Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாத்வாப்யுதயம் -அத்தியாயம் 4
ஒரு சமயம் கிருஷ்ணன் பலராமனை விட்டு தனியே யமுனையில் இதுவரை காணாத ஒரு இடத்திற்கு சென்றான். அங்கு நதி காளியனின் விஷத்தால் கருமை நிறம் கொண்டு காணப்பட்டது. அங்கிருந்த இலைகள் விஷத்தீயினால் பொசுக்கப்பட்டு கட்டையாக இருந்த கடம்ப மரத்தின் மேல் ஏறி அந்த மடுவில் குதித்தான்.கண்ணின் பாதம் பட்டதும் பசுமை அடைந்ததாக ஆயிற்று.
இதை வர்ணிக்கும் தேசிகர், முன்னர் மந்தரமலை ஹாலாஹலம் என்ற விஷத்தைப் போக்கி அமுதத்தை கொண்டு வர பாற்கடலில் விழுந்ததைப் போல அந்த மடுவை காளிய விஷத்தைப் போக்கி இனிய நீர் நிறைந்ததாகச் செய்ய நினைத்து அதில் குதித்தான் என்கிறார். காளியன் மடுவில் இருந்த மற்ற நாகங்கள் கருடத்வஜனான பெருமான் கருடன் போலவே வேகத்துடன் குதித்ததைக் கண்டு பயந்து கடல் போய்ச் சேர்ந்தன.
உடனே ஐந்து தலை கொண்ட காளிய நாகம் உக்ரமாக மேலெழும்பி தன் உடலாலே சுற்றி இறுக்கிக் கட்ட, கட்டுண்ட கண்ணன் அதனைத் தள்ளி அதன் தலையொன்றைத் தாழ்த்தி அதன் மேல் ஏறி நின்றான்.
அவன் ஏறி நின்ற காளியனின் படம் பத்மராகக்கல் பதிக்கப்பட்ட நீல மணி பாதபீடம் போல் இருந்தது. அதன்மேல் கண்ணன் ராகுவினால் பீடிக்கப்பட்ட சூரியன் உதயமாவது போல தோன்றினான் என்கிறார் தேசிகர்.
பகவான் செய்த காளிய மர்தனம் தன் பக்தர்களின் பஞ்ச இந்த்ரியங்களில் இருந்து விஷய சுகமாகிற விஷத்தை எடுப்பது போல இருந்ததாம். அதாவது மனம் பக்தி மேலிட்டு ஆனந்த நடனம்புரிகையில் இந்த்ரியங்கள் அடங்கினதக் குறிக்கிறது.
காளிய நர்தனத்திற்கு யமுனையின் அலைகள் மிருதங்கம போல ஒலித்தன. .நீரில் பிரதிபலித்த சந்திரனைப்போல் கண்ணன் எங்கும் உள்ளவன் போல் தோன்றினான். இங்கு தேசிகர் கண்ணனை அனந்தன் என்கிறார், அதாவது பகவானின் ஆட்டத்திற்கு எல்லை இல்லை என்று பொருள்.
காளியனால் பொறுக்க முடியாமல் போகையில் அவன் பத்தினிகள் வந்து தீனமாக அழக் கேட்டு கண்ணன் அவர்களுக்கு மாங்கல்ய பிச்சை அளித்தான். காளியனுக்கு அபயம் அளித்து அவனை கடலுக்குப் போகும்படியும் தன் திருவடி அடையாளம் இருப்பதால் கருடன் பாதிக்க மாட்டான் என்று கூறி அனுப்பி வைத்தான்.
நான்காவது அத்தியாயம் முடிவு.
No comments:
Post a Comment