#திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள் (பாகம் 1).......பகுதி 1
அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியென பூமிப்பிராட்டியின் அம்சமாய் அவதரித்தவள் பெரியாழ்வார் புத்ரி. நாச்சியார் என்று ப்ரபன்னர்களால் கொண்டாடப்படும் கோதா பிராட்டி, கர்மபத்தர்கள் கரைசேரவென திருப்பாவை முப்பது பாசுரங்களும், நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்தி மூன்று பாசுரங்களும் பாடிக் கொடுத்தாள். எம்பெருமானின் ஹ்ருதயம் குளிர பூமாலையினைச் சூடிக் கொடுத்தாள்.
திருப்பாவை பாடிய திருப்பாவை சதுர் வேதங்களின் ஸாரம். நாச்சியார் திருமொழியோ ஈடுயிணையற்ற விசிஷ்டாத்வைதத் தத்வங்களின் தொகுப்பு. இந்த இரண்டு ப்ரபந்தங்களும் ஜ்ஞாநஹீனர்களையும் ஜ்ஞாநவானங்களாக்கும் தத்வார்த்தங்கள் நிறைந்தவை. குறிப்பாக திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் வேதமனைத்திற்கும் வித்தானதால் மார்கழித் திங்கள் ப்ரதான்யம் பெற்றது.
நாச்சியாரின் திருப்பாவை தொடர்ச்சியாக ஒரு மாதத்தின் முப்பது நாட்களும் பாரெங்குமுள்ள அனைத்து ஸ்ரீவைஷ்ணவத் தலங்களிலும் வருடம் தப்பாது ஸேவிக்கப்படுகிறது. இது வேறெந்த ஆழ்வாரின் பாசுரத் தொகுப்புக்களுக்கும் கிடைக்காத ஏற்றம். முப்பது பாசுரங்களின் தொகுப்பாகும் திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு திவ்ய தேசத்தினைக் கொண்டாடுகிறது. எந்தெந்த ஸ்ரீஸூக்திகள் எந்தெந்த திவ்யதேசங்களைக் குறிக்கின்றன என்பதை மற்ற ஆழ்வார்களின் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களை விளக்கொளியாகக் கொண்டு மூன்று பாகங்களாக அநுஸந்திக்கலாம்.
#முதல்_பாசுரம்_போற்றும்_திவ்யதேசம்
மார்கழித் திங்கள் என்று கோதை நோன்பு நூற்ற மாதத்தினைக் காண்பித்துத் தொடங்கும் திருப்பாவையின் முதல் பாசுரம் ஆச்ரிதர்களை ரக்ஷித்து கரை சேர்க்கவல்ல புருஷோத்தமன் நாராயணன் ஒருவனே என்பதை அழுந்தக் கூறும். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் அந்த மாயோனை அடைவதற்கான நோன்பிருப்போம் வாரீர் சிறுமிகாள்!
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
கருத்த மேனியினையும் தெளிந்த திருமுகத்தினையும் உடையவனான நாராயணனே என்று ஏவகாரத்தினைக் கொண்டு பரதேவதை யார் என்பதை நிஷ்கரிக்கின்றது இந்த முதல் பாசுரம். பரஸமர்ப்பணம் பண்ணின ஜீவனை ஆதுரத்துடன் ஆரத் தழுவி ஆச்வாஸப்படுத்தி பறை (மோக்ஷம்) அநுக்ரஹிப்பவன் தெளிந்த திருமுகத்தனாய் பரமபதத்தில் எழுந்தருளியுள்ள பரவாஸுதேவனே.
நாராயணனே நமக்கே பறை தருவான் எனும் பதங்களை ப்ரதானமாகக் கொண்டோமானால், திருப்பாவையின் முதல் பாசுரம் கொண்டாடுவது பரவாஸுதேவனை. அதில் ஸேவையாகும் திவ்யதேசம் #பரமபதமே.
தொடரும்
ஸ்ரீமதி பழவேரி ரமா ராகவசிம்ஹன், வைணவன்குரலில்
No comments:
Post a Comment