Monday, August 2, 2021

Krishan Avatar part 28

*ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
     
           தஸாவதாரம்

          ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

 பகுதி 28

 அந்தகன் சிறுவனரசர்த் தமரசற் கிளையவ னணியிழை யைச்சென்று,

 எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன,

 சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்தி நூலிழப்ப,

 இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண்டேனே.
 பெரிய திருமொழி 02.03.06 திருமங்கையாழ்வார்

 விளக்கம்

அந்தகன் சிறுவன்
-
குருடனான த்ருதராஷ்ட்ரனுடைய பிள்ளையாய்

அரசர் தம் அரசற்கு
-
ராஜாதி ராஜனென்று தன்னை மதித்திருந்த துரியோதனனுடைய

இளையவன்
-
தம்பியான துச்சாசனன்

அணி இழையை சென்று
-
அழகிய ஆபரணங்களையுடையளான திரௌபதியிடம் வந்து

எம்தமக்கு உரிமை செய் என
-
"நீ எங்களுக்கு அடிமை செய்யக்கடவை" என்று சொல்ல,

தரியாது
-
(அவள்) பொறுக்க மாட்டாமல் எம்பெருமான்!
-
"ஸ்வாமியான கண்ணபிரானே!

அருள் என்ன
-
கிருபை பண்ணவேண்டும்" என்று ப்ரார்த்திக்க,

சந்தம் அல் குழலாள் அலக்கண்
-
அழகிய இருண்ட கூந்தலையுடையான அந்த த்ரௌபதியின் மனவருத்தத்தை

நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி
-
துரியோதநாதியர்நூறு பேர்களுடைய மனைவிகளும் அடைந்து

நூல் இழப்ப
-
மாங்கல்யம் இழக்கும்படியாக

இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை
-
இந்திர புத்திரனான அர்ஜூநனுடைய தேரின் முன்னே சாரதியாய் நின்ற பெருமானை
திருவல்லிக்கேணியில் கண்டேன்.      

பதினேழாம் நாள் போரில்
கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர். அம்புகள் பறந்தன. கர்ணனின் விஜயம் என்ற வில்லும் காண்டீபமும் ஒன்றை ஒன்று மோதின. அர்ச்சுனனுக்காக தான் வைத்திருந்த சக்தி என்னும் வேல் இப்போது இல்லையே என கர்ணன் வருந்தினான். (அதை கடோத்கஜனைக் கொல்ல கர்ணன் உபயோகித்து விட்டான்) பின் நாகாஸ்திரத்தை எடுத்து எய்தான். அது மின்னல் வேகத்தில் பார்த்தனை நெருங்கியது. தேவர்கள் திகைக்க, மக்கள் கதர அந்த நேரம் பார்த்துப் பார்த்தஸாரதி தேர்க்குதிரைகளை நிறுத்தித் தேரைத் தம் காலால் மிதித்து ஓர் அழுத்து அழுத்தினார். தேர் சில அங்குலங்கள் பூமிக்குள் இறங்க அந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் முடியைத் தட்டிச் சென்றது.யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது. ஆனால், அச்சமயம் கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது. தனக்கு பாதுகாப்பாக இருந்த கவச, குண்டலங்களைக் கர்ணன் முன்னமேயே இந்திரனுக்குத் தானமாக வழங்கி விட்டான். அந்த இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதமும் இல்லை நிராயுதபாணி ஆன அவன் 'தருமத்தின் பெயரில் கேட்கிறேன் தேரை சேற்றிலிருந்து எடுக்க சற்று அவகாசம் கொடு' எனக் கெஞ்சினான்.

அப்போது கண்ணன் 'கர்ணா..நீயா தர்மத்தைப் பேசுகிறாய். துரியோதனன், சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய். அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று மன்னர் நிறைந்த அவையில் பாஞ்சாலியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம். பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும் நீ தர்மப்படி நடந்துக் கொண்டாயா, அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்' எனக் கேட்டார்.

கர்ணன் பதில் பேச முடியாது நாணித் தலைக் குனிந்தான் ஆயினும், அர்ச்சுனனின் கணைகளை தடுத்து நிறுத்தினான். இறுதியாக அர்ச்சுனன் தெய்வீக அஸ்திரம் ஒன்றை எடுத்து 'நான் தர்மயுத்தம் செய்வது உண்மையெனின் இது கர்ணனை அழிக்கட்டும்' என கர்ணன் மீது செலுத்தினான். தர்மம் வென்றது. கர்ணனின் தலை தரையில் விழுந்தது. தன் மகனின் முடிவைப் பார்த்து சூரியன் மறைந்தான். துரியோதனன் துயரம் அடைந்தான்

பதினெட்டாம் நாள் போரில் பீமன் தன் சபதத்தின்படி துரியோதனை வீழ்த்தினான்.
பின்னர் கண்ணன் அர்ச்சுனனை தேரில் உள்ளக் கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்கச் சொன்னார்.அவர்கள் இறங்கியதுமே தேர் பற்றியெரிந்தது. உடன் கண்ணன் 'பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும். நான் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை. நான் இறங்கியதும் அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது' என்றார். பாண்டவர்கள் கண்ணனை வணங்கி நன்றி கூறினர்.
திருதிராட்டினனுக்கும்..காந்தாரிக்கும் கண்ணன் ஆறுதல் கூறினார். 'உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம். அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை. 'தான்' என்னும் ஆணவத்தால் அழிந்தான். அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது. காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறினாய் "மகனே தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு '
என்றாயே அது அப்படியே நிறைவேறியது. எல்லாம் விதி. எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம்.' என்ற கண்ணபிரானின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள். கண்ணன் பின் பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றார்.

போர்க்களத்தில்
தொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான். தான் அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பதை அறிந்தான். அப்போது கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப்பட்டு அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான். சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை. அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான்.
பாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர். அந்த மரத்தில் உறங்கிக் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான். அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் எனக் கருதினான். ஆனால் கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை.

ஆனால் அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறையில் நுழைந்தான். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவன் திரௌபதியிம் புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றான், தன் தந்தையைக் கொன்ற திருஷ்டத்துய்மனைக் கொன்றான். சிகண்டியையும் கொன்றான். அப்போது பாண்டவர்களும், கண்ணனும் அங்கு இல்லை அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான். பின் அவன் உயிர் பிரிந்தது. வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை.

செய்தி அறிந்து பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதைக் கண்ட பாஞ்சாலி மயங்கினாள். அஸ்வத்தாமனை யாராலும் கொல்ல முடியாது என அவள் அறிவாள். அவன் தலையில் அணிந்திருக்கும் மணியைக் கவர்ந்து அவனை அவமானப் படுத்த வேண்டும் இல்லையேல் பட்டினி கிடந்து இறப்பேன்' என சூளுரைத்தாள். உடன் பீமன் தேரில் ஏறி கிளம்பினான்.
அவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார். கங்கைக் கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனைக் கண்டனர். பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான். அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும், நாரதரும் உலகைக் காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். ஆனால் அஸ்வத்தாமனுக்கு திரும்ப அழைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை. அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி 'பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்; என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கண்ணனின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது.

சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கண்ணன் பழித்தார். தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். 'அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டுக் காட்டில் தன்னந்தனியாய்ப் பல ஆயிரம் ஆண்டுகள் தவிப்பாயாக' என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர்.
உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்றும் கூறினார். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்குச் சென்றான். பாசறைக்குத் திரும்பிய கண்ணனும், பீமனும், அர்ச்சுனனும் திரௌபதியிடம் அஸ்வத்தாமனின் மணியைக் கொடுத்து ஆறுதல் கூறினர்.

 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

No comments:

Post a Comment