Thursday, April 25, 2024

Remembering 5 pativratas in the morning

ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களைப் பார்த்து,

"அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ"

என்ற சுலோகத்தைச் சொன்னார். 

பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும்  தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.

"சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை,  தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள். 

ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர்,  தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார். 

அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி  செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி.

 ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா  தேவியைக் கண்டெடுத்தார். 

பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள். 

பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா  என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!" என்று கூறினார்  வேத வியாசர்.

"இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?" என்று கேட்டார்கள் சீடர்கள்.

அதற்கு வேத வியாசர், "இந்த ஐவருமே தங்கள் வாழ்வில்  பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள். 

தன் கணவர் கௌதமர் தந்த  சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய  பெண்ணாய் ஆக்கினான். 

கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து,  பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.

 பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன்  வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.

 வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள். 

ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது  கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள் 

எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத்  தக்கவர்கள்!" என்று கூறினார்.

அப்போது சீடர்கள், "சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா? 

இந்திரனின்  ஆசைக்கு இணங்கினாள் அகல்யா. 
ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி. 
வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை. 
மண்டோதரி  நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள். 

இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக  முடியும்?" என்று வியாசரிடம் கேட்டார்கள்.

அதற்கு வியாசர், "அதற்குத் திருமாலின் திருவருளே காரணம். 

ராமனின் பாதுகையில் உள்ள மண்  அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள். 

திரௌபதி  எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள். 

ராம தரிசனத்தால் தாரையும்  மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள். 

இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும்  மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!" என்றார்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது  சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் 'சிஷ்டக்ருத்' (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார். 

உயர்ந்த  மனிதர்களை 'சிஷ்ட:' என்று சொல்வார்கள். 'க்ருத்' என்றால் உருவாக்குபவர் என்று பொருள். 

'சிஷ்டக்ருத்' என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது  திருநாமம்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது  சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் 'சுசி:' என்றழைக்கப்படுகிறார்.

 'சுசி:' என்றால் தூய்மை என்று பொருள். 

தானும்  தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் 'சுசி:' எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது  திருநாமம்

"சிஷ்டக்ருதே நம:" என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.
"சுசயே நமஹ:" என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.ஹேதவே நமஹ.....!!!

No comments:

Post a Comment