Thursday, June 7, 2012

சாமுண்டி வரப்பிரசாதி! — மகா பெரியவா

Courtesy: Sri.Mayavaram Guru


சாமுண்டி வரப்பிரசாதி! — மகா பெரியவா
clip_image001

'பூவனூர் புகுவார் வினை போகுமே' என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம், திருப்பூவனூர்  ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயில். திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் திருப்பூவனூரில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் மகோன்னதத்தை உணர்ந்த காஞ்சி மகாபெரியவர், இந்தத் தலத்து இறைவனைத் தரிசித்துச் சிலாகித்துள்ளார்.

நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில்,  சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆலயம். ஸ்ரீசதுரங்கவல்லப நாதர், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் இந்த இறைவனின் ஆலயத்தில், ஸ்ரீசாமுண்டீஸ்வரிதேவி தனிச்சந்நிதியில் எழுந்தருள்கிறாள் என்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று!

clip_image002

சிவனாரும் பார்வதிதேவியும் வேண்டி விரும்பித் தங்கி அருள்பாலிக்கும் தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சிவனாரே மானுட உருவில் வந்து, சதுரங்கம் விளையாடி, ராஜராஜேஸ்வரி என்பவளை மணந்தாராம். இதனால் அவருக்கு ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் என்று திருநாமம் அமைந்தது. இவளுடைய வளர்ப்புத் தாயாக சப்த மாதர்களுள் ஒருத்தியான சாமுண்டீஸ்வரி திகழ்ந்தாள். எனவே, அவளுக்கும் இங்கே தனிச்சந்நிதி அமைந்துள்ளது. அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீகற்பகவல்லி.

1947-ஆம் வருடம், தஞ்சாவூர் பகுதிக்கு திக்விஜயம் செய்த காஞ்சி மகான், இந்தத் தலத்து இறைவனையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரியையும் வழிபடுவதற்காக வந்தார். அப்போது 48 நாட்கள் நடைபெற்ற அதிருத்ர ஹோமத்தில் கலந்துகொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

clip_image003

'அப்ப எனக்கு பத்துப் பதினோரு வயசு இருக்கும். மகா பெரியவா கோயிலுக்கு வர்றார்னு தெரிஞ்சதும், எங்க ஊர் மட்டுமில்லாம, அக்கம்பக்கத்து ஊர்லேருந்தும் ஜனங்கள் திரண்டு வந்துட்டாங்க. முதல் மூணு நாள் முழுக்க இங்கே கோயில்ல தங்கினதோட இல்லாம, ஹோமத்துலயும் கலந்துண்டார். என் வயசுப் பசங்க எல்லாரும் அவரை வியப்போடயும் ஆர்வத்தோடயும் பார்த்துண்டே இருந்தோம். பெரியவா என்ன நினைச்சாரோ தெரியலை… திடீர்னு எங்களைக் கூப்பிட்டு, சிரிச்சுப் பேசி, தனித்தனியா எங்களை ஆசீர்வாதம் பண்ணினார். 'சாமுண்டி ரொம்ப வரப்பிரசாதி! அவளைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்கோ' என்று அவர் சொன்ன வாக்கு, இப்பவும் கேட்டுண்டே இருக்கு" என வியப்பு விலகாமல் சொல்கிறார் கல்யாணம் குருக்கள்.

clip_image004

பாம்பணி நதி (தீர்த்தம்), ஷீரபுஷ்கரணி (பாற்குளம்), குஷ்ட ஹர தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் கொண்ட பெருமைக்கு உரிய தலம் இது. விஷக்கடியால் அவதியுறும் பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தக் குளத்தில் நீராடி, ஸ்ரீசாமுண்டீஸ்வரியை அர்ச்சித்து வழிபட… விரைவில் குணம் பெறுவர் என்பது ஐதீகம்! அம்பிகைக்கு 27 விளக்கேற்றி, 27 முறை வலம் வந்து வணங்கினால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!

–நன்றி சக்தி விகடன்


 

No comments:

Post a Comment