Sunday, April 21, 2024

Where is GOD? What is he doing? - Spiritual story

ஒரு  ராஜாவின் கேள்விகள்  --  நங்கநல்லூர்   J K  SIVAN 

 அந்த காலத்தில் எல்லா ராஜாக்களும்  முட்டாள்களல்ல. சுகவாசிகளாக  நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத  அக்ரமக்காரர்களாக இல்லை. சிலர்  சிறந்த  சிந்தனையாளர்கள். தாராள  மனது கொண்டவர்கள். பக்தர்கள். கல்வியறிவு கொண்டவர்கள். பண்புள்ளவர்களாகவும்  இருந்தார்கள். 

ஒரு  ராஜாவுக்கு  மண்டை வெடித்து விடும்போல  ஆகிவிட்டது.   அவன் மண்டையை 3 கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன. தூக்கம் வரவில்லை.  சபையை கூட்டினான். வெகு காலமாக  அவனைத் துளைத்த அந்த 3 கேள்விகளுக்கு  யார்  விடை சரியாக சொல்லப்போகிறீர்கள்?    பண்டிதர்கள் அவன் கேள்விகள் என்ன என்று கேட்டு அறிந்து கொண்டு விடை தேடினார்கள். 
 
முதல் கேள்வி ; ''கடவுள்  எங்கே இருக்கிறார்?
ரெண்டாவது:  ''எந்த பக்கம்  பார்த்துக் கொண்டிருக்கிறார்?'' 
மூன்றாவது :   ''என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்?'' 

''எவனால்  இதற்கு பதில் சொல்ல முடியும்?.  கடவுளே  கூட   தன்னைப்பற்றி  இதற்கெல்லாம் பதில் சொல்ல தயங்குவாரே'
ஒரு முனிவரை  காட்டில் ராஜா பார்த்தான்.  அவரை அரண்மனைக்குள்  அழைத்து வந்து பணிந்து உபசரித்து தன  3 கேள்விகளைத் தொடுத்தான். பதிலை எதிர் பார்த்தான்.

'' ஹே  ராஜா, என்ன கேள்வி இது?  கடவுள்  எங்கே இருக்கிறார் என்று உனக்கே  தெரியுமே, ஏன் யோசிக்கவில்லை?''
''முனிவரே  எனக்குத் தெரிந்தால்  இத்தனை நாள்  என்  மண்டையில் இது கேள்வியாக முளைத்திருக்காதே சுவாமி.''
''வெண்ணை எங்கே இருக்கிறது எதில் இருந்து வருகிறது தெரியுமா உனக்கு?
''ஆஹா  இது தெரியாதா,  பாலிலிருந்து தான் ''
''பாலைப் பார்க்கும்போது  உனக்கு  அதனுள் இருக்கும்  வெண்ணை தெரிகிறதா மகனே?''
''வெண்ணை அதனுள் இருக்கிறது  என்பது மட்டும் தான் தெரியும்.  வெண்ணை கண்ணுக்கு தெரியாதே சுவாமி''
''அதே போல் தான் அப்பா,  கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார், கண்ணுக்குத் தெரிவதில்லை''  புரிகிறதா?
''நன்றாக  விளங்குகிறது சுவாமி ''
''உனது அடுத்த கேள்விக்கு பதில் சொல்லட்டுமா?  கடவுள் எந்த பக்கம்  பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கேட்டாய் அல்லவா?  
''ஆமாம்  குரு நாதா''
''ஒரு விளக்கு கொண்டுவா''
''ராஜா, இந்த விளக்கை உன் பக்கம்  பார்த்து வைத்துக்கொள் ''
விளக்கை  ராஜா  அப்படியே வைத்துக் கொண்டான். 
"விளக்கை இப்போது ஏற்று '' 
 ராஜா  விளக்கை ஏற்றினான். தீபம்  சுடர்விட்டு எரிந்தது.
''ராஜா,  இப்போது நீ சரியாகப் பார்த்து சொல்  இந்த  தீபம்  தனது ஒளியை  எந்தப் பக்கம் பார்த்து வீசுகிறது?''ராஜா  உற்றுப் பார்த்தான்.
................................................'சொல்...தீப ஒளி  எந்தப் பக்கம்  அப்பா வீசுகிறது ?''
''சுவாமி  தனியாக  எந்த ஒரு பக்கமும்  இல்லை,  எல்லாப் பக்கமும்  தான்  ஒளி  வீசுகிறது''
''உன் கேள்விக்கும் அதே விடை. நீயே சொல்லிவிட்டாயே.  பகவானின் அருள் ஒளி எல்லாபக்கமும்  எல்லோருக்கும் சொந்தமானது அப்பனே. எங்கோ எவரோ ஒருத்தருக்கு மட்டும்  அல்ல. அவர் அருள் கடாக்ஷம்  எங்கும் எவருக்கும் உண்டு''
''இப்போது  நீயே  சொல்லு  உன்  மூன்றாவது கேள்விக்கு  விடை தெரிகிறதா?  கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று கேட்டாய் அல்லவா?
''ஆமாம் ''
''இப்போது  ஆன்மீகமாக  சில  கேள்விகளை சந்தேகங்களை  நீ கேட்டு நான் உனக்கு  உபதேசித்துக் கொண்டிருக்கிறேன்.  நான் குரு, நீ  சீடன்.  நாம்  இப்போது இடம் மாற்றிக்  கொள்வோமா?''
''சரி''ராஜா சிம்மாசனத்தை விட்டு இறங்கி  கீழே வந்து அமர்ந்தான்.  அரசனின் சிம்மாசனத்தில் முனிவர் அமர்ந்தார் ''
''ராஜா, இதோ பார் கடவுள் என்ன செய்கிறார் என்று. 
''பெரிய  ராஜாவையே  கீழே இறக்கி சாதாரனனாக்கி விட்டார்.  ஒரு சாதாரண பரதேசியை ராஜா சிம்மாசனத்தில் ஏற்றி விட்டார். 
ஏழை பணக்காரனாகிறான், பணக்காரன் ஏழையாகிறான். அவர்  எதை வேண்டுமானால் சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு அமைத்து  பரிபாலனம்  செய்கிறார். எங்கும் இதையே  சதா சர்வ காலமும் செய்து  சமநிலை அளித்து வருகிறார். 
 புரிந்து கொண்டாயா.  இன்னும்  ஏதாவது சந்தேகமா?
'சுவாமி என்னில் எழுந்த கேள்விகளை என்னில் மறைந்திருந்த பதில் மூலம் தெளிவித்தீர்கள்''
ராஜா மகிழ்ந்தான்.  நாமும்  கடவுளைப் பற்றி  அறிந்து கொள்வோம். முனிவர் மாதிரி நீங்களும்  உங்களுக்கு தெரிந்த  மற்ற ''ராஜா' க்களுக்கும் எடுத்துச்  சொல்லுங்கள். நல்ல விஷயம் நாலு பக்கமும் பரவ  நீங்களும் எனக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment