Saturday, April 2, 2022

Mahabharata part 50 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-50
..
ஆதிபர்வம்
..
மந்தபாலர் - ஜரிதை, லபிதை
..
ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அப்படி அந்தக் கானகம் எரிக்கப்பட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட பறவைகளை ஏன் அக்னி உட்கொள்ளவில்லை?
இது கானகத்தில் எப்போது நடந்தது? ஓ பிராமணரே! மய தானவனும், அசுவசேனனும் கொல்லப்படாதது எதற்காக என்று நீர் சொல்லிவிட்டீர். ஆனால், சாரங்கங்கள் தப்புவதற்கு என்ன காரணம் என்பதை நீர் சொல்லவில்லை.
 ஓ பிராமணரே, அந்தப் பறவைகள் தப்பியது எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது. அந்தக் கொடுமையான காட்டுத்தீயில் அவை ஏன் அழியவில்லை என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் சொன்னார்,
"ஓ எதிரிகளைக் கொல்பவனே {ஜனமேஜயா}, அந்தக் காட்டுத்தீயின் போது அக்னி ஏன் அந்தப் பறவைகள் எரிக்கவில்லை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.
 ஓ மன்னா {ஜனமேஜயா}, மந்தபாலர் என்ற பெயரில் ஒரு பெரும் முனிவர் இருந்தார். அவர் சாத்திரங்களை அறிந்தவராகவும், கடும் தவம் மேற்கொள்பவராகவும், தவத்திற்குத் தம்மை அர்ப்பணித்தவராகவும், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவராகவும் இருந்தார்.
தங்கள் உயிர்நீரை மேல்நோக்கி எழ வைத்த முனிவர்களின் வழியைப் பின்பற்றிய அந்தத் துறவி, தனது அனைத்துப் புலன்களையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கல்விக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
தவத்தின் கரையை அடைந்த பிறகு, அவர் தனது மனித வடிவத்தை விட்டு, பித்ருக்களின் உலகத்தை அடைந்தார். ஆனால், அங்கே தமது ஆன்மச் செயல்களுக்கான கனிகளை (பலனை) அடைவதில் அவர் தோல்வி கண்டார்.
கால தேவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்களிடம் இதற்கான காரணத்தை அறிவதற்காக,
 "எனது தவத்தகுதிகளால் அடைந்துவிட்டதாக நான் கருதிய இந்தப் பகுதிகள் அனைத்தும் ஏன் என்னால் அடைய முடியாதனவாக இருக்கின்றன. நான் இந்தப் பகுதிகளை அடையக்கூடிய அளவிற்கு அறச் செயல்கள் செய்யவில்லையா?
ஓ விண்ணுலகவாசிகளே, ஏன் இந்தப் பகுதிகள் எனக்கு எதிராக மூடப்பட்டிருக்கின்றன! எனது ஆன்ம தவத்தின் கனிகளைப் பெறுவதற்காக நீங்கள் சொன்னதை நான் செய்வேன்" என்று கேட்டார் {மந்தபாலர்}.
அதற்குத் தேவர்கள், "ஓ பிராமணரே {மந்தபாலரே}, மனிதர்கள் பிறக்கும் போதே எந்தச் செயலுக்காக, எந்தப் பொருளுக்காகக் கடன்காரர்களாகப் பிறக்கிறார்கள் என்பதைச் சொல்கிறோம், கேட்பீராக.
அறச்சடங்குகளும், விதிப்படியான கல்வியும், மக்கட்பேறினாலும் மனிதர்கள் பிறவிக் கடனுடன் பிறக்கிறார்கள். அதில் ஐயமில்லை.
 வேள்விகளாலும், தவத்துறவாலும், சந்ததியாலும் {மக்கட்செல்வம்} அந்தக் கடன்கள் அடைபடும். நீரோ ஒரு தவத் துறவி, வேள்விகளும் செய்திருக்கிறீர். ஆனால், உமக்குச் சந்ததி கிடையாதே.
உமக்குச் சந்ததி இல்லாததாலேயே உமக்கு எதிராக இப்பகுதிகள் மூடப்பட்டிருக்கின்றன. எனவே, பிள்ளைகளைப் பெறுவீராக. அப்படிச் செய்தால், நீர் பல்வேறு இன்பநிலைகளைக் கொண்ட பகுதிகளை அனுபவிப்பீர்.
ஒரு மகனே தனது தந்தையைப் புத் எனும் நரகத்தில் இருந்து மீட்கிறான் என்று வேதங்கள் சொல்கின்றன. எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே {மந்தபாலரே}, சந்ததியைப் பெற முயற்சி செய்வீராக" என்றனர்".
 "விண்ணுலகவாசிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மந்தபாலர், குறுகிய காலத்தில் எப்படி நிறைந்த மக்கள் செல்வத்தைப் பெறுவது என்பது குறித்துச் சிந்தித்தார்.
 சிறிது நேரம் சிந்தித்த அந்த முனிவர், படைப்புகளில் பறவைகளே விரைவாக இனவிருத்தி செய்பவை என்பதைக் கண்டார். உடனே அவர் ஒரு சாரங்கப் பறவையாக மாறி, அதே இனத்தில் ஜரிதை என்ற பெயர் கொண்ட ஒரு பெண் பறவையையுடன் உறவு வைத்துக் கொண்டார்.
அவளிடம் அவர் நான்கு மகன்களைப் பெற்றார். அவர்கள் நால்வரும் வேதம் உரைப்பவர்களாக ஆனார்கள். அவர்கள் முட்டைகளில் இருக்கும்போதே, அந்த நான்கு மகன்களையும் அவர்களின் தாயையும் கானகத்தில் விட்டுவிட்டு லபிதையிடம் (லபிதை என்ற பெயரில் அழைக்கப்பட்ட மற்றொரு மனைவியிடம்) சென்றுவிட்டார்.
 அந்த மேன்மை மிகுந்த முனிவர் லபிதையின் துணை நாடிச் சென்று விட்டபிறகு, தனது சந்ததிகளின் மீது அன்பு கொண்ட ஜரிதை மிகவும் சிந்திக்கலானாள். தந்தையால் அந்தக் கானகத்தில் அவர்கள் கைவிடப்பட்டாலும், ஜரிதையின் முட்டையிலிருந்த அந்த முனிவரின் {மந்தபாலரின்} குழந்தைகளைக் கைவிடாமல் அன்புடன் காத்துவந்தாள். தனது இனத்துக்கே உரிய தாய்ப்பாசத்துன் அவள் {ஜரிதை}, அந்தப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வந்தாள்.
சில காலம் கழித்து, லபிதையுடன் உலவிக் கொண்டிருந்த அந்த முனிவர் {மந்தபாலர்} காண்டவ வனத்தை எரிக்க அதை நோக்கி வரும் அக்னியைக் கண்டார்.
அந்த பிராமணர் மந்தபாலர், அக்னியின் நோக்கத்தை அறிந்து, குழந்தைகளாய் இருந்த தனது பிள்ளைகளையும் நினைத்துப் பார்த்து, பெரும் சக்தி கொண்ட அண்டத்தின் பிரதிநிதியான, அந்த நெருப்பு தெய்வத்தை மனநிறைவு கொள்ளச் செய்தார்.
இறகு முளைக்காத தனது பிள்ளைகளுக்கு வார்த்தை சொல்ல விரும்பிய அவர் {மந்தபாலர்} அக்னியிடம், "ஓ அக்னியே, நீயே இந்த உலகங்களின் வாயாவாய்! நீயே வேள்வியில் ஊற்றப்படும் புனித நெய்யைச் சுமந்து செல்பவன்! ஓ (பாவங்களை} சுத்தப்படுத்துபவனே, நீயே அனைத்து உயிர்களின் கூட்டுக்குள்ளும் வடிவமற்றவனாக {அரூபமாக} இருக்கிறாய்.
கல்விமான்கள் மூன்று தன்மைகள் படைத்த ஒருவனாக உன்னைச் சொல்கிறார்கள். ஞானமுள்ளவர்கள் உன்னை எட்டு (வாய்கள்) நிலைகள் கொண்டவனாக நினைத்து உனது முன்பிலேயே வேள்விகளைச் செய்கிறார்கள்.
 பெரும் முனிவர்கள், இந்த அண்டமே உன்னால் படைக்கப்பட்டது என்று தீர்மானிக்கிறார்கள். ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீ இன்றி இந்த மொத்த அண்டமும் ஒரே நாளில் அழிந்துவிடும்.
தங்கள் மனைவியருடனும், பிள்ளைகளுடனும் உன்னை வணங்கும் பிராமணர்கள் தங்கள் நற்செயல்களின் மூலம் நித்தியமான நிலைத்த பகுதிகளை வென்றடைகிறார்கள்.
 ஓ அக்னியே, கல்விமான்கள் உன்னை விண்ணில் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் எனச் சொல்கிறார்கள். ஓ அக்னியே, உன்னால் உமிழப்படும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் உட்கொள்கின்றன {எரிக்கின்றன}.
 ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே, இந்த அண்டமே உன்னால் படைக்கப்பட்டது. வேதங்கள் உனது வார்த்தையே. அனைத்து உயிர்களும், அசைவனவும், அசையாதனவும், நம்பி இருப்பது உன்னையே
 நீரானது முதன்மையாக நம்பி இருப்பது உன்னையே. அண்டம் நம்பியிருப்பதும் உன்னையே. காணிக்கைகளாகக் கொடுக்கப்படும் தூய்மையாக்கப்பட்ட நெய்யும், உணவுப் படையலையும் பித்ருகளுக்குக் கொடுப்பவன் நீயே.
 ஓ தேவா, உட்கொள்பவன் நீயே, படைப்பவன் நீயே, பிருஹஸ்பதி நீயே, அசுவினி இரட்டையர்கள் நீயே; சூரியன் நீயே, சோமன் {சந்திரன்} நீயே, வாயுவும் நீயே" என்று வேண்டினார்".
 இப்படி மந்தபாலரால் துதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அக்னி அந்த அளக்கமுடியாத சக்தி கொண்ட முனிவரிடம் மனநிறைவு கொண்டு,
 மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவரிடம், "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அப்போது குவிந்த கரங்களுடன் கூடிய மந்தபாலர் அந்தத் தூய்மையாக்கப்பட்ட நெய்யைச் சுமப்பவனிடம் {அக்னியிடம்},
 "நீ காண்டவ வனத்தை எரிக்கும்போது, எனது பிள்ளைகளை தப்பவிடுவாயாக" என்று கேட்டார்.
 அதற்கு அந்தச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைச் சுமப்பவன் {அக்னி}, "அப்படியே ஆகட்டும்" என்றான்.
எனவே, {ஜனமேஜயா}, அவன் காண்டவ வனத்தை எரித்த போது மந்தபாலரின் பிள்ளைகளை எரிக்கவில்லை".
"காண்டவ வனத்தில் நெருப்புச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த போது, அந்தப் பறவை குஞ்சுகள் மிகவும் கலங்கிப் போய்த் துயரத்தில் இருந்தன. கவலை நிறைந்த அவர்கள் {பறவைகள்} தப்பிக்க எந்த வழியும் காணவில்லை.
தப்ப இயலாத குஞ்சுகள் அவை என்பதை அறிந்த அவற்றின் தாயான ஆதரவற்ற ஜரிதை, மிகுந்த துயர் கொண்டு பேரொலியுடன் கதறி அழுதாள்.
அவள் {ஜரிதை}, "ஓ கொடூரமான இந்தத் தீ அண்டத்தைப் பிரகாசிக்கச் செய்து, கானகத்தை எரித்துத் தள்ளி, எனது துன்பத்தை அதிகரிக்க, இதோ எங்களை நோக்கி வருகிறதே.
அழிந்து போன எங்கள் மூதாதையர்களின் ஒரே ஆதரவான, கால்களும் சிறகுகளும் முளைக்காத இந்தப் பிஞ்சுக் குஞ்சுகளால் எனக்குத் துயர் அதிகரிக்கிறதே.
அனைத்துப் புறமும் பீதியைக் கிளப்பிக் கொண்டு இந்த நெருப்பு, தனது நீண்ட நாவால் உயரமான மரங்களை நக்கிக் கொண்டு எங்களை நோக்கி வருகிறதே.
இவர்களைச் {குஞ்சுகளைச்} சுமந்து கொண்டு என்னால் தப்பித்துச் செல்ல முடியவில்லையே. இவர்களைக் குறித்து எனது இதயம் துயர்கொண்டுள்ளதால், இவர்களைக் கைவிடவும் முடியவில்லையே.
எனது மகன்களில் யாரை நான் விடுவேன்? யாரை நான் சுமந்து செல்வேன்? எனது கடமைக்கு உகந்த செயல்தான் என்ன? ஓ பிள்ளைகளே நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் என்ன சிந்தித்தாலும் நாம் தப்புவதற்கு வழி தெரியவில்லை. எனது இறக்கைகளால் உங்களை மூடியபடி நானும் உங்களுடன் சாகப்போகிறேன்.
கொடூரரான உங்கள் தந்தை {மந்தபாலர்} சில காலத்திற்கு முன்பு என்னைவிட்டு அகலும் போது, "ஜரிதாரி என்ற இவன் மூத்தவனாதலால், உனது குலமே இவனை நம்பி இருப்பதலால் இவனே {ஜரிதாரியே} அதற்கு ஆதாரமாக இருப்பான். இரண்டாவது மகனான சாரிஸ்ரிக்குவன் எனது மூதாதையரின் குலத்தை விருத்தி செய்வான். எனது மூன்றாவது மகனான ஸ்தம்பமித்ரன் தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவியாவான். எனது இளைய மகன் துரோணன், வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவன் ஆவான்" என்று சொல்லிவிட்டுச் சென்றாரே.
ஆனால் நம்மை இப்படிப்ப்பட்ட பேராபத்து சூழ்ந்துள்ளதே. நான் யாரை எடுத்துச் செல்வேன்? எதைச் செய்தால் செய்ய வேண்டியதைச் செய்ததாகும்? நான் தீர்மானிக்கும் சக்தியை இழந்துவிட்டேனே. எப்படி எனது பிள்ளைகளை நெருப்பில் இருந்து காப்பது என்று எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையே!" என்று அழுது கொண்டிருந்தாள்".
 "இப்படி ஒப்பாரி வைத்த தனது தாயிடம் அந்தக் பிஞ்சுக் குஞ்சுகள், "ஓ தாயே, உனது பாசத்தைக் கைவிட்டு, நெருப்பில்லாத இடத்திற்கு உடனே செல்வாயாக.
நாங்கள் இங்கே கொல்லப்பட்டாலும், பின்பு உனக்கு வேறு பிள்ளைகள் பிறப்பர். ஓ தாயே நீயே கொல்லப்பட்டால், நமது குலத்தில் வேறு பிள்ளைகள் இருக்க மாட்டார்கள்.
இந்த இடரைச் சிந்தித்துப் பார், ஓ தாயே, நமது குலத்திற்கு நன்மையான காரியத்தைச் செய்ய நேரம் வந்தவிட்டது. நீ காக்கப்பட்டால், உயர்ந்த உலகங்களை அடைய இன்னும் எங்கள் தந்தை {மந்தபாலகர்} உனது விருப்பங்களை ஈடேற்ற வழி இருக்கிறது" என்றன.
அந்தப் பிஞ்சுகள் சொன்னதைக் கேட்ட ஜரிதை, "இந்த மரத்தின் அருகே தரையில் ஒரு பொந்து இருக்கிறது. அஃது ஓர் எலிக்குச் சொந்தமானது. அந்தப் பொந்துக்குள் நேரங்கடத்தாமல் நுழையுங்கள். அப்போது உங்களுக்கு நெருப்பிடம் எந்தப் பயமும் இருக்காது.
 நீங்கள் அனைவரும் நுழைந்ததும், நான் அந்தப் பொந்தின் வாயிலை புழுதியால் அடைத்துவிடுவேன். சுடர்விட்டு எரியும் இந்த நெருப்பில் இருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி.
 பிறகு, நெருப்பு அணைந்ததும், நான் இங்கே திரும்பிவந்து புழுதியை அகற்றுவேன். நெருப்பில் இருந்து தப்ப வேண்டும் என்றால் எனது ஆலோசனைப்படி செய்வீரா" என்றாள் {சாரங்கப் பறவையான ஜரிதை}.
அதற்கு அந்தப் பறவைக் குஞ்சுகள், "இறகுகள் அற்று, சதைப்பிண்டம் போல் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், இறைச்சி உண்ணும் எலி எங்கள் அனைவரையும் அழித்துவிடும் என்பது நிச்சயம். எங்கள் முன் இருக்கும் ஆபத்தை நாங்கள் காண்பதால், அந்தப் பொந்துக்குள் நுழைய முடியாது.
 நெருப்பில் இருந்து தப்பிக்கவோ, அந்த எலியிடம் இருந்து தப்பிக்கவோ எங்களுக்கு எந்த வழியும் தெரியவில்லை. எங்கள் தந்தையின் {மந்தபாலரின்} இனப்பெருக்கம் பலன்றறுப் போவது எவ்வாறு? எங்கள் தாய் {ஜரிதை} காக்கப்படுவது எவ்வாறு? என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
 நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், எலி எங்களை அழித்துவிடும்; நாங்கள் இங்கேயே இருந்தால், விண்ணை முட்டும் இந்த நெருப்பு எங்களை அழித்துவிடும்; இந்தப் பேராபத்தைச் சிந்தித்துப் பார்த்தால், கடித்து உண்ணப்பட்டு இறப்பதைவிட, நெருப்பினால் இறப்பதே சிறந்தது.
 பொந்துக்குள் எலி விழுங்கிச் சாகும் நிலை தாழ்ந்தது; அதே வேளையில் நெருப்பினால் அழிவது ஞானமுள்ளோரால் ஏற்கப்பட்டுள்ளது" என்றன {அந்தக் குஞ்சுகள்}".
"தனது மகன்களின் வார்த்தைகளைக் கேட்ட ஜரிதை, "பொந்துக்குள் இருந்த அந்தச் சிறு எலியை ஒரு பருந்து தனது கூரிய நகத்தில் பற்றி எடுத்துச் சென்றது. எனவே, நீங்கள் அந்தப் பொந்துக்குள் சென்று அச்சமற்று இருக்கலாம்" என்றாள்.
இதைக் கேட்ட அந்தப் பிஞ்சுகள், "பருந்து அந்த எலியைத் தூக்கிச் சென்றதைக் குறித்து நமக்கு எந்த உறுதியும் கிடையாது. அந்தப் பொந்துக்குள் வேறு எலிகளும் இருக்கலாம். அவற்றிடம் இருந்து நமக்கு எப்போதும் அச்சம் உண்டு. ஆனால் இங்கோ இவ்வளவு தூரத்திற்கு நெருப்பு அணுக முடியுமா என்ற ஐயம் உள்ளது. ஏற்கனவே காற்றானது அந்நெருப்பை விலக்கிச் செல்வதைக் காண்கிறோம். நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், அந்தப் பொந்தில் வாழும் உயிரினத்தால் எங்களுக்குச் சாவு நிச்சயம்.
ஆனால், நாங்கள் இங்கேயே இருந்தால் சாவு என்பது ஐயத்திற்கிடமானதுதான். ஓ தாயே, உறுதியான மரணம் என்ற நிலையைவிட, உறுதியற்ற நிலையே சிறந்தது. எனவே, நீ இங்கிருந்து தப்புவது உனது கடமையாகிறது. நீ வாழ்ந்தால்தால் நல்ல குழந்தைகளைப் பெறும் வாய்ப்பிருக்கிறது" என்றன.
பிறகு அவர்களின் தாய் {ஜரிதை}, "பிள்ளைகளே, பறவைகளில் சிறந்த பருந்து, தாழ இறங்கிப் பொந்துக்குள் இருந்து எலியைத் தூக்கிச் செல்வதை நானே கண்டேன். அவன் {பருந்து} அப்படி வேகமாகப் பறந்து செல்கையில், நான் அவனைப் {பருந்தைப்} பின் தொடர்ந்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.
நான் அவனிடம், "ஓ பருந்துகளின் மன்னா! நீ எங்கள் எதிரியான எலியை உனது கூரிய நகங்களில் பற்றிச் செல்வதால், நீ எதிரிகள் இல்லாமல் வாழ்வாயாக. நீ சொர்க்கத்தில் தங்க மேனியுடன் வாழ்வாயாக" என்று வாழ்த்துகூறினேன்.
பிறகு அந்தப் பருந்து அந்த எலியை விழுங்கினான். நானும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டேன். எனவே, பிள்ளைகளே, இந்தப் பொந்துக்குள் நம்பிக்கையுடன் நுழையுங்கள். நீங்கள் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. அந்தப் பொந்தில் வசித்த எலி பருந்தால் பிடித்துச் செல்லப்படுவதை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன்" என்றாள் {ஜரிதை}.
அதற்கு அந்தப் பிஞ்சுகள், "ஓ தாயே, அந்த எலி பருந்தால் எடுத்துச் செல்லப்பட்டது என்பதை நாங்கள் எந்த வகையிலும் அறியவில்லை. அந்தக் காரியம் உறுதியானதா என்பது தெரியாமல் எங்களால் அந்தப் பொந்துக்குள் நுழைய முடியாது" என்றன
அதற்கு அவற்றின் தாய் {ஜரிதை}, "எலி பருந்தால் தூக்கிச் செல்லப்பட்டது எனக்கு உறுதியாகத் தெரியும். எனவே பிள்ளைகளே, நீங்கள் அஞ்சும் அவசியமில்லை. நான் சொல்வதைச் செய்யுங்கள்" என்றாள்.
அதற்கு அந்தப் பிஞ்சுகள், "ஓ தாயே, நீ எங்களது அச்சத்தை விலக்கப் பொய்க்கதையைச் சொல்கிறாய் என்று நாங்கள் சொல்லவில்லை. புத்தி கலங்கியிருக்கும்போது ஒரு நபரால் செய்யப்பட்ட காரியங்களை, அந்த நபரின் திட்டமிட்ட செயல் என்று அரிதாகவே கூறலாம்.
 எங்களால் உனக்கு எந்த ஆதாயமும் இல்லை. அதே போல நாங்கள் யார் என்பதையும் நீ அறியமாட்டாய். அப்படியிருக்கும்போது, நீ ஏன் உன் உயிரைப் பணயம் வைத்து எங்களைப் பாதுகாக்கமுனையவேண்டும்? நாங்கள் உனக்கு யார்? நீ இளமையும் அழகும் கொண்டிருக்கிறாய். உன்னால் உனது கணவரை {மந்தபாலரை} அடைய முடியும். நீ உன் கணவரிடம் செல்வாயாக. நீ மீண்டும் நல்ல குழந்தைகளைப் பெறுவாயாக. நாங்கள் இந்த நெருப்பில் புகுவதால், அருள் நிறைந்த உலகங்களை அடையவிடுவாயாக. இருப்பினும், நெருப்பு எங்களை உட்கொள்ளவில்லை என்றால், நீ மறுபடியும் இங்கு வந்து எங்களை அடையலாம்" என்றன {அந்தச் சாரங்கப் பறவைக் குஞ்சுகள்}".
 "இப்படித் தனது மகன்களால் சொல்லப்பட்ட அந்தத் தாய்ப்பறவை {ஜரிதை}, காண்டவ வனத்தை விட்டு, விரைவாக நெருப்பில்லாத பாதுகாப்பான இடத்திற்குச் சென்றாள்.
 விரைவாக முன்னேறிய அக்னி, தன்னுடைய கொடும் சுடர்களைக் கொண்டு மந்தபாலர் மகன்கள் இருந்த இடத்தை அணுகியது.
 அந்த இளம்பறவைகள் அந்தச் சுடர்விட்டு எரியும் நெருப்புத் தங்களை நோக்கி வருவதைக் கண்டனர். அந்த நான்கு பறவைக்குஞ்சுகளில் மூத்தவனான ஜரிதாரி, அக்னிக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பேசினான்".(18)
ஜரிதை, "ஞானமுள்ள மனிதன் மரணத்தைக் குறித்த விழிப்புடன் இருப்பான். எனவே, அவன் மரணத்தைச் சந்திக்கும் அந்த நேரத்தில் எந்தத் துயரமும் கொள்ளமாட்டான்.
