மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-52
..
பாண்டவர்கள் கட்டிய அரண்மனையில் கலந்துகொண்டவர்கள்
...
வைசம்பாயனர் சொன்னார்,
"பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரன், பத்தாயிரம் பிராமணர்களுக்கு, பாலுடனும், நெய் கலந்த அரசியுடனும், தேன் கலந்த கனிகளுடனும், கிழங்குகளுடனும், பன்றியிறைச்சி மற்றும் மான் இறைச்சியுடனும் உணவு கொடுத்த பிறகு, அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான். பல நாடுகளில் இருந்து வந்திருந்த அந்த பிராமணர்களுக்கு, யுதிஷ்டிரன் எள்ளால் பக்குவப்படுத்தப்பட்ட உணவையும், ஜிபந்தி {ஜீவநதிகை} என்ற காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவையும், அரிசியுடன் தெளிந்த நெய்யைக் கலந்து {ஹவிஷ்யம்}
பல வகைகளில் தயாரிக்கப்பட்ட இறைச்சிகளுடன், மேலும் பல்வேறு உணவு வகைகளுடனும், உறிஞ்சத் தக்க வகையிலும், குடித்தக்கத்த வகையிலும் கொடுத்தான்.
மேலும், பல ஆடைகளையும், சித்திர வேலைப்பாடு நிறைந்த அற்புத துணிகளையும் கொடுத்தான்.
மேலும் யுதிஷ்டிரன் ஒவ்வொரு பிராமணனுக்கும் ஆயிரம் பசுக்களையும் கொடுத்தான்.
பிறகு "என்ன அதிர்ஷ்டமான நாள் இது!" என்ற பேரொலியுடன் நிறைவடைந்திருந்த பிராமணர்களின் குரல் விண்ணுலகம் வரை கேட்டது.
அந்தக் குரு குல மன்னன் யுதிஷ்டிரன், பலவகை இசையாலும், கணக்கிலடங்கா மதிப்புவாய்ந்த நறுமணப் பொருட்களாலும் தேவர்களை வழிபட்டு அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான்.
விளையாட்டு வீரர்களும், பரிசுக்காகப் போரிடும் வீரர்களும், பாடகர்களும், புகழ்மாலை சூட்டுபவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டி அந்த சிறப்பு வாய்ந்த தர்மனின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} நிறைவுசெய்தனர்.
இவ்வாறு கொண்டாட்டத்துடன் அரண்மனைக்குள் நுழைந்த யுதிஷ்டிரன், விண்ணுலகில் நுழையும் சக்ரனைப் {இந்திரனைப்} போலத் தனது தம்பிகளுடன் அந்த அரண்மனைக்குள் நுழைந்தான்.
அந்த அரண்மனையின் ஆசனங்களில் பாண்டவர்களுடன் சேர்ந்து, முனிவர்களும், பல நாட்டு மன்னர்களும் அமர்ந்தனர்.
அசிதர், தேவலர், சத்யர், சர்ப்பமாலி {ஸர்ப்பிர்மாலி}, மஹாசிரன் {மஹாசிரஸ்}, அர்வாவசு, சுமித்ரர், மைத்ரேயேர், சுனகர், பலி, பகர், தல்வியன் {தல்பாபுத்திரன்}, ஸ்தூலசிரன் {ஸ்தூலசிரஸ்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, சுகர், வியாசரின் சீடர்களான சுமந்து, ஜைமினி, பைலர் ஆகியோரும் நாமும் {வைசம்பாயனனாகிய நானும்}; பிறகு தித்திரி, யக்ஞவல்கியர், தனது மகனுடன் {சௌதியுடன்} கூடிய லோமஹர்ஷணர் {ரோமஹர்ஷணர்}, அப்சுஹோமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர், தாமோஷ்ணீஷர், த்ரைபலி, பரணாதர், பரயானுகர் {கடஜானுகர்}, மௌன்ஞாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாரிகர், பலிவாகர், சிலீவாகர் {ஸினீவாகர்}, சத்யபாலர் {ஸ்ப்தபாலர்}, கிருதச்ரமர், ஜாதூகர்ணர், சிகாவத் {சிகாவான்}, ஆலம்பர், பாரிஜாதகர், மேன்மையான பர்வதர், பெரும் முனி மார்க்கண்டேயர், பவித்ரபாணி, சாவர்ணர், பாலுகி, காலவர், ஜங்காபந்து, ரைப்யர், கோபவேகர், பிருகு, ஹரிபப்ரு, கௌண்டின்யர், பப்ருமாலி, சனாதனர், கக்ஷீவத் {கக்ஷீவான்}, அஷிஜர், நசிகேதர், ஔஷிர், நாஸிகேதர், கௌதமர், பைங்கியர், வராஹர், சுனகர், பெரும் ஆன்மத் தகுதி கொண்ட சாண்டில்யர், குக்குரர், வேணுஜங்கர், கலாபர், கடர், மேலும், கல்விமான்களான பல முனிவர்களும், புலன்களையும் ஆன்மாவையும் முழு கட்டுக்குள் வைத்திருந்த முனிவர்களும், வேதம் மற்றும் வேதாங்கங்களை அறிந்த எண்ணிலடங்கா முனிவர்களும் சிறப்பு வாய்ந்த யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்து, அவனிடம் புனித கதைகள் பேசி அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர். எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களும் அங்கே வந்திருந்தனர்.
சிறப்புவாய்ந்தவனும் அறம்சார்ந்தவனுமான முஞ்சகேது, விவர்த்தனன், சங்கிராமஜிதன், துர்முகன், பலம் வய்ந்த உக்ரசேனன், கக்ஷசேனன், ஒப்பற்ற க்ஷேமகன், காம்போஜ நாட்டு மன்னன் கமடன், காலகேயர்களென்ற அசுரர்களை நடுங்கச் செய்த வஜ்ரதாரி {இந்திரன்} போல, தனியொருவனாக யவனர்களை நடுங்கச் செய்தவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான கம்பனன்,
ஜடாஸுரன், மத்ரகர்களின் மன்னன், குந்தி {குந்திபோஜன்}, கிராதர்களின் மன்னன் புளிந்தன், அங்கம் {அங்கன்}, வங்கம் {வங்கன்}, பௌந்தரம் {புண்ட்ரகன்} ஆகிய நாட்டு மன்னர்களும், {பாண்டியன்}, ஒட்ர நாட்டு மன்னனும், அந்தகன் {ஆந்தரன்}, சுமித்ரன், எதிரிகளைக் கொல்லும் சைப்பியன், கிராதர்களின் மன்னன் சுமணன் {ஸுமனஸ்}, யவனர்களின் மன்னன் சாணூரன், தேவராதன், போஜன், பீமரதன், கலிங்க மன்னன் சுருதாயுதன், மகதமன்னன் ஜெயசேனன், சுகர்மன், சேகிதானன், எதிரிகளைக் கொல்லும் புரு, கேதுமான், வசுதானன், வைதேஹன் {விதேஹ நாட்டு மன்னன்}, கிருதாக்ஷணன், சுதர்மன், அனிருத்தன், பெரும் பலம் வாய்ந்த சுருதாயு, ஒப்பற்ற அனூபராஜன், அழகான க்ரமஜித், தனது மகனுடன் சேர்ந்த வந்த சிசுபாலன், காருஷ நாட்டு மன்னன், ஆகியோர் அங்கே வந்திருந்தனர். மேலும் விருஷ்ணி குலத்தின் ஒப்பற்ற இளைஞர்களான ஆஹுகன், விப்ருது, கதன், சாரணன், அக்ரூரன், கிருதவர்மன், சினியின் மகன் சத்யகன், பீஷ்மகன், அங்கிருதி {அக்ருதி}, சக்திவாய்ந்த த்யுமத்சேனன் சோமக குலத்தைச் சார்ந்த வில்வீரர்களில் முதன்மையான கைகேயர்கள், யக்ஞசேனன் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் குந்தியின் மகன் யுதிஷ்திடிரனை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி அங்கே அந்த சபையில் காத்திருந்தனர்.
பெரும்பலம் பொருந்தியவர்களும், நன்கு ஆயுதம் தரித்திருந்தவர்களும், செல்வந்தர்களுமான கேதுமான், வசுமனஸ் மற்றும் எண்ணற்ற பல க்ஷத்திரியர்களும் அந்த சபையில் காத்திருந்தனர். பெரும் பலம் பொருந்திய அந்த இளவரசர்கள் மான்தோலுடுத்தி அர்ஜுனனிடம் ஆயுத அறிவியல் பயின்று யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்.
அர்ஜுனனுக்குக் கீழிருந்து ஆயுத அறிவியலைப் பயின்ற விருஷ்ணி குலத்தின் இளவரசர்களான,
பிரத்யும்னன் {ருக்மிணியின் மகன்}, சாம்பன், சாத்யகியின் மகன் யுயுதானன், சுதர்மன், அனிருத்தன், சைப்பியன் ஆகிய மனிதர்களில் முதன்மையானவர்களும் மற்றும் பல தேசத்து அரசர்களும் அங்கே அந்த சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்.
தனஞ்செயனின் நண்பனான தும்புருவும், தனது அமைச்சர்களுடன் கூடிய கந்தர்வன் சித்திரசேனனும், பல கந்தர்வர்களும், அப்சரஸ்களும், வாய்ப்பாட்டு மற்றும் ஒலி ஒழுங்கு இசைக்கருவிகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும், தேவர்களுக்காக இனிய குரலில் பாட்டுப்பாடும் கின்னரர்களும், அங்கே பாண்டுவின் மகன்களுக்காகவும் அந்தச் சபையில் வீற்றிருந்த முனிவர்களுக்காகவும் காத்திருந்தனர். அந்தச் சபையில் அமர்ந்திருந்த பெரும் நோன்புகள் நோற்று உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்த அந்த மனிதர்களில் காளைகள், பிரம்மனுக்காக காத்திருக்கும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.
"சிறப்பு மிகுந்த பாண்டவர்கள், அந்தச் சபையில் கந்தர்வத் தலைவர்களுடன் அமர்ந்திருந்த போது, , வேதங்களையும் உபநிஷதங்களையும் அறிந்தவரும் - தேவர்களால் வழிபடப்படுபவரும், வரலாறுகளையும் புராணங்களையும், பழங்கால கல்பங்களையும் (யுகச்சக்கரங்கள்), நியாய சாத்திரத்தையும் (தர்க்கம் - பேச்சுவார்த்தை), உச்சரிப்பு, இலக்கணம், யாப்பிலக்கிணம், அடிப்படைச் சொற்களின் விளக்கம், அறச்சடங்குகளின் விளக்கம், வானசாத்திரங்கள் ஆகியவை அடங்கிய ஆறு அங்கங்களின் முழு அறிவையும் அறிந்த தேவமுனிவரான நாரதர் அந்தக் கூட்டத்திற்கு வந்தார்.
நாரதர், கிடைத்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு ஊகித்து அறியும் திறமையையும் பெற்றவராக இருந்தார். ஐந்து முன்மொழிகள் கொண்ட நேரியல் வாத முறையின் சரியான மற்றும் தவறான பகுதிகளைக் குறித்து தீர்மானிக்கத் தகுதிவாய்ந்தவராகவும் அவர் இருந்தார். அவர் {நாரதர்}, பெரும் ஆன்மா கொண்டு, மேலும் கீழும், சுற்றியும் இருக்கும் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் கண்டு, அறம் {தர்மம்}, பொருள் {செல்வம் (அர்த்தம்)}, இன்பம், வீடு {முக்தி} ஆகிய கட்டமைப்புகளில் உறுதியான தீர்மானங்களைக் கொண்டிருந்ததால், பிரகஸ்பதிக்கே தொடர்ந்து பதிலளிக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார்.
தேவர்களையும் அசுரர்களையும் அடக்க அவர்களுக்குள் சச்சரவை ஏற்படுத்த விரும்பும் அவர் {நாரதர்}, சாங்கியம் மற்றும் யோக வகை தத்துவங்கள் இரண்டிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தார்.
போர் மற்றும் ஒப்பந்த அறிவியலையும், தனது உற்று அறியும் திறனால் மட்டும் அல்லாமல் ஒப்பந்தம், போர், போர்ப்பயணம், எதிரிக்கு எதிரானவைகளைப் பராமரித்தல், தந்திரங்கள், மறைந்திருத்தல் ஆகிய ஆறு அறிவியல்களைக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வருபவராகவும்,
அனைத்துக் கல்வியிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும், போர், இசை ஆகியவற்றின் பிரியராகவும், எந்த அறிவியலாலும் எதன் மூலமாகவும், எந்த செயலின் மூலமாகவும் முறியடிக்க முடியாதவராகவும், கணக்கற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராகவும் அவர் {நாரதர்} இருந்தார்.
பல்வேறு உலகங்களில் உலவும் நாரதர் யுதிஷ்டிரனின் அந்த சபைக்கு வந்தார்.
அளவிட முடியாத பிரகாசமும் பெரும் சக்தியும் கொண்ட அந்த தெய்வீக முனிவர், பாரிஜாதர், புத்திசாலியான ரைவதர், சௌமியர் மற்றும் சுமுகர் ஆகியோருடன் அங்கே இருந்தார்.
மனோவேகம் கொண்ட அந்த முனிவர் {நாரதர்} பாண்டவர்களைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தார். அங்கே வந்த அந்த பிராமணர் யுதிஷ்டிரனுக்கு தனது மரியாதையையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, அவன் {யுதிஷ்டிரன்} வெற்றி அடையும்படி வாழ்த்தினார்
கல்விமானான அம்முனிவர் அங்கே வந்ததைக் கண்டதும், கடமைகளின் விதிகளை அறிந்த பாண்டவர்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்}, உடனே தனது தம்பிகளுடன் எழுந்தான்.
தாழ்மையுடன் பணிந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரனை}, மகிழ்ச்சியுடன் அந்த முனிவரை {நாரதரை} வணங்கி வழிபட்டு அவருக்கு உரிய இருக்கையை அளித்தான்.
அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அவருக்கு பசுவும், இயல்பாகக் கொடுக்கப்படும் காணிக்கையான தேனுடன் கலந்த அர்க்கியத்தையும், மதுபர்க்கத்தையும் கொடுத்தான். அனைத்து கடமைகளையும் அறிந்த அந்த ஏகாதிபதி அந்த முனிவரை ரத்தினங்களாலும் நகைகளாலும் முழு இதயத்துடன் வழிபட்டான்.
யுதிஷ்டிரனிடம் இருந்து உரிய முறையில் வழிபாட்டை ஏற்ற அந்த முனிவர் பெரும் திருப்தி கொண்டார். இப்படி பாண்டவர்களால் வழிபடப்பட்ட, வேதங்களில் முழு நிபுணத்துவம் கொண்ட அந்தப் பெரும் முனிவரான நாரதர், யுதிஷ்டிரனிடம் கீழ்க்கண்ட வார்த்தைகளில் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு குறித்து விசாரித்தார்.
..
தொடரும்
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment