Sunday, November 28, 2021

Meaning of the word Shreshta in Vishnu Sahasranamam

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!

விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள!!

நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும்
போக்க வல்ல மருந்து 
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.

69- ச்ரேஷ்டாய நமஹ (Sreshtaaya namaha)

சாந்தோக்ய உபநிஷத்தின் 7-வது அத்தியாயத்தில் சனத்குமாரருக்கும் நாரதருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இது:

நாரதர்: சனத்குமாரரே! அடியேனுக்கு ஏதாவது உபதேசிக்க வேண்டும்.

சனத்குமாரர்: தங்களுக்கு இதுவரை என்னென்ன விஷயங்கள் தெரியும்?

நாரதர்: அடியேன் நான்கு வேதங்கள், இதிகாச புராணங்கள், இலக்கிய இலக்கணம் உள்ளிட்டவற்றை அறிவேன்.

ஆனால் அவற்றிலுள்ள எழுத்துகளை மட்டுமே நான் அறிவேன். 

வார்த்தைகளுக்கு மேம்பட்டதை அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்.

சனத்குமாரர்: எழுத்துகளைவிடப் பேச்சாற்றல் உயர்ந்தது.

நாரதர்: பேச்சாற்றலை விட எது உயர்ந்தது?

சனத்குமாரர்: மனத்தால் நினைத்தால்தானே வாயால் பேச முடியும்? அதனால் பேச்சாற்றலை விட மனம் உயர்ந்தது.

நாரதர்: மனத்தை விட எது உயர்ந்தது?

சனத்குமாரர்: மன உறுதி.

நாரதர்: அந்த மனவுறுதியை விட?

சனத்குமாரர்: ஒருமுகப்படுத்தப்பட்ட மனது.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்: தியானம் உயர்ந்தது.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்: விஞ்ஞானம்.

நாரதர்: அதை விட?

சனத்குமாரர்: உடலில் வலிமை இருந்தால் தானே கல்வி கற்று விஞ்ஞானத்தைப் பெற முடியும்?
அதனால் விஞ்ஞானத்தை விட உடல்வலிமை உயர்ந்தது.

நாரதர்: உடல் வலிமையை விட?

சனத்குமாரர்: உணவு உண்டால்தானே உடல் வலிமை பெறும்? எனவே அன்னமாகிய உணவு வலிமையை விட உயர்ந்தது.

நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: மழை பொழிந்தால்தான் உணவுப் பண்டங்கள் விளையும். எனவே அன்னத்தைவிடத் தண்ணீர் உயர்ந்தது.

நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: சூரியன், 
மின்னல் போன்ற ஒளிகள்.
நாரதர்: அவற்றைவிட?

சனத்குமாரர்: அந்த ஒளிகளை உடைய ஆகாயம்.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்: மனிதனின் நினைவாற்றல்.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்: இவ்விஷயங்களைக் கேட்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் இவை அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தது.

நாரதர்: ஆர்வத்தைவிட உயர்ந்தது எது?

சனத்குமாரர்: ஜீவாத்மா. அந்த ஜீவாத்மாவை அறிந்தவன் அனைத்து வாதங்களிலும் வெல்வான்.

நாரதர்: மிக்க மகிழ்ச்சி. இனி அந்த ஜீவாத்மாவை அறிய அடியேன் முயற்சி செய்யப் போகிறேன். நான் சென்று வருகிறேன்.

சனத்குமாரர்: நில். அந்த ஜீவாத்மாவை விட மேம்பட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் பரமாத்மாவான திருமால்.

அவன் பூமா என்றழைக்கப்படுகிறான்.

பூமா என்றால் மிகப்பெரியவன் என்று பொருள். அவனைக் காணும்போது கண்கள் மற்றொன்றைக் காணாது,
அவனைப் பற்றிக் கேட்கும்போது காதுகள் மற்றொன்றைக் கேட்காது, அவனை எண்ணும்போது மனம் மற்றொன்றை எண்ணாது.
மிகவும் சிரேஷ்டமானவனான அவனைப் பற்றி அறிந்துகொண்டு அவனை வழிபடுபவன் உய்வடைகிறான்!

இவ்வாறு பூம வித்யையை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசித்தார்.

இதில் வார்த்தை, பேச்சு, மனம், உறுதி, சிந்தனை, தியானம், விஞ்ஞானம், பலம், உணவு, தண்ணீர், ஒளி, ஆகாயம்,
நினைவாற்றல், ஆர்வம், ஜீவாத்மா இவை அனைத்தையும் விட உயர்ந்த பரமாத்மாவாகத் திருமால் கொண்டாடப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்தையும் விட உயர்ந்து விளங்குவதால் திருமால் 'ச்ரேஷ்டஹ' என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 69-வது திருநாமம்.
"ச்ரேஷ்டாய நமஹ" என்று தினமும் சொல்லி வருபவர்களைத் திருமால் வாழ்வில் உயர்த்தி அருளுவார்.
👇👇

No comments:

Post a Comment