Wednesday, November 24, 2021

My God - Periyavaa

*''இனி என் தெய்வமும் இவர்தான்.... இந்த உருவில் தான் இனி நான் வணங்கும் தெய்வத்தை பார்ப்பேன்"*. - ஆங்கிலேய தம்பதி. 

அந்த மனிதர் ஒரு பிரபல எழுத்தாளர். பிரசித்தி பெற்ற வாரப் பத்திரிகை ஆசிரியராக இருந்து, பிறகு தானே ஒரு பிரசித்தி பெற்ற மற்றொரு பத்திரிகை, அதற்கு அப்புறம் மற்றொன்று என்றெல்லாம் புதிதாக தொடங்கிய அனைத்து பத்திரிகைகளும் விரும்பிப் படிக்கப்பட்ட காலம். டிவி ரொம்ப பெண்களை ஈர்க்காத காலம். மொபைல் என்ன வென்றே தெரியாதே.

வெளிநாட்டு பயண கட்டுரைகள் எழுதி பெயர் பெற்றவர். அவர் இப்படி பல நாடுகளுக்கு பறந்து ஆங்காங்கு பார்த்தவர்கள், பார்த்தவைகள், பார்க்க வேண்டியவைகள் பற்றியெல்லாம் ரசிகர்கள் மகிழ ருசிகரமாக எழுதுபவர். ஒரு விஷயம் குறிப்பாக சொல்ல வேண்டியிருக்கிறது.

அவர் காஞ்சி மகா பெரியவாளின் பரம பக்தர். அந்த நடமாடும் பேசும் தெய்வத்தை முக்காலும் வணங்குபவர். எங்கு சென்றாலும் மகா பெரியவா படம் இல்லாமல் செல்ல மாட்டார். தினமும் அந்த படத்தை எடுத்து வைத்துக்கொண்டு மனசார பூஜை பண்ணி வணங்கிவிட்டு தான் மற்றைய வேலைகள்.

ஒரு தடவை உலகப் பயணத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ள நாட்டில் ஒரு முடுக்கு நகரத்தில் அவர் தங்கி இருக்க நேர்ந்தது. அந்த ஊரைப் பற்றி விவரங்கள் சேகரிக்க முயன்றார். அவரது நண்பர் ஒரு ஆங்கிலேயர் அங்கு அப்போது இருந்ததால் அந்த ஊருக்கு சென்றிருந்தார்.

இவர் வந்து அங்கு தங்கியிருக்க வேண்டிய வசதிகள் செய்து கொடுத்த வெள்ளைக்கார நண்பரின் உறவினர் வீட்டில் சில நாள் அந்த சிறிய ஊரில் தங்க முடிவானது. 

எழுத்தாளரும் அங்கு சென்றார். அவருக்கு தனி அறை கொடுத்தார்கள் . அதில் அவர் தங்கியிருந்தபோது ஒரு நாள் காலை அந்த ரெண்டு வெள்ளைக்காரர்களும் , அதாவது, நண்பரும் அந்த வீட்டுக்காரரும் எழுத்தாளரைக் கண்டு பேச, அவர் அறைக்கு வந்தனர். எழுத்தாளர் வழக்கம்போல் அந்தக் காலை வேளையில் மகாபெரியவர் படத்தை மேசையில் வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்.

வீட்டின் சொந்தக்காரர் கண்களில் அந்த மஹா பெரியவர் படம் பட்டதும் அவருக்கு ஏதோ ஆச்சர்யம், எழுத்தாளர் த்யானம் முடிந்ததும் கேட்டார்.

"இந்தப் படத்தில் இருப்பவர் யார்?"

"நான் வணங்கும் தெய்வம்"

'' நீங்கள் எந்த மதத்தினர்?

'இந்துக்கள்''

''இந்து கடவுள்கள் நிறைய கைகள், தலைகள், ஏதோ ஒரு பட்சி அல்லது மிருகத்தின் மேல் -- இப்படி தான் எனக்கு இதுவரை அறிமுகம். இந்த கடவுள் யாரோ ஒரு மனிதராக, கிழவராக அல்லவோ இருக்கிறார் '

''நீங்கள் சொல்வது வாஸ்தவம். இவர் நம்மைப்போல் இந்த உலகில் மனிதனாக இருப்பவர். மிக எளிமையானவர் . ஆனால் தெய்வம்.

''ரிஷி'' என்பீர்களே, அப்படிப்பட்டவரா இவர். எல்லோரும் அப்படித்தான் இவரைச் சொல்வார்களோ உங்கள் ஊரில்?''

''இவர் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம், ரிஷியும் கூட''

"சக்தி வாய்ந்த தெய்வம் என்றால் நாம் நினைத்தது நடக்கச் செய்வாரா? என்று வீட்டுக்கார வெள்ளையர் ஆவலாகவினவினார்

"நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால், நிச்சயம் நாம் நினைத்தது போல் நடக்கும். அந்த கருணைக்கடல்அதை நிறைவேற்றி வைப்பார்.

எழுத்தாளர் அளவு கடந்த பக்திமான் ஆச்சே . அவர் குரலில் இருந்த அழுத்தம் சொன்ன தோரணை, அவர் குரலில் ஒலித்த பக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.

''நானும் அவரை வேண்டிக்கொண்டு என் முறையீட்டை சொன்னால் உதவுவாரா" வீட்டுக்கார வெள்ளைக்காரர் குரலில் ஏக்கம் தொனித்தது.

''வித்தியாசமின்றி நம்பிக்கையோடு யார் வேண்டினாலும் குறை நிவர்த்தி செய்வார்''

"என் மகன் எங்கோ போய்விட்டான்...சில மாதங்கள் ஆகிவிட்டது. அவனைப் பிரிந்து என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு இருக்கிறாள். அதனால்தான் ஒரு நம்பிக்கையோடு உங்களிடம் கேட்டேன்.''

"எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியுங்கள்..உங்களுக்கு அவரதுஅருள் நிச்சயம் கிட்டும்.

'டப்' பென்று அந்த வெள்ளைக்காரர் சிலைபோல் அங்கேயே அந்த இடத்திலேயே மகா பெரியவா படத்தின் முன்பு அமர்ந்து கொண்டார். கண்கள் மூடியிருந்தது. கைகளைச் சேர்த்து கட்டிக் கொண்டிருந்தார். நேரம் நழுவியது. நிசப்தம். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு கண்களைத் திறந்தார்.

''என்னவோ தெரியவில்லை, என் மனம் இப்போது லேசாகி விட்டது. இந்த மனித தெய்வத்தின் படத்தின் முன் மனமுருகி வேண்டி எனக்கு அருள் புரியும்படி வேண்டிக் கொண்டேன்''

இதைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரம் அந்த அறையில் மகா பெரியவா பற்றிய விஷயங்கள் பற்றி வெகு ஆர்வமாக அவர் பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்று புத்தகங்கள் தேவை' என்று கேட்டுக்கொண்டிருந்தார் . ஒருமுறை இந்தியா வருகிறேன். அவரைப் பார்க்க வேண்டும்' என்றார்.

அப்போது தான் அவரது வீட்டு போன் ஒலித்தது. ஆங்கிலேயர் போய் போனை எடுத்தார்.

''யார் பேசுவது ?''

''என்ன அப்பா என் குரல் மறந்து போய் விட்டீர்களா" --  

 காணமல் போன அவர் பையன். போனில் வந்த செய்தி அவருக்கு அளவு கடந்த வியப்பை அளித்தது. காணாமற்போன அவரது மகன் தான் பேசினான், தான் எங்கேயோ போயிருந்ததாகவும், இப்போது ஊருக்கு வந்து விட்டதாகவும், உடனே வீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.

அந்த ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது. காஞ்சி மகானை வணங்கியபடியே, எழுத்தாளரை இருக கட்டிக்கொண்டார். கண்களில் நீர் பனிக்க ''இனி என் தெய்வமும் இவர்தான்....இந்த உருவில் தான் இனி நான் வணங்கும் தெய்வத்தை 
பார்ப்பேன். 

அப்போது உள்ளே வந்த அவர் மனைவியும் விஷயம் கேட்டு, ஆனந்தித்து, தனது மகன் மீண்டும் வரப்போகிறான் என்று அறிந்து பெரியவாள் படத்தை வணங்கினாள்.   

''மணியன் உங்களுக்கு நன்றி'' என்று அந்த தம்பதிகள் மனமுவந்து சொன்னார்கள். 
ஆம் அந்த இந்திய எழுத்தாளர் மணியன் தான்..

*kn*

No comments:

Post a Comment