Wednesday, August 18, 2010

Sivagangai Cheemai

சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து
கிடந்தது. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி
வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப்
புறப்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க
முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன்,
பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது.
படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின்
அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே
ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார். தளபதிகளைக்
கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது. "அனைவரும் வாருங்கள். நீங்கள்
எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது. நமது படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து
விடுங்கள். ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை தாங்குவார். அந்தப் பிரிவு 3
ஆயிரம் படைவீரர்களோடும் எட்டு பீரங்கிகளோடும் திருப்பத்தூர் நோக்கிப்
புறப்படட்டும். இன்னொரு பிரிவு பெரிய மருது தலைமையில், 4 பீரங்கிகளோடு சிவகங்கை
சென்று அரண்மனைக்கு வெளியே தெப்பக்குளக்கரையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவனது
படைகளையும் தாக்கி வெற்றி கொள்ளட்டம்," என்று நாச்சியார் கூறி முடிக்கும் முன்பே
சின்ன மருது அவசரமாய் இடைமறித்து, "மகாராணி சிவகங்கைக் கோட்டையைக்
கைப்பற்றுவதுதானே நமது முக்கிய வேலை? அதைப் பற்றி…"
"சின்ன மருது படையும், எனது தலைமையில் மற்றொரு பிரிவுப் படையினரும், நமது பெண்கள்
படையும் அந்த வேலையைச் செய்துமுடிக்கும், போதுமா?"
"மகாராணி மன்னிக்க வேண்டும். சிவகங்கைக் கோட்டையோ பலம் வாய்ந்தது. அந்தக்
கோட்டையை எப்படி சின்னப் படைப்பிரிவு மூலமும் அதுவும் வெள்ளையரின் பீரங்கிகளையும்
துப்பாக்கிகளையும் எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்க…?"


இந்த முறை குறுக்கிட்ட பெரிய மருது தனது கருத்தை முடிக்கும் முன்னே, ஒரு
புதுக்குரல் மண்டபத்தின் வாயிலில் இருந்து ஒலித்தது.

அங்கே தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத்
தொடங்கினாள்.
"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை
மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன்
கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும்
மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்
பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள்
புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்."
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விர்ந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள்.
"பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?" என்றபடியே மெல்ல தனது தலையில்
கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை
மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில்
சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள்
போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை
ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!" என்றபடியே ராணி
சிம்மாசனத்தில் இருந்து குயிலியோடு அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.
ராணி குறித்ததுபோல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர்
முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை
நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு
அணிவகுத்தனர்.

பூமாலைக்குள் கத்தியும் வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது.
வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல
மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு
கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில்
வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால்,
ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. "எனது கணவரை மாய்த்து நாட்டை
அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!"
என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.

அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால்
ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து
வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா
முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல்
யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை
அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு
கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற
ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார்
தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல்
உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!"
என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின்
குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப்
பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் வளரியும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை
வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த
பார்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
சார்ஜ்!.." என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2
கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள்
ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். சிவகங்கைக் கோட்டைக்குள் பூகம்பம்
வெடித்தது.

ராணி வேலுநாச்சியாரின் வாள் மந்திரமாய் சுழன்றது. ஆயுதமின்றித் தவித்த சிலர்
உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓட்டம் பிடித்தனர்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த
யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, "வீரவேல்,
வெற்றிவேல்" என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே கீழே குதித்தாள். அந்தப் பெண்
நேராக நிலாமுற்றத்தில் இருந்த ஆயுதக் குவியலில் வந்து விழுந்தாள்.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோருக்கும், அவனது வீரர்களுக்கும்
அஸ்தியில் காய்ச்சல் கண்டது.
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப்
பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது. இதே
நேரத்தில் பெரிய மருது உமராதுல் உபராக்கானை விரட்டி அடித்துவிட்டு வெற்றியோடு
வந்தார்.
திருப்பத்தூர்க் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார்.
வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்கள் மட்டும்
கூட்டத்தை அளவெடுப்பது போல சுற்றிச் சுற்றி வந்தன.
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள்
எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட
ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே," என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில்
குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே
தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம்
அற்றவர்களாக்கி நமக்கு வெற்றியை அள்ளித்தர, …. தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக தன்னையே பலிகொடுத்த அந்தத் தியாக
மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம்
அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற
தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு
விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள்
இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத
தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!

நன்றி: விஜயபாரதம் 25.06.2010

வெல்க தமிழ்

என்றும் பணிவுடன்
நாவல்பாக்கம் ஜகந்நாதன் கிருஷ்ணா

தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து தமிழில் மட்டும் பேசுங்கள்

knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

No comments:

Post a Comment