*Continued from yesterday's posting*
*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
*8.எல்லோரிடத்தும் அன்பு*
ஒரு வாலிபர் சிருங்கேரிக்கு வந்திருக்கையில், தன்னுடன் வந்த சிலர் ஒவ்வொருவரும் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் ஏதேனும் உபதேசம் செய்து கொள்கிறார்கள் என்று அறிந்து, தனக்கும் உபதேசம் வேண்டுமென்று எண்ணினார்.
வாலிபர்: எனக்கு ஏதாவது தாங்கள் உபதேசம் செய்து அநுக்ரஹித்தால் மிகவும் பாக்கியவானாவேன்.
மஹா: என்ன உபதேசம் வேண்டும்?
வாலிபர்: இது வேண்டும், அது வேண்டும் என்பது எனக்கு இல்லை. தாங்களாக எனக்கு எது நல்லது என்று அனுக்ரஹிக்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொள்ள ஸித்தமாயிருக்கிறேன்.
மஹா: உம் தகப்பனாரிடமிருந்து உமக்கு காயத்ரீ உபதேசம் ஆகியிருக்கிறதோ இல்லையோ?
வாலிபர்: ஆகியிருக்கிறது.
மஹா: உமக்கு வேதாத்யயனமும் அவரே செய்து வைத்திருக்கிறார் அல்லவா?
வாலிபர்: ஆம். சொல்லி வைத்திருக்கிறார்.
மஹா: சிவ பஞ்சாக்ஷரீ மந்திரமும் உமக்கு அவர் உபதேசம் செய்திருக்கிறாரல்லவா?
வாலிபர்: ஆம்.
மஹா: உம் தகப்பனார் உமக்கு தேகத்தைக் கொடுத்திருக்கிறார், காயத்ரீயை கொடுத்திருக்கிறார், வேதத்தை கொடுத்திருக்கிறார், சிவ பஞ்சாக்ஷரீயையும் கொடுத்திருக்கிறார்.
வாலிபர்: ஆம்.வாஸ்தவம்.
மஹர் அப்படியிருக்க, வேறு குருவோ வேறு மந்திரமோ எதற்கு உமக்கு? உம் தகப்பனார் உமக்கு குருவுக்கு மேலாகவே இருக்கின்றார். அவருக்கு கீழ்ப்படிந்து அவர் சொல்லும் புத்திமதியையும் உபதேசங்களையும் பின்பற்றி நடந்து வாரும். அதுவே போதும். வேறு உபதேசம் ஒன்றும் உமக்குத் தேவையில்லை.
இவ்விதம் ஸ்ரீமத் ஆசார்யார் உத்தரவிட்டபோது அங்கிருந்த எங்களில் சிலருக்கு இந்த வாலிபர் ஸம்ஸ்கிருத காவியங்களில் கொஞ்சம் பரிச்சயம் செய்துவிட்ட காரணம் கொண்டு சாஸ்திர ஞானமில்லாத வைதிகராயிருந்த தன் தகப்பனாரைவிட தான் உயர்ந்தவன் என்ற எண்ணமுள்ளவர் என்பது தெரியும். ஸ்ரீமத் ஆசார்யார் இப்பொழுது நல்ல பருவத்தில் செய்த இந்த உபதேசமும் இவ்வாலிபரின் மனப்பான்மையையே முற்றிலும் மாற்றி விட்டது. அன்று முதல் தன் தகப்பனாரிடம் மிக்க மரியாதையோடு நடந்து வரும்படியும் செய்தது.
No comments:
Post a Comment