Sunday, December 19, 2021

Orchestra of Sriranganathar

பூலோக வைகுண்டம் ஆச்சர்யங்கள் – 81
*ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இசைப்பரிவாரம்*

ஸ்ரீரங்கம் கோயிலில் 20க்கும் மேற்பட்ட வாத்தியங்கள், வைகுந்த ஏகாதசி போன்ற முக்கிய உத்ஸவ காலங்களில் புறப்பாட்டின் போது அந்தந்த நியம நெறிமுறைக்கேற்ப இசைக்கப்படுகின்றன. தோல்கருவி, துளைக்கருவி, நரம்பிசைக் கருவிகள் என வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை. இவை வெள்ளி எக்காலம், சுத்தமத்தளம், இடக்கைவாத்தியம், வீர வண்டி, சேமங்கலம், திருச்சின்னம், வாங்கா, பாரிமணி, ஜால்ரா, பாரி உடல், சிறிய உடல், பெரிய உடல் (டமாரம்), செம்பு எக்காளம், மிருதங்கம், சங்கு, பேரி, தாளம், தவில், திமிரி நாதஸ்வரம், முரசு, வீணை என்பனவாகும்.

பெருமாள் அன்றாடம் காலையில் துயில் எழும்போதும், இரவு பள்ளி கொள்ளும் முன்பும் வீணையிசையோடு தான் எழுவார், துயில் கொள்வார். இந்த வீணையானது சந்தனு மண்டபத்தில் ஒரு மரப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் தேவைப்படும் போது தான் வெளியே எடுப்பார்கள். மற்ற வாத்தியங்கள் யாவும் ஒரு சேர இரண்டாம் பிரகாரத்தில் உள்ள வாத்தியங்கள் அறையில் வைக்கப்பட்டிருக்கும். எக்காளம் என்பது பெருமாளுக்கு திருவாராதனம் நிறைவில் மங்கள ஆரத்திக்காக திரை வாங்கும் போது வாசிக்கப்படும். 

சங்கு, ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரும்போது வாசிக்கப்படும். முரசு நான்முகன் கோபுரத்தின் முதல் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். தினமும் மாலையில் பண்டையகால முறைப்படி பொழுது சாய்ந்துவிட்டது, பெருமாளுக்கு மாலை நேர திருவாராதனம் நடக்கப்போகிறது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக நீண்டநேரம் ஒலிக்கப்படும்.

இதன் ஓசை நீண்ட நேரம் மட்டுமல்ல, நீண்ட தொலைவுக்கும் கேட்கும். திமிரி நாதஸ்வரம் மற்ற நாதஸ்வரத்திலிருந்து சற்றே மாறுபட்ட தோற்றத்துடன் இருக்கும், கோயில் வளாகத்திற்குள் (கல்மண்டபத்திற்குள்) வாசிக்கும் போது இதன் ஓசை எதிரொலியோடு அமைந்து மங்கள இசையாக ஒலிக்கும். இதை வாசிப்பதற்கு தனிப்பயிற்சி வேண்டும். நாதஸ்வரம் வாசிக்கும்போது உடன் தவில் இசைக்கப்படும்.

மிருதங்கம் மற்றும் சுத்த மத்தளம் உத்ஸவ காலங்களில் பெருமாள் புறப்பாட்டின் போது இசைத்தபடி எடுத்துவரப்படும். பெரிய உடல் (டமாரம்), சிறிய உடல்
ஆகியவை பெருமாள் புறப்பட்டால் அவர் வருவதை பக்தர்களுக்கு தெரிவிப்பதற்காக பெருமுழக்கத்தோடு எடுத்து வரப்படும். வெளிவீதிகளில் பெருமாள் வலம் வரும்போது, தொலைவில் வரும்போதே பெரிய உடல் சப்தம் கேட்டு வெளிவீதியில் உள்ளவர்கள் பெருமாள் வருகிறார் என்ற குறிப்பறிந்து, வாசலுக்கு வந்து பெருக்கி, சுத்தம் செய்து நீர்தெளித்து, கோலம் போட்டு பெருமாளை வரவேற்க தயாராவார்கள்.

இந்த பெரிய உடல் ஒவ்வொரு தேரோட்டத்தின்போதும், தேரின் பின்பக்கம் கட்டி வைக்கப்பட்டு முழங்கச் செய்யப்படும். இது பக்தர்கள் தங்களின் இழுதிறனை ஒருமித்துக் கொடுத்து தேர் சுலபமாக ஓட வழிவகை செய்யும், ஏதாவது காரணத்தால் தேர் நிற்கும்போது இது இசைப்பது நிறுத்தப்படும். மீண்டும் புறப்படத் தயாரானதும் ஓங்கி ஒலிக்கப்படும்.
வீரவண்டி, சேமங்கலம் ஆகியவை பெருமாள் புறப்பாட்டின் போது இசைக்கப்படும். பாரிமணி இரவு நேரத்தில் ஒவ்வொரு வாசலும் மூடப்படும் முன் இசைக்கப்படும். இந்த வாத்தியங்கள் எந்தெந்த உத்ஸவத்தின் போது, எந்ததெந்த சந்தர்ப்பங்களில், எந்தெந்த இடங்களில் வாசிக்க வேண்டும் என்பதற்கு வரையறைகள் உண்டு. 

வைகுந்த ஏகாதசியின்போது 20 நாட்களிலும் பெருமாள் புறப்பாட்டின்போது இவற்றில் பெரும்பாலான வாத்தியங்கள் ஒரு சேர இசைக்கப்படும். பெருமாள் வெளியில் சென்றுவிட்டு மூலஸ்தானம் சேருமுன் சிறிது நேரம் வீணையிசை கேட்டபடி நிற்பார்.

இந்நிகழ்ச்சிக்கு வீணை ஏகாந்தம் என்று - பெயர், குறைந்த அளவு கூட்டமிருக்கும்
இதுபோன்ற நேரத்தில் சுற்றியிருப்பவர்கள் அமைதியாக நின்றிருக்க, இயல்பாகவே மெல்லிய இசை எழுப்பும் வீணையிசையினை மெலிதாகக் கேட்கும் போது, ஒரு தெய்வீக பரவச உணர்வு அங்கிருப்பவர்களுக்கு ஏற்படும். 7.12.21.

No comments:

Post a Comment