Thursday, June 13, 2013

நீ எங்கு இல்லை விட்டலா?

Courtesy: M.s.Seenu
நீ எங்கு இல்லை விட்டலா?

பண்டரிபுர பாண்டுரங்க விட்டலன் நாமதேவுக்கு குழந்தை பருவத்திலிருந்தே தன் அருளை நிறைய
அளித்திருந்ததால், நாமதேவுக்கு விட்டலன் எப்போதும் தன்னுடைய இதயத்திலேயே இருப்பதில் ரொம்ப ஸ்பெஷல் பெருமையும், கொஞ்சம் கர்வமும் கூட!!

"நாம்தேவ் கொஞ்சம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், ஒரு குருவிடம் அணுகி திருந்தவேண்டும்" என்று பண்டரிநாதன் சங்கல்பித்தான்.

இந்த சமயத்தில்தான் மண் பாண்டம் செய்யும் குயவராயிருந்தும், பாண்டுரங்க பக்த சிரோமணியான கோராகும்பர் தன்னுடைய கிராமத்தில் மஹா ஸ்ரேஷ்டர்களை எல்லாம் அழைத்து விருந்து வைக்க தீர்மானித்தார். மகான் ஞானேஸ்வர் கோராகும்பரிடம் "எல்லா பானைகளையும் தட்டி பாருங்கள். முழுதும் வெந்திருக்கிறதா என்று தட்டி பாருங்கள்" என கட்டளையிட்டார். கோரா கும்பர் அங்கு வந்திருந்த பக்தர்களை வரிசையாக உட்காரவைத்து தன் கை தடியால் ஒவ்வொருவர் தலையிலும் தட்டி கொண்டே வந்தார். அனைவரும் அமைதியாக அதை ஏற்றுகொண்டனர்.

நாம்தேவ் அந்த கூட்டத்தில் இருந்தார். ஆனால் தன் தலையில் தடியால் தட்ட இடம் கொடுக்கவில்லை. ஞானதேவர் முதல் அனைவரும் ஒன்று சேர்ந்து " இந்த பானை சரியான பக்குவம் அடையாமல் அரை குறையாகதான் வெந்திருக்கு" என்று வருந்தினர். மிகுந்த மன விசனத்துடன் நாம்தேவ் பண்டரிபுரம் திரும்பி விட்டலனிடம் முறையிட்டார்.

விட்டலனும் "நாம்தேவ் நீ உண்மையிலேயே ஞானம் அடையவில்லை. எனவே தான் ஞானிகளின் செயலை உன்னால் புரிந்துகொள்ள இயலவில்லை" நீ ஒன்று செய். நேராக ஊருக்கு வெளியே இருக்கும் சிவன் கோயிலில் "விடோபாகேஷரா" என்று ஒருவர் இருக்கிறார். அவரை போய் பார், என்றான்.

நாம்தேவ் ஓடினார். சிவன் கோயிலுள் நுழைந்தபோது ஒரு கிழவர் படுத்துக்கொண்டு தன் கால்களை சிவலிங்கம் மேல் போட்டு கொண்டு படுத்திருப்பதை கண்டார். ரொம்ப கோவம் வந்துவிட்டது நாமதேவுக்கு.

கண்மூடி படுத்திருந்த விடோபாவை கைதட்டி எழுப்பினார். கண் திறந்து பார்த்த கிழவர் " ஒ !! நீதான் விட்டல் அனுப்பிய அந்த நாம்தேவா!!! என்று கேட்டார்., நாம்தேவ் அசந்து போய்,
"சுவாமி, நீங்கள் ஒரு மகான் போல தோணுகிறது. ஆனால், தாங்கள் ஏன் கால்களை சிவலிங்கத்தின் மேல் வைத்துகொண்டு இருக்கிறீர்கள் அபசாரம் அல்லவா"? எனக்காகவாவது கால்களை அப்புறபடுதுங்கள் என்றார்.

"அடேடே என் கால்களை சிவலிங்கம் மீதா வைத்திருந்தேன். அப்பனே என்னால் முடியவில்லையப்பா. கொஞ்சம் என் கால்களை எடுத்து வேறெங்காவது வையேன்".என்றார். ஸ்ரத்தையோடு நாம்தேவ் கிழவர் கால்களை சிவலிங்கம் மேலிருந்து தூக்கி தரையில் வைத்தார்.

என்ன ஆச்சர்யம்!!!. வைத்த இடத்திலும் காலின் கீழ் சிவலிங்கம். வேறு இடம், வேறு இடம், எங்கு வைத்தாலும் அங்கெல்லாமும் கால் சிவலிங்கம் மேலேயே!!. கடைசியில் தன் மடிமேலே கால்களை வைத்து கொண்டார் நாம்தேவ்.

தன் உடலில் மின்ன்னலைகள் பாய்ந்து உடலிலும் உள்ளத்திலும் இறைவன் உட் புகுந்ததை அனுபவித்தார் நாம்தேவ்.

ஒரு குருவை அணுகி குருபக்தியோடு அவர் கால்களுக்கு பணிவிடை செய்த பலன் தனக்கு இந்த ஞானானுபவம் என உணர்ந்தார் நாம்தேவ் ."விடோபா" அவரை ஆசிர்வதித்து அனுப்பினார். ஊர் திரும்பிய நாம்தேவ் வீட்டிலேயே அடைந்து கிடந்தார் விட்டல் தியானத்திலேயே காலம் கழித்தார்.

நாம்தேவ் ஏன் கோவிலுக்கு வருவதில்லை, தன்னை பார்ப்பதில்லை என பண்டரினாதனுக்கு புன்சிரிப்பு வந்தது. நேரே நாம்தேவ் வீட்டுக்கு சென்றான். "ஏனப்பா நீ என்னை வந்து பார்ப்பதில்லை" என விட்டல் கேட்டான்.

"விட்டலா!! இனியும் என்னை சோதிக்காதே. தாங்க மாட்டேன். உன்னை நன்றாக புரிந்துகொள்ள செய்துவிட்டாய். என்கண்ணை திறந்து விட்டாய். "நீ ஆலயத்தில் மட்டும்தான் உள்ளாயா? நீ எங்கு இல்லை ? நீ இல்லா இடம் ஒன்றில்,நான் எங்கேயாவது இருக்க முடியுமா. " என்றார் நாம்தேவ்.

விட்டலன் மகிழ்ந்தான்...!!!

No comments:

Post a Comment