மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-19
..
ஆதிபர்வம்
..
அர்ஜுனனும்,கர்ணனும் நேருக்கு நேர் போட்டி
..
வைசம்பாயனர் சொன்னார்,
"ஓ! பாரதகுலத்தோனே, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகன்கள் ஆயுதத் திறமையை அடைந்து விட்டதைக் கண்ட துரோணர், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகர், மற்றும் பீஷ்மர், வியாசர், விதுரன் ஆகியோரது முன்னிலையில் மன்னன் திருதராஷ்டிரனிடம்,
"ஓ! குரு மன்னர்களில் சிறந்தவரே, உமது மகன்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டனர். ஓ! மன்னா, உமது அனுமதியுடன் அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தட்டும்" என்றார்.
இதைக்கேட்ட மன்னன் இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன்,
"ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் பெரும் செயலைச் சாதித்திருக்கிறீர். பரிசோதனை நிகழும் இடத்தையும் நேரத்தையும், அஃது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கட்டளையிடுவீராக.
என் குருட்டுத் தன்மை, எனக்கு ஏற்படுத்தியிருக்கும் துயர், எனது பிள்ளைகளின் ஆயுத வீரத்தைக் காணும் பாக்கியமுள்ளோரிடம் என்னை பொறாமை கொள்ள வைக்கிறது.
ஓ! விதுரா, துரோணர் சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பாயாக.
என்றான்.
மன்னனுக்குத் தேவையான உறுதிகளைக் கொடுத்துவிட்டு, விதுரன் தனது பணியைச் செய்யப் புறப்பட்டான். பெரும் ஞானம் கொண்ட துரோணர், கிணறுகளும், நீரூற்றுகளும் கொண்ட, மரங்கள் மற்றும் அடர்த்தியான புதர்களற்ற ஒரு நிலத்தை அளந்தார். அப்படி நிலத்தை அளந்த துரோணர், நல்ல நட்சத்திரம் கொண்ட ஒரு சந்திர நாளில், நடக்கும் காரியத்திற்குச் சாட்சியாக அங்கே கூடி நிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் தேவர்களுக்குக் காணிக்கை கொடுத்தார்.
அதன்பிறகு, மன்னனின் சிற்பிகள், அந்த இடத்தில், பல்வேறு ஆயுதங்களுடன் தரமான ஒரு பெரிய அரங்கத்தைச் சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி அமைத்தனர். மேலும் அவர்கள் மற்றுமொரு பெரிய அரங்கத்தைப் பெண் பார்வையாளர்களுக்காக அமைத்தனர்.
குடிமக்களும் அவர்களுக்குத் தகுந்தது போல மேடைகளைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர். செல்வந்தர்கள் அகலமாகவும், விசாலமாகவும் குடில்களைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர்.
நிச்சயிக்கப்பட்ட அரங்கேற்ற நாள் வந்ததும், தெய்வீக அழகுடன் சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்டு, முத்துச் சரங்களாலும், விலைமதிப்பில்லா வைடூரியம் போன்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கத்தினுள், பீஷ்மர், கிருபர், குருக்களில் முன்னவர்கள் ஆகியோரை முன் நடக்க விட்டு, மன்னன் {திருதராஷ்டிரன்} தனது அமைச்சர்களுடன் நுழைந்தான்.
நற்பேறு அருளப்பட்ட காந்தாரி, குந்தி மற்றும் அரச குடும்பத்தின் மற்ற மகளிர் ஆகியோர் பகட்டான ஆடையுடுத்தி, தெய்வீக மங்கையர் சுமேரு {மேரு} மலைமீது ஏறுவது போலப் பணிப்பெண்களுடன் இன்பமாக அம்மேடையில் ஏறினர். பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் கூடிய நால்வகை மக்களும், இளவரசர்களின் ஆயுதத் திறனைக் காணும் ஆவலில், நகரத்தை விட்டகன்று, அந்த இடத்திற்கு ஓடி வந்தனர். அந்தக் காணற்கரிய காட்சியைக் காண அனைவரும் அமைதியற்றுக் காத்திருந்தனர். ஒரு நொடிப் பொழுதில் அங்கே பெரும் கூட்டம் கூடியது.
துந்துபி மற்றும் பேரிகைகளின் ஒலியும், பல குரலொலிகளும் சேர்ந்த ஒலி, கலங்கும் சமுத்திர ஒலியைப் போலிருந்தது
இறுதியாக, துரோணர் வெண்ணிற ஆடையுடன், பூணூல் பூட்டி, வெண்ணிறத் தாடியுடன், வெள்ளை மாலை அணிந்து, வெண்ணிற சந்தனக் குழம்பை மேனியில் பூசிக் கொண்டு தனது மகனுடன் அரங்கத்தினுள் நுழைந்தார்.
