காவேரீ தீரே...கருணா விலோலே....(பாகம்-14)
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் - 29.11.2021
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள்ளேயே இரண்டு புஷ்கரிணிகள் உண்டு.! ஒன்று, சந்திர புஷ்கரிணி மற்றொன்று சூரிய புஷ்கரிணி.! இரண்டுமே ஸ்ரீரங்கம் கோயிலுக்குள்ளேயே இருந்தாலும், சந்திர புஷ்கரிணியின் தொன்மை, மேன்மை, மஹிமை சூரிய புஷ்கரிணிக்கு இல்லையென்றுதான் கூற வேண்டும் !. ஏனெனில் ஸ்ரீரங்கத்தின் தல விருட்சம் சந்திர புஷ்கரிணியில்தான் உள்ளது.! இத்தல விருட்சமாகிய புன்னை மரம், சந்திரனால் ஊன்ற பட்டது எனில் ஆச்சர்யமாகவுள்ளதுதானே ?. ஆனால் அதுதான் உண்மை.!
ஸ்ரீரங்க மஹாத்ம்யம் 10வது அத்யாயத்தில் 5வது ஸ்லோகமாக,
"ப்ரச்சாயச்ச ஸகந்திச்ச புந்நாகஸ் தத்ர திஷ்டதி
புரா சந்த்ரமஸா ராஜ்ஞா ப்ரதிஷ்டாப்ய விவர்த்தித:"
தனது துன்பம் தீர்ந்த சந்திரனால் ஊன்ற பட்டதும், இன்றளவும் நிழல் அளிப்பதுமான புன்னாக விருக்ஷமானது அந்த சந்திர புஷ்கரிணியின் அருகில் உள்ளது.!
இத்தல விருக்ஷம் எத்துணைத் தொன்மையானதாகயிருக்கக்கூடும் ! சந்திரனாலேயே ஊன்றபட்ட ஒரு மரம் எத்துணை மஹிமை வாய்ந்ததாகயிருக்கக்கூடும்.!
பயிர்கள் வளர்வதற்கு சந்திரன் அதி முக்யமானவர் ஆவார். இதனால்தான், பிரதிஷ்டா காலங்களில், பாலிகா ஸ்தாபனம் (முளைப்பயிர் வளர்த்தல்) எனும் க்ரமமானது சந்திரன் தோன்றிய பின்பே மாலையில் ஆரம்பமாகிறது. இதற்கு ரக்ஷணார்த்தமாக ஒரு கும்பத்தில் ஸோமனையும் (சந்திரனை) ஆவாஹனம் செய்து வணங்குகின்றோம்.! இந்த க்ரமத்திற்கு, "ஸோம கும்ப பாலிகா ஸ்தாபனம்" என்று பெயர்.!
தசாத்யாயீயில் தக்ஷ ப்ரஜாபதியின் சாபத்தினால், சந்திரன் "க்ஷய ரோக"த்தினால் பீடிக்கப்பட்டான். இந்த ரோக நிவிர்த்திக்காக, சந்திர புஷ்கரிணியில் பதினைந்து வருட காலம் தொடர்ந்து நீராடி, இந்த சந்திர புஷ்கரிணியில் பூத்தத் தாமரை மலர்களால் பகவானை ஆராதித்து தோத்திரம் செய்கின்றார்.! பகவான் சந்திர புஷ்கரிணியின் கரையில் ப்ரத்யக்ஷமாகின்றார்.! சந்திரனது க்ஷய ரோகம் நீங்கிற்று.! அப்போது பகவான் சந்திரனிடத்துக் கூறுகின்றார், "..நீ இந்த புஷ்கரிணியில் தவமிருந்ததால் இந்த புஷ்கரிணி உனது பெயர் கொண்டே எப்போதும் விளங்கும்.! இது மிகவும் உத்தமமான தீர்த்தம்.! இந்த புஷ்கரிணியின் கரையில், மஹாதபஸ்விகளுக்கும் ஞானிகளுக்கும் கூட அரிதாக தரிசனம் அளிக்கக்கூடிய நான் எப்பொழுதும், எல்லோரும் தரிசனம் செய்யும் வகையில் ப்ரத்யக்ஷனாகயிருக்கின்றேன்.! இதனால்தான் இந்த பூமி மங்களகரமாகயுள்ளது.! நான் இவ்வுலகம் சுகமாகயிருப்பதற்காக இங்கேயே சுகமாய் சயனித்திருக்கின்றேன்! நீ ஒவ்வொரு பருவ காலத்திலும் இங்கு வந்து என்னைத் தரிசிப்பாயாக..! உன்னுடைய காந்தியினால் உலகம் சுத்தமாகும்!" என்று அருளுகின்றார்..!
இத்தகைய சந்திரனின் காந்தி, கீர்த்தி, அம்சங்கள் யாவும் நிறைந்துள்ள புண்ய தீர்த்தம் இந்த சந்திர புஷ்கரிணியாகும். எந்தவொரு இல்லத்திலும் சரி அல்லது கோயிலிலும் சரி, ஈசான பாகமானது (வடகிழக்கு மூலையானது) தெய்வீகமானது, கோயிலென்றால் அதி தெய்வீகமானது. இந்த இடத்தில் கிணறோ, கோயிலானால் புஷ்கரிணியோ இருக்குமாயின் அந்தவிடம் அசாத்ய ஸாந்நித்யம் மிகுந்தவையாகும்.! எவ்வித அசுத்தங்களும் இந்த ஈசான மூலையில் கலந்துவிடக் கூடாது..! பவித்ரமான அவ்விடத்தில் வீடானால் பூஜையறையும், தியானமும் பூஜைகளும் சிறப்பான பலனளிக்கும்.! கோயிலானால் புஷ்கரிணியிருப்பின் ஸர்வ மங்களத்தையும் அளிக்கும்.! அசுத்தங்கள் செய்வதே, வாய் கொப்பளிப்பதோ மஹா பாவங்களைத் தரும்..! ஸ்ரீரங்கத்தில் இந்த ஈசான மூலையில் அதி மேன்மைப் பொருந்திய சந்திர புஷ்கரிணி உள்ளது.!
இந்த சந்திர புஷ்கரிணிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு..! ஸ்ரீரங்க விமானத்தின் மேல் பெய்யும் மழை நீர், அதாவது, ஸ்ரீரங்க விமானத்தின் திருமஞ்சன தீர்த்தம் முழுதும் சந்திர புஷ்கரிணியிலேயேக் கலக்கி்ன்றது.!
ஸ்ரீரங்க மஹாத்ம்யத்தில், இன்னொருவிடத்தில், அத்யாயம் 10, ஸ்லோகம் 4, ஒரு சமயம் சந்திரன் காஸ்யப மஹரிஷியின் சாபத்தினால் தமது தேஜஸ் செல்வங்கள் அனைத்தையும் இழந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, மீண்டும் அனைத்தும் திரும்ப வரப்பெற்றான் என்றொரு குறிப்பு காணப்படுகிறது.
நவக்ரஹத்தில் சந்திரன்தான் மனோகாரகன்.! மன நிம்மதி பெற இந்த சந்திர புஷ்கரிணியினை நினைத்து ஸ்ரீரங்கநாதனை மனதில் தியானித்தாலே போதும்.! சிறப்பான பலனையும், இழந்த மன நிம்மதியையும் வெகுவாக மீட்டுத் தரும்.!
No comments:
Post a Comment