*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
Section 2
*ஞானப் பிரஸூனங்கள்*
*7.உண்மையான அஹிம்ஸை*
ஒரு நாள் முற்பகலில் காத்துக் கொண்டிருந்த சிஷ்யர்களுக்கு ஸ்ரீமத் ஆசார்யார் அபிஷேக தீர்த்தம் விநியோகம் செய்துவிட்டு ஸ்நாநம் செய்கிற வழக்கம்போல் மாத்யாஹ்நிக ஸ்நாநம் செய்த பிறகு இரண்டாவது ஸ்நாநம் செய்ய தயார் செய்து கொண்டிருந்தார். அன்று அவர்களுக்கு தேகத்தில் கொஞ்சம் ஸௌக்கியக் குறைவு இருந்தது. அப்படியிருந்தும் இரண்டாம் தடவை செய்தால் ஆரோக்கியம் இன்னமும் கெடுமே என்ற பயத்துடன் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த ஓர் அந்தரங்க அதிகாரி இரண்டாம் ஸ்நாநத்தை நிறுத்திவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காக ஸ்ரீமத் ஆசார்யார் இருக்குமிடம் விரைந்து சென்றார்.
அதிகாரி: இரண்டாம் ஸ்நாநத்திற்கு இப்பொழுது என்ன அவசியமோ?
மஹா: ஸ்நாநம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.
அதிகாரி: அவ்விதம் தோன்றக் காரணம் என்ன?
மஹா: (அவர்களுக்குரிய புன்சிரிப்புடன்) ஏன், எனது மனது தான்.
அதிகாரி: மனதில் அவ்விதம் தோன்றக் காரணம் என்ன? ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமே?
மஹா: இருக்கத்தான் வேண்டும்.
அதிகாரி: அது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
மஹா: அவசியமில்லை. அவ்விதம் எனக்குத் தோன்றுகிறது என்பதே போதும்.
இந்தப் பதிலால் அவ்வதிகாரி மேலே ஸ்ரீமத் ஆசார்யாருடன் வாதாடுவது நியாயமுமில்லை, ஸாத்தியமும் இல்லை என்று உணர்ந்து தடைப்பட்டும்கூட, அவர்களுடைய ஆரோக்கியத்தைக் கருதி இத்துடன் விஷயத்தை விட்டுவிடவும் மனமில்லாமல் திகைத்தார். தனக்குள்ளேயே ஆலோசித்தார். பிறகு,
அதிகாரி: தீர்த்தம் கொடுக்கும்போது ஏதேனும் விசேஷமான தீட்டு அல்லது வேறு அசுத்தி ஏற்பட்டதா? அதனால்தான் ஸ்நாநமா?
இவ்விதம் நேரடியான கேள்வி எழுந்ததும்,
மஹா: ஆம்.
அதிகாரி: ஏற்பட்ட ஸம்பவம் என்ன?
மஹா: அதைப்பற்றி என்ன? அது முக்கியமில்லை.
மீண்டும் அதிகாரி தனக்குள் ஆலோசித்தார். பிறகு,
அதிகாரி: தீர்த்தம் வாங்கிக் கொள்வதற்காக இன்னார் வந்தாரே? அதனால்தானா?
மீண்டும் இவ்விதம் நேரடியான கேள்வி எழுந்ததும்,
மஹா: ஆம்.
அதிகாரி: இது அசுத்திக்குக் காரணமாயிருக்குமானால், முன்னமேயே என்னிடம் சொல்லியிருந்தால், தங்களிடம் அவர் வருவதை தடுக்க ஏற்பாடு செய்திருப்பேனே?
மஹா: எதற்காக தடுக்க வேண்டும்? வருகிறவர் எவ்வளவு தோஷத்துடன் கூடியிருந்தாலும், ஸ்ரீ சந்திர மௌலீசுவரரின் அபிஷேக தீர்த்தத்தின் மஹிமையில் நம்பிக்கையுள்ளவராயிருந்தால், அவருக்கு அதை நான் கொடுக்க மறுப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை.
அதிகாரி: தங்களிடமிருந்து நேராகப் பெறாமல், வேறொரு வரிடமிருந்து தீர்த்தத்தைப் பெறும்படி ஏற்பாடு செய்திருப்பேன்.
மஹா: அந்த தீர்த்தத்தை என் கையிலிருந்து வாங்கிக் கொண்டால் அதற்கு விசேஷ மதிப்பு என்று அவர் நினைக்கும்போது, நீங்கள் சொல்வதுபோல் செய்வது உசிதமாகுமோ?
அதிகாரி: தங்களுடைய தற்கால ஆரோக்கிய நிலைமையில் இரண்டாம்முறை ஸ்நாநம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறதே என்பதற்காகத்தான்.
மஹா: இது மிகவும் அல்ப விஷயம். இதுவும் என்னைப் பொறுத்ததுதானே? மேலும், அபிஷேக தீர்த்தம் ஆத்ம சுத்தியை உண்டாக்கக்கூடிய பொருள் என்று நாம் எல்லோரும் நம்பி வருகிறோமல்லவா? தீர்த்தம் பெறுபவன் செய்துள்ள பாவம் அதிகமாக உயர உயர, தீர்த்தம் வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் அதற்குத் தகுந்தாற்போல் உயரும் என்பது நியாயமாகத் தெரியவில்லையா? அதாவது, ஒருவனிடம் பாபங்கள் அதிகமாக அதிகமாக அவனுக்கு பரிசுத்தியேற்பட வேண்டிய அவசியமும் அதிகமாகத்தானே ஆகும்? இப்படியிருப்பதால், இவரைக் காட்டிலும் குறைந்த தோஷமுள்ளவர் களைவிட இவருக்கே தீர்த்தத்தின் அவசியம் அதிகம். அதை இவருக்குக் கொடுக்க மாட்டேன் என்று எந்த காரணத்தைக் கொண்டு நான் சொல்ல முடியும்?
*தொடரும்…*
No comments:
Post a Comment