Thursday, December 29, 2022

Mahabharata part 171 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-171
வனபர்வம்
..
கர்ணன் பிறந்த வரலாறு
..
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வெப்பக் கதிர்கள் கொண்ட தெய்வம் {சூரியன்} கர்ணனிடம் வெளிப்படுத்தாத ரகசியம் என்ன? அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை? அந்தக் கவசம் என்ன வகை? அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன்! ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும்" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு காலத்தில் தாடி, சடாமுடி ஆகியவற்றுடன் கையில் தண்டம் தரித்த, உயரமான தேகமும் கடும் சக்தியும் கொண்ட ஓர் அந்தணர் குந்திபோஜனின் முன்னிலையில் தோன்றினார். கண்களுக்கு ஏற்புடையவராகவும், குறைகளற்ற அங்கங்கள் கொண்டவராகவும், பிரகாசத்தில் சுடர்விட்டு எரிபவராகவும் அவர் தெரிந்தார். மஞ்சளும் நீலமும் கலந்த தேனின் நிறத்தை {பிங்கவர்ணம்} அவர் கொண்டிருந்தார். அவரது பேச்சுத் தேனொழுகுவதாக இருந்தது. துறவுத்தகுதி மற்றும் வேதங்களில் அறிவு ஆகியவற்றால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

 
பெரும் துறவுத்தகுதி கொண்ட அந்த மனிதர் மன்னன் குந்திபோஜனிடம், "ஓ கர்வமற்றவனே {குந்திபோஜா}, உணவை உன்னிடம் பிச்சையாகப் பெற்று, உனது இல்லத்தில் விருந்தினனாக வாழ விரும்புகிறேன்! உனது தொண்டர்களோ, நீயோ எப்போதும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்! ஓ! பாவமற்றவனே {குந்திபோஜா}, இதில் உனக்கு விருப்பமென்றால், நான் உனது இல்லத்தில் வாழ்வேன்! நான் விரும்பும் போது உனது இருப்பிடத்தில் இருந்து செல்வேன்; விரும்பும்போது திரும்பவும் வருவேன். ஓ! மன்னா {குந்திபோஜா}, எனது உணவிலோ, படுக்கையிலோ யாரும் எனக்குக் குற்றமிழைக்கக்கூடாது" என்றார்.
 

பிறகு குந்திபோஜன் அவரிடம் உற்சாகமான வார்த்தைகளால், "அப்படியே ஆகட்டும். இன்னும் சிறப்பாக ஆகட்டும்" என்றான். பிறகு அவன் அவரிடம் மீண்டும், "ஓ பெரும் ஞானியே, எனக்குப் பிருதை {குந்தி} என்ற பெயரில் சிறப்புவாய்ந்த மகளொருத்தி இருக்கிறாள். அவள், நோன்பு நோற்று, கற்பு, கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள், அற்புத குணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறாள். அவள் உம்மைக் கவனித்துக் கொண்டு, உமக்குத் தேவையானதை மரியாதையுடன் செய்வாள். அவளது மனநிலையைக் கண்டு நீர் மகிழ்ச்சியடைவீர்!" என்றான். அந்த அந்தணரிடம் இப்படிச் சொல்லி, அவரை முறையாக விருந்தோம்பிய மன்னன் {குந்திபோஜன்}, அகன்ற கண்களுடைய தனது மகள் பிருதையிடம் சென்று, "ஓ குழந்தாய், பெரிய பக்திமானான இந்த அந்தணர் எனது இல்லத்தில் வசிக்க விரும்புகிறார். ஓ குழந்தாய், உனது தகுதி மற்றும் பணிவிடை செய்யும் திறன் ஆகியவற்றை நம்பி, அவரது கோரிக்கையை "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி நான் ஏற்றுக் கொண்டேன். எனவே எனது வார்த்தைகள் பொய்க்காதபடி நடந்து கொள்வதே உனக்குத் தகும். வேத கல்வியில் ஈடுபட்டு தவத்தகுதியைக் கொண்டிருக்கும் இந்த மரியாதைக்குரிய அந்தணர் என்ன கேட்டாலும் அதைச் சுறுசுறுப்பாகச் செய். இந்த அந்தணர் கேட்கும் எதுவும் உற்சாகத்துடன் கொடுக்கப்படட்டும். ஓர் அந்தணன் என்பவர் தலைமையான ஆற்றலுக்கு உருவகமாக உள்ளார். உயர்ந்த தவத்தகுதியின் உருவகமாகவும் அவர் உள்ளார். அந்தணர்களின் அறப்பயிற்சிகளின் தொடர்ச்சியாகவே வானத்தில் சூரியன் ஒளிர்கிறது. மரியாதைக்குத் தகுதியுடைய அந்தணர்கள் அவமதிக்கப்பட்டதாலேயே, பலமிக்க அசுரன் வாதாபியும், தாலஜங்கனும் அந்தண சாபத்தால் அழிக்கப்பட்டனர். ஓ குழந்தாய், தற்போது அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த அறம்சார்ந்தவரே உனது பராமரிப்பில் விடப்பட்டுள்ளார்.
 

நீ எப்போதும் இந்த அந்தணரைக் குவிந்த மனதுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓ மகளே {குந்தி}, அந்தணர்களையும், பெரியோர்களையும், உறவினர்களையும், பணியாட்களையும், நண்பர்களையும் உனது குழந்தைப்பருவத்தில் இருந்து நீ எப்படி உனது தாய்மாரைப் போலவும், என்னைப் போலவும் நினைத்துக் கவனித்து வருகிறாய் என்பதை நான் அறிவேன். உன்னை நீயே நன்று தாங்கிக் கொள்வாய் என்றும், அனைவருக்கும் சரியானதை அளிப்பாய் என்றும் நான் அறிவேன். ஓ குற்றமில்லா அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, எனது நகரத்திலும் அந்தப்புரத்திலும் உனது நடத்தையில் அதிருப்தி கொண்டோர் பணியாட்களுக்கு மத்தியில் கூட இருக்கமாட்டார்கள். எனவே, கோபக்கார அந்தணர்களுக்காகக் காத்திருப்பதற்கு நீயே தகுதியானவள் என்று நினைத்தேன்.

