Monday, April 22, 2024

nallan chakravarthy

நாட்டுக்குப் பொல்லான்,நமக்கு நல்லான் !
     🔔🙏🔔🙏🔔🙏🔔🙏🔔🙏🔔🙏

இன்று(22/04/24)சித்திரை ஹஸ்தம் பேரருளாளப் பெருமாள் திருநட்சித்திரம்.அவரால்" நாட்டுக்குப் பொல்லான்,நமக்கு நல்லான்" என்று கொண்டாடப்பட்ட "திருமலை நல்லான் சக்ரவர்த்தி" ஸ்வாமியின் திருநட்சித்திரம்.

ஸ்வாமி தனியன்:

"வந்தே வரதராஜேந மமநல்லான் ஆதி ஸம்ருதம்.
பரமைகாந்தி ஸம்ஸ்ஹாராத் ப்ரக்யாதம் லோகதேசிகம் !"

1.உடையவரின் உந்நத சிஷ்யர்:
      💐🌻🌼🌺🌹🏵🌷💐
திருமலையில் திருவேஙகடவருக்குப் பல கைங்கர்யங்கள் செய்த, திருவேங்கடவரிடம் இருந்து சங்கு சக்கரங்களைப் பெற்ற தொண்டை
மான் சக்ரவர்த்தி குலத்தில்/வம்சத்தில் ,காஞ்சிபுரத்தில் 1050 ஆம் ஆண்டு, அவதரித்தார் வரதாசாரி. இளவயதிலேயே உடையவரைச் சரணடைந்து அவரிடம் சாஸ்திர அர்த்த விசேஷங்களைக் கேட்டு அறிந்தார்.(இவருடைய பிதாமகர்  ஸ்ரீ பிரணதார்த்திஹரர்,ஸ்ரீ ஆளவந்தாரு
டைய சீடர். பிரணதார்த்திஹரருடைய பெரிய பிதாமகர் ஸ்ரீ உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை,ஸ்ரீமந்நாதமுனி
களின் சீடராவர்.நல்லான் சக்ரவர்த்திக்குப் பின்னால் அவர் வம்சத்தில் அவதரித்த ஸ்ரீ அண்ணராய சக்ரவர்த்தி ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சீடர்.)

உடையவர் நியமித்த 74 சிம்மாசனாதி பதிகளில் இவரும் ஒருவர்.திருமலை சென்று கைங்கர்யங்கள் செய்ததால் திருமலை நல்லான் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்டார்.இவர் திருமலாசார்யர் என்றும் அறியப் பட்டார்.

2.நாட்டுக்குப் பொல்லான்; நமக்கு நல்லான் !
🙏👏👍👌🙏👏👍👌🙏👏👍👌
ஒரு நாள் அவர்  காஞ்சி வேகவதி நதியில் நீராடும்போது, அங்கே ஒரு பிரேதம் மிதந்து வந்து கரையில் ஒதுங்கியது.நீராடிக்கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் வேறு இடத்துக்குச் சென்று விட்டார்கள்.
வரதாசாரி அந்தப் பிரேதத்தின் அருகில் சென்று பார்த்தபோது அப்பிரேதத்தின் தோள்களில் சங்கு,சக்கரம் முத்திரை பொறிக்கப்
பட்டிருப்பதைக் கண்டார். 
ஒரு திருமால் அடியாருடைய பிரேதம் என்று சேவித்து, அந்தச் சரம திருமேனிக்கு  ஸ்ரீசூர்ணபரிபாலமாக முறைப்படி திருமஞ்சனம் செய்து திருமண்காப்பு இட்டு,முறைப்படி ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தார்.

இதைப் பார்த்த ஊர் மக்கள், உயர்ந்த அந்தணர் குலத்தில் பிறந்த இவர்,  என்ன ஜாதி என்று தெரியாத ஒரு அனாதைப் பிரேதத்துக்கு சரமக் கிரியைகள் செய்யலாமா என்று வியந்து, வரதாசாரியை ஊரை விட்டு விலக்கி வைத்தார்கள். ஊராருக்கு அவர் பொல்லாதவன் ஆகி விட்டார்.

வரதாச்சாரி வீட்டில் சிரார்த்தம். எந்த பிராமண வைதிகரும் சிரார்த்தம் நடத்த வரவில்லை .
"வரதராஜா, ஸ்ரீ ரங்கநாதா, திருவேங்கடவா எல்லாம் உன் செயல்,  என் நிலையைப் பார்த்தாயா?' ஒரு வைஷ்ணவனுக்கு  அந்திம சம்ஸ்காரம் செய்வித்ததற்கு இந்த தண்டனையா?" என்று மனமுருக வேண்டினார்.சிறிது நேரம் கழித்து இரண்டு புதிய பிராமணர்கள் அங்கே வந்தார்கள். சாஸ்த்ரோக்தமாக சிரார்த்தம் நடத்திக் கொடுத்த அவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்து, கண்ணீர் மல்க நன்றி சொன்னார்.

"தேவரீர்  யார் ? எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று அடியேன் அறியலாமா?" என்று கேட்ட வரதாசாரி யிடம்அவர்கள் "நான் வரதராஜன், காஞ்சிபுரம், நான் வெங்கடேசன் திருமலை''  என்று சொல்லி புன்னகைத்து மறைந்தார்கள் !!

