ஆத்திசூடி 32 : "இனியவை கூறல்"
ஒரு விஷயத்தை சொல்லும்போது இனிமையாக சொல்லவேண்டும் , அது கொடும் மனதாரையும் யோசிக்க வைக்கும், பெரும் கோபத்தையும் தணிக்க்கும் அதனால் சொல்லும் விஷயத்தை இனிமையாக கூற வேண்டும் என்பது இந்துக்கள் வகுத்த வாழ்க்கை நெறி
இதனாலே "நாரதர்" என்றொரு பாத்திரத்தையே இந்துமதம் சொன்னது, ஒரு விஷயத்தை எப்படி சொல்லவேண்டும் என்பதை அவரை கொண்டே சொன்னது இந்துமதம்
இன்சொல் கேட்போரை மகிழ்விக்கும், பகையினை தடுக்கும், நல்ல மதிப்பை தரும் இன்னும் பலவித சிறப்புக்களை கொடுக்கும்
அதனாலே வள்ளுவன் "இனியவை கூறல்" என்றொரு அதிகாரத்தையே கொடுத்தான்
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"
என முத்தாய்ப்பான குறளோடு சொல்லி போதித்தான்
பழமொழி நானூறு பாடல் இதன் சிறப்பை சொல்லும்
"புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
இன்சொல் இடர்ப்படுப்ப தில்"
புண்படுத்தும் சொல்லும், நல்லபடியாக சொல்லும் ஒரே பலனைத்தான் தரும் என்பவர்கள் வன்சொல்லால் வாழ்த்துவார்களா மாட்டார்கள், புண்படுத்தும் சொல்லாலே இடர்களும் சிக்கலும் வருமே அன்றி இனிமையான சொல்லால் ஏதும் இடர் வருமா? வராது என்பது பாடலின் பொருள்
இன்மொழி பற்றி இவ்வளவு சொன்ன இந்துமதம் அப்படியே வன்சொல் அதாவது கடும் சொல் எப்படி ஆபத்தானது என்பதை சொல்லிற்று
"நாவினால் சுட்ட வடு" என்றும், "யாகவராயினும் நா காக்க" என சொன்ன வரிகளும் அதுதான்
நல்ல சொல் பகையினையும் குளிர்விக்கும், வன்சொல்லோ உறவினையும் பகையாக்கும்
வன்சொல் தீரா பகைக்கும், பெரும் போருக்கும் வன்மத்துக்கும் பழிக்கும் காரணமாகும
இன்சொல் எப்படியானது என்பதை ராமாயணத்தில் அனுமனும், பாரதத்தில் கண்ணனும் இன்னும் பலரும் உதாரணம் அவர்களால் நன்மையே விளைந்தது
வன்சொல் எப்படியானது என்பதற்கு மகாபாரத சிசுபாலன் முதல் பலரை சொல்லமுடியும் அவர்களால் அழிவே நடந்தது
இதனாலே "கடிவது மற" என , யாரையும் திட்டாதே, வன்சொல் பேசாதே என சொல்கின்றார் ஒளவையார்
அதைத்தான் "ஒரு குழந்தையை வையாதே பாப்பா" என சொன்னான் பாரதி
No comments:
Post a Comment