ஓ பிருதை, நீ ஒரு பெண். என்னால் மகளாக எடுத்து வளர்க்கப்பட்டு வருபவள். நீ விருஷ்ணி குலத்தில் பிறந்தவள். நீ சூரனுக்குப் பிடித்தமான மகள். ஓ பெண்ணே {குந்தி}, உன்னை உனது தந்தை எனக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தார். பிறப்பால் வசுதேவனுக்குத் தங்கையான நீ எனது குழந்தைகளில் முதன்மையானவள் ஆவாய். "எனக்கு முதலில் பிறக்கும் குழந்தையைக் கொடுப்பேன்" என்று உறுதி கூறிய உனது தந்தை, நீ குழந்தையாக இருக்கும்போதே உன்னை என்னிடம் கொடுத்தார். அதன்காரணமாகவே நீ எனது மகளாக இருக்கிறாய். அத்தகு குலத்தில் பிறந்து, இத்தகு குலத்தில் வளர்க்கப்பட்ட நீ ஒரு மகிழ்ச்சியான நிலையில் இருந்து மறு மகிழ்ச்சியான நிலைக்கு வந்து ஒரு தாமரையில் இருந்து மறுதாமரைக்கு மாற்றப்பட்டவள் போல இருக்கிறாய்.
 

ஓ மங்களகரமான பெண்ணே, குறிப்பாக இழிந்த வகையில் பிறந்த பெண்களைச் சிரமத்துடன் பாதுகாத்தாலும், அவர்களது முதிராத வயதின் தொடர்ச்சியாக நடத்தை கெடுகிறார்கள். ஆனால், ஓ பிருதை, நீ அரச குலத்தில் பிறந்து, அழகால் இயல்புக்குமிக்க நிலையில் இருக்கிறாய். ஓ பெண்ணெ, மேலும் நீ அனைத்தையும் கொண்டிருக்கிறாய். எனவே, ஓ மங்கையே, பெருமை, கர்வம், சுயமுக்கியத்துவம்ஆகிய உணர்வுகளைக் கைவிட்டு, வரமளிக்கும் அந்தணரை வழிபட்டு அவருக்காகக் காத்திருந்து, அதனால், ஓ பிருதை மங்களகரமான நிலையை அடைவாயாக! ஓ மங்களகரமான பாவமற்ற பெண்ணே, அப்படி நடந்து கொண்டால், நீ நிச்சயம் மங்களகரமான நிலையை அடைவாய்! ஆனால் மாறாக, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் கோபத்தைத் தூண்டினாலோ, எனது மொத்த குலமும் அவரால் எரிக்கப்படும்!" என்றான் குந்திபோஜன்.

குந்தி {வளர்ப்புத் தந்தையான குந்திபோஜனிடம்}, "ஓ! மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது! ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குச்} சேவை செய்யும் நன்மையைச் செய்வதும், உமது கட்டளைகளை நிறைவேற்றுவதுமே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, என்னை நீர் நம்பலாம்!

அந்த அந்தணர்களில் சிறந்தவர் {துர்வாசர்} உமது இல்லத்தில் வசிக்கும்போது, அதிருப்திக்கான எந்த நிலையையும் அடைய மாட்டார். நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் மிகுந்த கவனத்தோடு, அந்த அந்தணருக்கு ஏற்புடையதையும், உமக்கு நன்மை நிறைந்ததையுமே செய்வேன். ஓ! பாவமற்றவரே, பேரறம்சார்ந்த அந்தணர்கள் மனநிறைவடைந்தால் முக்தியையும், வருந்தினால் அக்குற்றவாளிக்கு அழிவையும் தரவல்லவர்கள் என்பதை நான் முழுமையாக அறிவேன். எனவே, நான் அந்த அந்தணர்களில் முதன்மையானவரை மனம் நிறையச் {திருப்தி கொள்ளச்} செய்வேன். ஓ! ஏகாதிபதி {குந்திபோஜரே}, அந்த மறுபிறப்பாள மனிதர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரை {துர்வாசரைக்} குறித்து நீர் கவலைக் கொள்ளத்தேவையில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, முற்காலத்தில் சுகன்யாவின் செயல் காரணமாகச் சியவனர் தீங்கிழைத்தது போல, ஏகாதிபதிகளின் வரம்புமீறல்களின் விளைவாக அந்தணர்கள் அவர்களுக்குத் தீமையை விளைவிக்கின்றனர். எனவே, ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் பெரும் ஒழுங்குமுறையுடன் {சரியான இடைவெளிகளில்}, அந்த அந்தணர்களில் சிறந்தவருக்காக {துர்வாசருக்காகக்} காத்திருந்து, உமது கட்டளைகளின் படி நடந்து கொள்வேன்!" என்றாள் {குந்தி}.

 
அவள் {குந்தி} இப்படி நீளமாகப் பேசியதும், அவளை அணைத்துக் கொண்ட மன்னன் {குந்திபோஜன்}, அவளுக்கு உற்சாகமூட்டி, அவளால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அவளுக்கு விளக்கமாகத் தெரிவித்தான். பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன் குந்தியிடம்}, "ஓ மென்மையான பெண்ணே {குந்தியே}, உனது நன்மைக்காகவும், எனது நன்மைக்காகவும், உனது குலத்தின் நன்மைக்காகவும், ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அச்சமில்லாமல் செயல்படு!" என்றான். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சிறப்புமிக்கக் குந்திபோஜன், பிறகு, பிருதையை {குந்தியை} அந்த அந்தணரிடம் {துர்வாசரிடம்} அழைத்துச் சென்று, "ஓ! அந்தணரே {துர்வாச முனிவரே}, இது எனது மகள். இளவயது கொண்ட இவள், ஆடம்பரமாக {சுகபோகமாக} வளர்க்கப்பட்டவளாவாள். எனவே, இவள் எப்போதாவது வரம்புமீறி நடந்து கொண்டால், அதை உமது இதயத்தில் கொள்ளாதீர்! முதிர்ந்த மனிதர்கள், சிறுவர்கள், துறவிகள் ஆகியோர் அடிக்கடி வரம்பு மீறினாலும் சிறப்புமிக்க அந்தணர்கள் கோபம் கொள்வதில்லை. அவர்கள் பெரும் குற்றம் இழைத்தாலும் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} பொறுமைகாப்பார்கள். எனவே, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, தனது சக்திக்கும் முயற்சிக்கும் இயன்ற அளவு ஒருவனால் செய்யப்படும் வழிபாடு ஏற்கப்பட வேண்டும்!" என்றான் {குந்திபோஜன்}.