அக் காட்சியானது, மேகமற்ற வானில் சந்திரன் செவ்வாய்க்கிரகத்துடன் காட்சியளிப்பது போல இருந்தது. அந்தப் துரோணர் உள்ளே நுழைந்ததும், நேரத்தில் பூஜை செய்து, மந்திரங்கள் நன்கறிந்த பிராமணர்களை மங்கலச் சடங்குகளைச் செய்ய வைத்தார்.
இனிமையான இசையுடன் பரிகாரச் சடங்குகள் செய்து அவை நிறைவடைந்த பிறகு, பல்வேறு ஆயுதங்களுடன் சிலர் அந்த அரங்கின் உள்ளே நுழைந்தனர்.
இடுப்புக் கச்சையை வாரினால் வாரிக் கட்டிக் கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான அந்தப் பாரதக் குலத்தவர் (இளவரசர்கள்), தங்கள் கைகளில் கவசக் கையுறைகளை அணிந்து, விற்களுடனும் அம்பறாத்தூணிகளுடனும் உள்ளே நுழைந்தனர்.
யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அந்தத் துணிவுமிக்க இளவரசர்கள், தங்கள் வயதுக்குத் தகுந்த வரிசையில் உள்ளே நுழைந்து, ஆயுதங்களில் தங்கள் அற்புதமான திறன்களைக் காட்சிப்படுத்தினர்.
அப்போது, சில பார்வையாளர்கள் கீழே இறங்கும் அம்புகளுக்கேற்ப அச்சத்தால் தங்கள் தலையைக் கீழே சாய்த்தனர். சிலர் அச்சமில்லாமல் அக்காட்சியை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அந்த இளவரசர்கள், குதிரையை லாவகமாகச் செலுத்தித் தங்கள் பெயர் பொறித்த குறித்த இலக்குகளைத் தங்கள் கணைகளால் அடித்தனர்
வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் இளவரசர்களின் ஆற்றலைக் கண்ட பார்வையாளர்கள், தாங்கள் கந்தர்வர்களின் நகரத்தைக் காண்கிறோமோ என்று நினைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.
திடீரெனச் சில நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் "நன்று செய்தீர்! சரியாகச் செய்தீர்!" எனத் தங்கள் கண்களை அகலவிரித்து ஆச்சரியக் கூக்குரலிட்டனர்.
தங்கள் திறமைகளையும், வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் கைத்திறனையும், தேர்களைக் கட்டுப்படுத்தும் திறனையும், குதிரை மற்றும் யானையின் முதுகில் இருந்து போரிடும் திறனையும்
தொடர்ச்சியாகச் செய்து காட்டிய அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள், தங்கள் வாட்களையும், கேடயங்களையும் எடுத்துக் கொண்டு அந்த ஆயுதங்களுடன் விளையாடத் தொடங்கினர்.
பார்வையாளர்கள் இளவரசர்களின் சுறுசுறுப்பையும், கட்டுடலையும், கருணையையும், அமைதியையும், வலுவான பிடியையும், வாள் மற்றும் கேடயத்தில் அவர்கள் கொண்ட திறனையும் கண்டு அதிசயித்தனர்.
பிறகு, பீமனும், துரியோதனனும், போரின் தன்மையை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து, கையில் கதாயுதங்களுடன் ஒற்றைச் சிகர மலைகள் இரண்டைப் போல அரங்கத்தினுள் நுழைந்தனர்.
அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள் தங்கள் இடுப்புக் கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, தங்கள் சக்தி அத்தனையையும் வரவழைத்து, இரண்டு சினம் கொண்ட யானைகள் ஒரு பெண் யானைக்காகப் போட்டியிட்டு முழங்குவதைப் போலவே முழங்கினர்.
சினம் கொண்ட யானைகளைப் போல இருந்த அந்தப் பலம்வாய்ந்த வீரர்கள் இருவரும், அரங்கத்தை வலமாகவும், இடமாகவும் சுற்றினர்.
விதுரன் இளவரசர்களின் சாதனைகளையெல்லாம் திருதராஷ்டிரனுக்கும், பாண்டவர்களின் தாய்க்கும் {குந்தி}, காந்தாரிக்கும் விவரித்துச் சொன்னான்"
"பலம் பொருந்திய குரு மன்னனும், பீமனும் அரங்கத்தினுள் நுழைந்ததும், பார்வையாளர்கள் தங்கள் மனவேற்றுமையால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இருபிரிவாகப் பிரிந்தனர்.
சிலர், "குருக்களின் வீர மன்னனைப் பாருங்கள்", சிலர், "பீமனைப் பாருங்கள்!" என்றும் கூவினர். இப்படிப்பட்ட கூவல்களின் காரணமாக அங்கே திடீரெனப் பெருங்கூச்சல் எழுந்தது.
அந்த இடம் ஒரு கலங்கிய கடலைப் போலக் காட்சி அளித்ததைக் கண்ட புத்திசாலியான துரோணர், தனது மகன் அஸ்வத்தாமனை அழைத்து,
"பயிற்சியில் தேர்ந்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களுமான இவ்விரு வீரர்களையும் தடுத்து நிறுத்துவாயாக. பீமனுக்கும், துரியோதனனுக்குமான இந்த மோதலால் கூட்டத்தின் கோபம் தூண்டப்படக் கூடாது" என்றார்".
"பிரளயகாலத்தில் உருவாகும் காற்றினால் கொந்தளிக்கிற இரு கடல்களைப் போலத் தங்கள் கதாயுதங்களை உயர ஓங்கியபடி இருவரும் நிற்கையில், குரு மைந்தன் {அஸ்வத்தாமன்} அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.
அப்போது துரோணர் அரங்கத்தினுள் நுழைந்து, இசைக்கலைஞர்களைத் தங்கள் இசையை நிறுத்தச் சொல்லி, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்,
"என் மகனிடம் நான் கொண்டுள்ளதைப் போன்றே என் அன்புக்குரியவனும், அனைத்து ஆயுத திறன்மிக்கவனும், இந்திரனின் மைந்தனும், இந்திரனின் தம்பிக்கு (விஷ்ணு) ஒப்பானவனுமான இந்தப் பார்த்தனைப் {அர்ஜுனன்} அனைவரும் காண்பீராக" என்றார்
பரிகாரச் சடங்குகளை மனநிறைவாகச் செய்த அந்த இளைஞன் பல்குனன் {அர்ஜுனன்}, தனது கையுறை கவசத்தையும், தங்கத்தாலான உடற்கவசத்தையும் தரித்து, அம்பறாத்தூணியில் கணைகளை நிறைத்துக் கைகளில் வில்லேந்தி, அரங்கிலிருந்த கூட்டத்தின் முன்பு, மாலை நேர சூரியனின் கதிர்களால் வானவில்லின் நிறம்பெற்ற, மின்னலுடன் கூடிய மேகம் போலக் காட்சியளித்தான்.
மொத்தக் கூட்டமும் அர்ஜுனனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்து, தங்கள் சங்குகளை எடுத்து முழக்கினர். இன்னிசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.
"குந்தியின் அழகிய மகன் இவன்", "இவனே பாண்டவர்களில் நடுவன் (மூன்றாமவன்)", "இவனே பெரும்பலம்வாய்ந்த இந்திரனின் மகன்", "இவனே குரு குலத்தைக் காக்கப் போகிறவன்",
"இவனே ஆயுதந்தரித்தவர்களில் முதன்மையானவன்", "இவனே அறத்தைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவன்", "இவனே சரியான நடத்தையுள்ளவர்களில் முதன்மையானவன்", "இவனே ஞானக் காரியங்களின் பெரும் கொள்கலன்" என்று கூட்டத்தில் இருந்து ஆச்சரியக் கூச்சல்கள் எழுந்தன.
இந்தப் பாராட்டுகளைக் கேட்டதால், குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
மனிதர்களில் முதல்வனான திருதராஷ்டிரன் இந்தக் கூச்சல்களால் காதடைத்து, மகிழ்ச்சியுடன் விதுரனிடம்,
"ஓ! க்ஷத்ரி {விதுரா}, கலங்கிய பெருங்கடல் போல, வானுலகிற்கே கேட்குமளவு ஏன் இப்படித் தீடீரெனக் கூச்சல் எழுகிறது?" என்று கேட்டான்.
விதுரன், "ஓ! பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியே, பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனன் {அர்ஜுனன்}, தனது கவசங்களை அணிந்து கொண்டு அரங்கத்தினுள் நுழைந்திருக்கிறான். அதனால்தான் இந்தக் கூச்சல் எழுகிறது" என்றார்.
திருதராஷ்டிரன், "ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, புனித நெய்யைப் போன்றிருக்கும் பிருதையிடம் உதித்த இந்த மூன்று நெருப்புகளாலும், உண்மையில் அருளப்பட்டவனாகவும், கருணை செய்யப்பட்டவனாகவும், பாதுகாக்கப்பட்டவனாகவும் என்னை நான் உணர்கிறேன் " என்றான்".
வைசம்பாயனர் தொடர்ந்தார்,
"மகிழ்ச்சியில் திளைத்திருந்த பார்வையாளர்கள் தங்கள் சுய உணர்வு அடைந்தனர்.
அர்ஜுனன், ஆயுதங்களில் தனது கரநளினத்தைக் அரங்கத்திலுள்ளோருக்குக் காட்சிப்படுத்தினான்.
அவன், ஆக்னேய ஆயுதத்தால் நெருப்பை உண்டாக்கினான், வாருண ஆயுதத்தால் நீரை உண்டாக்கினான், வாயவ்யா ஆயுதத்தால் (வாயு அஸ்திரம்} காற்றை உண்டாக்கினான். பர்ஜன்ய ஆயுதத்தால் {மேகாஸ்திரம்) மேகங்களை உண்டாக்கினான்.
மேலும் அவன், பௌமா ஆயுதத்தால் நிலத்தை உண்டாக்கினான், பர்வதேய ஆயுதத்தால் {பர்வதாஸ்திரம்} மலைகளை உருவாக்கினான். பிறகு அவன், அந்தர்தான ஆயுதத்தால் முன்பு உண்டாக்கிய அனைத்தையும் மறையவைத்தான்.
அர்ஜுனன் ஒரு நொடியில் உயர்ந்து காணப்பட்டான், மறுநொடியில் தாழ்ந்து {குள்ளமாகக்} காணப்பட்டான். ஒரு நொடியில் தேர்த்தட்டிலும், மறுநொடியில் தேரின் நடுவிலும், அதற்கடுத்த நொடியில் தரையிலும் அவன் காணப்பட்டான்.
கரங்களைத் திறமையாகப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அந்த வீரன், பல கணைகளைக் கொண்டு சில மென்மையான, சில கடுமையான, சில அடர்த்தியான இலக்குகளை அடித்துக் காட்டினான்.
நகர்ந்து கொண்டே இருக்கும் இரும்புப் பன்றியின் வாயில் ஐந்து கணைகளை ஒரே கணை போலத் தடையில்லாமல் தனது வில் நாணிலிருந்து எய்தான்.
கயிற்றில் தொங்கியபடி அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கும் துளையிடப்பட்ட மாட்டின் கொம்பில் இருபத்தியொரு கணைகளைச் செலுத்தினான்.
இப்படி அர்ஜுனன், வாள், வில், கதை ஆகிய ஆயுதங்களில் தனக்கு உண்டான ஆழமான நிபுணத்துவத்தைக் காட்டி அந்த அரங்கத்தை வலம் வந்தான்.
அந்தக் கண்காட்சி நல்லபடியாக முடிந்ததும், அரங்கத்திலிருந்த பார்வையாளர்களின் குதூகலம் அடங்கியது. இசைக்கருவிகளின் ஒலி நின்றது, அப்போது, வாயிலருகே கைதட்டும் ஒலி கேட்டது. அவ்வொலியானது, தட்டுபவரின் பலத்தையும், சக்தியையும் முன்னறிவிக்கும் வகையில் இடிச்சத்தம் போலக் கேட்டது.
அங்கே கூடியிருந்த கூட்டமானது, அந்நொடியில் இவ்வொலியைக் கேட்டு, "பூமியின் மலைகள் பிளந்தனவா? அல்லது பூமியே பிளந்துவிட்டதா? அல்லது வானத்தில் மேகங்கள் கூடி முழங்குகின்றனவா?" என்று நினைத்த பார்வையாளர்கள் அனைவரும் வாயிலை நோக்கினர்.
ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமான ஹஸ்த நட்சத்திரத்துடன் கூடிய சந்திரன் போலத் துரோணர், குந்தியின் மைந்தர்களான ஐந்து சகோதரர்கள் சூழ நின்றிருந்தார்
எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனன், செருக்குள்ள தனது நூறு சகோதரர்களுடனும், அஸ்வத்தாமனுடனும் பரபரப்புடன் எழுந்து நின்றான்.
ஒங்கிய ஆயுதங்களுடன் கூடிய தனது நூறு சகோதரர்கள் சூழவும், கையில் கதாயுதத்துடனும் நின்றிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தானவர்களை எதிர்த்து போரிடச் செல்கையில் தேவர்களால் சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்} போல இருந்தான்"
"பார்வையாளர்கள் கண்கள் விரிய ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளின் நகரை அடக்கும் கர்ணன், இயற்கை கவசத்தாலும் காதுக்குண்டலங்களாலும் முகம் பிரகாசித்துத் தனது வில்லை எடுத்து, வாளைச் சுற்றிக் கட்டிக் கொண்டு, மலைப்பாறை நடந்து வருவது போல அந்த அகன்ற அரங்கத்திற்கு வந்தான்.
வெகு தூரத்திற்குப் புகழ் கொண்டு எதிரிகளை அழிக்கும், அகன்ற கண் கொண்ட அந்தக் கர்ணன், பிருதைக்கு {குந்திக்கு} அவளது கன்னிப்பருவத்தில் பிறந்தவனாவான். சிங்கம், காளை அல்லது யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போன்ற வீரம் கொண்ட அவன், வெப்பக்கதிர் உமிழும் சூரியனின் ஒரு பகுதியுமாவான். அவன் பிரகாசத்தில் சூரியனையும், அழகில் சந்திரனையும், சக்தியில் நெருப்பையும் போல இருந்தான்.
சூரியனால் பெறப்பட்ட அவன், தங்கப் பனை மரம் போல் நெடிதுயர்ந்து இருந்தான். சிங்கத்தைக் கொல்லும் இளமையின் வல்லமையைப் பெற்றிருந்த அவன், எண்ணிலடங்கா சாதனைகளைச் செய்து, அழகான குணநலன்களுடன் இருந்தான்.
பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்த வீரன், அரங்கத்தைச் சுற்றி நோட்டம் விட்டுத் துரோணருக்கும் கிருபருக்கும் {அதிகம் மதியாதவனைப் போல} அலட்சியமாக வணக்கம் செலுத்தினான்.
அந்த மொத்தக்கூட்டத்தினரும் நடப்பதை அசைவில்லாமல் பார்த்து, "யார் இவன்?" என்று நினைத்து, அந்த வீரனைப் பற்றி அறிந்து கொள்ளப் பேராவல் கொண்டனர்.
நாவன்மை மிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சூரிய மைந்தன் {கர்ணன்}, மேகங்களைப் போன்ற ஆழமான உரத்த குரலில், அசுரரை அழிக்கும் பகனின் {இந்திரனின்} மகனும், தன்னால் அறியப்படாதவனுமான தன் தம்பியிடம், "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ செய்து காட்டியதை விஞ்சும் வகையில் நான் இந்தச் சபையின் முன் அருஞ்செயல்கள் செய்வேன். அவற்றை நீ கண்டால் வியப்பில் மலைத்துவிடுவாய்" என்றான்.
அவன் அப்படிப் பேசி முடிப்பதற்குள், பார்வையாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு கருவியின் துணை கொண்டு மொத்தமாக எழுப்பப்பட்டவர்கள் போல எழுந்து நின்றனர்.
அக்கணத்தில் அர்ஜுனன் கோபமும், நாணமும் கொண்ட போது, துரியோதனன் மகிழ்ச்சியால் நிறைந்தான்.
கர்ணன், துரோணரின் அனுமதியுடன், பார்த்தன் முன்பு செய்து காட்டிய அனைத்து அதிசயங்களையும் செய்து காட்டினான்.
துரியோதனன் தனது தம்பிகளுடன் சென்று கர்ணனை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி கொண்டு அவனிடம்,
"ஓ! பெரும்பலம் வாய்ந்த வீரனே, நீ வரவேற்கப்படுகிறாய். நான் என் நற்பேறின் நிமித்தமாகவே உன்னை அடைந்திருக்கிறேன். ஓ! பண்பட்டவனே, நீ உன் விருப்பப்பட்ட படியே, எனக்கும், எனது அரசுக்கும் ஆணையிடுவாயாக" என்றான்.
அதற்குக் கர்ணன், "நீ இப்படிச் சொன்னதே போதும், நீ கூறியவற்றை அடைந்தவனாகவே என்னை நான் கருதுகிறேன். உனது நட்பையே விரும்புகிறேன். ஓ! தலைவா {துரியோதனா}, அர்ஜுனனுடன் தனிப்போரிடுவதே எனது ஆவல்" என்றான்.
துரியோதனன், "என்னுடன் சேர்ந்து வாழ்வின் நன்மைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பாயாக! உனது நண்பனுக்கு நன்மை செய்வாயாக, ஓ! எதிரிகளை அடக்கி ஒடுக்குபவனே, அனைத்து எதிரிகளின் தலையிலும் உனது பாதத்தை வைப்பாயாக" என்றான்.
"இதன்பிறகு, அர்ஜுனன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி, தன் சகோதரர்களுக்கு {துரியோதனாதிகளுக்கு} மத்தியில் மலையென நின்ற கர்ணனிடம்,
"அழைக்கப்படாமல் வருபவர்களும், கேட்கப்படாமல் பேசுபவர்களும் செல்லும் பாதை {உலகம்} உன்னுடையதே. என்னால் கொல்லப்பட்ட பிறகு நீ அங்கேதான் போகப் போகிறாய்" என்றான்.
கர்ணன், "இந்த அரங்கம் அனைவருக்கும் பொதுவானது, ஓ! பல்குனா {அர்ஜுனா}, இஃது உனக்கு மட்டும் சொந்தமானதல்ல. பலத்தில் மேன்மையானவர்களே மன்னர்கள். க்ஷத்திரியர்கள் பலத்தை மட்டுமே மதிப்பார்கள்.
வாய்ச்சண்டை எதற்கு? அது பலவீனமானவர்களின் வழியாகும். ஓ! பாரதா, குருவின் முன்னிலையில் நான் இன்று உனது தலையைக் கொய்யும் வரை உனது கணைகளால் என்னிடம் பேசுவாயாக" என்றான்".
"சகோதரர்களால் விரைவாகத் தழுவி அனுப்பப்பட்டவனும், எதிரிகளின் நகரங்களை அடக்குபவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் அனுமதியுடன் போருக்கு முன்னேறினான்.
மறுபுறத்தில், துரியோதனனாலும், அவனது சகோதரர்களாலும் தழுவப்பட்ட கர்ணன், தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராக நின்றான்.
அப்போது, மின்னலுடன் கூடிய மேகங்களால் வானம் மூடப்பட்டது. இந்திரனின் வண்ணமயமான வில் {இந்திர தனுசு, வானவில்}, பிரகாசமான ஒளிக் கதிர்களைப் பொழிந்தது. அப்போது வரிசையாகச் சிறகு விரித்துப் பறந்து சென்ற வெண்ணாரைகளைப் பார்த்து, வானத்தை மறைத்துக் கொண்டிருந்த மேகங்கள் சிரிப்பது போல் இருந்தது
இந்திரன், தன் மகன் மீது கொண்டிருந்த அன்பினால் அந்த அரங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சூரியனும் மேகங்களைக் கலைத்துவிட்டுத் தனது வாரிசையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பல்குனன் மேகங்களின் ஆழத்தில் {உள்ளே} மறைந்திருந்தான். கர்ணன் சூரியக் கதிர்களால் சூழப்பட்டுப் பார்வையில் தெரிந்தான்.
திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} கர்ணனுக்கு அருகிலேயே நின்றிருந்தான். துரோணர், கிருபர் மற்றும் பீஷ்மர் ஆகியோர் பார்த்தனுக்கு அருகில் நின்றனர்.
அங்கே கூடியிருந்த கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. பெண் பார்வையாளர்களும் அப்படியே பிரிந்திருந்தனர். அப்போது, நடக்கும் காரியங்களின் நிலை தெரிந்த குந்திபோஜனின் மகளான {வளர்ப்பு மகளான} குந்தி இதைக் கண்டு மூர்ச்சையடைந்தாள்.
அனைத்துக் கடமைகளிலும் அறிவுடைய விதுரன், பெண் பணியாட்களின் துணையுடன் அங்கே வந்து, அவள் மீது சந்தனத்தையும், நீரையும் தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.
சுயநினைவு மீண்ட குந்தி, கவசம் அணிந்த தனது இரு மகன்களையும் கண்டாள். அவளால் செய்யக்கூடியது எதுவுமில்லையாகையால் (அவர்கள் இருவரையும் காக்க வழியில்லாததால்) பயத்தால் பீடிக்கப்பட்டிருந்தாள்.
இரு வீரர்களும் கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும் நன்கறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, கர்ணனிடம்,
"குந்தியின் இளைய மகனான இந்தப் பாண்டவன், கௌரவக் குலத்தைச் சார்ந்தவன். அவன் உன்னுடன் தனியாகப் போர் புரிவான்.
ஆனால், ஓ! பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, நீயும் உனது குலத்தைக் கூற வேண்டும். உனது தந்தை, தாய் மற்றும் எந்த அரசு வழியை அலங்கரிப்பவன் நீ என்பது போன்றவற்றைக் கூற வேண்டும்.
இதையெல்லாம் அறிந்த பிறகே, பார்த்தன் {அர்ஜுனன்} உன்னுடன் போரிடுவான், இல்லையென்றால் போரிடமாட்டான். மன்னர்களின் மைந்தர்கள், புகழற்ற குலத்தில் பிறந்த மனிதர்களுடன் நேருக்கு நேர் தனியாகப் போரிட மாட்டார்கள்" என்றார்".
"இப்படிக் கிருபரால் சொல்லப்பட்டதும், கர்ணனின் முகம், மழைக்காலத்தின், மழைநீரால் தைக்கப்பட்டுக் கசக்கிக் கிழித்தெறியப்பட்ட தாமரை போல் ஆனது.
அப்போது துரியோதனன், "ஓ! குருவே, அரசகுல ரத்தம் கொண்டவர்கள், வீரர்கள் மற்றும் படைகளுக்குத் தலைமையான படைவீரர்கள் ஆகிய மூன்று வகை மனிதர்கள் அரசுரிமை கோரலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.
பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன்" என்றான்".
"அந்நொடியிலேயே, தங்க ஆசனத்தில் அமர்த்தப்பட்டு, உலர்ந்த நெல், மலர்கள், நீர், தங்கம் ஆகியவற்றைக் குடங்களில் கொண்டு, மந்திரங்கள் அறிந்த பிராமணர்களால் கர்ணன் அங்க நாட்டு மன்னனாக நிறுவப்பட்டான். அவன் தலைக்கு மேல் அரச குடை பிடிக்கப்பட்டது. அந்தச் சந்தேகமில்லாத வீரனுக்குச் சுற்றி நின்று சாமரம் வீசப்பட்டது.
மகிழ்ச்சி நிறைந்த அந்த மன்னன் {கர்ணன்} கௌரவத் துரியோதனனிடம், "ஓ! ஏகாதிபதிகளில் புலியே, நாட்டைப் பரிசாகக் கொடுக்கும் உனக்கு, அதற்குச் சமமாக நான் என்ன கொடுக்கப்போகிறேன்?
ஓ! மன்னா, நீ சொல்வது அனைத்தையும் நான் செய்வேன்" என்றான்.
துரியோதனன் கர்ணனிடம், "நான் உனது நட்பையே விரும்புகிறேன்" என்றான்.
அதற்குக் கர்ணன், "அப்படியே ஆகட்டும்" என்றான். அவ்விருவரும் மகிழ்ச்சியால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு பெரு மகிழ்ச்சி கொண்டனர்"
"அதன்பிறகு, மேலாடை நழுவிய நிலையில், வேர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் ஒரு கோலை ஊன்றித் தன்னைத் தாங்கிக் கொண்டு ஓர் அதிரதன் {தேரோட்டி} அந்த அரங்கத்தினுள் வந்தான்.
அவனைக் கண்டதும், பட்டமேற்பினால் நனைந்திருந்த தலையுடன் இருந்த கர்ணன், தனது வில்லைவிட்டு, மகனுக்குரிய மரியாதையுடன் தலைவணங்கினான் {அவனது பாதங்களில் தன் தலையை வைத்தான்}.
அந்தத் தேரோட்டி பரபரப்புடன் தனது பாதங்களை ஆடையால் மூடிக் கொண்டு, வெற்றி மகுடம் சூடிய கர்ணனை "மகனே!" என்று அழைத்தான்.
மேலும் அவன் அன்பின் மிகுதியால் கர்ணனை ஆரத்தழுவிக் கொண்டு, அங்கதேசத்தின் மன்னனாக முடிசூடப்பட்டு நனைந்திருந்த அவன் தலையில், தனது கண்ணீரைப் பனித்துளியாக்கி மேலும் நனைத்தான்.
அந்தத் தேரோட்டியைக் கண்ட பாண்டவ பீமன், கர்ணனை தேரோட்டியின் மகனாகக் கருதி, ஏளனமாக,
"ஓ! தேரோட்டி மகனே, பார்த்தனின் கைகளால் மரணத்தைப் பெறும் தகுதி உனக்கில்லை. உனது குலத்துக்கு ஏற்ற வகையில் சாட்டையை {சவுக்கை} உடனே எடுத்துக் கொள்வாயாக.
ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே, வேள்வி நெருப்பினருகில் இருக்கும் நெய்யைப் பெற ஒரு நாய்க்கு எவ்வாறு தகுதியில்லையோ, அவ்வாறே அங்கநாட்டை ஆட்சி செய்ய உனக்கும் தகுதியில்லை" என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், நடுங்கும் உதடுகளுடன், பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வானிலிருக்கும் பகலவனைக் {சூரியனைக்} கண்டான்.
தாமரைக்கூட்டத்திற்கு இடையிலிருந்து மதம்பிடித்த யானை எழுவது போலத் தனது சகோதரர்களுக்கு மத்தியில் இருந்து கோபத்துடன் எழுந்த துரியோதனன்,
பயங்கரச் செயல்களைப் புரியும் பீமசேனனிடம், "ஓ! விருகோதரா {பீமா}, இது போன்ற வார்த்தைகளைப் பேசுவது உனக்குத் தகாது.
பலமே க்ஷத்திரியனுக்கு இதயப்பூர்வமான அறமாகும். பிறப்பால் தாழ்மையுற்றிருப்பினும், போர்புரியத் தகுதி வாய்ந்தவன் க்ஷத்திரியனே. தெய்வீக ஆறுகளின் தோற்றுவாயும் {பிறப்பிடமும்}, பெரும் வீரர்களின் மூலமும் {பிறப்பிடமும்}, எப்போதும் அறியப்படுவதில்லை.
உலகத்தையே சுட்டெரிக்கும் நெருப்பு, நீரிலிருந்தே எழுகிறது. தானவர்களைக் கொல்லும் இடி {வஜ்ரம்} ததீச முனிவரின் எலும்பால் ஆனது.
சிறப்பு மிகுந்த குஹதேவன் {முருகன்}, பல தேவர்களின் பகுதிகளைக் கொண்டு பிறந்ததால், அவனது மூலம் யாருக்கும் தெரியாது. சிலர் அவனை அக்னியின் மகன் என்றும், சிலர் கிருத்திகையின் மகனென்றும், சிலர் ருத்திரனின் மகன் என்றும், சிலர் கங்கையின் மகனென்றும் சொல்கின்றனர்
க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் பிராமணர்களாக ஆனதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். விஷ்வாமித்திரரும், மற்றவர்களும் (மற்ற க்ஷத்திரியர்களும்) நித்தியமான பிரம்மத்தை அடைந்துள்ளனர்.
ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையான நமது குரு துரோணர் நீர்க்குடத்தில் பிறந்தவர், கோதம {கௌதம} குலத்தில் பிறந்த கிருபர் நாணற்கட்டிலிருந்து உதித்தவர்
பாண்டவர்களே, உங்கள் பிறப்பைக் குறித்தும் நான் அறிவேன். சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனைத்து அதிர்ஷ்டக்குறிகளையும் கொண்டு, இயற்கைக் கவசமும், காதுகுண்டலங்களும் கொண்ட (கர்ணனைப் போன்ற) ஒரு புலியை ஒரு பெண்மானால் பெற முடியுமா?
இந்த இளவரசன், தனது கரத்தின் பலத்தாலும், அவன் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய நான் ஏற்றிருக்கும் உறுதியாலும், அவன் அங்கதேசத்தை மட்டுமல்ல, முழு உலகத்தின் மனிதர்களையும் ஆளும் தகுதி உடையவன்.
நான் கர்ணனுக்குச் செய்திருக்கும் இந்தக் காரியத்தைப் பொறுக்காத எவரும் இங்கே இருந்தால், அப்படிப்பட்டவன் தனது காலின் உதவியால் தேரில் ஏறி, வில்லை வளைக்கட்டும்" என்றான்".
"துரியோதனனின் பேச்சை அங்கீகரிப்பது போலப் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பமான முணுமுணுப்பு எழுந்தது. சரியாக அந்த நேரத்தில் கதிரவனும் மறைந்தான்.
அப்போது, கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்ட துரியோதனன், எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சத்தில் அவனை வெளியே அழைத்துச் சென்றான்.
துரோணர், கிருபர், பீஷ்மர் ஆகியோர் புடைசூழப் பாண்டவர்களும் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினர்
அங்கிருந்த மக்களில் சிலர் "அர்ஜுனனே வெற்றியாளன்" என்றும், சிலர் கர்ணனே வெற்றியாளன்!" என்றும், சிலர் "துரியோதனனே வெற்றியாளன்!" என்றும் பேசிக்கொண்டு திரும்பினர்.
கர்ணனிடம் சில மங்கலக்குறிகளைக் கண்ட குந்தி, அவனைத் தனது மகனாக அடையாளம் கண்டுகொண்டாள். அங்கதேசத்தின் அரசுரிமையைத் தன் மகன் அடைந்ததைக் கண்டு, தாய்ப்பாசத்தால் மிகவும் மகிழ்ந்து போனாள்.
கர்ணனை இவ்வழியில் அடைந்த துரியோதனன், அர்ஜுனனின் ஆயுதத்திறமை மீது கொண்டிருந்த அச்சத்திலிருந்து விடுபட்டான்.
ஆயுதத் திறமை கொண்ட வீரனான அந்தக் கர்ணன், தனது இனிமையான பேச்சால் துரியோதனனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அதேவேளையில் யுதிஷ்டிரன், கர்ணனுக்கு நிகரான போராளி இந்த உலகத்திலேயே இல்லை என்று நம்பத் தொடங்கினான்" என்றார் வைசம்பாயனர்
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109