Friday, November 5, 2021

Kurai onrum illai part 89 in tamil

குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 89
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
உபநிஷத் சொல்கிறது : பகவானிருக்கிற இடத்திலே சூரியனுக்கு பிரகாசம் கிடையாது . சந்திரனுக்கு வேலை கிடையாது . மின்னலுக்கு வேலையில்லை நட்சத்திரங்களுக்கு அங்கே பிரகாசமில்லை. அக்னிக்கும் வேலையில்லை.
மின்னலோ, அக்னியோ, சூரியனோ, சந்திரன் இவையெல்லாம் பிரகாசிக்கின்றன யென்றால் அவனுடைய காந்தியினால் பிரகாசிக்கின்றன. ஆகவே பகவான் ஜோதியாய், ஒளிப்பிழம்பாகவும் பிரகாசிக்கிறான் என்று ஆகிறது . அந்த ஒளிப்பிழம்பை நாம் உபாசனை பண்ண வேண்டும். அப்படி ஒளிப்பிழம்பாகவும் அவன் இருப்பதாலேயே அவனுடைய தேஜஸ் விவரிக்க முடியாததாக இருக்கிறது .
ஞான, பல, வீர்ய, ஐஸ்வர்ய, தேஜஸ் ஆயிற்று, அப்புறம் சக்தி..... அந்த எம்பெருமானுடைய சக்தி இருக்கிறதே சமஸ்தத்துக்குள்ளேயும் ஊடுருவியிருக்கும் படியான சக்தி அது: அதுதான் விஷ்ணு !
நம் ஆத்மா மிகத்துளியானது. அதில் இருக்கும் ஞானம் ' விபு ' அதாவது அளவிட முடியாதது. அது எங்கும் பரவியிருக்கிறது எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பேசுகிறது அது . உயர் நிலையிலே ஏகப்பட்ட விஷயத்தை கிரஹிக்கிறது. அதன் ஸ்வரூபத்தினாலேயும் அணு ஸ்வரூபம். அதற்காக மைக்ராஸ்கோப் கொண்டு பார்க்க முடியுமா என்றால் முடியாது.
அதை கத்தியால் வெட்ட முடியாது
நெருப்பிலே கொளுத்த முடியாது
ஜலத்திலே நனைக்க முடியாது
அதை உலர்ந்த முடியாது
அவ்வளவு நுண்ணியது அது.
அகப்படாத வஸ்துக்கள் எத்தனையோ நம்மை சுற்றி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சின்னச் சின்ன அணுப்பிரமாண வஸ்துக்கள் எல்லாம் இப்படியும் அப்படியும் சஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இந்த இந்திரியங்களுக்கு அதைப் பார்க்கும்படியான சக்தி இல்லை. ஆனால் அந்த அணுக்கள் சுற்றுவது என்னவோ வாஸ்தவம்தான் .
பழங்கால ஓட்டு வீடுகளில் மேலே கண்ணாடியிருக்கும். .அதன் வழியே சூர்ய ஒளிக்கதிர்கள் விழுகிறபோது அணுவானவஸ்துக்கள் இப்படியும் அப்படியும் சஞ்சாரம் பண்ணுவது அந்த ஒளிக்கற்றை யிலே தெரியும்.
ஆனால் சூர்ய ஒளி விழுகிற இடத்திலே மட்டும் தானா அந்த அணு வஸ்துக்கள் சுற்றுகின்றன? அவை எல்லா இடத்திலும் சுற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் நம்மால் தான் பார்க்க முடிவதில்லை. அந்த அணுக்களைக் காட்டிலும் அணுவானது ஆத்மா என்னும் போது இந்த கண்ணால் நாம் எப்படி பார்க்க முடியும்? 
கண்ணால் ஆத்மாவை பார்க்க முடியாது. ஆனால் ஹிருதயத்தினாலே பார்க்க முடியும். நாராயண உபநிஷத் அதைத்தான் சொல்கிறது . கண்ணுக்கு அகப்படாவிட்டால் ஆத்மா ஹ்ருதயத்தில் மனத்தினால் அறியப் பட வேண்டிய வஸ்து என்கிறது.
அப்படிப்பட்ட அணுவின் அணுவான வஸ்துக்களில் இருப்பவனும் அவனே. விஷ்ணுவே மஹதோ மஹீயனாய் - மஹத்தைக் காட்டிலும் மஹத்தாக - இருப்பவனும் அவனே.
எப்படி அவனது ஸ்வரூபம் நுண்ணியதாகவும் விபுவாகவும் இருக்கிறதோ, அப்படியே அவனது குணம், பெருமை, எல்லாமும் நுண்ணியமாக கிரஹிக்கிறது முடியாததால் இருக்கிற அதே சசமயத்தில் பெரியதாகவும் இருக்கிறது. அதையும் நம்மால் கிரஹிக்க முடியாது.
எனவே மேற்கூறிய ஆறு குணங்களுக்கு பகம் என்று பெயர். இவற்றை உடையவன் பகவான்.
' ஓம் நமோ பகவதே வாசுதேவாய ' என்று இந்த ஆறையும் உடையவனை, எல்ல்லாம் வஸ்துக்களிலும் உறைபவனை, வஸுதேவருக்கும் தவப்புதல்வன் எம்பெருமானை அழைக்கிரோம்.
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்..

No comments:

Post a Comment