தேவப்பெருமாள் உற்சவத்தை வந்து சேவிக்க முடியாமல்,ஊரை விட்டு விலகி மன வேதனையுடன் இருந்தார்.பெருமாள் புறப்பாட்டின்  போது,பெருமாள் அர்ச்சகர் மூலமாக "அவன் நாட்டுக்குப் பொல்லான்; நமக்கு நல்லான்"  என்று 
அறுதியிட்டு உரைத்தார்.

ஊரார்,நல்லான் சக்கரவர்த்தியின் பெருமையை அறிந்து அவர் திருமாளிகைக்குச் சென்று அவரிடம் தண்டம் சமர்ப்பித்து, கோயிலுக்கு அழைத்து வந்து உரிய மரியாதைகளைச் செய்தார்கள்.

3.நடுக்காட்டில் மழை பொழிந்த காளமேகம் !
🙏🌧🌦⛈🌨🌧🌦⛈🌨🙏
உடையவர் அவருடைய சீடர்கள் சிலருடன்,ஸ்ரீரங்கத்திலிருந்து மேல்கோட்டை செல்லும் வழியில் பல நாட்கள், காடு,மேடு,வயல்வெளிகள் வழியாக நடந்து சென்றார்.எங்கள் கொங்கு நாட்டுப்பக்கம் (இன்றைய சத்தியமங்கலம்-கணக்கம்பாளையம்)
 வரும் போது இரவு நேரம். ஏழு நாட்கள் உணவு ஏதும் இல்லாமல் மிகக் களைப்பாக வந்த அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்பினர். தூரத்தில் சற்று வெளிச்சம் தெரிய,சீடர்கள் அதை நோக்கிச்  சென்றனர்.  விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள்.சீடர்களைப் பார்த்த வேடுவர்கள்,"சாமிக ! எல்லாம்  எங்கிருந்து வருகிறீர்கள் ?"
என்று கேட்க "ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறோம்" என்றார்கள். உடனே வேடுவர்கள் கைகூப்பி  "அங்கு ராமாநுஜர் சாமி எப்படி இருக்கிறார்" என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று "ராமாநுஜரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?" என்று கேட்க அதற்கு வேடுவரின் தலைவன் "நாங்கள் நல்லான் சக்ரவர்த்தி சாமியின் சீடர்கள். அவர்  ராமாநுஜரின் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார்.  'உய்ய ஒரே வழி உடையவர் திருவடி!" என்று உபதேசம் செய்தார் என்றார்கள்.

வியப்புற்ற சீடர்கள் "இவர் தான் ஸ்ரீராமாநுஜர் " என்று பக்கத்தில் இருந்த ராமாஜரைக் காட்ட அவர்கள் மிக உகந்து, எம்பெருமானாரின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து, அவர்கள் பெற்ற பேற்றை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.
உடையவருக்கும் சீடர்களுக்கும், தேனும்,தினைமாவும் கொடுத்து உபசரித்தார்கள்.நெருப்பை மூட்டி, குளிர் காய வைத்தனர்.புதிய உடைகளைக் கொடுத்தார்கள்.

 உடையவர், அந்த வேடுவர்களின் அன்பில் நெகிழ்ந்து, "ஸ்ரீநல்லான் இதி மேகோஸ்யம் வநமத்யே ப்ரவர்ஷிதி"-- 'ஸ்ரீ நல்லான் என்கிற  காளமேகம் நடுக்காட்டிலும் மழை பொழிகிறதே" என்று கொண்டாடினார்.

4.நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தார்:
       🌨⛈🌦🌧🌨⛈🌦🌧
திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் உதித்த ஆசார்ய ஸ்வாமிகள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள்.--
குறிப்பாக காஞ்சிபுரம்,ஸ்ரீரங்கம்,
உறையூர்,திருவல்லிக்கேணி,திருவிடந்தை,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய திவ்ய
தேசங்களில்--.

எங்கள் கொங்கு நாட்டில் ஸ்ரீரங்கநாதப்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்து வரும் 'காரமடை' 
(கோவையிலிருந்து 20 கி.மீ) என்னும் ஸ்தலத்திலும் நல்லான் சக்ரவர்த்தி வம்சத்து ஆசார்ய ஸ்வாமிகள்  எழுந்தருளி இருக்கிறார்கள்;
காரமடை ஸ்ரீரங்கநாதர் கோயில் ஸ்தலத்தார்களாக,அரங்கனுக்குக் கைங்கர்யங்கள் செய்து வருகிறார்கள். கொங்கு மண்ணில் வைணவம் வளர்ந்து வருவதில் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறார்கள்.

இன்று காலை, தாசம்பாளையம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில்,
அடியோங்கள்,காரமடை ஸ்ரீ உ.வே.திருமலை நல்லான் சக்ரவர்த்தி பாலாஜி ஸ்வாமிகளைச் சேவித்து, அவரது அநுக்ரஹம் கிடைக்கப் பெற்றோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும்,அன்றைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராகவும் விளங்கிய ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரி நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் தோன்றியவர்.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.ஸ்ரீபேரருளாளர்.
2,3: ஸ்ரீரங்கநாதப் பெருமாள்,
காரமடை & மாசி மாதத் தேர்.
4.நடுக்காட்டில் காளமேகம் பொழிந்த மழை

No comments:

Post a Comment