது. அதற்கு எதிர்மாறாக, கண்ணன் சிம்மநாதம் செய்தார். வேகவேகமாக அர்ஜுனனைக் கட்டித் தழுவினார். தேர்க்குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு, மகிழ்ச்சியோடு, காற்றால் அசைக்கப்பட்ட மரத்தைப் போலக் கூத்தாடினார். பிறகு, மறுபடியும் அர்ஜுனனைக் கட்டித் தழுவினார்; அடிக்கடி அவனைத் தட்டிக் கொடுத்தார். தேர் மத்தியில் இருந்தபடி சிம்மநாதம் செய்தார். அதைப் பார்த்த அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணா! என்ன இது? சமய சந்தர்ப்பம் தெரியாமல், உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்? உங்கள் செய்கை விபரீதமாக இருக்கிறதே! கடல் வற்றிப்போவதைப் போலவும் மேருமலை சிதறுவதைப் போலவும் இருக்கிறது உங்கள் செய்கை! ஏன் இப்படி? எனக் கேட்டான். கண்ணன் சொல்லத் தொடங்கினார்: அர்ஜுனா! தன் கையில் இருந்த சக்தி ஆயுதத்தை, கர்ணன் கடோத்கஜனுக்காக உபயோகப்படுத்திவிட்டான். இதன் காரணமாக, கர்ணன் இப்போதே இறந்துவிட்டான் என்பதை நீ அறிந்துகொள்! கர்ணனிடம் அந்த சக்தி ஆயுதம் இருந்தால்... அவன் எதிரில், யாரும் நிற்கக்கூட முடியாது. கவச குண்டலங்களோடு பிறந்த கர்ணன் அவற்றுடனேயே இருந்திருந்தால், இந்திரனாவது குபேரனாவது யாராலும் அவனை வெல்ல முடியாது. அந்தக் கவச குண்டலங்களை, உனது நன்மைக்காக இந்திரன் போய் தானமாகப் பெற்றான். தானம் பெற்றதற்குப் பதிலாக, இந்திரன் கர்ணனுக்கு ஒரு சக்தி ஆயுதத்தைக் கொடுத்தான். அந்த சக்தி ஆயுதம் மட்டும் கர்ணனிடம் இருந்திருந்தால்... காண்டீபன் என்று பெயர் பெற்ற உன்னால் மட்டுமல்ல! சுதர்ஸன சக்கரத்தை ஏந்தியிருக்கும் என்னால்கூட கர்ணனை வெல்ல முடியாது. நல்லவேளை! கர்ணன் சக்தி ஆயுதத்தை கடோத்கஜன்மீது ஏவினான். நீயும் காப்பாற்றப்பட்டாய் என்று சொல்லி முடித்தார். பாண்டவர் பரம்பரையில் முதலில் பிறந்தவன் கடோத்கஜன். ஆனால், எந்தவிதமான உரிமையையோ பதவியையோ அவன் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், கடோத்கஜன் உயிர்த் தியாகம் செய்யவில்லை என்றால், பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. அர்ஜுனன் வாழ்வும் முடிந்திருக்கும். அப்படி நடக்காமல், தன் வாழ்வையே முடித்துக் கொண்ட, மிகவும் உயர்ந்ததான ஒரு புண்ணிய ஆத்மாதான் கடோத்கஜன்!
No comments:
Post a Comment