Courtesy: Sri.Mayavaram Guru
ரந்திதேவன்
ரந்திதேவன் என்பவன் சந்திர வம்சத்தில் வந்த ராஜா. இவன் ஏகப்பட்ட யாகயஜ்ஞாதிகளைச் செய்த விஷயம் மஹாபாரதத்தில் வருகிறது. இப்படிக் கர்மாநுஷ்டத்திலேயே ஈடுபட்டிருந்ததால் இவனுக்கு ஜீவகாருண்யம் வற்றிவிடவில்லை என்கிற கதையை ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
இந்த ரந்திதேவன் யஜ்ஞங்கள் செய்து ஏகமாக தக்ஷிணை கொடுத்து, தானம் பண்ணினான். அவனுடைய கஜான முழுக்கக் காலியாகி விட்டது. ஒரு செல்லாக் காசு பாக்கியில்லை. அப்படி வாரி வாரி, ''தேஹி'' என்று வந்தவர்களுக்கெல்லாம் ''நாஸ்தி'' என்று சொல்லாமல் தானம் பண்ணிவிட்டான்.
அப்போது பகவான், மஹாவிஷ்ணு, ஒரு சோதனை பண்ணினார். ராஜ்யத்திலே பெரிய பஞ்சம் வரும்படியாகப் பண்ணிவிட்டார். நியாயமாகப் பார்த்தால் யஜ்ஞம் செய்வதே மழை, தான்ய ஸம்ருத்திக்காகத்தான், இப்போது நேர்மாறாக ஒரே பஞ்சமாகிவிட்டது.
அப்போதும் ரந்திதேவன் தன்னுடைய உடைமைகளையெல்லாம் ஒவ்வொன்றாக தானம் பண்ணிக் கொண்டே வந்தான். கடைசியில் ராஜாவான அவனுக்கும், அவனுடைய ராஜ குடும்பத்துக்குமே ஒரு வேளை கூழுக்குக் கூட கதியில்லை என்கிற நிலைமை வந்து விட்டது. ஆனால் கொடுத்தே பழகிய அவன் யாசகம் பண்ணவில்லை. நாற்பத்தெட்டு நாள் - ஒரு மண்டலம் - குடும்பத்தோடு சுத்த உபவாஸம் இருந்து விட்டான். அப்பறம் எப்படியோ வெளியிலே ராஜ குடும்பம் பட்டினி கிடக்கிறது என்று தெரிந்து விட்டது. ஆனானப்பட்ட ராஜா - வள்ளலாகப் பிரஜைகளை ரக்ஷித்தவன் - குடும்பத்தோடு வயிறு காயக் கிடக்கிறான் என்றவுடன் யாரோ எப்படியோ கொஞ்சம் கோதுமைக் கஞ்சியும் தண்ணீரும் சேகரம் பண்ணி நாற்பத்தொன்பதாவது நாளன்று அவனுக்கும் அவனுடைய பத்தினி புத்தரர்களுக்குமாக அனுப்பிவைத்தார்கள்.
முதுகோடு வயிறு ஒட்டிக்கொள்கிற மாதிரிக் காய்ந்து கிடந்த ஸ்திதியில் இது தேவாம்ருதமாக வந்தது. ஆசையோடு அந்தக் கஞ்சியை ராஜகுடும்பத்தினர் வாயில் விட்டுக் கொள்ளப் போகிற ஸமயம். அப்போது பார்த்து ஒரு பிராம்மணன் அங்கே வந்து சேர்ந்தான், ''பிக்ஷாம் தேஹி''! என்று.
துளி அன்னம் விழுமா விழுமா என்று வயிறு தபித்து ஏங்கிக் கொண்டிருந்த ஸமயம். ராஜாவாக பஞ்ச பக்ஷ்யம் சாபிட்டவன் பஞ்சத்தில் அடிப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும்போது கடைசியில் கொஞ்சம் கஞ்சி கிடைத்ததென்றால், சொல்லி வைத்தாற்போல் அப்போது யாசகர் வந்து விட்டார்.
ரந்திதேவன் யாசகரைப் பார்த்தான். எப்படிப் பார்த்தான்? 'சனியன் பிடித்தவன் எங்கே வந்தான்?' என்றா? இல்லை. ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனாகவே அந்தப் பிராம்மணனைப் பார்த்தான்.
'நல்லவேளை, இதை நானே சாப்பிடாமல் இந்த க்ஷணத்தில் இவர் வந்தாரே! நான் பகவத் அபசாரம் செய்யமால் காப்பாற்றினாரே! என்று ஸந்தோஷப்பட்டான்.
அவனுடைய பத்தினி புத்திரர்களும் உதார குணத்தில் அவனுக்குக் குறையாதவர்கள். எல்லாரும் தங்களிடமிருந்ததைப் பங்கு போட்டுப் பிராம்மணனுக்கும் கொடுத்தார்கள். அது இவர்களுக்கே போதும் போதாததாகத்தான் இருந்தது. ஆனால் அதிலே கணிசமாக ஒரு பங்கு யாசகருக்குக் கொடுத்து அவரைத் திருப்திப்படுத்தி அனுப்பினார்கள்.
பாக்கியை ராஜ குடும்பத்தினர் சாப்பிட இருந்தபோது மறுபடியும் ஒரு யாசகன் முளைத்தான். இப்போது வந்தவன் நாலாம் வர்ணத்தவன். பசிக்கும் கருணைக்கும் வர்ணம், ஜாதி என்ற பேதங்கள் உண்டா என்ன? இவர்கள் ஏற்கனவே குறைந்து போய்விட்ட கஞ்சியிலிருந்தும், தாங்கள் கால் வயிறு சாப்பிட்டால் போதும் என்று கொஞ்சமே வைத்துக் கொண்டு, பாக்கியை அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்து விட்டார்கள். ராஜாவின் கண்ணில் இவனும் விஷ்ணுவாகத்தான் தெரிந்தான்.
மிச்சமிருந்த கஞ்சியில் மற்றவர்கள் தங்கள் பங்கைக் குடித்தார்கள். ரந்திதேவன் மாத்திரம் இந்த ஸமயத்திலும் இரண்டு ஜீவன்களுக்கு உபகாரம் பண்ணும்படியாக பகவான் அநுக்ரஹம் செய்ததையே நினைத்துக் கொண்டோ என்னவோ, சாப்பிடாமல் யோசனையில் இருந்தான்.
இவனுக்கு சாப்பிடுகிற எண்ணம் வந்த அதே ஸமயத்தில் மறுபடியும் ஒரு தீனக்குரல் வந்தது. மநுஷக் குரலோடு நாய்கள் குரைப்பு வேறு! நாய்களைப் பிடித்துக் கொண்டு ஒரு வேடன் வந்து நிற்கிறான். இந்தக் கஞ்சிக்குத்தான் போட்டியாக வந்திருக்கிறான்!
நாய்கள் நாய்க்காரான் எல்லோருமே ரந்திதேவனுக்கு நாராயண ஸ்வரூபமாகத்தான் தெரிந்தார்கள். வேதத்தில் ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை 'நாய்களின் உருவத்தில் இருக்கிறவன்; நாய்களை வைத்திருக்கிற வேடனாக இருக்கிறவன்'என்று சொல்லியிருக்கிறது. ரந்திதேவன் வாஸ்தவத்திலேயே அப்படி ஈஸ்வர ரூபமாகப் பார்த்தான்.
ரந்திதேவனுக்கு அப்படிப்பட்ட த்ருஷ்டி இருந்தது. 'நாராயணன்தான் இப்படி நாய்களாகவும் அதைப் பிடித்துக்கொண்டு வருபவனுமாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான். தனக்குப் பசியிருப்பதாக வேஷம் போடுகிறான். அதைத் தணிப்பதுதான் பகவத் ஆராதனம்'என்று நினைத்தான். கொஞ்சம்கூட மனஸ் கலங்காமல் தன் பங்கில் பாக்கியிருந்த கஞ்சி முழுவதையும் அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டான். 'நாய்க்கு நமஸ்காரம், நாயின் யஜமானுக்கு நமஸ்காரம்'என்று ருத்ரம் சொல்கிற மாதிரியே அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணினான்.
