Friday, December 3, 2021

Pruthu vamsam

ப்ருது வம்சம்-ப்ராசீனபர்ஹிஸ்-ப்ரசேதஸர்கள்
ப்ருது சக்ரவர்த்திக்கு தன் பார்யை அர்ச்சிஸ் மூலம் விஜிதாச்வன், தன்வகேசன், ஹர்யக்ஷன், த்ரவிணன், வ்ருகன் என்ற ஐந்து புத்திரர்கள் ஜனித்தனர். ப்ருதுவுக்கு பிறகு விஜிதாச்வன் பூமண்டலத்தை ஆண்டு வந்தான். தன் நான்கு ஸஹோதரர்களுக்கும் நான்கு திக்குகளையும் பங்கிட்டுக் கொடுத்தான். பிதாவின் யாகக்குதிரையை திருடிச்சென்ற இந்த்ரனைத் தொடர்ந்து சென்று பிடித்து, குதிரையை மீட்டதால் அவனுக்கு விஜிதாச்வன் என்ற பெயர் ஏற்பட்டது. தன்னைக் கொல்லாதுவிட்ட அவனுக்கு இந்த்ரன் அந்தர்தான சக்தியைக் (மறைந்திருக்கும் ஆற்றல்) கொடுத்தான். ஆதலால் அவனுக்கு அந்தர்தானன் என்ற பெயருமுண்டு. அவனுக்கு அவன் பத்னி சிகண்டினீ மூலம் பாவகன், பவமானன், சுசி என்று மூன்று புதல்வர்கள். இவர்கள் மூவரும் யோகசக்தியால் மூன்று அக்னிக்களாக மாறிவிட்டனர். அந்தர்தானனுக்கு இன்னொரு பார்யையான நபஸ்வதி மூலம் ஹவிர்தானன் என்ற பிள்ளை பிறந்தான். அவன் த்யானத்தில் ஆழ்ந்திருந்து வைகுண்டமடைந்தான். ஹவிர்தானனின் ஆறு பிள்ளைகளுள் ஒருவன் பர்ஹிஷதன். இவன் யாக, யஜ்ஞங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். அவன் யாகங்கள் செய்யுங்கால் தர்ப்பைகளை கிழக்கு நுனியாகப் பரப்பி அவைகளாலேயே நிலப்பரப்பு பரவியிருந்ததால் அவனுக்கு ப்ராசீனபர்ஹிஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் சமுத்திரராஜன் கன்னிகையான சதத்ருதி என்பவளைத் திருமணம் செய்து கொண்டான். விவாஹ காலத்தில் அக்னியை வலம் வந்தபோது சதத்ருதியைக் கண்டு அக்னிதேவனே மோஹித்தான் என்பதால் அவள் அவ்வளவு சௌந்தர்வதியாக இருந்தாள் என்பது ப்ரஸித்தம். அந்த தம்பதிகளுக்கு பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் ப்ரசேதஸர்கள் என்றழைக்கப்பட்டார்கள்.

ருத்ரகீதம் (யோகாதேசம்)
ப்ரசேதஸர்கள் பதின்மரையும் ப்ராசீனபர்ஹிஸ் மக்களைப் பெற்று வம்சத்தைப் பெருக்குங்கள் என்று கட்டளையிட்டார். அவர்களும் அதற்குரிய தவவலிமையைப் பெறுவதற்காக தவம்புரிய ஏற்ற ஒர் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க மேற்கு திசையில் பிரயாணம் செய்தார்கள்.
அவர்கள் ஒரிடத்தில் ஓர் அற்புதமான ஏரியைக் கண்டார்கள். அந்த ஸரஸ்ஸிலிருந்து பலவாத்யங்களுடன் கூடின இனிய ஸங்கீத சப்தம் கேட்டது. சிறிது நேரம் கவனத்துடன் அவர்கள் அங்கே நின்றிருந்தபோது கந்தர்வர்கள், கின்னரர்கள் புகழ்பாட, பரிவாரங்கள் சூழ, முக்கண் படைத்த பரமசிவன் அந்தத் தடாகத்திலிருந்து வெளிவந்து ப்ரசேதஸர்களிடம் தாமாகவே வந்துசேர்ந்தார். அவர் அவர்களிடம் கூறினார். "நான் உங்கள் எண்ணங்களை நன்கு அறிவேன். நாராயணனின் பக்தர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். உங்களுக்கு விஷ்ணுவை ஆராதிக்க ஏற்றதொரு ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்கிறேன். அதை ஜபித்தால் உங்களுக்கு எல்லா நலன்களும் ஏற்பட்டு உங்கள் மனோரதங்களும் ஈடேறும்" என்று கூறி "ருத்ரகீதம்" (ருத்ரனால் பாடப்பட்டது) என்று அந்த ஸ்தோத்ரத்தை அவர்களுக்கு அனுக்ரஹித்தார். அதன் உட்கருத்தாவது –
"ஆத்மாவை அறிந்த பரம்பொருளே ! உமக்கு ஜயம் உண்டாவதாக ! எனக்கு எல்லா நலன்களும் ஏற்படுவதாக ! நீரே எல்லாவற்றிலும் ஆத்மஸ்வரூபமாக ஊடுருவியிருக்கிறீர். பரப்ரம்மம் எனப்படும் நீர் ஸுர்யனின் ஒளியைப்போல் எங்கும் நிறைந்திருக்கிறீர். ஸ்ருஷ்டிக்கு முன் நீர் ஒருவரே இருந்தீர். நீர் ஸ்ருஷ்டியை இச்சிக்க, ஸத்வாதிகுணங்களுள்ள ப்ரக்ருதி தத்வமும், அதனின்று மஹத், அதனின்று அஹங்காரம், அதனின்று ஆகாசம், அதனின்று வாயுவும், அதனின்று அக்னியும், அதனின்று நீரும், (அப்பு) அதனின்று ப்ருத்வியும், இப்பஞ்சபூதங்களிடமிருந்து அண்டமும், அதனின்று ப்ரம்மாதி தேவர்கள், மனுஷ்யர்களும் உண்டாயினர். தேவர், திர்யக் (பிராணிகள்) மனுஷ்யர், ஸ்தாவரம் (தாவர இனம்) என்ற நான்கு வகைப்பட்ட சரீரங்கள் உள்ளே அந்தர்யாமியாய்ப் ப்ரவேசித்த உம்மைப் புருஷன் என்கிறார்கள். நீரே ப்ரேரணை கர்த்தா (தூண்டுபவன்). ஸம்ஹார கர்த்தாவும் நீரே. நீர் எனக்கு ஸத்புருஷர்களின் தொடர்பைக் கொடுக்க வேண்டும்".
பரமசிவன் ப்ரசேதஸர்களைப் பார்த்துக் கூறினார். "யோகாதேசம்" எனப்படும் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஜபியுங்கள். இந்த ஸ்தோத்திரத்தை பகவானே எனக்கும், ப்ரம்மாவுக்கும், ப்ருகு போன்ற மஹரிஷிகளுக்கும் ஸ்ருஷ்டித் தொழிலுக்கு உதவியாக உபதேசித்தார். இந்த ஸ்தோத்திரத்தை ஜபம் செய்தே நாங்கள் ஸ்ருஷ்டித் தொழிலை மேற்கொண்டோம். இதை விடியற்காலையில் ஜபிப்பவனுக்கு எல்லாப் பாவங்களும் நீங்கும். இதை ச்ரத்தையுடன் ஜபியுங்கள். உங்கள் விருப்பம் கைகூடும்". 
ப்ரசேதஸர்கள் ருத்ரன் கூறியபடியே இந்த ஸ்தோத்திரத்தை ஜலத்தில் நின்று கொண்டு ஜபம் செய்து பதினாயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார்கள்.
(தொடரும்)
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திரு விஜயராகவன் நரசிம்ஹன் அவர்கள்.

No comments:

Post a Comment