பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
''அசாத்தியமான சில விஷயங்கள் ''
பெரியவாளின் சிந்தனைகள் எளிய தமிழில் தெளிந்த நீரோடை போன்றவை. அவற்றை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொள்வதால் மனதை பாட்டரி போல ரீ சார்ஜ் செய்து கொள்கிறோம். அதற்காகத்தான் இது.
''ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டர் கிட்ட நம்ம தேஹ வியாதியைத் தீர்த்துண்டா மட்டும் போறாது. நம் மனத்திலே கூட நிறைய நோய் இருக்கு. மனசிலே இருக்கிற எல்லா கெட்ட எண்ணங்கள் என்கிற வியாதியையும் போக்கிக்கணும். அது தான் தேஹ வியாதி நிவாரணத்தை விட ரொம்ப முக்கியம். அதுக்காக தான் பாடசாலை, பள்ளிக்கூடங்கள் எல்லாம் உருவாக்கி அங்கே சிறந்த ஆசிரியர்கள் படிப்போட ஒழுக்கமும் கற்றுக்கொடுத்தார்கள்.
படிச்சிட்டு வெளிலே வந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால், பள்ளிக்கூடத்தால் எந்த பயனும் இல்லை. நாட்டில் தீய எண்ணங்கள் பழக்கங்கள் பரவ பள்ளிக் கூடம் அவசியமா? நாணயம், லஞ்ச எண்ணம் இல்லாமை, நேர்மை, ஒழுக்கம், சுறுசுறுப்பு, பாரபட்சம் இல்லாமை இதெல்லாம் நாம் ஈடுபடும் உத்யோகத்தில் கலந்தால் தான் நாடு நன்மை பெரும். மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
பக்தி, கட்டுப்பாடு, தியாகம் இவைகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால் சாமர்த்தியமாக தவறுகள் செய்து தப்பித்துக் கொள்வதற்கு வழியாகிறது. அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். இப்படி நல்லவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, கல்லூரி, பள்ளிக்கூடம், அலுவலகங்கள் அவசியம் இருக்கவேண்டும்.
கோயில்களும் அவற்றை சார்ந்த கலைகளும் ஓங்கி வளர்ந்திருந்த நாட்களில் நம் தேசம் எப்படி இருந்தது என்பதற்கு கிரேக்க நாட்டு யாத்ரீகன் மெகஸ்தனிஸ் பார்த்து அதிசயித்து ஸர்டிபிகேட் கொடுத்து இருக்கிறான். இவை எல்லாம் மங்கி ப்போனதால் தான் நமது தேசம் இன்றைக்கு எப்படி அவல நிலையில் இருக்கிறதென்பதை கண்கூடாகவே பார்க்கிறோம். எங்கு பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், லஞ்சம், பித்தலாட்டம், ஆக்கிரமிப்பு, பதவி வெறி, கலப்படம், அதர்மம், அக்கிரமங்கள் மிகுந்துவிட்டன. இவை நிவர்த்தியாக ஒரே ஒரு வழி தான் உள்ளது.,.
பழைய காலத்தைப் போல் கோயில்களை சமூக வாழ்க்கையின் மையமாக்கி விட வேண்டும். அந்த காலத்தில் இருந்தது போல் இன்றும் தெய்வ சம்பந்தமான பழமையான கலைகளை வளர்க்க வேண்டும். ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள், எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்து விட்டன. தெய்வ சம்பந்தமில்லாத தனி நபர் சுக வசதிக்கான காரியங்கள் நடை பெற உதவுகின்றன. பாவத்தால் பக்தி பாழாகிவிடும். இது சாந்நித்யத்தை பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில் தான் விச்ராந்தியான சூழ்நிலை கொஞ்சம் நிலவுகிறது.
எங்கு பார்த்தாலும் டூரிஸ்ட் காட்டேஜ்களும் விளையாட்டு சாதனங்களும் மலைக்கோயில்களை பொழுதுபோக்கு ஸ்தலமாக, சுற்றுலா இடமாக மாற்றியதால் அங்கே பக்தியைவிட பொழுது போக்குக்குத்தான் மஹிமை. நமது முன்னோர்களை அவமானப் படுத்தும் செயல் இது. அவ மரியாதை மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம் ஆகும்.
சின்னஞ்சிறிய சூக்ஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்து விட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கே நல்ல வஸ்திரமில்லாத எண்ணற்ற கோவில்கள் இருப்பது மன்னிக்கமுடியாத குற்றம். மஹா பாபம்.
ஒரு ஊரிலேயே ரொம்ப அழுக்குத் துணி உடுத்துவது யார் என்றால் அந்த ஊர் கோவில் ஸ்வாமியின் விக்ரஹம் தான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டாமா? அந்த அழுக்கு போனால் தானே நம் மனதில் உள்ள அழுக்கு போகும்?
''எதிரே ஒரு வாழைப்பழ சீப்பு இருக்கிறதே பார்த்தாயா எவ்வளவு அழகாக மஞ்சளாக இருக்கிறது?''
'' ஆமாம் அழகான மஞ்சள் கண்ணைப் பறிக்கிறது''
''இதோ வாழைப் பழத்தை பார் சிவப்பாக இருக்கிறது'' என்று மஞ்சள் பழத்தை காட்டினால்.?..
''இல்லையே, மஞ்சளாக அல்லவோ இருக்கிறது''
''சிவப்பான செவ்வாழை என்று நினைத்துக் கொள்.... என்றால் மனதில் ஒரு பிரதி உணர்வு உண்டாகிறது. மனதை ஒருமுகப் படுத்தி கற்பனை செய்தால் மஞ்சள் சிவப்பாக மாறிவிட்டதே.
மூர்த்தி வழிபாடு என்பதும் அப்படித்தான். ஒரே மூர்த்தியைக் காட்டி ''இது பரமாத்மா" என்றால் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இவரை கண் மூடி மனதில் பரமாத்வாக பாவியுங்கள் என்றால் அவ்வாறு பாவிக்க முடிவதாகத் தோன்றும்.
''பரமாத்மாவின் லக்ஷணம் தெரியாதே, தெரிந்த விஷயங்களில் தான் மனம் எப்போதும் ஈடுபட்டு நிற்கும். எனவே காருண்யமும் சௌந்தர்யமும் வழிகிறது போன்றே ஸ்திர ரூபத்தில் விகிரஹம் செய்து "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனம் அதை நன்றாகக் கிரகித்துக் கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது. அதற்காகத்தான் கோயில்களில் அழகான விக்ரஹங்கள், அவற்றுக்கு அற்புதமான அலங்காரங்கள்.
சொந்த விருப்பு வெறுப்பில்லாமல் உலக க்ஷேமத்திற்காக காரியம் செய்வதால் ஆத்மா பரிசுத்தி பெறும் என்ற பண்பாடு வேதகாலம் முதல் கொண்டு நமது தேசத்தில் தழைத்து வந்த ஒன்று. அந்த பண்பாட்டை ஒரு கைக்கடக்கமான பேழையில் வைத்து கொடுப்பது போல கிருஷ்ணன் கீதையில் உபதேசம் செய்திருக்கிறானே. நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அது நிறைந்திருக்க வேண்டாமா? இதில் எனக்கு சொந்த லாபமா? பிறருக்கு பயனளிக்குமா?, எனது பேர் புகழ், ஆசை, த்வேஷம், இருக்கிறதா? இது இருந்தால் வெளிப் பார்வைக்கு எவ்வளவோ பிரபல விளம்பரத்தோடு, உயர்வாக செய்தாலும் அது பாபமே.
இப்போதெல்லாம், சிலர் சமய ஆசாரங்கள் எல்லாமே வெளி விஷயம் தானே என்று அசிரத்தையாக இருக்கிறார்கள். உண்மையில் நாம் வெளியில் செய்கிற காரியமும் உள்ளத்தின் பாவமும் (bhavam ) ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை.
''லாட்டரியில் ஒரு லக்ஷமா? எனக்கா?'' --- எதிர்பாராத பெரிய தொகை.. சேதி கேட்டதும் மகிழ்ச் சிக்கு எல்லை இல்லை... இது வெளியே தோன்றிய மாற்றம்.... இதனால் உடம்பில் படபடப்பு, மூசசு தடுமாறல், சீர் குலைதல் ,மலைப்பு, மயக்கம், மூர்ச்சை. சிலசமயம் ஆளே அம்பேல். மாரடைப்பு மரணம். வெளிச்சின்னத்திற்கும் உள் உணர்வுக்கும் உள்ள தொடர்பு இது.
எதற்காக மிலிட்டரியில் ராணுவத்தில் போலீசில் யூனிபாரம், சீருடை அணிகிறார்கள். உள்ளே இருந்து புத்துணர்ச்சி, வீரம் மிடுக்கு, அதிகாரம், கவுரவம் பொறுப்புணர்ச்சி வெளிப்படுகிறது. அது உள்ளுணர்வின் வேலை.
நமது சாஸ்திரங்களில் இல்லாத சயின்ஸ் எதுவுமே இல்லை. ஆயுர்வேதமா ஆதாரமே சரகர், சுஸ்ருதர். அவர்களது ஸ்லோகங்களின் அர்த்தத்தை உணர்ந்து இப்போதைய பெரிய பெரிய டாக்டர்கள் மூக்கின் மேல் கை வைக்கும்படியான மருத்துவ முறைகள். ஆபரேஷன், சர்ஜரி முறைகள் இருக்கிறது. நவீன மருந்து சர்ஜரி நாம் பழக்கம் பண்ணிக் கொண்டதால் ஆயுர்வேதத்தில் சர்ஜரி இல்லை என்று நினைக்கிறோம். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகாவில் சர்ஜரி இந்தியாவில் தான் முதலில் தோன்றியது என்று இருக்கிறது.
குலசேகர ஆழ்வார் கூட அப்போதே ''வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்'' என்கிறார். 'அறுப்பது' தான் சர்ஜெரி. 'சுடுவது' cauterisation. எப்படி ஆழ்வார்கள் காலத்திலேயே மருத்துவம் உயர்ந்த நிலையில் புரிந்திருக்கிறது!.
No comments:
Post a Comment