Thursday, June 6, 2024

End of dikshitar & meenakshi me mudam song

மீனாக்ஷி  மே  முதம் ......       as  dictated by J K  SIVAN  
ராகங்கள்  எத்தனையோ  இருக்கு.  சிலது  மனதை  தொடும்.  அனுபவித்தவர்களுக்கு  தான்  இதன்  அர்த்தம்  புரியும்.  பகவான்  மேல்  பாடப்பட்ட கீர்த்தனைகள்  மற்ற எல்லாவற்றையும் விட என்னை  அதிகம்  கவர்ந்தவை. அதில் பக்தி ரசம் பொங்கும். எங்கேயோ இனம் புரியாத  ஒரு இடத்துக்கு என்னை அறியாமலேயே தூக்கிச் செல்லப்படுவேன். இசையில் கலந்து கண்ணை மூடி  இறைவனை நேரில் சந்திப்பேன்.  சிரிப்பான். அணைப்பான்.
ஒரு ராகம்  கமக்ப்ரியா  சிலர்  அதை  பூர்வி கல்யாணி என்பார்கள். அதிகம் ராகத்தைப் பற்றி தெரியாதபோது அதற்கு மேல் என்ன ஆராய்ச்சி? சமஸ்க்ரிதத்தில் வாக் கேய காரர்கள்  எனப்படுபவர்கள் எந்த  முன்னேற்பாடும் இன்றி தானாகவே  உருகி பகவான் மேல்  இயற்றிய  அற்புத கீர்த்தனைகள் சாகாவரம் பெற்றவை.  ஒருவர்  அப்படிப்பட்டவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். நிறைய அவரைப் பற்றி சொல்லலாம். தியாகராஜ ஸ்வாமிகள் சாமா சாஸ்த்ரிகள் எனும் மற்ற சமகாலஎன்றும்  சங்கீத  மும்மூர்த்திகளாக  இருப்பவர். அந்திம  காலம் நெருங்கிவிட்டது என்று  தெரிந்து போய்விட்டது.
தர்ப்பைப்பாயில் கால் நீட்டி  படுத்துவிட்டார்.  ஸ்வாசம்  சரியாக இல்லை. மேல்மூச்சு  கீழ்மூச்சு  சீராக  இயங்கவில்லை.   இனி எந்த  க்ஷணமும்  தீக்ஷிதர்  பூலோகத்தை விட்டு  புறப்படப்  போகிறார்.  அவர் மனம் அப்போதும்  மீனாட்சி வசமாகவே இருக்கிறது. அவளை   மனம்  நினைக்கிறது. உதடுகள்  சத்தம்  வராமல்  அவர்  அவளை பற்றி  இயற்றிய  மீனாக்ஷி மே  முதம்  கீர்த்தனையை உச்சரிக்கிறது. அருகே கவலையும் கண்ணீரோடும்  சிஷ்யர்கள் சூழ்ந்திருக்க  அவர்களுக்கு அவர்  மீனாக்ஷி மே முதம்  கீர்த்தனையை   முனகுவது  புரிகிறது.
 ''மீனாக்ஷி மே  முதம்  பாடணுமா? '' என்று  கேட்கிறார்கள். தலை அசையவில்லை.கண்  ஆமாம்  என்று இமைகள் மூலம் ஜாடை காட்டுகிறது.  கணீர்  என்று  ஆரம்பிக்கிறார்கள். ஆனந்த  பரவசம்  தீக்ஷிதர்  முகத்தில்  தோன்றுகிறது.  கண்கள் லேசாக  மூடி  செவி குளிர  கேட்கிறார்.  சிறிய ஓலைக்குடிசை. சுற்றிலும் அவர் வழிபடும் தெய்வங்கள் சிலைகள், படங்கள். பாடல் ஓலைச்சுவடிகள். கண்ணெதிரே  மீனாக்ஷி  உருவம் புன்முறுவல் பூக்கிறது. அவள் எதிரில் சுடர் விடும் தீபம் பாடலுக்கு அழகாக  அபிநயம் பிடிக்கிறது.
தூரத்தில்  இருக்கும் மதுரையில் அம்பாள் சர்வாலங்கார பூஷிதையாக  காட்சி தர பக்தர்கள்  வெள்ளம் பொங்குகிறது. ஹாரத்தி  ஒளி அம்பாள் முகத்தை காட்ட அதில் கண்களில் ஒரு துளி ஆனந்த கண்ணீர். ஆமாம் அவள் காதில் தீக்ஷிதர்
ஸ்வாச ஒலியோடு  அவர்  எழுதிய  அக்ஷரங்கள்  ஒலிக்கிறது.   ' மீன லோசனி பாஸ மோசனி  மானினி கதம்ப வன வாஸினி
மது மத மோதித ஹ்ருதயே ஸதயே''  
நெற்றியில் பிறை சூடிய  ராஜ மாதங்கி,முக்கண்ணாள் .மதுராபுரியில் வாழ்பவள்.மதுரம்  என்பதற்கே எத்தனையோ அர்த்தம். ஞானமே உருவானவள்.  மரகதப்பச்சை நிறக்காரி.
மீன் போன்ற  அக்ஷங்களை, கண்களை உடைய  கயல்விழி மாது. எவ்வுயிரிடமும் தாய்ப் பாசம் கொண்ட அன்னயே , இந்த குழந்தைக்கும் அருள்வாயே,.....   சுவாசம் அடங்கியது.ஆரத்தி முடிந்த நேரம், இங்கே  தீக்ஷிதர் ஆன்மா  அம்பாள்  திருவடிகளை அடைந்தது...
சிஷ்யர்கள் பாடி முடித்தார்கள்.
தீக்ஷிதருக்கு  மதுரை  மீனாக்ஷி  மேல்  அளவுகடந்த பக்தி.  மஹா யோகி அவர்.   ஸ்ரீ வித்யா உபாசகர். யாருக்கு   அவளை பிடிக்காது?  சமீபத்தில்  மதுரையில் விடிகாலையில்  அவளை சென்று தரிசித்தேன். அப்போதே கூட  அவ்வளவு கூட்டம். இப்போதெல்லாம்  நிறைய ரூபாய் கொடுத்தால் தான்  கொஞ்சம் கிட்டே போய்  தரிசனம் செய்ய வைக்கிறார்கள். அவள் அருளால் பழைய காலம் திரும்ப வேண்டும். தூங்கா நகரத்தில் சதா கண்விழித்துக்கொண்டே  இருக்கும்  காத்தருளும்  தேவி. வாக்  தேவி. மீனாக்ஷி மேல்  தீக்ஷிதர்  இயற்றிய  ''மீனாக்ஷி மே முதம்''  கீர்த்தனை ஒரு விலைமதிப்பில்லா  வைடூர்யம்.
மீனாக்ஷி மே முத3ம் - ராக3ம் க3மக க்ரியா - தாளம் ஆதி3
பல்லவி
மீனாக்ஷி மே முத3ம் தே3ஹி
மேசகாங்கி3 ராஜ மாதங்கி3
அனுபல்லவி
மான மாத்ரு2 மேயே மாயே
மரகதச்சா2யே ஸி1வ ஜாயே
(மத்4யம கால ஸாஹித்யம்)
மீன லோசனி பாஸ1 மோசனி
மானினி கத3ம்ப3 வன வாஸினி
சரணம்
மது4ரா புரி நிலயே மணி வலயே
மலய த்4வஜ பாண்ட்3ய ராஜ தனயே
விது4 விட3ம்ப3ன வத3னே விஜயே
வீணா கா3ன த3ஸ1 க3மக க்ரியே
(மத்4யம கால ஸாஹித்யம்)
மது4 மத3 மோதி3த ஹ்ரு2த3யே ஸத3யே
மஹா தே3வ ஸுந்த3ரேஸ1 ப்ரியே
மது4 முர ரிபு ஸோத3ரி ஸா1தோத3ரி
விதி4 கு3ரு கு3ஹ வஸ1ங்கரி ஸ1ங்கரி
மதுரை ஐயரின்   மீனாட்சி மே முதம் ஒரு  அற்புத  பரிசு. கேட்போம்.    
https://youtu.be/gmIwAmjD-jk?si=6bWDJUnq5gVL_KR7

No comments:

Post a Comment