கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு
களிப்பன ஆகாதே
காரிகையார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு
கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடும் ஆறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல்
பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான் படை ஆட்சிகள்
பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது ஓர் வேதகம் வந்து
வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படும் ஆயிடிலே
திருப்படை ஆட்சி, பாடல் – 01 (635)
வேதகம் – பொன்னாக்கும் வேதிமாற்றம், ரசவாதம் | பாண்டி – பழமை | களிகூர்தல் – உள்ளம் களித்தல்
ஓயாது உலகியலில் நீந்துகின்ற மனமாகிய மீனை அருளெனும் வலைவீசிப் பிடிக்கும் மீனவனாம் மெய்ப்பொருள், உள்ளமெனும் ஓடத்தில் தோன்றிவிட்டால்,
நம் புறக்கண்கள் இரண்டும், நாம் காணும் அனைத்திலும் அவனது திருவடி இணையைக் காணாமல் போகுமோ?!
மெய்வாழ்வு வாழும் முறைமறந்து, மாதர் மயக்கத்தால் சிற்றின்பத்தில் ஆழ்ந்து இழிவடைதல் ஆகுமோ?!
மெய்ப்பொருளை மறந்து, அறியாமையால், அறியாமையாலுற்ற வினைத்தொடரால், இம்மண்ணிலும், இதுபோல் இப்பிரபஞ்சத்தில் விளங்கும் எண்ணற்ற உலகிலும் பிறந்து துன்புறுதல் மீண்டும் நிகழுமோ?!
திருமாலும் அறியாத செம்மலர்த் திருவடிகளை நாம் எளிதில் கண்டு வணங்காது போவோமோ?!
உள்ளம் களித்து, பண்ணொடு பாட்டிசைத்துப் பாடுவதும் ஆடுவதும் ஆகாமல் போகுமோ?!
பழமைமிகும் நந்நாடாம் இதயத்தே நின்று, அடியார்களை தமதருளால் ஆள்கின்ற அவன் திறத்தைப் போற்றிப் பாடுதல் நடவாமல் ஆகுமோ?!
உள்ளமாகிய விண் களிக்குமாறு, இரும்பு மனத்தைப் பொன்னாக்கும் ரசவாதம் தான் நிகழாது போகுமோ?!
எல்லாமும் ஆகும்.
இதுவும்….
நானாகிய மீனை உளமெனும் ஓடத்தில் நின்று கொண்டு அருளாகிய வலை வீசி மெய்ப்பொருள் மீனவன் பிடித்து விட்டால், பிறகு அதற்கும் பிறவிப் பெருங்கடலுக்கும் உலகியல் கடலுக்கும் ஒரு தொடர்புமில்லை.
வலைப்பட்ட மீன் உள்ளமெனும் ஓடத்தில் சேர்ந்துவிடும். சேர்ந்ததுமே, மீனவன் காலில் மிதிபடும்.
கடலைப் பிரிந்து கால்பட்ட மீனுக்கு கடலுடன் இனி என்ன தொடர்பு? ஆடுவதும் பாடுவதும் அழுவதும் தொழுவதும் காமத்தில் ஆடுவதும் பிறவிக்கு வித்திடுவதுமெல்லாம் கடலில்தான். ஓடத்தில் விழுந்து உயிர் பிரியும் வரையில் தம்மை மிதித்த மீனவன் கால்களின் வெம்மையை உணரக்கூடும் அவ்வளவே. கரைசேர்ந்ததும் 'இறைந்து' கிடக்கும் அவன் இனத்தாரோடு சமைத்து அவன் பகிர்ந்துண்பான். பின் அது அவர்களின் உடலின் ஒரு துளியாய் ஆகிப்போகும்.
எனவே தான், மீனவன் வெளிப்பட்டதும் எதுவும் நிகழாதென்றார்.
(கடல்மீன் ஓடத்துக்கு வந்ததும் மீனவனுக்கு மீண்டும் அந்த மீனைப் பிடிக்கும் வேலை இல்லை. ஆதலால், கரையிலிருப்போர் (விண்) மகிழ்ச்சியுடன் கூக்குரலிட, கடலுள் நுழைந்து மீண்டும் இதே மீனைப்பிடித்து சமைக்கும் ரசவாதமும் நிகழ்வதற்கில்லை.
ஆணவமாம் நான் எனும் நினைப்பு இருக்கும் வரைதான் ஆடலும் பாடலும் காணலுமெல்லாம். ஆணவம் நீங்கினால் யார் எதைச் செய்வது? எதைக் காண்பது? எதுவும் ஆகாது. அங்கே இன்பத்தையோ துன்பத்தையோ அறிதற்கு யாருமில்லை. அநாதியாய் இருக்கும் ஆனந்தமே இருக்கும்.)
No comments:
Post a Comment