ஆனால் குழம்பிய ஆன்மா, விழிப்புடன் இருப்பதில்லை. எனவே அவன் மரணத்தைச் சந்திக்கும்போது, வலியையும், துயரத்தையும் உணர்ந்து, முக்தி பெறுவதில்லை" என்றான்.
இரண்டாவது சகோதரனான சாரிசிரிகன், "நீ அமைதியும் புத்திசாலித்தனமும் கொண்டவன். நமது உயிருக்கு அச்சுறுத்தலான சமயம் வந்திருக்கிறது. பலரில் ஒருவரே ஞானமுள்ளவனாகவும் வீரமுள்ளவனாகவும் வரமுடியும். இதில் ஐயமில்லை" என்றான்.
மூன்றாவது சகோதரனான ஸ்தம்பமித்ரன், "மூத்த சகோதரனே காப்பாளன் என்று அழைக்கப்படுகிறான். மூத்த சகோதரனே (இளையவர்களை) ஆபத்திலிருந்து மீட்பவன். மூத்தவனே அவர்களைக் காப்பதில் தவறினால், இளையவர்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான்.
நான்காவதும் மிக இளையவனுமான துரோணன், "ஏழு நாவுகளையும் ஏழு வாய்களையும் கொண்ட கொடும் நெருப்புத் தேவன் {அக்னி}, சுடர் விட்டு எரிந்து, தன் வழியில் எதிர்ப்படும் அனைத்தையும் நக்கிக் கொண்டு, நமது வசிப்பிடத்தை நோக்கி வருகிறான்" என்றான்".
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்ட மந்தபாலரின் மகன்கள் ஒவ்வொருவரும் அக்னியிடம் அர்ப்பணிப்புடன் கூடிய துதியைப் பாடினார்கள். ஓ ஏகாதிபதியே அவர்களின் பாடலை நான் உரைக்கிறேன் கேட்பாயாக.
ஜரிதாரி, "ஓ நெருப்பே, காற்றின் ஆன்மா நீயே, பூமியின் தாவரங்களுக்கு உடலாக இருப்பவன் நீயே, ஓ சுக்ரா, உனக்கு நீர் {தண்ணீர்} காரணம் அதுபோல நீருக்கு காரணன் நீயே.
 ஓ பெரும் சக்தி கொண்டவனே, உனது சுடர்கள் சூரியனின் கதிர்களைப் போலத் தங்களைப் மேலும் கீழுமாக, முன்பும் பின்புமாக அனைத்துப் பக்கங்களிலும் பெருக்கிக் கொள்கின்றன" என்றான்.
சாரிசிரிகன், "ஓ புகையைக் கொடியாகக் கொண்ட தேவனே {அக்னியே}, எங்கள் தாயை {ஜரிதையை} காணவில்லை, நாங்கள் எங்கள் தந்தையையும் அறிந்ததில்லை. எங்களுக்குச் சிறகுகள் இன்னும் முளைக்கவில்லை. எங்களைக் காக்க யாருமில்லை. எனவே, ஓ அக்னியே, நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் எங்களைக் காப்பாயாக.
  ஓ அக்னியே, துயரத்தில் இருக்கும் எங்களை, உனது அதிர்ஷ்டமான உருவத்தாலும், உனது ஏழு சுடர்களாலும் காப்பாற்று! நாங்கள் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறோம்
ஓ அக்னி (அண்டத்துக்கு) வெப்பத்தைக் கொடுப்பவன் நீயே. ஓ தலைவா, உன்னைத்தவிர வேறு யாரும் சூரியனின் கதிர்களுக்கு வெப்பத்தைக் கொடுக்க முடியாது. சிறுவர்களாகவும் முனிவர்களாகவும் இருக்கும் எங்களைக் காப்பாற்றுவாயாக. ஓ ஹவ்யவாஹனா (வேள்வி நெய்யைச் சுமப்பவனே), வேறு வழியில் சென்று மனநிறைவு அடைவாயாக" என்றான்.
ஸ்தம்பமித்ரன், "ஓ அக்னியே, அனைத்தும் நீயே. இந்த முழுப் அண்டத்தையும் படைத்தவன் நீயே. அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்பவன் நீயே. முழு அண்டத்தையும் தாங்கி நிற்பவன் நீயே.
 வேள்வி நெய்யைச் சுமந்து செல்பவன் நீயே. அந்த அற்புதமான வேள்வி நெய்யும் நீயே. ஞானமுள்ளோரால் ஒருவனாகவும் (காரணகர்த்தாவாகவும்), பலராகவும் (விளைவுகளாகவும்) அறியப்படுபவன்.
 மூன்று உலகங்களையும் படைத்தவன் நீயே, நேரம் வரும்போது உன்னைப் பெருக்கிக் கொண்டு அவற்றை அழிப்பவன் நீயே. உற்பத்திக்குக் காரணன் நீயே, அண்டத்தில் கரைந்திருக்கும் சாறு நீயே" என்றான்.
துரோணன், "ஓ அண்டத்தின் தலைவா, பலத்தால் வளர்ந்து, உடல்களில் தங்கி, உயிரினங்கள் உண்ணும் உணவை செரிக்க வைப்பவன் நீயே. எனவே அனைத்தும் உன்னுள்ளேயே நிலைத்திருக்கின்றன.
 ஓ சுக்ரா, உனது வாயிலிருந்து வேதங்கள் வெளிவந்தன. சூரியனாக இருந்து உலகத்தின் நீரையும், உலகம் விளைவிக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் குடித்துக் கொண்டிருப்பவன் நீயே. அப்படிக் குடித்து, அதை மழையாகக் கொடுப்பவன் நீயே. மழையாய் வந்து அனைத்தையும் வளரச் செய்பவன் நீயே.
 ஓ சுக்ரா, இந்தச் செடிகளும் அடர்த்தியான இலைகள் கொண்ட கொடிகளும் உன்னிடம் இருந்தே உண்டாகின. குளங்களும், தடாகங்களும், பெருங்கடலும் உன்னிடம் இருந்தே அருளப்பட்டன.
ஓ கடும் கதிர்கள் கொண்டவனே, எங்களது இந்த உடல் வருணனை {நீர்க்கடவுள்} நம்பி இருக்கிறது. எங்களால் உனது வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. எனவே, எங்களுக்கு நற்பேற்றைத்தரும் காப்பாளனாக இருப்பாயாக. எங்களை அழித்துவிடாதே.
 ஓ தாமிர நிறக் கண்களை உடையவனே, சிவந்த கழுத்துக் கொண்டவனே, நடக்கும் பாதையைக் கருப்பு நிறத்தால் குறிப்பவனே, தனது கரையில் இருக்கும் வீட்டை சமுத்திரம் காப்பது போல, வேறு திசைக்குத் திரும்பி எங்களை நீ காப்பாயாக" என்றான்".
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரம்மத்தை உச்சரிப்பவனான துரோணனால் இப்படிக் கேட்டக்கொள்ளப்பட்ட அக்னி, தான் கேட்டதில் {புகழப்பட்டதில்} பெரும் மனநிறைவு கொண்டு, தான் மந்தபாலருக்கு அளித்த உறுதியையும் நினைவு கூர்ந்து அவனிடம்,
 "ஓ துரோணரே! நீர் முனிவர். நீர் சொன்னது அனைத்தும் பிரம்மம் (வேத உண்மை). நான் உங்களை மகிழ்ச்சியடையச் செய்வேன். அஞ்சாதீர்.
 உண்மையில், நான் இக்கானகத்தை உட்கொள்ளும் போது, தனது மகன்களைக் காக்க வேண்டும் என்று மந்தபாலர் என்னிடம் வேண்டினார். அவர் {மந்தபாலர்} என்னிடம் பேசிய பேச்சுகளும், உமது பேச்சும் எனக்கு நிறைவை அளித்தன. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நான் உமது துதியால் பெரும் மனநிறைவு அடைந்தேன். ஓ பிராமணரே! நீர் அருளப்பட்டிருப்பீராக" என்றான் {அக்னி}.
துரோணன், "ஓ சுக்ரா, இந்தப் பூனைகள் தினமும் எங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றன. ஓ ஹுதாசனா; அவற்றின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்த்து அவைகளை உட்கொள்வாயாக" என்றான்".
, "பிறகு அக்னி அந்தச் சாரங்கப் பறவைகளிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுத் தனது நோக்கத்தைத் தெரிவித்தான். மேலும், ஓ ஜனமேஜயா, அவன் பலத்தால் வளர்ந்து, அந்தக் காண்டவ வனத்தை மேலும் எரிக்கத் தொடங்கினான்".
"ஓ குருகுலத்தைச் சேர்ந்தவனே {ஜனமேஜயா}, முனிவர் மந்தபாலர், தான் கொடுங்கதிர்கள் கொண்ட தேவனிடம் {அக்னியிடம்} பேசிவிட்டாலும், தனது பிள்ளைகள் குறித்து எண்ணி மிகுந்த பதற்றமடைந்தார். உண்மையில், அவர் மனமே அமைதியில் நிலைக்கவில்லை.
தனது மகன்களைக் குறித்த துயருற்று, (தனது இரண்டாவது மனைவியான) லபிதையிடம், "ஓ லபிதா, எனது பிள்ளைகளுக்கு நகரும் சக்தி கிடையாது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ? காற்றுக் கடுமையாக வீசி, நெருப்புப் பலமாக வளரும்போது, எனது பிள்ளைகளால் தங்களைக் காத்துக் கொள்ள முடியாதே.
அவர்களது தாயால் {ஜரிதையால்} அவர்களை எப்படிக் காப்பாற்றி மீட்க முடியும்? அந்த அப்பாவிப் பெண், தன்னால் தனது சந்ததியைக் காக்க முடியவில்லை என்று அறியவரும் போது, துக்கம் தாளமாட்டாளே.
 என் மகன்களால் பறக்கவோ, காற்றில் எழவோ முடியாது என்பதால் அவள் பல்வேறு வகையில் கதறிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பாள்.
 ஐயோ, எனது மகன்கள், ஜரிதாரி, சாரிசிரிகன், ஸ்தம்பமித்ரன், மற்றும் துரோணன் ஆகியோர் எப்படி இருக்கிறார்களோ? அவர்களது ஆதரவற்ற தாய் {ஜரிதை} எப்படி இருக்கிறாளோ?" என்று துயரத்துடன் பேசினார் {மந்தபாலர்}.
, அப்படிச் சொல்லி அழுது கொண்டிருந்த முனிவர் மந்தபாலரிடம், சக்காளத்தியின் மேல் இருந்த பொறாமையால் லபிதை,
"உமது பிள்ளைகள் அனைவரும் பெரும் சக்தியும், ஆற்றலும்ம் கொண்ட முனிவர்கள் என்று நீர் என்னிடம் உறுதியாகச் சொன்னீர். எனவே அவர்களைக் குறித்து நீர் வருந்தாதீர். அவர்களுக்கு நெருப்பிடமிருந்து அச்சமில்லை.
அக்னியிடம் அவர்கள் சார்பாக என் முன்னிலையில்தானே பேசினீர்? அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் அவர்களைக் காப்பதாகச் சொன்னாரல்லவா?
அண்டத்தின் பிரதிநிதிகளில் ஒருவனான {லோகபாலனான} அக்னி தனது பேச்சை பொய்த்துக்கொள்ள மாட்டான். உமக்குக் கவலையும் இல்லை, நண்பர்களின் நன்மை குறித்து உமது இதயம் நினைக்கவும் இல்லை.
எனது எதிரியை (ஜரிதையை) நினைத்து நீர் கவலைகொள்வதால் தான் இவ்வாறு தடுமாறுகிறீர். என் மீது நீர் வைத்திருக்கும் அன்பு, முதலில் நீர் அவளிடம் வைத்ததற்குச் சமமாக இல்லை என்பது நிச்சயம்.
தனது கவனத்தை இரு தரப்பிடம் சிதறவிடும் ஒருவன், அதில் ஒரு தரப்பு துன்பப்படுவதைள் காணலாம்; ஆனால் அவன் தனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மற்றொரு தரப்பை அலட்சியம் செய்யக் கூடாது.
நீர் யாருக்காக வருத்தப்படுகிறீரோ, அந்த ஜரிதையிடமே செல்வீராக. என்னைப் பொறுத்தவரை, உம்மைப் போன்ற தீய மனிதனுடன் நெருக்கமாக இருந்ததற்குப் பலனாக இனிமேல் தனிமையில் திரியப் போகிறேன்" என்றாள் {லபிதை}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட மந்தபாலர், "நீ சொல்வது போல எண்ணம் கொண்டு நான் உலகில் திரியவில்லை. பிள்ளைப்பேற்றுக்காகவே நான் இங்கே இருக்கிறேன். அப்படி நான் பெற்ற பிள்ளைகளே கூட இப்போது ஆபத்தில் இருக்கின்றனர்.
 தான் பெறப் போகும் ஒன்றிற்காக, தன்னிடம் உள்ள ஒன்றைக் கைவிடும் மனிதன் தீயவனாவான். இந்த உலகம் அவனைப் புறக்கணித்து அவமானப்படுத்தும் (எனவே, நான் இங்கிருந்து செல்ல வேண்டும்).
 உன்னைப் பொறுத்தவரை நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அதைச் செய்து கொள்வாயாக.
 மரங்களை நக்கிச் செல்லும் இந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு, துயர் கொண்ட எனது இதயத்தின் வேதனையை அதிகரிக்கிறது. அப்படி வேதனை அதிகரிப்பதால், தீய நிமித்தங்கள் எழுகின்றன" என்றார் {மந்தபாலர்}"
 "அதே வேளையில், அந்தச் சாரங்கப் பறவைகள் வசித்த இடத்தில் நெருப்பு அடங்கியது. தனது பிள்ளைகளிடம் அதிகப் பிணைப்புள்ள ஜரிதை, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் காண துயரத்துடன் விரைவாக வந்தாள்.
அவர்கள் அனைவரும் நெருப்பிலிருந்து தப்பிப் பிழைத்து நலமுடன் இருப்பதைக் கண்டாள். அந்தக் குஞ்சுகள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருந்தாலும் தங்கள் தாயைத் கண்டதும் கதறி அழத் தொடங்கின அவளும் அவர்களை உயிரோடு கண்டதால் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவள் {ஜரிதை}, அழுது கொண்டிருக்கும் தனது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவினாள்.
 சரியாக அதே நேரத்தில், ஓ பாரதா {ஜனமேஜயா}, மந்தபால முனிவர் அங்கே வந்தார். ஆனால், அவரைக் கண்டு அவரது மகன்களில் ஒருவரும் மகிழவில்லை.
 இருப்பினும், அந்த முனிவர் {மந்தபாலர்} அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒருவர் பின் ஒருவராகப் பேசினார். பிறகு ஜரிதையிடமும் பேசினார். திரும்பத் திரும்பப் பேசினார். ஆனால், ஒரு மகனோ, ஜரிதையோ அவரிடம் நல்லதாகவோ அல்லதாகவோ பதிலுக்கு ஏதும் பேசவில்லை.
பிறகு மந்தபாலர், "இவர்களில் எவன் உனது மூத்த மகன்? எவன் அவனுக்கு அடுத்தவன்? எவன் மூன்றாமவன்? எவன் அனைவரிலும் இளையவன்?
 நான் துயரத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ ஏன் எனக்குப் பதில் சொல்ல மறுக்கிறாய்? நான் உன்னை விட்டுச் சென்றது உண்மைதான், ஆனால், நான் இருந்த இடத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை" என்றார்.
பிறகு ஜரிதை, "மூத்தவனிடமும், அடுத்தவனிடமும், மூன்றாமவனிடமும், இளையவனிடமும் உமக்கு என்ன வேலை இருக்கிறது?
இனிய புன்னகையும், இளமையும் கொண்டவளான லபிதையிடம் செல்வீராக. என்னை ஒன்றுமில்லாமல் விட்டுவிட்டு முன்பு நீர் அவளிடம் சென்றீர்!" என்றாள்.
அதற்கு மந்தபாலர், "பெண்களைப் பொறுத்தவரை, சக்காளத்தியையோ, கமுக்கக் {இரகசியக்} காதலியையோ விடத் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைக்க இந்த உலகத்திலும் சரி, வேறு உலகத்திலும் சரி வேறு காரணம் தேவையில்லை.
 இந்த இரண்டைத் தவிர வேறு எதுவும், நெருப்பைப் போன்று எரியும் பகையைக் கொள்ளச்செய்யாது. பெரும் வேதனையையும் உருவாக்காது. நன்கு அருளப்பட்டவளும், அனைத்து உயிரிலும் கொண்டாடப்பட்டவளுமான அருந்ததியும்கூட, தனது மனைவியின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்த சிறப்பு மிகுந்த வசிஷ்டரிடம் பொறாமையுடன் நடந்து கொண்டாள்.
 மேலும் அருந்ததி எழுவரில் {சப்தரிஷிகளில்} ஒருவரான அந்த ஞானமுள்ள முனிவரை {வசிஷ்டரை} அவமதித்தாள். அந்த அவமதிக்கும் சிந்தனையாலேயே அவள் சிறிய நட்சத்திரமாக, நெருப்புடன் புகை கலந்தது போல, நல்லதைச் செய்யாத சகுனங்களாக, சில நேரங்களில் தெரிந்தும், சில நேரங்களில் மறைந்தும் இருக்கிறாள்.
நான் உன்னை உனது பிள்ளைகளுக்காகவே கருத்தில் கொள்கிறேன். வசிஷ்டர் எப்படித் தனது மனைவிக்குக் குற்றமிழைக்கவில்லையோ அப்படி நானும் உனக்குக் குற்றம் இழைக்கவில்லை. எனவே, பொறாமை கொண்டு அருந்ததி வசிஷ்டரிடம் நடந்து கொண்டதைப் போல நீ என்னிடம் நடந்து கொள்கிறாய்.
மனிதர்கள், பெண்களை அவர்கள் தங்கள் மனைவிகளாகவே இருப்பினும் நம்பக்கூடாது. பெண்கள், தாயாகிவிட்டால், தனது கணவனுக்குச் சேவை செய்யக் கருதுவதில்லை" என்றார் {மந்தபாலர்}".
 "அதன்பிறகு, அவரது {மந்தபாலரது} பிள்ளைகள் அனைவரும் வந்து அவரை வழிபட்டனர். அவர் அவர்களிடம் அன்புடன் பேசி, அவர்களுக்கு அனைத்து உறுதிகளையும் கொடுத்தார்".
"மந்தபாலர் தனது பிள்ளைகளிடம், "உங்கள் பாதுகாப்புக்காக நான் அக்னியிடம் பேசினேன். அந்தச் சிறப்புமிகுந்த தேவன் {அக்னி} எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தான்.
அக்னியின் அந்த வார்த்தையாலும், உங்கள் தாயின் {ஜரிதையின்} அறத்தாலும், நீங்களே பெற்றிருக்கும் பெரும் சக்தியாலும் தான் நான் முன்னமே வரவில்லை.
எனவே எனது மக்களே {மகன்களே}, என்னைக்குறித்து உங்கள் இதயங்களில் மனக்கசப்பை நிலைக்கச் செய்யாதீர். நீங்கள் அனைவரும் வேதங்களை அறிந்த முனிவர்கள். அக்னி கூட உங்கள் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்" என்றார்".
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தமது மகன்களுக்கு இப்படிப்பட்ட உறுதிகளைக் கொடுத்த அந்த பிராமணர் மந்தபாலர், தன்னுடன் தனது மனைவியையும் {ஜரிதையையும்} மகன்களையும் {சாரங்கப் பறவைகளையும்} அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று, வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டார்.
இப்படியே அந்தக் கொடும் கதிர்கள் கொண்ட பிரகாசமான தேவன் {அக்னி}, பலத்தால் வளர்ந்து, இரு கிருஷ்ணர்களின் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின்} துணையுடன் உலக நன்மைக்காகக் காண்டவ வனத்தை எரித்தான்.
கொழுப்பு மற்றும் எலும்பினுள் இருக்கும் மஜ்ஜையின் ஆறுகள் பலவற்றைக் குடித்த அக்னி பெரிதும் மனநிறைவு அடைந்து தன்னை அர்ஜுனனுக்கு வெளிக்காட்டினான்.
மருத்துகளால் {காற்றுத் தேவர்களால்} சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, வானில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்}, கேசவனிடமும் {கிருஷ்ணனிடமும்},
 "தேவர்களாலும் கூடாத காரியத்தைச் சாதித்துவிட்டீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மனிதர்களால் அடைய முடியாத வரத்தை கேட்கலாம். நான் உங்களிடம் பெரும் மனநிறைவைக் கொண்டுள்ளேன்" என்றான் {இந்திரன்}".
வைசம்பாயனர் தொடர்ந்தார்,
"பார்த்தன் {அர்ஜுனன்}, இந்திரனிடம் அவனது அனைத்து ஆயுதங்களையும் கேட்டான். இது குறித்துப் பெரும் பிரகாசமுள்ள சக்ரன் {இந்திரன்}, அவற்றைக் கொடுக்க ஒரு நேரத்தை நிச்சயத்துக் கொண்டு,
 "சிறப்பு மிகுந்த மாதவன் {கிருஷ்ணன்} உன்னிடம் எப்போது மனநிறைவு கொள்வானோ, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, அப்போது நான் என் ஆயுதங்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
ஓ குரு குலத்தின் இளவரசனே {அர்ஜுனனே}, அந்த நேரம் வரும்போது அதை நான் அறிவேன். உனது கடுந்தவங்களுக்காக, நான் உனக்கு நெருப்பாலான ஆயுதங்கள் {அக்னேயா அஸ்திரங்கள்} மற்றும் வாயவ்யா ஆயுதங்கள் ஆகிய அனைத்தையும் கொடுப்பேன். நீயும் அனைத்தையும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாய்" என்றான் {இந்திரன்}.
அர்ஜுனனுடனான தனது நட்பு எப்போதும் நிலைத்ததாக இருக்க வேண்டும் என்று வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டான். புத்திசாலிக் கிருஷ்ணன் விரும்பிக் கேட்ட வரத்தை தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, அருளினான்.
 கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் கேட்ட இந்த வரங்களைக் கொடுத்த மருத்துகளின் தலைவன் {இந்திரன்}, ஹுதாசனனுடனும் (வேள்வி நெய்யை உணவாகக் கொண்டவன்) {அக்னியுடனும்} பேசிய பிறகு, அனைத்துத் தேவர்களையும் அழைத்துக் கொண்டு விண்ணுலகம் சென்றான்.
 பதினைந்து நாட்கள் அக்கானகத்தையும், அதிலிருந்த விலங்குகள், பறவைகள் ஆகியவை அனைத்தையும் எரித்த அக்னி பெரும் மனநிறைவு கொண்டு, மேலும் எரிவதை நிறுத்திக் கொண்டான்
ஏராளமான அளவில் இறைச்சியை உண்டு, கொழுப்பு மற்றும் இரத்தத்தைக் குடித்து பெரும் மனநிறைவை அடைந்த அக்னியானவன், அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனிடம்,
"மனிதர்களில் புலிகளான உங்கள் இருவரால் நான் மனநிறைவு அடைந்தேன். வீரர்களே, எனது கட்டளையால் {வரத்தால்}, விரும்பும் இடத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள்" என்றான்.
 சிறப்பு வாய்ந்த அக்னியால் இப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனனும், வாசுதேவனும், தானவன் மயனுமாகிய அம் மூவரும் சிறிது நேரம் அங்கே உலாவி விட்டு இறுதியாக இனிமைநிறைந்த ஆற்றங்கரையில் வந்து அமர்ந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.
************ ஆதிபர்வம் முற்றும் ************
..
தொடரும்
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment