Thursday, February 21, 2013

பசுவின் உண்மையான மதிப்பு ஒரு சுவாரசியமான கதை - கோ ஸம்ரக்ஷணம் ...!!!

Courtesy:Sri.Mayavaram Guru



பசுவின் உண்மையான மதிப்பு - ஒரு சுவாரசியமான கதை (கீழே உள்ளது)

கோ ஸம்ரக்ஷணம் 

தொன்றுதொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனித எண்ணங்களும் தத்துவங்களுமே நம் கலாச்சாரத்திலுள்ள மற்றச் சீரிய அம்சங்களையும் உருவாக்கித் திகழச் செய்துள்ளன. 

பாலுட்டித் தன் சிசுக்களை வளர்க்கும் இனங்களிலே பசு ஒன்றுதான் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துச் சம்ரக்ஷிப்பதுடன் மற்ற இனத்தைச் சார்ந்த பாலகர்களையும், விருந்தினர்களையும் பால் கொடுத்துப் போஷிக்கிறது. ஆகவே நாம் பசுவினிடம் நம் தாயிடம் காட்டும் பக்தியையும் மரியாதயையும் காட்டவேண்டும். 

தமிழ் நாட்டுத் சமயாசார்யார்களும், மனித சமூகத்தின் லௌகிக க்ஷேமத்திற்கும் பசுவின் ஸம்ரக்ஷணம் அவசியம் எனப் போதிக்கிறார்கள். 

நம் நாட்டுத் சமய குரவர்களில் ஒருவரான ஞானசம்பந்தர் ஹிந்து மத முக்கியக் கொள்கைகளில் பசு ஸம்ரக்ஷணையைச் சேர்த்துள்ளனர். 

சங்க நூல்களில் பிரபலமான புறநானுறு, யுத்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபடும் இரு கட்சியாளர்களும் பசுவைக் காப்பாற்றுவதைக் முதல் கடமையாக கருத வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 

பசுவே லோக ஷேமத்தை அளிக்க வல்லது. கண்ணனின் அவதாரம் கோஸம்ரக்ஷணைக்காகவே என்பதை அவரது கோபாலன் என்ற திருநாமம் எடுத்துக் காட்டுகிறது.

பசு நம் நாட்டில் தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகிறது. பசுவை நாம் 'கோ மாதா' என்று சிறப்பாக அழைக்கிறோம். கோ ஸம்ரக்ஷணம் செய்வதால் இஹலோக பரலோகங்களில் நாம் ஸுகம் அடையலாம். இந்த லோகத்தில் நாம் ஸுகம் ஆடைவதற்கு அதனால் நமக்கு அமுதமெனக் கிடைக்கும் பாலும், தயிரும், வெண்ணையும், நெய்யும் மற்றவைகளுமே சாக்ஷி. கோ ஸேவை செய்வதால், த்ரிமூர்த்திகள் முதலான ஸகல தேவதைகளும் த்ருப்தியடைகிறார்கள் என்று சாஸ்த்ரங்களும், இதிஹாஸ புராணாதிகளும் கூறுகின்றன. உதாரணமாக பவிஷ்யத் புராணத்தில்,

"பசுவின் கொம்பின் ஆரம்ப பாகத்தில் ப்ரம்மாவும், விஷ்ணுவும், தலையின் நடுவே மஹாதேவனும் குடிகொண்டிருக்கிறார்கள்" என்று கூறப்பட்டிருக்கிறது. இம்மாதிரி தெய்வஸாந்நித்யம் பசுவிடம் இருப்பதால்தான் நாம் நித்யமும் गोब्रह्मणॆभ्यः शुभमस्तु नित्यं என்று வாழ்த்துகிறோம்.

"பெரியோர் எதைச் செய்கின்றனரோ அதையே மற்றவர்கள் அனுஷ்டிப்பார்கள்" என்று கீதையில் கண்ணன் கூறியபடி தானே கோபாலனாகவும், கோவிந்தனாகவும் ஆகி, நமக்கெல்லாம் வழிகாட்டியாக அமைந்துள்ளான்.

"ரகுவம்சம் என்ற பாற்கடலில் உதித்த சந்திரனான ஹே ராம!" என்று தியாகய்யர் பாடியுள்ளார். அப்படி உலகப் ப்ரஸித்தி பெற்ற ரகுவம்சம் ஒரு பசுவின் அனுக்ரஹத்தால்தான் உண்டாயிற்று.

ஒரு சமயம் பிருது சக்ரவர்த்தியின் விருப்பப்படி பூமிதேவி பசுவின் ரூபத்தை எடுத்துக் கொண்டாள். ஹிமாவான் கன்றாக ஆனார். மேரு பர்வதம் அப்பசுவைக் கறக்கவே உலகத்தில் அப்போது நிலவிய பஞ்சம் பறந்து, சுபிக்ஷம் நிலவிற்று என்று புராணம் சொல்கிறது. மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் கோவின் மஹிமையை விளக்க பின்வரும் கதைகள் உள்ளன.

மஹாலக்ஷ்மி பசுவை அணுகி, பசு எல்லா தேவதைகளுக்கும் தன் தேஹத்தில் இடம் தந்திருப்பதால் தனக்கும் இடம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். ஆனால் காமதேனு, லக்ஷ்மி சஞ்சல புத்தியுள்ளவள் என்ற காரணத்தால் மறுத்து விட்டாள். ஆனால் லக்ஷ்மி மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவள் தன்னுடைய சாணம், மூத்ரம் இவைகளில் வசிக்கலாம் என அனுமதி தந்தாள். ஆகவே தான் அவைகளில் லக்ஷ்மி ஸாந்நித்யம் உள்ளதாக நாம் இன்றும் கருதுகிறோம்.

கோ ஸம்ரக்ஷணம்
===============
இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை '' கோ க்ராஸம் '' என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு ''க்ராஸ்''என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, த்யாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இதுகூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்?அப்படிப்போடாமல், சிலர் வீடுவீடாகப்போய் இந்தத் தோலை எல்லாம் 'கலெக்ட்'பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் கார்யம் நடந்தது. இப்போதும் கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.

உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ணவேண்டியது தான். ஆனாலும் இப்படி மெக்கானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இதுதான் முக்யமான அம்சம்; அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.

ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது?ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம்.

கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்யவேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை - தாயாருக்குச் செய்யவேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்.

ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில் கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத த்வேஷங்களைத் தூண்டி விட்டிருந்தார்கள். எந்த ஸர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால் கோமாதாவுக்கு ஹானி இல்லை. இதிலே நாம் குஜராத்தி, மார்வாரிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கோபாலக்ருஷ்ணன் வாஸம் பண்ணின பிரதேசமானதால் போலிருக்கிறது இவர்களுக்கு கோ ரக்ஷணத்தில் அலாதிப்பற்று இருக்கிறது!

முன்காலங்களில் ' பசு மடம் ' என்று வைத்து நம் க்ராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்த தர்மத்தில் பிற்பாடு நாம் ச்ரத்தை இழந்துவிட்டோம். ஆனால் "பிஞ்சரபோல்", கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்?

கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமிஸ்ஸாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்;அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.

பசுவின் உண்மையான மதிப்பு - ஒரு சுவாரசியமான கதை

ச்யவனர் என்று மஹா தபஸ்வீ ஒருவர் இருந்தார். அவர் ஸமுத்ரத்தில் மூழ்கி 12 வருஷம் தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மகிமையை அறிந்த கங்கை, யமுனை முதலிய புண்ய நதிகள் அவரைப் ப்ரதக்ஷிணம் செய்த பிறகே கடலில் கலந்தன. ஒரு நாள் அவர் செம்படவர் வலையில் அகப்பட்டுக் கொண்டு கரையை அடைந்தார். செம்படவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து தவச்ரேஷ்டரின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். ச்யவனரோ, அவர்கள் அறியாமல் செய்ததற்கு தோஷமில்லை என்று கூறி, தாம் அவர்கள் வலையில் வீழ்ந்துவிட்டதால் அவர்கள் சொத்தாக ஆகிவிட்டதாகவும் எனவே தம் மதிப்புக்கேற்றபடி திரவியம் கொடுத்து, யாராவது தம்மை மீட்டால்தான் தாம் மறுபடி தவம் செய்யச் செல்லலாமென்றும் கூறினார். இந்த விஷயம் அரசனான நஹுஷன் காதில் விழவே அவன் ஓடோடியும் வந்தான். முனிவரைத் தமது விலையைக் கூறுமாறு ப்ரார்த்தித்துக்கொண்டான். ஆனால் ரிஷி தம் வாயால் சொல்ல மறுத்து விட்டார். அரசன் 1000, 10000, லக்ஷம், கோடி பவுன், பாதி ராஜ்யம் எல்லாம் தருவதாகச் சொல்லியும், அவை தம் மதிப்பாகா என்று முனிவர் கூறிவிட்டார். அந்தச் சமயம் அங்கே கவிஜர் (பசுவின் வயிற்றில் உதித்தவர்) என்ற முனிவர் வந்தார். அரசன் அவரை யோசனை கேழ்க்கவே அவர் ஒரு பசு மாடு தானம் செய்து விட்டால் அந்த ச்யவனருக்கு அது சம மதிப்புள்ளதாக ஆகும் எனச் சொன்னார். ச்யவனரும் 'ஆம்' என்று ஓப்புக்கொள்ளவே அரசன் அப்படியே செய்தான். ச்யவனரின் அனுக்ரஹத்தால் செம்படவர்களும் நற்கதி எய்தினர். இதனால் பசுவின் உண்மையான மதிப்பு நன்றாக விளங்குகின்றதல்லவா? எனவே, கோ ஸம்ரக்ஷணம் செய்வது நமது கடைமையும் தர்மமுமாகும்.

No comments:

Post a Comment