 
ஏகாதிபதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {துர்வாசர்}, "அப்படியே ஆகட்டும்!" என்றார். அதன்பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன்} மிகுந்த மன நிறைவு கொண்டு அன்னங்களைப் போலவும், சந்திரனின் கதிர்களைப் போலவும் வெண்மையாக இருக்கும் ஒரு மாளிகையை அவருக்குக் கொடுத்தான். வேள்வி நெருப்புக்கான அறையில், குறிப்பாக அவருக்கெனவே ஓர் இருக்கையை மன்னன் {குந்திபோஜன்} வைத்தான். அந்த அந்தணருக்கு அளிக்கப்பட்ட உணவு மற்றும் பிற பொருட்கள் சிறந்த வகையில் இருந்தன. சோம்பலையும், சுயமுக்கியத்துவ உணர்வுகளையும் தள்ளி வைத்த அந்த இளவரசி {பிருதை}, நல்ல உள்ளத்துடன் அந்த அந்தணரை {துர்வாச முனிவரை} தனக்குள் ஆராதித்து, அவருக்காகக் காத்திருக்கத் தீர்மானித்தாள். சுத்தமான நடத்தை கொண்ட கற்புடைய குந்தி, அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குச்} சேவை செய்வதற்காக அங்கே சென்றாள். தெய்வத்துக்காகக் காத்திருப்பது போலவே, அந்த அந்தணருக்காகக் காத்திருந்து, அவரைப் பெரிதும் மனம் நிறையச் செய்தாள் {குந்தி}."

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, "நான் காலையில் திரும்பி வருவேன்" என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.


ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளது {குந்தியின்} ஏற்பாடுகளில் ஏதாவது குறை கண்டு அந்த அந்தணர் {துர்வாசர்} அவளைக் கடிந்து கொண்டாலோ, கடும்வார்த்தைகள் பேசினாலோ கூட, பிருதை {குந்தி}, அவருக்கு ஏற்பில்லாத எதையும் செய்தாளில்லை. பல சந்தர்ப்பங்களில் அந்த அந்தணர் குறித்த நேரத்திற்கு நெடுநேரத்திற்குப் பின்னரே வந்தார். பல சந்தர்ப்பங்களின் உணவைக் கொடுக்கக் கடினமான நேரங்களில் (நள்ளிரவு நேரம் போன்ற நேரங்களில்) அவர் {துர்வாசர்}, "எனக்கு உணவு கொடு!" என்று கேட்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம், "அனைத்தும் தயாராக இருக்கின்றன" என்று சொல்லும் பிருதை {குந்தி} அவர் கேட்டதை அவருக்கு முன் ஏந்துவாள். ஒரு சீடரையோ {சிஷ்யை}, மகளையோ, தங்கையையோ போலப் பெண்களில் ரத்தினமான அந்தப் பழியற்ற பெண் அர்ப்பணிப்பான இதயத்துடன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர்களின் முதன்மையானவரை {துர்வாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்.

 
அந்தணர்களில் சிறந்த அவர் {துர்வாசர்}, அவளின் {குந்தியின்} நடத்தையில் கவனிப்பிலும் மனம் மகிழ்ந்தார். சரியான மதிப்புடன் கூடிய அவளது கவனிப்புகளை அவர் {துர்வாசர்} பெற்றார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அவளின் {குந்தியின்} தந்தை {குந்திபோஜன்} அவளிடம், "ஓ! மகளே {குந்தி}, உனது கவனிப்பால் அந்தணர் {துர்வாசர்} மனநிறைவு அடைகிறாரா?" என்று கேட்பான். அதற்கு அந்தச் சிறப்புமிக்கக் கன்னிகை {குந்தி}, "மிக நன்றாக!" என்று மறுமொழி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதன்பேரில், உயர் ஆன்ம குந்திபோஜன் உயர்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். ஒரு முழு வருடம் கடந்ததும், அந்தத் துறவிகளில் சிறந்தவரால் {துர்வாசரால்}, தன்னைக் கவனித்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்த பிருதையிடம்  {குந்தியிடம்} எந்தத் குற்றத்தையும் காண முடியாமல் அவளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு, "ஓ! மென்மையான கன்னிகையே {குந்தியே}, உனது கவனிப்புகளால், ஓ! அழகான பெண்ணே {குந்தியே}, நான் மிகவும் மகிழ்ந்தேன். ஓ! அருளப்பட்ட பெண்ணே {குந்தி}, இவ்வுலகத்தில் மனிதர்களால் அடைய முடியாத அரிதான வரங்களைக் கேள். அதை அடைவதால், நீ இவ்வுலகில் உள்ள பெண்கள் அனைவரின் புகழையும் விஞ்சி நிற்பாய்!" என்றார் {துர்வாசர்}.

 
இந்த வார்த்தைகளுக்குக் குந்தி {துர்வாசரிடம்}, "வேதங்களை அறிந்தவர்களின் தலைவரான நீரும், எனது தந்தையும், என்னிடம் மனநிறைவுடன் இருப்பதால், என் சார்பாக அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. வரங்களைப் பொறுத்தமட்டில், ஓ! அந்தணரே, அவை அனைத்தும் என்னால் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டன!" என்றாள். அதற்கு அந்த அந்தணர் {துர்வாசர் குந்தியிடம்}, "ஓ! மென்மையான கன்னிகையே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, நீ என்னிடம் இருந்து வரங்களை அடைய விரும்பவில்லையென்றால், தேவர்களை அழைக்கும் மந்திரத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக! தேவர்களுக்கு மத்தியில் உள்ள எவரை நீ இந்த மந்திரத்தை உச்சரித்து அழைத்தாலும், அவன் உன் முன் வந்து, ஆளுகைக்குள் இருப்பான். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த மந்திரத்தின் தகுதியினால் மென்மையான வடிவத்தில் வரும் அத்தேவன் அடிமையின் பணிவான அணுகுமுறை அனுமானித்து, உனது அதிகாரத்துக்கு உட்பட்டு இருப்பான்!" என்றார்.

 
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் {அந்த அந்தணரின்} சாபத்திற்கஞ்சி, அவரது விருப்பங்களை இரண்டாவது முறையாக மறுக்க முடியவில்லை. பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர் குற்றமற்ற அங்கங்கள் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {குந்திக்கு} அதர்வண வேதத்தின் தொடக்கத்தில் உள்ள அந்த மந்திரங்களை உரைத்தார். அந்த மந்திரங்களை அவளுக்குச் சொன்ன பிறகு, அவர் {துர்வாசர்} குந்திபோஜனிடம், "ஓ! ஏகாதிபதி {குந்திபோஜா}, எப்போதும் உரிய முறையில் வழிபடப்பட்டு, உனது மகளிடம் {குந்தியிடம்} மனநிறைவு கொண்டு உனது இல்லத்தில் இருந்த நான், இப்போது செல்கிறேன்" இதைச் சொன்ன அவர் அங்கேயே மறைந்து போனார். அந்த அந்தணர் {துர்வாசர்} அங்கே மறைந்து போனதைக் கண்ட மன்னன் {குந்திபோஜன்} ஆச்சரியத்தால் தாக்கப்பட்டான். மேலும், பிறகு, அந்த ஏகாதிபதி {குந்திபோஜன்}, தனது மகளை {குந்தியை} சரியான மதிப்புடன் நடத்தினான்" .

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {துர்வாசர்}, வேறு வேலையாகச் சென்றுவிட்ட பிறகு, அந்தக் கன்னிகை {குந்தி}, அந்த மந்திரங்களின் திறனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள்  தனக்குள்ளேயே, "அந்த உயர் ஆன்மா கொண்டவரால் {மகாத்மாவால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்த மந்திரங்களின் இயல்பு எப்படிப்பட்டது? தாமதிக்காமல் நான் அதன் சக்தியைச் சோதிப்பேன்" என்று நினைத்தாள். அப்படி அவள் {குந்தி} சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, திடீரெனப் பருவகாலத்தின் {ருது} அறிகுறிகள் தனக்குத் தென்படுவதை உணர்ந்தாள். திருமணமாகாத போதே, தனக்குப் பருவகாலம் வந்ததால், அவள் {குந்தி} வெட்கமும் நாணமுமடைந்தாள். தனது அறையில் ஓர் ஆடம்பரப் படுக்கையில் அமர்ந்திருந்த அவள் {குந்தி}, கிழக்கில் சூரியக் கோளம் உதிப்பதைக் காண நேர்ந்தது. சிறந்த இடை கொண்ட அந்தக் கன்னிகையின் {குந்தியின்} கண்கள் மற்றும் மனம் ஆகிய இரண்டும் அந்தச் சூரிய கோளத்தின் மேல் நிலைத்து நின்றது. காலைச் சூரியனின் அழகைக் கண்டு, தெவிட்டாமல் மீண்டும் மீண்டும் அந்தக் கோளத்தை அவள் கூர்ந்து நோக்கியபடியே இருந்தாள். திடீரென அவளுக்கு {குந்திக்கு} தெய்வீகப் பார்வை கொடையாகக் கிடைத்தது.

பிறகு அவள் {குந்தி}, கவசத்துடனும், காது குண்டலங்களுடனும் இருந்த அந்தத் தெய்வீகமான தேவனைக் {சூரியனைக்} கண்டாள். ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அந்தத் தேவனைக் {சூரியனைக்} கண்ட அவள் மந்திரங்களைக் {மந்திரங்களின் திறனைக்} குறித்து ஆவல் கொள்ளத் தொடங்கினாள். அதன்பிறகு அந்தக் கன்னிகை {குந்தி}, அவனை {சூரியனை} அழைக்கத் {மந்திரங்களால் அழைக்கத்} தீர்மானித்தாள். மேலும், பிராணாயாமத்தின் உதவியைக் கொண்டு, அவள் {குந்தி} நாள்-படைப்போனை {சூரியனை} {மந்திரங்களால்} அழைத்தாள் {invoked}. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி அவளால் அழைக்கப்பட்ட நாள்படைப்போன் {சூரியன்}, விரைவில் {அவளுக்குத்} தன்னை வெளிப்படுத்தினான். தேன் போன்ற மஞ்சள் நிறமும், வலிய கரங்களும், சங்கின் கோடுகளைப் போன்று கழுத்தில் கோடுகளும் அவனுக்கு {சூரியனுக்கு} இருந்தன. மேலும் தோள்வளைகளும், கிரீடமும் அணிந்திருந்த அவன், சிரித்தபடியே அனைத்து திசைகளையும் ஒளியூட்டிக் கொண்டு வந்தான். யோக சக்தியின் மூலமாகத் தன்னை இருகூறாகப் பிரித்து, அதில் ஒன்றைக் கொண்டு தொடர்ந்து வெப்பத்தை அளித்தான். மற்றொன்றைக் கொண்டு குந்தியின் முன்பு தோன்றினான்.
 

அவன் {சூரியன்} குந்தியிடம் மிகுந்த இனிமையான வார்த்தைகளில், "ஓ! மென்மையான கன்னிகையே {குந்தி}, மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட நான், உனக்குக் கீழ்ப்படிந்து வந்திருக்கிறேன். ஓ! ராணி {குந்தி}, உனது ஆளுகைக்கு ஆட்பட்டிருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? நீ என்ன கட்டளையிட்டாலும் நான் அதைச் செய்வேன். எனக்குச் சொல்?" என்று கேட்டான். அந்தத் தெய்வத்தின் {சூரியனின்} வார்த்தைகளைக் கேட்ட குந்தி {சூரியனிடம்}, "ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கேயே செல்லும்! ஆவலின் காரணமாக மட்டுமே நான் உம்மை {மந்திரங்களால்} அழைத்தேன். ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, என்னை மன்னியும்" என்றாள். பிறகு சூரியன், "மெலிந்த இடைகொண்ட காரிகையே {குந்தி}, நீ சொன்னது போலவே நான் வந்த இடத்திற்கே திரும்பி செல்வேன்! எனினும், ஒரு தேவனை அழைத்து, அவனை வீணாக அனுப்புவது சரியாகாது! ஓ! அருளப்பட்டவளே {குந்தி}, காதுகுண்டலங்களும், கவசமும் தரித்து, உலகத்தில் ஒப்பிலாத பராக்கிரமம் கொண்ட ஒரு மகனைச் சூரியனிடம் இருந்து பெறுவதே உனது எண்ணம். எனவே, ஓ! யானை நடை கொண்ட காரிகையே {குந்தி}, உன்னை என்னிடம் ஒப்படைப்பாயாக! ஓ! மங்கையே, பிறகு நீ உனது விருப்பப்படி ஒரு மகனை அடைவாய்! ஓ மென்மையான பெண்ணே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உன்னை அறிந்த பிறகு நான் திரும்பிச் செல்வேன்!

 
நீ இன்று எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, எனக்கு மனநிறைவளிக்கவில்லை என்றால், கோபத்தில் உன்னையும், உனது தந்தையையும் {குந்திபோஜனையும்}, அந்த அந்தணரையும் {துர்வாசரையும்} நான் சபிப்பேன். உனது குற்றத்தால், நான் அவர்கள் அனைவரையும் எரிப்பேன். உனது வரம்புமீறலை அறியாத உனது முட்டாள் தகப்பனுக்கும், உனது மனநிலையையும், நடத்தையையும் அறியாது, உனக்கு மந்திரங்களை அளித்த அந்த அந்தணருக்கும் உகந்த தண்டனையை அளித்து அல்லற்படுத்துவேன். ஓ! பெண்ணே, புரந்தரனைத் தலைமையாகக் கொண்ட சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் உன்னால் ஏமாற்றப்படும் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புடன் அதோ அங்கு நின்று பார்க்கின்றனர். நீ இப்போது தெய்வீகப் பார்வை கொண்டிருக்கிறாய், எனவே, அந்தத் தேவர்களைப் பார்! நீ என்னைப் பார்ப்பதற்காகவே, தெய்வீகப் பார்வையை நான்  உனக்கு ஏற்கனவே அளித்திருக்கிறேன்" என்றான் சூரியன்.

 
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு அந்த இளவரசி {குந்தி}, ஆகாயத்தில் தத்தமது துறையில் [1] சரியாக நிற்கும் தேவர்களையும்,  ஏற்கனவே தன் முன் கண்டது போலவே கதிர்களுடனும், பெரும் பிரகாசத்துடனும் இருக்கும் சூரியனையும் கண்டாள். அவர்கள் அனைவரையும் கண்ட அந்தப் பெண் மிகவும் பயந்தாள். பிறகு அவளின் {குந்தியின்} முகம் வெட்கத்தாலும் நாணத்தாலும் நிறைந்தது. பிறகு அவள் {குந்தி} சூரியனிடம், "ஓ! கதிர்களின் தலைவரே {சூரியனே}, உமது துறைக்கே [1] திரும்பிப் போம். எனது கன்னித்தன்மையைக் கருத்தில் கொண்டு, உமது இந்தச் சீற்றம், எனக்குக் கடும் துயர் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு தந்தையோ, தாயோ, பிற மேன்மையானவர்களோ தான் தங்கள் மகளின் உடலைக் கொடுக்க முடியும். தூய்மை குன்றாமல் இருப்பதே பெண்களின் உயர்ந்த கடமை என்று இவ்வுலகம் கருதுவதை உயர்வாக எண்ணும் நான் அறத்தை தியாகம் செய்ய மாட்டேன். ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவரே {சூரியனே}, எனது மந்திரங்களின் சக்தியைச் சோதித்துப் பார்க்க மட்டுமே, சிறுபிள்ளைத்தனமாக நான் உம்மை அழைத்துவிட்டேன். இளம் வயது கொண்ட ஒரு பெண் செய்த காரியம் இஃதென்றெண்ணி, ஓ! தலைவா {சூரியனே}, அவளை மன்னிப்பதே உமக்குத் தகும்!" என்றாள் {குந்தி}.

பிறகு சூரியன் {குந்தியிடம்}, "உன்னை நான் அப்படிப்பட்ட பெண் என்று {சிறுமியாகக்} கருதுவதாலேயே, ஓ! குந்தி, நான் உன்னிடம் இவ்வளவு மிதமாகப் பேசுகிறேன். வேறு ஒருத்தியிடமும் {சிறுமியல்லாதவளிடம்} நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதனால் நீ நிச்சயம் மகிழ்ச்சியை அடைவாய். ஓ! அச்சம் கொண்ட கன்னிகையே {குந்தி}, நீ மந்திரங்களைக் கொண்டு என்னை அழைத்ததால், எந்தக் காரியமும் நடைபெறாமல் நான் செல்வது தகாது. ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அப்படி நான் செய்தால், இவ்வுலகத்தில் கேலிக்குரியவனாவேன். ஓ அழகிய காரிகையே {குந்தி}, அனைத்துத் தேவர்களில் இருந்து நான் விடுபடுவேன் எனவே, உன்னை எனக்குத் தா! அதனால் நீ என்னைப் போன்றே ஒரு மகனை அடைந்து, இவ்வுலகால் புகழப்படுவாய்" என்றான் {சூரியன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த உன்னதமான பெண் {குந்தி} அவனிடம் {சூரியனிடம்} இனிய வார்த்தைகளில் பேசினாலும், அவளால் ஆயிரங்கதிர் கொண்ட தெய்வத்தின் {சூரியனின்} கருத்தை மாற்ற முடியவில்லை. இருளை அகற்றுபவனின் கருத்தை மாற்றுவதில் தோல்வியுற்ற அவள் {குந்தி}, கடைசியாகச் சாபத்துக்கஞ்சி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, "என் காரியமாக எனது அப்பாவி தந்தையும் {குந்திபோஜனும்}, அந்தப் அந்தணரும் {துர்வாசரும்}, கோபக்கார சூரியனின் சாபத்தில் இருந்து எப்படித் தப்புவார்கள்? சக்தியும், தவமும் பாவங்களை அழிக்கவல்லதாயினும், முதிராத வயது கொண்ட நேர்மையானவர்கள், முட்டாள்தனமாக அவற்றை அணுக முடியாது. அது போன்ற வழியில் முட்டாள் தனமாக நடந்ததால்தான் நான் இன்று இந்த அஞ்சத்தக்க நிலையில் நிறுத்தப்பட்டுள்ளேன். உண்மையில் நான் இந்தத் தெய்வத்தின் {சூரியனின்} பிடியிலேயே நிறுத்தப்பட்டுள்ளேன். இருப்பினும், நானாகவே என் உடலை இவருக்கு {சூரியனுக்கு} கொடுத்து, பெரும் பாவத்தை எப்படிச் செய்ய முடியும்?" என்று நீண்ட நேரம் சிந்தித்தாள்."


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சாபம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்டு, அவளுக்குள்ளாகவே நிறையச் சிந்தித்ததால் புலன்களின் முழு உணர்வு மழுக்கம் {உணர்வு தெரியாத நிலை} அவளுக்கு ஏற்பட்டது. எதைத் தீர்மானிப்பது என்று அவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள். அந்தத் தெய்வத்திற்கு {சூரியனுக்குக்} கீழ்ப்படிந்தால் ஏற்படும் நண்பர்களின் நிந்தனை குறித்து ஒரு புறம் அஞ்சிய அவள் {குந்தி}, ஓ மன்னா {ஜனமேஜயா}, மறுபுறம் மறுத்தால் ஏற்படும் சாபத்தைக் குறித்தும் சிந்தித்த அந்தக் கன்னிகை கடைசியாக, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவனிடன் {சூரியனிடம்}, நடுங்கும் வார்த்தைகளின் நாணத்துடன், "ஓ! தேவரே {சூரியா}, என் தந்தை, தாய், நண்பர்கள் ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, நான் கடமையை மீறுதல் என்பது நடக்கக்கூடாது. ஓ! தேவரே {சூரியனே}, உம்முடன் சேர்ந்து சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்தேனானால், என் நிமித்தமாக எனது குலத்தின் மதிப்பு இவ்வுலகத்தில் தியாகம் செய்யப்பட வேண்டும். எனினும், ஓ! வெப்பமளிப்பவர்களில் முதன்மையானவரே {சூரியனே}, நீர் இதைத் தகுதியுடைய செயல் என்று கருதினால், எனது உறவினர்கள் என்னை உமக்கு அளிக்கவில்லையெனினும் நான் உமது விருப்பத்தை நிறைவேற்றுவேன்! நான் உமக்கு என்னை அளித்த பிறகும் நான் கற்புடன் நீடிக்க வேண்டும்! அறம், மதிப்பு, புகழ், ஒவ்வொரு உயிரினத்தின் உயிர் ஆகியன உம்மில் நிறுவப்பட்டுள்ளன என்பது நிச்சயம்!" என்றாள் {குந்தி}.

 அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன் {குந்தியிடம்}, "ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உனது தந்தையோ, தாயோ அல்லது மற்ற பிற பெரியோரோ உன்னை எனக்குக் கொடுக்கத் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை. ஓ! அழகான காரிகையே, உனக்கு நன்மையே விளையட்டும்! எனது வார்த்தைகளைக் கேள்! ஒரு கன்னிப் பெண் அனைவரின் துணையையும் விரும்புவதாலேயே, ஆசை என்ற பொருள் கொண்ட காமம் என்ற வேரில் இருந்து {வேர்ச்சொல்லில் இருந்து} அவளுக்குக் கன்னிகை {kanya} என்ற பெயர் உண்டானது. எனவே, ஓ! சிறந்த இடைகளும், அழகிய நிறமும் கொண்டவளே, ஒரு கன்னிகை, இவ்வுலகில் இயற்கையாகவே சுதந்திரமானவளாக இருக்கிறாள். ஓ! பெண்ணே, எனது கோரிக்கைக்கு உடன்படுவதால் நீ எந்தப் பாவத்திற்கான குற்ற உணர்வையும், எந்த வகையிலும் அடைய மாட்டாய். அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விரும்பும் நான் எவ்வாறு ஒரு அநீதியான செயலைச் செய்வேன்? ஆண்கள் பெண்கள் அனைவரும் எந்தத் தடைகளாலும் கட்டுப்படக்கூடாது என்பதே இயற்கையின் நியதி. இயற்கைக்கு மாறானதே {தவறானதே} எதிர் நிலை ஆகும். எனக்கு மனநிறைவளித்த பின்னரும் நீ கன்னியாகவே நீடிப்பாய். உனது மகனும் வலிய கரங்கள் கொண்டவனாகவும் சிறப்புமிக்கவனாகவும் இருப்பான்" என்றான் {சூரியன்}.
 

அதற்குப் பின்னர் குந்தி {சூரியனிடம்}, "ஓ! இருளை அகற்றுபவரே {சூரியனே}, நான் உம்மிடம் இருந்து மகனை அடைந்தால், அவன் கவசத்துடனும், காது குண்டலங்களுடனும், வலிய கரங்கள் கொண்டவனாகவும், பெரும் சக்தி நிறைந்தவனாகவும் இருக்கட்டும்!" என்றாள். அவளது {குந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன், "ஓ மேன்மையான கன்னிகையே {குந்தி}, எனது மகன் வலிய கரங்கள் கொண்டவனாகவும், காதுகுண்டலங்கள் மற்றும் கவசம் அணிந்தவனாகவும் இருப்பான். அவனது காது குண்டலங்கள் மற்றும் கவசம் ஆகிய இரண்டும் அமிர்தத்தால் ஆனவையாக இருக்கும். அவனது கவசம் துளைக்க முடியாததாக இருக்கும்" என்றான் {சூரியன்}.

 
பிறகு குந்தி {சூரியனிடம்}, "நீர் என்னிடம் பெறும் மகனுடைய அந்தச் சிறந்த கவசமும், காதுகுண்டலங்களும் அமிர்தத்தாலானவை என்றால், ஓ! தேவரே, ஓ! வழிபடத்தகுந்த தெய்வமே {சூரியனே}, உமது நோக்கம் நிறைவடையட்டும்! அவன் {அந்த மகன்}, உம்மைப் போலவே சக்தியுள்ளவனாகவும், வலுவானவனாகவும், ஆற்றலுடையவனாகவும், அழகானவனாகவும் இருக்கட்டும்! அவன் அறம் நிறைந்தவனாக இருக்கட்டும்!" என்றாள். பிறகு சூரியன் {குந்தியிடம்}, "ஓ! இளவரசி, ஓ! சிறந்த காரிகையே {குந்தி}, இந்தக் காது குண்டலங்களை அதிதி எனக்குக் கொடுத்தாள். ஓ! அச்சமுள்ள பெண்ணே {குந்தி}, நான் இவற்றையும், சிறப்பான கவசத்தையும் உனது மகனுக்கு அளிப்பேன்!" என்றான். பிறகு குந்தி, "ஓ! வழிபடத்தகுந்தவரே, ஓ! ஒளியின் தலைவரே {சூரியனே}, எனது மகன் நீர் சொல்வது போல இருப்பானாகில், நான் உம்மை மனம் நிறையச் செய்வேன்!" என்றாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளது வார்த்தைகளைக் கேட்ட சூரியன், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னான். சுவர்ணபானுவின் {ராகுவின்} எதிரியான அந்த விண்ணதிகாரி {சூரியன்}, தனது ஆன்மாவை யோகத்தில் நிலைக்க வைத்து, குந்திக்குள் நுழைந்து அவளது தொப்புளைத் தொட்டான். இதனால், சூரியனின் சக்தியின் நிமித்தமாக அந்தக் காரிகை {குந்தி}, மயங்கி விழுந்தாள். அந்த மதிப்பிற்குரிய பெண் பிறகு தனது கட்டிலில் விழுந்து, உணர்வுகளையும் இழந்தாள். பிறகு சூரியன் அவளிடம் {குந்தியிடம்}, "ஓ! அருள்நிறைந்த இடை கொண்டவளே {குந்தி}, ஆயுதம் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக வரும் ஒரு மகனை நீ பெறுவாய். அதே வேளையில் நீ கன்னியாகவே இருப்பாய்" என்றான் {சூரியன்}.

 
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பெரும் பிரகாசம் கொண்ட சூரியன் செல்லத்தொடங்கிய போது, அந்தப் பெண் {குந்தி} நாணத்துடன், "அப்படியே ஆகட்டும்" என்றாள். இப்படியே மன்னன் குந்திபோஜனின் மகள் {குந்தி}, சூரியனால் தொந்தரவு செய்யப்பட்டு {importuned by Surya}, அவனிடம் {சூரியனிடம்} இருந்து ஒரு மகனை அடைந்து, உடைந்த கொடி போல அந்தச் சிறந்த படுக்கையில் மயங்கி விழுந்தாள். இப்படியே கடுங்கதிர்களைக் கொண்ட தெய்வம் {சூரியன்}, அவளை மயங்கச் செய்து, யோக சக்தியின் அறத்தால் அவளுக்குள் நுழைந்து, அவளின் {குந்தியின்} கருவறையில் தன்னையே வைத்தான். எனினும், அந்தத் தெய்வம் {சூரியன்}, சதையால் கன்னித் தன்மையழித்து அவளை {குந்தியை} மாசுபடுத்தவில்லை. சூரியன் சென்றதும், அந்தப் பெண் {குந்தி} தனது உணர்வை மீண்டும் பெற்றாள்"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, வளர்பிறை முதல்நாளில் {பிரதமையில்}, வருடத்தின் பத்தாவது மாதத்தில் {தை மாதத்தில்}, {on the first day of the lighted fortnight during the tenth month of the year }, ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் தலைவன் {சூரியன்} மூலம் பிருதைக்குக் {குந்திக்கு} கருவுண்டானது. சிறந்த இடைகள் {excellent hips} கொண்ட அந்தக் காரிகை {குந்தி}, நண்பர்களிடம் கொண்ட பயத்தின் காரணமாக, யாரும் தன் நிலையை அறியாதவண்ணம் தான் கருவுற்றிருப்பதை மறைத்தாள். அந்தக் காரிகை {குந்தி}, தனது நிலையைக் கவனமாக மறைத்து, கன்னியருக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பிலேயே முழுவதும் வாழ்ந்த போது, அவளது {குந்தியின்} செவிலியைத் {Nurse} தவிர {வளர்ப்புத்தாயைத் தவிர என்றும் சில பதிப்புகளில் இருக்கின்றன} வேறு யாரும் அந்த உண்மையை {அவளது உண்மை நிலையை} அறியவில்லை. தெய்வத்தின் அருளால், அந்த அழகிய கன்னிகை, குறித்த நேரத்தில் தேவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.


அக்குழந்தை, தனது தந்தையை {சூரியனைப்} போலவே கவசத்துடனும், பிரகாசமான காது குண்டலங்களுடனும் இருந்தான். அவன் சிங்கம் போன்ற கண்களும், காளையைப் போன்ற தோள்களும் கொண்டிருந்தான். குழந்தையைப் பெற்றவுடனேயே, அந்த அழகிய பெண், தனது செவிலியிடம் ஆலோசித்து, மென்மையான விரிப்பும், விலையுயர்ந்த தலையணையும் செடிநார் வேலைப்பாட்டுடனும் கூடிய ஒரு வசதியான {தாராளமான இடம் கொண்ட} மென்மையான பெட்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அதன் மேற்பரப்பு மெழுகால் {தேன்மெழுகால்} தீட்டப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டியை ஒரு வளமான மூடி பொதிந்திருந்தது. கண்களில் கண்ணீருடன் அவள் {குந்தி} அந்தக் குழந்தையை அஸ்வ நதிக்குச் சுமந்து சென்று, அந்தக் கூடையை அதன் {அந்நதியின்} நீரில் அனுப்பினாள். திருமணமாகாத ஒரு பெண், குழந்தை பெறுவது முறையற்றது என்பதை அவள் {குந்தி} அறிந்திருந்தாலும், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பெற்ற பாசத்தால் அவள் பரிதாபகரமாக அழுதாள். அப்படி அஸ்வ நதியின் நீரில் பெட்டியை அனுப்பிய போது அழுது கொண்டே குந்தி சொன்ன வார்த்தைகளை {ஜனமேஜயா} நீ கேட்பாயாக!"

 

"ஓ! குழந்தாய், நிலம், நீர், ஆகாயம் மற்றும் தெய்வீகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவர் கையாலும் உனக்கு நன்மையே நேரிடட்டும். உனது பாதைகள் அனைத்தும் மங்களகரமானவையாக இருக்கட்டும்! எந்த ஒருவரும் உன் வழியைத் தடை செய்யாதிருக்கட்டும்! ஓ! மகனே, உன்னைக் கடக்க நேரிடும் அனைவரின் இதயங்களும் உன்னிடம் பகை கொள்ளாதிருக்கட்டும்! நீர்நிலைகளின் தலைவன் வருணன், உன்னை நீரில் பாதுகாக்கட்டும்! வானத்தை அதிகாரம் செய்யும் தெய்வம் உன்னை வானத்தில் முழுவதும் பாதுகாக்கட்டும்! ஓ! மகனே, விதியால் விதிக்கப்பட்டதற்கேற்ப நான் யாரிடம் உன்னைப் பெற்றேனோ அந்த வெப்பம் வெளியிடுபவர்களில் சிறந்தவரும், உனது தந்தையுமான சூரியன், உன்னை அனைத்து இடங்களிலும் காக்கட்டும்! ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருதர்கள், திசைப்புள்ளிகளுடன் கூடிய பெரும் இந்திரன், அவர்களுக்குத் தலைமையாக ஆள்பவர்கள் ஆகியோரும், தேவர்கள் அனைவரும் உன்னை அனைத்து இடங்களிலும் பாதுகாக்கட்டும்! இந்த உனது கவசத்தால் நான் அந்நிய நிலங்களிலும் உன்னை அடையாளங்காண்பேன்!

 
ஓ! மகனே, உனது தந்தையும், பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வீகமானவருமான சூரியன், ஓடையில் சென்று கொண்டிருக்கும் உன்னைத் தனது தெய்வீகப் பார்வையால் காண்பவராக இருப்பதால் அவர் நிச்சயம் அருளப்பட்டவரே! ஓ! தேவனால் பெறப்பட்டவனே {மகனே}, நீ தாகமடையும்போது உனக்கு உறிஞ்சக் கொடுப்பவளும் {பால் கொடுப்பவளும்}, உன்னை மகனாகக் கொள்பவளுமான மங்கையும் அருளப்பட்டவளே. தெய்வீக கவசத்தாலும், தெய்வீக காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தாமரை மலர்களைப் போன்ற அகன்ற கண்களும், மெருகிடப்பட்ட தாமிரத்தைப் போன்றோ, தாமரை இதழ்களைப் போன்ற நிறமும், அழகிய நெற்றியும், சுருள் முனை கொண்ட முடியும் கொண்ட உன்னைத் தனது மகனாக ஏற்கப் போகிறவள் எப்பேற்பட்ட நற்கனவைக் கண்டிருப்பாளோ. ஓ! மகனே, தரையில் தவழ்ந்து, புழுதி பூசி, விளங்காத இனிமையான மழலைச் சொற்களை உச்சரிக்கும் உன்னைக் காண்பவள் நிச்சயம் அருளப்பட்டவளே! ஓ! மகனே, இமயத்தின் காடுகளில் பிறந்த சிங்கத்தைப் போல உயர்ந்த இளமையை நீ அடைவதைக் காணப் போகும் அவள் நிச்சயம் அருளப்பட்டவளே!" {என்று சொல்லி அழுதாள் குந்தி}.
 

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி நீண்ட நேரம் பரிதாபகரமாகப் புலம்பியழுத பிருதை {குந்தி}, அந்தக் கூடையை அஸ்வ நதியின் நீரில் வைத்தாள். தன் மகன் நிமித்தமாகத் துயர் கொண்டு பெரிதும் அழுத அந்தத் தாமரைக்கண் காரிகை {குந்தி}, தனது மகனை அடிக்கடி காண விரும்பினாலும், நள்ளிரவில் அந்தக் கூடையை விட்டுவிட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்ன நடந்தது என்பதைத் தனது தந்தை அறிந்து விடுவானோ என்று பயந்து கொண்டே, தனது செவிலியுடன் மீண்டும் மாளிகையை அடைந்தாள். அதே வேளையில், அந்தக் கூடை அஸ்வ நதியில் இருந்து சர்மண்வதி நதிக்கும், பிறகு சர்மண்வதியில் இருந்து யமுனைக்கும், அங்கிருந்து கங்கைக்கும் என மிதந்து கொண்டே கடந்து சென்றது. குழந்தையைக் கொண்டிருந்த அந்தக் கூடை, கங்கையின் அலைகளால் சுமந்து செல்லப்பட்டுச் சூத குலத்தவன் ஆளும் சம்பா என்ற ஒரு நகரத்தை அடைந்தது. தன் உடல் அணிந்திருந்த அந்தச் சிறந்த கவசத்தாலும், அமிர்தத்தாலான அந்தக் காது குண்டலங்களாலும், விதியால் இப்படி விதிக்கப்பட்டதாலுமே உண்மையில் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது"
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment