குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 77
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
ஸ்வாமி தேசிகன் திருப்புக்குழியில் விஜயராகவன் பார்த்து கேட்கிறார், " ஹே ப்ரபோ நீ சரணாகதரக்ஷணம் பண்ண வேண்டும் என்கிற தீர்க்க விரதம் உடையவன் . உன்னாலே என்னை விட முடியாது. விபீஷணன் என்ன.. அந்த ராவணன் வந்தாலும் அபயம் அளிப்பேன் என்று சொன்னவனல்லவா நீ. நான் என்ன அநியாயமாக ராவணன் போல் தப்பு பண்ணினவனா? அவனையே ரக்ஷிக்க தயாராக இருந்த உன்னால் என்னை விட முடியுமா .. " என்று கேட்கிறார்.
அந்த மாதிரி தான் நாமும். துரியோதனன் அளவுக்கு அக்கிரமம் பண்ணவில்லை. அதனால் பகவான் சொன்ன ' சுத்தம் பாகவதஸ்யான்னம்' என்கிற ஸ்லோகத்தின் படி நடந்தால் நிச்சயம் பலனுண்டு.
பாகவதோத்தமர்களின் உண்ட சேஷம் தூய்மையானது. சேஷமா என்றால் எச்சில் இல்லை.. ஒரு பாத்திரத்திலிருந்து அன்னம் எடுத்து பரிமாறிய பிறகு , பாத்திரத்தில் மிச்சமிருப்பது தான் சேஷம். பாகவதோத்தமர்களின் சேஷத்தை நாம் சாப்பிட்டால், நம் பாப புத்தியை நீக்கி விடும். உள்ளிருக்கும் கெட்ட வாசனையை போக்கி விடும் .. பாகவத சேஷத்திற்கு அவ்வளவு சக்தி !!
குலசேகர ஆழ்வாருக்கு என்ன ஆசை...
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே...
ஒர் கம்பமாக நிற்கும் ஜன்மா அவனுக்கு போதுமாம். ' படியாய் நின்று உன் பவள வாய் காண்பேன் ' என்று சொன்னவர்தானே... திருப்பதியில் கர்ப்ப கிரஹத்திற்கு முன்னால் ஒரு படி - குலசேகரன் படி என்று பெயர். அந்தப் படியாய் கிடப்பேன் என்கிறார் ஆழ்வார்.
நாம் கஷ்டப்பட்டு க்யூவில் நின்று கிட்டத்தில் போனால், ஜரகண்டி என்று வெளியே அனுப்புவார். சேவிக்க விடுவதில்லை. பார்த்தார் ஆழ்வார்.. படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேன் என்று முடிவு செய்தார். அங்கே போய் அசேதனமாகப் படுத்துக் கொண்டு விட்டால் யார் ஜருகு என விரட்ட முடியும்? கதவைச் சாத்திக் கொண்டு எல்லோரும் போகட்டும்.. போன பிறகும் அவன் அதர பல்லவத்தை பார்த்துக் கொண்டிருக்க லாம்.
திருப்பதி போய் வந்தேன் என பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் அங்கேயே இருக்கும் போது எத்தனை நேரம் பகவானை சேவிக்கிறோம் ? பார்த்து பார்த்து அனுபவிக்கிறோமா? அதனால்தானே திருமலையில் ஏதாவது ஒன்றாக பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். சுனையில் மீனாக பிறக்க வேண்டும். ஏதேனும் ஆவேனே... கம்பமாய் பிறப்பேனா?
ஏன் கம்பத்தை தேர்ந்தெடுத்தார்? கம்பத்திலே நரசிம்ஹன் இருக்கிறான் . ஸ்தம்படிம்பன் என்று அவனுக்கு பேர்... அதனால்தான் பூர்வ காலத்தில் இல்லங்களில் நிறைய கம்பங்கள் வைத்து வீடு கட்டினார்களள்.
சில மஹான்கள் கம்பத்துக்கு பக்கம் கால் நீட்டி படுக்க மாட்டார்கள். அதன் உள்ளே சிம்ஹன்தான் இருக்கறானல்லவா ? நம்மை அறியாமல் கிரஹங்களில் கம்பத்தை சுற்றிவரும்போது பகவானைபிரதக்ஷிணம் பண்ணிய பலன் கிடைக்கிறது.
கோயில்களிலும் கம்பங்கள் உண்டு. பக்தர்கள் க்யூவில் நிற்கும்போது சாய்ந்து கொள்வார்கள்.
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment