குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 103
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
மறுநாளிலிருந்து பத்து நிமிஷம் முன்னதாகவே வந்து அவர் முன் வரிசையில் உட்கார ஆரம்பித்தார். தினமும் வந்தார். பெரிய ஞானியாக, பக்தராகி விட்டார் . அப்போது எம்பார் காலக்ஷேபத்துக்கு வந்த அனைவரையும் கேட்டார், " இத்தனை நாளாக வராத இவர் திடீரென்று இப்போது பக்தரானதற்கு இவரை விடாமல் கூப்பிட்டவர்கள் தான் காரணம் என்று நினைப்பவர்கள் கையை உயர்த்துங்கள்.."
உடனே சில பேர் கையுயர்த்தினார்கள்.
" கூப்பிடவர் கூப்பிட்டாலும் அவர் அல்லவா வர வேண்டும், எனவே மனமாற்றத்திற்கு வந்தவரேதான் பொறுப்பு என நினைப்பவர் கை உயர்த்தலாம் " என்று மீண்டும் எம்பார் கேட்டார்.
வேறு சிலர் கையுயர்த்தினார்கள்.
மூன்றாவது முறையாக மீண்டும் எம்பார் கேட்டார்,"இவர் வந்தாலும் காலக்ஷேபம் சொல்கிறவர் நன்றாகச் சொன்னால் தானே விஷயம் கேட்பவர் மனதில் ஏறும்.. அதனால் காலஷேபம் செய்கிறவன் இந்த மாற்றத்திற்கு காரணம் என்பர் கையுயர்த்துங்கள் " என்றார்.
சொல்வதைப் புரியும்படி சொல்வது ஒரு கலைஞன் . அதற்கு உதாரணமாக ஒரு பாட்டு... திருமங்கை ஆழ்வாருடையது.. அந்த பாட்டில் அவர் ஊரை ஏகமாக வர்ணிக்கிறார். . வயல் ரொம்ப அழகாய் இருக்கிறது. தீர்த்தமெல்லாம் அழகாய் இருக்கிறது.. நீர் வளம், நில வளம் சொல்லி முடியாது. அப்படிப்பட்ட இடத்திலே ஒவ்வொரு மீனும் எருமை கன்னுக்குட்டியைப் போல இருக்கிறதாம். வளமையை அப்படி வர்ணிக்கிறார். அப்படிப்பட்ட ஊரிலே பறவைகளெல்லாம் குஞ்சுகளுக்கு இரை தேடி அலைந்தன எனப் பாடலை முடிக்கிறார்.
இதைப் பார்த்ததும் நமக்கு என்ன இது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே பாசுரம்.. மீன்கள் கொழுத்திருக்க பறவை ஏன் இரை தேட வேண்டும்?
இந்த கேள்விக்கு பதில் இருக்கிறது. .. மீன்கள் பெரிது பெரிதாக இருந்தால் பறவைகளால் அவற்றை தூக்க முடியுமா ? அதன் குஞ்சுகளின் வாய்க்குள்தான் அவை போகுமா? ஆகவே குஞ்சுகளின் வாய்க்குள் போகும்படியான மீன்களை பறவைகள் தேடி அலைந்தன்.
விஷயங்கள் நிறைய இருக்கிறது . அதை மற்றவர்களால் கிரஹித்து கொள்கிற மாதிரி எடுத்துச் சொல்ல வேண்டும் அல்லவா? அதனால்தான் எம்பார் அப்படி கேட்டார். இப்படி மூன்று காரணங்களுக்கு சிலர் கையை உயர்தாதினிர்கள். கடைசியில் எதிரில் எவரும் கைதூக்க இனி ஒருவரும் இல்லை என்கிற நிலையில் எம்பார் ஸ்வாமி தானே கையைத்தூக்கினார்.
" நான் கேட்காததும், நீங்கள் சொல்லாததுமான நான்காவது காரணத்துக்காக கையை உயர்த்துகிறேன் " என்றார்.
என்ன அந்த நான்காவது காரணம்.. ?
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment