Monday, August 2, 2021

Adhyatma ramayanam Aranyakanda -part 1 in tamil

Courtesy:Smt,.Dr,.Saroja Ramanujam

அத்யாத்ம ராமாயணம் - ஆரண்ய காண்டம் -அத்தியாயம் 1
ராமன் அத்ரி மகரிஷியிடம் விடை பெற்றுக்கொண்டு தண்டகாரண்யம் நோக்கிப் புறப்பட்டான். அவரிடம் அவனுக்கு வழி காட்டத் தம் சிஷ்யர்களை அனுப்பக் கோரியபோது அவர் சிரித்து "எல்லோருக்கும் வழிகாட்டியான உனக்கு யார் வழி காட்டுவர்" என்று கூறினாலும் தன் சிஷ்யர்களை அனுப்பினார். அவர்கள் வழிகாட்ட ராமனும் மற்றவர்களும் தண்டகாரண்யம் அடைந்தனர்.
ராமன் லக்ஷ்மணனிடம், அங்கு அரக்கர்கள் உள்ளபடியால் தான் முன்பாகவும் லக்ஷ்மணன் பின்னாலும் சீதை இடையிலும் போகவேண்டும் எனக்கூறினான். பின்னர் அவர்கள் ஒரு ஏரியை அடைந்து தாக சாந்தி செய்து கொண்டனர். அப்போது ஒரு பேருருவம் கொண்ட அரக்கன் பல சடலங்கள் கொண்ட சூலம் கையில் ஏந்தி வழியில் தென்பட்ட பிராணிகளையெல்லாம் தின்று கொண்டு அவர்கள் முன்னே தோன்றினான்.
பெரும் ஒலியுடன் அவர்களை நோக்கி விரைந்த அவன் அவர்கள் யாரெனக் கேட்க ராமன் அதற்கு பதிலளித்தார். சீதையைத் தூக்கிச் செல்ல அவன் முற்படுகையில் ராமன் அவனுடைய கரங்களை வெட்டினார். கால்களும் வெட்டப்பட்டு அவன் ஊர்ந்து வருகையில் அவன் தலையை ராமன் வெட்ட அவன் உடலில் இருந்து ஒரு வித்யாதரன் தோன்றி துர்வாஸரால் தான் சபிக்கப்பட்டதாகவும் இப்போது ராமனால் சாப விமோசனம் அடைந்ததாகவும் கூறினான்.பிறகு அவன் ராமனைத் துதித்து விடை பெற்றான்.
விராதனுடைய துதியானது வால்மீகியில் இல்லை. மேலும் இந்த சம்பவம் வால்மீகிராமாயணத்தில் வேறுபட்டுக் காண்கிறது. அதில் விராதன் தான் தும்புரு என்ற கந்தர்வன் என்றும் குபேரனுடைய சாபத்தால் அரக்கன் உருக்கொண்டதாகவும் தெரிவிக்கிறான் . முதலில் அவன் சீதையை தூக்கிச் செல்கிறான்.
அப்போது ராமன் அவனை பாணங்களால் அடிக்கிறார். அவன் பெற்ற வரங்களால் ஆயுதத்தால் அடிக்கப்பட்ட போதிலும் அவன் சாகவில்லை. பிறகு ராமன் தன் கால்களால் அவனை மிதிக்க அவர் பாதம் பட்டு அவன் சாபம் நீங்கப் பெறுகிறான். பிறகு அவன் ராமனை சரபங்கமுனிவர் ஆச்ரமத்திற்குப் போகுமாறு கூறி நல்லுலகம் சேர்கிறான்.

No comments:

Post a Comment