*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
*8.எல்லோரிடத்தும் அன்பு*
ஒரு வேதாந்த வித்யார்த்தி தான் எழுதியிருந்த ஒரு வியாஸத்தை (கட்டுரை) ஸ்ரீமத் ஆசார்யாரிடம் வாசித்துக் காட்டி அனுமதிபெற நினைத்து அதை வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கையில், மிருகங்களைப் பற்றி குறிப்பிட வேண்டிய ஸந்தர்ப்பத்தில் *गवाश्वमहिषादय:* (பசுக்கள், குதிரைகள், எருமைகள் முதலியன) என்ற சொற்றொடர் வந்தது.
மஹா: பசுக்களுக்கும் எருமைகளுக்கும் இடையில் குதிரைகளை விட்டதில் என்ன தாத்பர்யம்? பசுக்களும் எருமைகளும் ஒரே மாட்டு இனத்தைச் சேர்ந்தவைகளல்லவா?
வித்யார்த்தி: அது தவறுதான். "பசுக்கள், குதிரைகள் முதலியன" என்பதே போதும்.
மஹா: நீ இப்போது வித்யார்த்தி. சீக்கிரம் வித்வானாக ஆக வேண்டியவன். வித்வானுக்கு முதல் லக்ஷணம், எதையும் எழுதுவதற்கு முன் நன்றாக ஆலோசனை செய்து எழுத வேண்டும் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நன்கு யோசிக்காமல் எழுதிவிட நேர்ந்து விட்டாலும், எழுதினதை ஸமர்த்தனம் செய்ய ஸித்தமாயிருக்க வேண்டும். இது வித்வானுடைய இரண்டாவது லக்ஷணம். இப்போது நீ எழுதியாகிவிட்டது. எழுதினதை ஸமர்த்தனம் செய்வதற்குப் பார்.
வித்: என்னால் ஸாத்தியமில்லை. எருமைகளைச் சேர்த்தது அவசியமில்லை. தவறும் கூடத்தான்.
மஹா: வித்வான் ஆவதற்கு வழி இதல்ல. உனக்காக நான் அதை ஸமர்த்தனம் செய்யட்டுமா?
வித்: அதெப்படி?
மஹா: இதற்கு முன்னுள்ள வாக்கியத்தில் உலகம் முழுவதும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாய். அந்த நியாயம் மிருகங்கள் விஷயத்திலும் உண்மையாகத் தானே இருக்க வேண்டும்? ஆகையால் ஸத்வ குணத்திற்குப் பசுக்களையும், ரஜோ குணத்திற்கு குதிரைகளையும், தமோ குணத்திற்கு எருமைகளையும் உதாஹரணமாகக் காட்டியிருக்கிறாய். குணங்களின் ஸ்வபாவமான வரிசைக் கிரமத்தை அனுஸரித்து உதாஹரணங்களை அமைத்திருக்கிறாய். ஆகையால் பசுவுக்கும் எருமைக்கும் மத்தியில் குதிரை வர வேண்டியது தானே நியாயம் ? இப்பொழுது சரியாகி விட்டதா?
வித்: அந்த சொற்றொடரை எழுதும்போது நான் இவ்விதமாக நினைக்காமல் போனாலும், அது சரிதான் என்று இப்பொழுது தெரிகிறது.
மஹா: ஆகையால் அது மிகவும் சரியாகவே அமைந்திருக்கிற படியால் அது அப்படியே இருக்கலாம், மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிந்து கொண்டாயா?
வித்: ஆம், தெரிந்து கொண்டேன்.
மஹா: அப்படியானால், குணங்கள் மூன்றுதானே உண்டு. அவைகளுக்கு உதாஹரணங்களும் மூன்றுதானே தேவை? அப்படியிருக்க "முதலியன" என்று போட்டிருப்பதற்கு ஸமாதானம் எப்படி?
வித்: தாங்கள் செய்து கொடுத்த ஸமர்த்தனத்தின்படி "முதலியன" என்ற சொல் பொருந்தாது என்று இப்போது தெரிகிறது. அதற்கு ஸமாதானம் சொல்ல முடியாதுதான்.
மஹா: வித்வானுக ஆக வேண்டியவன் இவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதை மறந்து விட்டாய்.
வித்: "முதலியன" என்ற சொல் அவசியம்தான் என்று எப்படி ஸமாதானம் சொல்ல முடியும்?
மஹா: உனக்காக நான் ஸமாதானம் சொல்லிப் பார்க்கட்டுமா?
வித்: அபிப்பிராயப்படி செய்கிறது.
மஹா: "பசுக்கள் முதலியன", "குதிரைகள் முதலியன" "எருமைகள் முதலியன" என்று சொல்ல உத்தேசித்து மூன்றையும் சேர்த்து ஒரே பதமாக அமைக்க நினைத்தால், அப்பதம் எப்படி அமையும்? சொல்லு பார்ப்போம். "பசுக்கள் முதலியன குதிரைகள் முதலியன எருமைகள் முதலியன" என்று அப்படி அப்படியே தொடுத்து அனாவசியமாய் நீண்டு விகாரமாயுள்ள பதத்தைச் சொல்வாயா? அல்லது மூன்றையும் ஒருங்குபடுத்தி சுருக்கமாக "பசுக்கள், குதிரைகள், எருமைகள் முதலியன" என்று மாத்திரம் சொல்வாயா?
வித்: அவசியம் பின்னால் சொன்ன மாதிரி சுருக்கித்தான் சொல்வேன்.
மஹா: இப்போது நன்றாகத் தெரிந்ததா? உபயோகித்திருக்கும் சொற்றொடர் ஸந்தர்ப்பத்திற்கு உசிதமாகவும் எளிதில் ஸமர்த்தனம் செய்யக் கூடியதாகவே அமைந்திருக்கிறதென்று. இவ்வளவு தூரம் ஏன் உனக்கு சொல்கிறேன் என்றால், எதையும் எழுதுவதற்கு முன்னால் நன்கு யோசனை செய்ய வேண்டும். எழுதின பின்னர் ஸமாதானம் தேடிக்கொண்டு தடுமாறக் கூடாது என்பதை வற்புறுத்துவதற்காக.
*தொடரும்…*
No comments:
Post a Comment