இப்போது அவனிடம் இருந்ததெல்லாம் வெறும் தீர்த்தம்தான். ஒரே வறட்சிக் காலமாதலால் அந்தத் தீர்த்தம் கிடைப்பதுகூட ரொம்ப துர்லபமாகத்தான் இருந்தது. அதையாவது பானம் பண்ணினால்தான் இவனுடைய ஜீவன் உடம்பிலே நிற்கும் என்கிற ஸ்திதி.
இப்போதும் பகவான் சோதனையை நிறுத்தவில்லை. ஜலத்தையாவது குடித்துப் பிராணனை ரக்ஷித்துக் கொள்ளலாம் என்று இவன் பார்க்கிறபோது, மறுபடியும் ''சாமீ, தாஹம், தாஹம்!'' என்று பிரலாபம் வந்தது.
''அந்தத் தண்ணீரையாவது ஊத்து சாமீ'' என்று சொல்லிக் கொண்டு ஒரு பஞ்சமன் (புலையன்) வந்து நின்றான்.
பெரிய ச்ரௌதிக்ளுக்கு தானம் பண்ணுகிறபோது மந்த்ரம் சொல்லிக்கொண்டு தீர்த்தம் போடுகிற மாதிரி, அந்தப் பஞ்சமனுக்குத் தன்னிடம் எஞ்சியிருந்த தீர்த்தத்தையும் தத்தம் செய்துகொண்டு ரந்திதேவன், ''இதோ இந்த ஜலத்தைக் கொடுக்கிறேனே, இது இந்தப் பஞ்சமன் ஒருத்தனுக்கு மட்டும் தாக சாந்தி, தாப சாந்தி பண்ணுவதா? இல்லை. ஸர்வபூத அந்தராத்மாவான நாராயணனாக இவனை நினைத்தல்லவோ இதை இவனுக்கு அர்ப்பணம் பண்ணுகிறேன்?அதனால் இந்த ஜலமே ஸகல உயிர்களுக்கும் தாக சாந்தியை, துக்க நிவ்ருத்தியைக் கொடுக்கட்டும்.''
ஒரே ஒருதனுக்குத் தருகிற கொஞ்சம் தீர்த்தம் இப்படி ஸர்வ ஜீவன்களின் கஷ்டத்தையும் போக்குமா என்றால்:
த்ரௌபதி அலம்பி வைத்திருந்த அக்ஷய பாத்திரத்தில் துளிப்போல ஒட்டிக் கொண்டிருந்த கீரையை க்ருஷ்ண பரமாத்மா சாப்பிட்டார்;உடனேயே துர்வாஸருக்கும் அவருடைய பதினாயிரம் சிஷ்யர்களுக்கும் பெரிய ஸமாராதனை சாப்பிட்ட மாதிரி வயிறு நிரம்பி விட்டது என்று படிக்கிறோமல்லவா?அந்த மாதிரிதான் இதுவும். 'இவன் யாரோ ஒரு பஞ்சமன்' என்று நினைக்காமல் பரமாத்ம ஸ்வரூபமாகவே அவனைப் புரிந்து கொண்டு அவனுக்குக் கொடுக்கிறபோது, அந்த பரமாத்மாவுக்குள்ளேயே அடங்கியிருக்கிற ஸகல ப்ரபஞ்சமும் அதனால் த்ருப்தியாகிறது. பாவம் நிஜமாக இருக்கவேண்டும். அதுதான் முக்யம்.
த்யாகத்தின் உச்சநிலையில் இருந்துகொண்டு இப்படி ரந்திதேவன் தன் ப்ராணனை ரக்ஷிப்பதற்கு அத்யாவச்யமாயிருந்த தீர்த்தத்தையும் புலையனுக்குக் கொடுத்தானோ இல்லையோ, உடனே முதலில் வந்த பிராம்மணன், அப்புறம் வந்த நாலாம் வர்ணத்தவன், அதற்குப் பின்னால் நாய்களோடு வந்த நாய்க்காரன், கடைசியில் வந்த பஞ்சமன் எல்லோரும் விஷ்ணு தூதர்களாக அவன் முன் தங்கள் நிஜ ரூபத்தைக் காட்டினார்கள்.*
''அவன் அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு நாராயண த்யானத்தில் மூழ்கிவிட்டான். இந்த மாய வாழ்க்கை ஒரு கனா மாதிரி அவனிடமிருந்து மறைந்தே போய்விட்டது''என்று பாகவத்தில் இந்த புண்ய சரித்திரம் முடிகிறது.
சாதரணமாக நம் புராணங்களிலோ, மற்ற காவிய நாடகங்களிலோ கூட முக்கியமானபாத்திரம் (Hero) செத்துப் போனதாக முடியாது. 'ட்ராஜெடி' நம் ஸம்பிரதாயத்திலில்லை. மங்களமாக முடிய வேண்டும் என்று, லோக ரீதியிலே ஸந்தோஷமாக ஒரு கல்யாணம், ஒரு பட்டாபிஷேகம் என்றிப்படி முடிப்பதுதான் வழக்கம்.
ராமாயணம், மஹாபாரதம் இவற்றில் ஸ்ரீராமனும், பஞ்சபாண்டவர்களும் வைகுண்ட ஆரோஹணம், ஸ்வர்க ஆரோஹணம் பண்ணுவதாகே வால்மீகியும், வியாஸாசாரியாளும் மூல க்ரந்தத்தில் முடிந்த்திருந்தும்கூட, இப்போதும் ஒரு ஹரிகதை, அல்லது உபந்யாஸம் என்று நடக்கிறபோது ஸ்ரீராம பட்டாபிஷேகம், தர்மராஜ பட்டாபிஷேகம் இவற்றோடு பூர்த்தி பண்ணி, அதற்கு மேற்பட்ட அந்திமக் கதையைச் சொல்லாமலே விட்டு விடுவதைத்தான் பார்க்கிறோம்.
த்ருவன், ப்ரஹ்லாதன் மாதிரியானவர்கள் பகவான் ப்ரத்யக்ஷமானதும் அவனோடேயே முக்தி அடைந்துவிட வேண்டும் என்று ப்ரார்த்தித்தாலும்கூட, பகவான்'' அதெல்லாம் கூடாது'' என்று சொல்லி, அவர்களுக்குப் பட்டாபிஷேகம் பண்ணினதாகத்தான் பாகவத புராணத்திலேயே சொல்லியிருக்கிறது.
ஆனால் இந்த ரந்திதேவன் கதையில் மட்டும் விஷ்ணு தூதர்கள் வந்தார்கள் என்று சொன்னபின், 'உடனே பஞ்சமெல்லாம் தீர்ந்துவிட்டது; ரந்திதேவனின் பசி, தாகம் எல்லாம் தீர்ந்து நெடுங்காலம் ராஜ்யபாரம் பண்ணினான்' என்று சொல்லாமல், ''மாயையே ஒரு ஸொப்பனம் மாதிரி அவனைவிட்டு ஓடிப்போயிற்று'' பரலோகம், பரமபதம் என்கிறார்களே, அதற்குப் போய் விட்டான் என்றுதான் அர்த்தம் ஏற்படுகிறது. அவனுடைய மஹா த்யாகம் நம் மனஸில் நன்றாக உறைப்பதற்காகவே இப்படி மங்கள முடிவை மாற்றிச் சொல்லியிருக்கிறாற் போல் தோன்றுகிறது.,
இந்த லோகத்தின் ஸந்தோஷம் எப்படியும் சாஸ்வதமில்லை. கல்யாணம், பட்டாபிஷேகம் எல்லாம் தாற்காலிக ஸந்தோஷம்தான். பகவானிடம் போய்ச் சேருவதுதான் நிரந்தரமான மங்களம். அப்படிப் பார்த்தால் ரந்திதேவன் கதைக்குத்தான் நிஜமான மங்கள முடிவு.
No comments:
Post a Comment