Courtesy:Sri.Mayavaram Guru
ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.
அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். "கஜானா" சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. "ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?" என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. "நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, "அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு"ன்னார்" என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.
"கஜானா" மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் "கஜானா"விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.
"நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்" என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.
அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா "நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?" என்றார்.
"அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்" என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.
"சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?" என்றார் பெரியவா
"காத்துண்டு இருக்கேன்" என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
"அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!"
"அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு....." கஜானா இழுத்தார்.
"அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா"
"சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்" என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது "சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு"
கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.
"அதி"க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். "இவ்வளவுதானா?" என்று வேறு கேட்டார்.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
"இன்னம் உவப்பன் நான்" என்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!............என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.
பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று "இன்னும் என்ன இருக்கு" என்று கேள்வி
கஜான வெலவெலத்து போனார்.
"வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!" என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.
"பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்" என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, "இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?" என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்
nice...
ReplyDelete