Monday, August 30, 2021

Krishna Avatar part52

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
           *தஸாவதாரம்* 

          *ஸ்ரீகிருஷ்ணாவதாரம்* 

 *பகுதி 52* 

 *வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டுஅத னோசை கேட்கும்* 

 *கண்ண பிரான்கற்ற கல்வி தன்னைக் காக்ககில் லோம்உன் மகனைக் காவாய்* 

 *புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரைபுரை யால்இவை செய்ய வல்ல* 

 *அண்ணற்கண் ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய்உன் மகனைக் கூவாய்.* 

 *விளக்கம்* 

வெண்ணெய்
-
வெண்ணெயை

விழுங்கி
-
(நிச்சேஷமாக) விழுங்கிவிட்டு

வெறுங் கலத்தை
-
(பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை

வெற்பிடை  இட்டு
-
கல்லிலே போகட்டு

அதன் ஓசை கேட்கும்
-
உடைந்த ஓசையை கேட்கின்ற

கண்ணபிரான்
-
ஸ்ரீக்ருஷ்ணபிரபு

கற்ற
-
படித்துள்ள

கல்வி தன்னை
-
(தஸ்கர) வித்தையைக்

காக்ககில்லோம்
-
(எங்களால்) காக்கமுடியாது;

உன் மகனை காவாய்
-
உன் பிள்ளையை தடுப்பாய 

புண்ணில்
-
புண்ணின்மேலே

புளிபெய்தால் ஒக்கும்
-
புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான)

தீமை இவை
-
இப்படிப்பட்ட தீம்புகளை

புரை புரை
-
வீடுதோறும்

செய்யவல்ல
-
செய்வதில் ஸமர்த்யமான

அண்ணல் கண்ணான்
-
கருணையுடைய கண்களையுடையனான

ஓர் மகனை பெற்ற
-
ஒரு புத்திரனை பெற்ற

அசோதை நங்காய்
-
யசோதைப்பிராட்டி;

உன் மகனை கூவாய்
-
உன் பிள்ளையை கூப்பிடுவாயாக.     

 *நவநீத கிருஷ்ணன் கோயில், வீரகேரளம்புதூர், திருநெல்வேலி.* 

பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்த வீரகேரளம்புதூரை, வைணவத்தை தழுவிய மன்னன் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவர் கருடனின் பெருமைகளை அறிந்து அனுதினமும் அவரை வணங்கிய பிறகே தன்னுடைய பணிகளைத் தொடங்குவார். திருமாலின் வாகனமும், அணுக்கத் தொண்டரும், நித்ய சூரியுமான கருடனை, காலை உணவுக்குமுன் தரிசிப்பதை அந்த மன்னன் வழக்கமாக வைத்திருந்தார். வீரவைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள். கருடனைக் கண்டதும் 'மங்களானி பவந்து' என்று மனதுக்குள் சொல்லி தரிசனம் செய்த பிறகே உணவருந்துவார்கள். மன்னனும் அதே போல செய்து வந்தார். இதனால் அவர் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமைந்தன.

ஒரு நாள் வழக்கம் போல கருட தரிசனத்துக்காகக் காத்திருந்தார் மன்னன். அவருடன் பணியாளர்களும் காத்திருந்தனர். வெகுநேரமாகியும் வானில் கருடன் தென்படவில்லை. அரசரும் 'கருட தரிசனம் இன்றி, இந்த நாள் கடந்து விடுமோ' என்று தவித்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது. பசி மயக்கத்தில் சோர்ந்து போயினர் பணியாளர்கள். பசியைப் பொறுக்க இயலாத அரண்மனைப் பணியாளர்கள், ஒரு தந்திரம் செய்தனர். உடனே செயற்கையாகக் கருடன் போன்ற ஒரு பொம்மைப் பறவையைத் தத்ரூபமாகத் தயார் செய்தனர். அதனை ஒரு மரத்தின் உச்சியில் கட்டிவைத்தனர்.

பின்னர் அரசரிடம் வந்து, "அரசே! அதோ பாருங்கள், மரத்தின் உச்சியில் கருடன் ஒன்று இருக்கிறது" என்று தாங்கள் செய்த கருடப் பறவையைக் காட்டினர். அரசன் மகிழ்ச்சி பொங்க, பக்திப்பரவசத்துடன் "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று மனதில் கூறிக்கொண்டே பேரானந்தம் கொண்டார். அடுத்த கணம் யாரும் எதிர்பாராத விதமாக, மரத்தில் கட்டிவைத்திருந்த பொம்மைக் கருடன் உயிர்பெற்று விண்ணில் பறந்து சென்று மறைந்தது. அரசரோ கருட தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தார். பணியாளர்களோ பயத்திலும், வியப்பிலும் அரசரிடம் சென்று உண்மையைக் கூறிவிட்டனர்.

அரண்மனைப் பணியாளர்களின் செயலுக்காக மன்னன் கோபப்படவில்லை. தன்னுடைய பக்திக்காக கருட பொம்மைக்கு உயிரூட்டிய திருமாலின் கருணையை நினைத்து உள்ளம் உருகினார்.

ஒரு சில நாளில் மன்னனுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. அவர் படுத்தபடுக்கையானார். மூன்றாம் நாள் திருநாடு (வைகுண்டம்) அடைந்தார். இதையறிந்த இவ்வூர் மக்கள், "தன் பக்தனான அரசரை, திருமால் வைகுண்டம் அழைத்துச் சென்றுவிட்டார்" என்று கூறி சிலிர்த்தனர்.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவானதுதான் வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணன் கோவில். பாண்டிய மன்னர்களால் மதுரைக்குத் தெற்கே எழுப்பப்பட்ட ஒரே வைணவக் கோவில் இது என்று கூறப்படுகிறது. மன்னர்களின் ஆட்சி காலத்தில் தென்காசிக்கு அடுத்து, பெரிய ஊராக வீரகேரளம்புதூர் விளங்கியுள்ளது. இவ்வூரில் தாமிரபரணியின் ஊட்டாறுகளான 'சித்ரா நதி'யும் (சிற்றாறு), 'அனுமன் நதி'யும் ஒன்று சேருமிடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இங்குள்ள சித்ரா நதிக்கரையில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருந்ததாகவும், நவநீத கிருஷ்ணன் கோவில் கட்டுவதற்காக, சித்ரா நதி தெற்கு நோக்கித் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விநாயகர் சிலை தற்போது கிருஷ்ணன் கோவிலுக்குள் இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் இறைவனை 'தமிழகத்தின் குருவாயூரப்பன்' என்று போற்றுகிறார்கள். இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது குறித்து மெய்சிலிர்க்கும் சம்பவம் ஒன்று செவிவழிச் செய்தியாக இங்குள்ள ஆன்மிகப் பெரியோர்களிடையே கூறப்பட்டுவருகிறது. அதனைப் பார்க்கலாம்.
'பறவைகளில் கருடன் பகவானே' என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. கண்ணன் துவாரகைக்கு வெளியே இருந்தபோதெல்லாம், துவாரகையை காத்தவர் கருடன். "வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியில் விளங்குவாய்" என்று கருடனுக்கு திருமால் வரமளித்துள்ளார். கருட தரிசனம் உள்ளத்தில் உற்சாகம், ஊக்கத்தை உண்டாக்கும். ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். எதிரிகளை முறியடிக்கும் நேர்மறை அதிர்வலைகளை கருட தரிசனம் அருளும். கருடனைக் கண்டாலே காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவநீத கிருஷ்ணன் சிலை, இந்த ஊருக்கு அருகே உள்ள கீழப்பாவூரில் செதுக்கப்பட்டதாகவும், மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் வடிக்கப்பட்டதாகவும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. குருவாயூரில் உள்ளது போன்றே, இந்த ஆலய நவநீத கிருஷ்ணனின் தோற்றம் இருக்கிறது. கையில் வெண்ணெயுடன் அருள்பாலிக்கிறார், இத்தல நவநீதகிருஷ்ணன்.

ஆலயத்தின் உட்பிராகாரத்தில் தசாவதார மூர்த்திகளும் விக்கிரங்களாக நின்ற நிலையில் ஒரே இடத்தில் எழுந்தருளியுள்ளனர். பன்னிரு ஆழ்வார்களும் இங்குள்ளனர். மூலக்கருடன், பொருத்துக்கல், தங்கக் கொடி மரம், நவக்கிரகங்களும் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கியுள்ள இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்டது. 

 *திருவானைக்காவல் கோகுல கிருஷ்ணன் கோயில்* 

திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.
அழகிய சிறிய ஆலயம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். மூலவரின் எதிரே பீடமும், அருகே கருடாழ்வார் திருமேனியும் உள்ளன. மகாமண்டபத்தின் இடது புறம் பரமானந்த விநாயகரும், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரும் அருள் பாலிக்கின்றனர். வலதுபுறம் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் கோகுல கிருஷ்ணன் வலது திருப்பாதத்தை மடக்கியபடி பின்புறம் பசுமாட்டின் மேல் மென்மையாய் சாய்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன் கம்பீரமாக நிற்க, இருபுறமும் சத்தியபாமாவும் ருக்குமணியும் அழகு தேவதைகளாக காட்சியளிக்கின்றனர்.

அருகே உற்சவர் திருமேனி உள்ளது. கையில் வெண்ணெய் கிண்ணத்துடன் துணைவியருடன் காட்சி தரும் கிருஷ்ணன் அழகும் அவர் முகத்தில் ஒளிவிடும் புன்னகையும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.
சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.

கிருஷ்ண ஜெயந்தி அன்று இறைவன் இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள், நவராத்திரி 9 நாட்களும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். தைமாதம் நடைபெறும் இராதா கல்யாணத்தின் போது ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழியும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று நடைபெறும் உரியடி உற்சவத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி மட்டுமின்றி அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்த ஆலயம் திருவிழா போல களைகட்டி காட்சி தரும். மார்கழி 30 நாட்களும் திருப்பள்ளி எழுச்சி மிகச்சிறப்பாக நடைபெறுவதுடன் கார்த்திகை மாத திருக்கார்த்திகை அன்று சொக்கபணை திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு அன்று இறைவன் இறைவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அனுமன் ஜெயந்தி அன்று இங்குள்ள ஆஞ்சநேய பெருமானுக்கு வடை மற்றும் வெற்றிலை மாலை சூட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment