Monday, August 2, 2021

Dayaa satakam sloka 6

த‌யாச‌த‌க‌ம் ச்லோக‌ம் 6

 *समस्तजननीं वन्दे चैतन्यस्तन्यदायिनीम् |
श्रेयसीं श्रीनिवासस्य करुणामिव रूपिणीम् ||*

ஸமஸ்த ஜநநீம்வந்தே சைதந்யஸ்தந்யதாயிநீம்|
ஶ்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம்.|| 6

துன்னுமுடி மின்னுமறை யுன்னுதிரு மன்னன்
பொன்னருளி னன்னருரு வென்னவுயி ரெல்லாம்
மன்னுமக வன்னவுணா; வம்மமினிதூட்டும்
அன்னைதிரு வன்னவள டிச்சரண டைந்தேன் 6

(உணர்வு என்கிற திருமுலைப்பாலை அளிப்பவளும், கருணையே வடிவெடுத்தது போன்றவளும், உலகமனைத்துக்கும் அன்னையும், ஸ்ரீநிவாஸனுக்கும் ஸ்ரேயஸ்ஸை நல்குபவளுமான பிராட்டியை சரணம் அடைகிறேன்.)

அன்பில் ஸ்ரீநிவாச‌ன் ஸ்வாமி

பெரும்ஞான‌ முலைப்பாலைப் புக‌ட்டிவிடும் தாயாவாள்
ஒருச‌ம‌னும் இல்லாத‌ பெருமேன்மை உருவாவாள்
திருமாலின் அருள்த‌ன்னின் த‌னிவ‌டிவாய்த் திக‌ழ்ந்திடுவாள்
ப்ர‌ப‌ஞ்ச‌த்தின் தாயாவாள், பிராட்டிக்கே என் வ‌ண‌க்க‌ம்!

பாண்டிச்சேரி ஸ்ரீ ராமப‌த்ர‌ தாத‌ம் ஸ்வாமி

*அருள்ஞானப் பாலூட்டி பரிந்துவக்கும் தாயே
திருமாலின் காருண்ய உருவினளாய் நீயே
இருள்நீக்கி ஞாலத்தில் அனைவருக்கும் தாயாய்
மருள்நீக்கும் மாதேவி பணிந்திடுவேன் ஏற்பாய்*

குருபரம்பரையில் ஆதிகுருவாகிய பெருமாளுக்கு அடுத்தபடி லக்ஷ்மீ குருவாவாள். குருவாயிருப்பதன்னியில் அவள் எல்லார்க்கும் தாயுமாவாள். அவள் எப்படித் தாயாவாள்? அவள் பால் கொடுத்து வளர்க்கிறாளா? என்று கேட்டால், அவள் ஜ்ஞானப்பாலைக் கொடுக்கிறாளென்கிறார். ஜ்ஞானத்தைக் கொடுப்பதால் குருவாயும், பாலைக் கொடுப்பதால் தாயாகவும் ஆகிறாள். ஸ்ரீநிவாஸனுடைய தயையென்னும் தத்துவமே லக்ஷ்மீ என்பது தாத்பர்யம். இது பின்னாலும் ஸ்பஷ்டமாய் விவரிக்கப்படும். இந்த சுலோகத்தில் லக்ஷ்மீயையும், அடுத்த சுலோகத்தில் பூமிப்பிராட்டியையும், அதற்கடுத்த சுலோகத்தில் நீளை என்கிற நப்பின்னைப் பிராட்டியையும் நமஸ்கரிக்கிறார். இந்த மூன்று தேவிகளும் கருணாகார்யத்தை நிர்வஹிக்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் ஓரோர் வ்யாபாரத்தைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலும்! முதலில் ஆச்ரிதன் கிட்ட வருகையில் அவனுடைய தோஷங்கள் ஸ்ரீநிவாஸன் கண்ணிலேயே படாதபடி நப்பின்னை மறைப்பை உண்டுபண்ணுகிறாள். அந்த மறைப்பையும் மீறி ஏதாவது தோஷங்கள் ஸ்ரீநிவாஸன் கண்ணில் பட்டுவிட்டால், பொறுமையின் மூர்த்தியான பூமிப்பிராட்டி அந்த தோஷங்களைப் பொறுக்கும்படி செய்கிறாள். குற்றங்களைப் பொறுத்தாலும் குணமொன்றும் இல்லாததால் ஸ்ரீநிவாஸனுடைய ஸ்வஜநமாக அவர் அருகாமையிலிருந்து அவருக்கு அந்தரங்கமான பணிவிடைகளைச் செய்ய இடமிராது. அந்த பாக்யமும் கிடைக்கும்படி நம்மைத் தன் பரிஜனமாக ஸ்ரீநிவாஸன் லாலநம் செய்யும்படி லக்ஷ்மீ செய்விக்கிறாள். பெருமாளுக்கு ஸ்வஜநமாகச் செய்விப்பதால் நீ எனக்கு மாதாவாகிறாய் என்று ஸ்ரீகுணரத்ந கோசத்தில் பட்டர் ஸாதிக்கிறார். அதை அநுஸரித்து இந்த சுலோகத்திலும் பெற்ற தாயாரென்று கூறினார். சரீரத்தைப் போஷணம் செய்யும் மாதா பிதாக்களைவிட ஆத்மாவை போஷணம் செய்யும் ஆசிரியர்கள் மேற்பட்டவர்கள். அவர்கள் நமக்கு ஜ்ஞானப் பிறப்பைக் கொடுப்பவர்கள். "அன்று நான் பிறந்திலேன்" என்பது மயர்வறு மதியுடைய ஆழ்வார் வசனம்.

ஆக்கூர் ஸ்ரீ அன‌ந்தாசார்யார் உரை

இங்கு விஷ்வ‌க்ஸேன‌ருக்கும் ஆசார்ய‌ ஸ்தான‌த்தில் இருக்கும் பெரிய‌ பிராட்டியாரை வ‌ண‌ங்குகிறார். இங்கு சைத‌ந்ய‌மான‌து சேத‌ன‌ம் அசேத‌ன‌ம் இவ‌ற்றின் ப‌குத்த‌றிவு.  அது ஆத்மாவை உஜ்ஜீவிப்ப‌த‌ற்கு ஸாத‌ன‌மாகும். உட‌லைப் பெற்ற‌ தாய் உட‌லை வ‌ள‌ர்க்க‌ப் பால் கொடுப்பாள். உல‌க‌த்தை எல்லாம் பெற்ற‌ தாய் ஆத்மாவை உய்விக்க‌ அறிவென்னும் பாலை ஊட்டுகிறாள். ஸ்ரீநிவாஸஸ்ய‌ என்னும் ப‌தத்தை முன்னும் பின்னும் சேர்த்து ஸ்ரீநிவாஸ‌னுக்கும் சிற‌ப்பைத் த‌ருகிற‌வ‌ள் ஸ்ரீநிவாஸ‌னுடைய‌ க‌ருணை என்று. எவ‌னுடைய‌ ப‌க்க‌த்தில் ஸீதை நிற்கின்றாளோ அது ஒரு அள‌வுக்கெட்டாத‌ ஒளி என்று மாரீச‌ன் வாக்ய‌மும், பிராட்டியின் கால்வைத்த‌ அடையாள‌த்தை மார்பில்க‌ண்டு வேதாந்த‌ங்க‌ ளெல்லாம் ப‌ர‌த்வ‌ம் இன்ன‌தென்று தீர்மானிக்கின்ற‌ன‌ என்றும், அவ‌ளுடைய‌ க‌டைக்க‌ண் பார்வை மிகுதியால் அது ப‌ர‌ப்ரும்மம் ஆயிற்று என்று ப‌ட்ட‌ர் அருளிச் செய்ததும் இங்கு நினைக்க‌த் த‌க்க‌து. எல்லா வ‌ஸ்துக்க‌ளுக்கும் பெருமை கொடுப்ப‌வ‌ளாத‌லால் ஶ்ரேய‌ஸீம் என்றார் என்றும் சொல்லலாம். ஆத்ம‌வித்யா என்று ஸ்ரீதேவிக்கு ஒரு நாமம் உண்டு. அதையே இங்கு சைத‌ந்ய‌ஸ்த‌ந்ய‌ தாயிநீம் என்று விரித்துரைத்தார் என்ன‌வுமாம்.

No comments:

Post a Comment